அரசியல் கட்டுரைகள்

காசா தரும் அனுபம், இனப் படுகொலைகள் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் வரையப்படுகின்றனவா?

காசாவின் அவலம் உலக நாடுகளுக்கு தெரியாது ஒன்றில்லை. தெளிவான கண்டு கொள்ளும் நிலையிலேயே உலகம் காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் துடைத்து அழிக்கப்பட்டது போன்று காசாவில் பாலஸ்தீனியர்கள் அவலப்படும் காட்சி உலகத்தின் கண்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான உலகத்தின் பார்வைக்குள் அது அகப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் உண்டு. அப்படியாயின் ஈழத்தமிழர் நடந்த போதும் கொன்றொழிக்கப்பட்ட துயரம் நிகழ்ந்த போதும் உலகம் மௌனமாகவே இருந்தது. அவ்வாறான ஒன்றுதான் காசா மீதான படுகொலை களம். இப்படுகொலை களத்தில் உலகில் உள்ள எல்லா ஏகாதிபத்திய சக்திகளும் பங்கெடுத்துள்ளனர். இக்கட்டுரையும் 21 ஆம் நூற்றாண்டு உலகம் தேசிய இனங்கள் பொறுத்து முன்வைத்து வரும் புதிய தீர்வை பற்றிய உரையாடலாக உள்ளது.

யூதர்கள் மீண்டும் ஒரு Gideon’s Chariot எனும் தாக்குதலை தொடங்கியுள்ளனர். இத்தாக்குதலின் அர்த்தம் காசாவில் வாழும் மக்களை அழித்தொழிப்பதன் மூலம் அப்பிரதேசத்தை யூதர்களது பிரதேசமாக மாற்றிக் கொள்வது. மேலும் அழித்தொழிப்போம், வெற்றி நிச்சயம் என்ற புரிதலையும் கொண்டதாக உள்ளது. அத்தகைய Gideon’s Chariot தாக்குதலில் உள்ளார்ந்த அடிப்படையில் 1948 ஆம் ஆண்டு இதே மே மாதகாலப்பகுதிகள் பாலஸ்தீனியரது குடியிருப்பு மீது Gideon’s Chariot தாக்குதல் ஒன்றை யூத அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்தனர், Gideon என்பது இறைவனின் தூதுவர் என்றும் ஆதிக்க சக்திகளிடமிருந்து யூதர்களை பாதுகாக்க கடவுள் அனுப்பிய போர் வீரன் என்றும் அர்த்தம் கொள்ளப்படுகிறது. அத்தகைய தாக்குதலுக்கு பெயரிட்டுள்ள நெதன்யாகு அரசாங்கம் மீண்டும் ஒர் பாலஸ்தீனரை அழிப்பதற்கான போரை தொடங்கி இருக்கிறது. இஸ்ரேலியப் பிரதமர் குறிப்பிடுவது போல் இத் தாக்குதல் யூத பயண கைதிகளை மீட்டெடுப்பதுடன் ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பதுமென்ற இலக்கை கடந்து அந்நிலத்திலிருந்து வெளியேற மறுக்கும் பாலஸ்தீனியர்களை கொன்றொழித்து அந்த நிலத்தை கைப்பற்றுவதே நோக்கமாகும். அத்தகைய நோக்கத்தின் பங்குதாரராக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப்ம் காணப்படுகிறார். அதனை அவரே சூழுரைத்துள்ளார். காசா நிலப்பரப்பை சுற்றுலா பயணிகளின் நகரமாக மாற்றுவேன் என்ற பிரகடனத்தோடு இப்போரை வழிமொழிந்து உள்ளார். இங்கு நிகழும் இனப்படுகொலையின் பங்குதாரராக அமெரிக்காவும் ஐரோப்பியர்களும் இருக்கின்றனர். அவர்களுடைய தாராளமுகம் ஜனநாயக முகமும் இனப்படுகொலையின் வடிவங்களாகவே காணப்படுகின்றன. இதனை விரிவாக விளங்குக அவசியமானது.

22.05.2025 அன்று தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா அமெரிக்காவுக்கு அரசமுறை பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அங்கு அமெரிக்க ஜனாதிபதி உடன் உரையாடுகிற போது ரொனால்ட் ட்ரம்ப் பெரும் குற்றச்சாட்டுகளை தென்னாபிரிக்க ஜனாதிபதி மீது முன்வைத்தார். வெள்ளையிpன விவசாயிகளை கருப்பர்கள் படுகொலை செய்வதாகவும் அதனை தென்னாபிரிக்க அரசாங்கம் தடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை மறுத்துரைத்த தென்னாபிரிக்க ஜனாதிபதி வெள்ளையின விவசாய அமைச்சரையும் வெள்ளை இன மக்களின் பாதுகாப்பையும் தமது அரசாங்கம் பேணி வருகிறது என்று குறிப்பிட்டு குற்றச்சாட்டை மறுத்துரைதார். இங்கு விடயம் வெள்ளையர்கள் கொல்லப்படுவது இனப்படுகொலை என கண்டுகொள்ளும் ட்ரம்ப் தான் பாலஸ்தீனியர்களும் உலகில் உள்ள ஏனைய சிறுபான்மை தேசியங்களும் அரசுகளால் கொல்லப்படும் போது அமெரிக்கா அரசின் அனுசரணையால் பாதுகாக்கப்பட்டதை மறந்துள்ளார். அவ்வாறு அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்ற போதும் இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளாமல் அதனை பார்த்துக் கொண்டிருக்கிறார். இது வெள்ளையர்களை இந்த உலகத்தின் முதன்மையானவர்கள் என்பதையும் அவர்கள் கொல்லப்படுவது இனப்படுகொலை என்பதையும் வரையறுத்து வைத்திருக்கின்றனர். ஆத்தகைய அரசுகளும் ஆட்சியாளர்களும் மேற்குலகத்தில் காணப்படுகின்றனர். இது ட்ரம்ப்க்கு மட்டுமல்ல அமெரிக்கர்களுக்கும் மட்டுமல்ல ஐரோப்பிய வெள்ளை இனத்தவரின் வடிவமாகவே உள்ளது.

காசா மீதான இஸ்ரேலியரின் தாக்குதலை உலகில் உள்ள எந்த நாடும் எதிர்க்கவோ கண்டிக்கவோ எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவோ தயாராக இல்லை. சீனர்கள் ரஷ்சியர்கள் உட்பட எல்லோருமே இப் படுகொலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உணவை ஓர் ஆயுதமாக பயன்படுத்தும் இஸ்ரேலின் அணுகுமுறையை ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா போன்ற நாடுகளும் அதன் தலைவர்களும் கண்டித்து இருக்கிறார்கள் என்ற ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அத்தகைய கண்டனத்துக்கு முன்னர் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு பாதுகாப்பு சபையிலும் இராணுவ ஆயுத தளவாட ரீதியிலும் பாரிய பங்களிப்பை வழங்கியவர்கள் என்பதை மறுக்க முடியாது. அத்தகைய ஐரோப்பிய நாடுகள் போரை நிகழ்த்துவதற்காக ஆயுதங்களையும் இராணுவ பலத்தையும் வழங்கிவிட்டு உணவுக்கு அந்த மக்கள் கையேந்தும் போது அதற்கான ஆதரவை தாம் தெரிவிப்பதாக நியாயம் கற்பிக்க முயற்சிக்கின்றார். பாதகமான துரோகத்தனமான சர்வாதிகாரத்தனமான அணுகுமுறைகளை அரங்கேற்றிவிட்டு அதற்கு நியாயம் கற்பிக்க தாராள ஜனநாயக சக்திகள் என்ற தம்மை அழைத்துக் கொள்பவர்கள் முயற்சிக்கின்றார். இந்த அரசுகளே இஸ்ரேலிய அரசை அதன் தாக்குதலை அதன் இனப்படுகொலையை அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகளே இனப்படுகொலையின் செயல்பாட்டை தூண்டியவர்கள். ஹமாஸ் மேற்கொண்டது இனப்படு கொலையானால் இஸ்ரேல் மேற்கெபாள்வதும் இனப்படுகொலையே. அதனையே மேற்குலக நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. ஹமாஸ் அமைப்பை விட பல மடங்கு அதிகமான உத்திகளோடு இஸ்ரேல் இனப்படுகொலையை மேற்கொள்கிறது. அதற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் பங்காற்றி வருகின்றன. அரசியல் இலக்கணம் என்ற நூலை எழுதிய ஹரோல் லக்ஸ்சியின் வார்த்தைகளே நினைவுக்கு வருகிறது. அதாவது சர்வதேசத்திடம் நியயாதிக்கத்தையோ நீதியையோ எதிர்பார்க்காதே என்பதாகும். உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் தமது நலனுக்கு ஏற்ற வகையில் அரசுகளையும் அரசு இயந்திரத்தையும் கையாண்டு வருகின்றன. உலகம் ஒழுங்கு மாறுகிறது என்றும் அதில் ஒரு புதிய வடிவமாக சீனாவின் நூற்றாண்டு எழுச்சி பெறுகிறது என்றும் அமெரிக்க ஊடகங்கள் உரையாடுகிறது. அத்தகைய சீனர்களும் ரஷ;சியர்களும் இந்தியர்களும் காசாவில் அரங்கேறும் இனப்படுகொலையை பார்த்துக்கொண்டே இருக்கின்றன.

காசா மீதானப் போர் உலக வரலாற்றில் இனப்படுகொலை சார்ந்து அரங்கேற்றப்பட்ட மிகப் பெரிய சம்பவமாகவே உலக வரலாறு முழுவதும் பதியப் போகிறார்கள். ஐக்கிய நாடு சபையும் பாதுகாப்பு சபையும் நியாயாதிக்க மன்றங்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றபோது ஒரு இனத்தின் மீது ஒரு அரசு கண்மூடித்தனமான அழிவுகளையும் சிதைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. அதனை தடுத்து நிறுத்துவதற்குரிய வலுவிருந்தும் உலகம் அதனை மேற்கொள்வதற்கு தயாராக இல்லாதுள்ளது. சர்வதேச சட்டங்களும் மனித உரிமை சட்டங்களும் பெண்கள் சிறுவர் உரிமை சட்டங்கள் உலகம் வலுமிக்கசக்திகள் அல்லது ஏகாதிபத்தியசக்திகளின் நலநன பேணுவதற்காக வைத்திருக்கும் தந்திரக் குறிப்புகள் மட்டுமே அல்லது வரைபுகள் மட்டுமே. இதனால் எத்தகைய மாற்றத்தையும் உலக ஏகாதிபத்தியங்களில் இயல்புகளில் ஏற்படுத்த முடியாது. அடக்குமுறையும் ஒடுக்கு முறையும் தேசிய இனங்கள் மீது ஒரே வடிவத்தில் அரங்கேற்றப்படுகிறது, இஸ்ரேலிய அரசு 1947 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொண்ட அனைத்து தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட ஆராபியர்கள் பாலஸ்தீனியர்களின் அழிவுகளுக்கு தாராளஜனநாயக அரசுகளும் அதன் ஆட்சியாளர்களும் பொறுப்புடையவர்களே. இது தனித்து யூத அரசு மேற்கொண்டது என்று குறிப்பிட்ட விட்டு செல்ல முடியாது. மாறாக உலகில் உள்ள வெள்ளையின ஐரோப்பியர்கள் தமது நலனுக்குள் சிறுபான்மை தேசியங்களை ஆதிக்கம் செய்ய வேண்டும் என்பதில் கரிசனை கொண்டுள்ள செயல்பாடாகவே உள்ளது.

எனவே காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படுவது மிக கடினமானது டொனால்ட் ட்ரம்ப் உலகில் நடக்கும் போர்களை முடிவுக்கு கொண்டு வரப் போவதாக தேர்தல் காலத்தில் இருந்து இன்று வரை பிரஸ்தாபித்து வருகின்றனர். அவரது தேசத்தின் ஆயுதங்களும் ஒத்துழைப்புக்களுமே இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலை மேற்கொள்ள அடிப்படையாகும்;. இது அவரது போலியான சமாதான உரையாடல். ஏன்பது ஏகாதிபத்தியத்தின் பிந்திய வடிவங்களில் ஒன்றாக மாறியுள்ளது. காசா மக்கள் முழுமையாக அழிக்கப்பட்டு நிலப்பரப்பை முழுமையாக யூதர்கள்-அமெரிக்கர்கள்-ஐரோப்பியர்கள் கைப்பற்றும் நிலை ஒன்றை தோற்றுவிக்கப் போகின்றது. அதனை நோக்கிய உலகம் பயணிக்கின்றது. அதனை தடுத்து நிறுத்தக்கூடிய சர்வதேச நிறுவனங்களும் ஏனைய அரசியலும் மௌனம் காக்கும் காரணம் அந்த அரசுகள் ஒவ்வொன்றினதும் அந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றினதும் நலன்கள் பாலஸ்தீனர்களின் படுகொலையில் குவிந்திருக்கின்றன. இதனை நோக்கியே உலகத்தின் இருப்பு நகருகிறது. 21ஆம் நூற்றாண்டு முதல் தசாப்தத்தில் ஈழத்தமிழர்களும் இரண்டாவது தசாப்தத்தின் நடுப்பகுதியில் பாலஸ்தீனர்களும் இனப்படுகொலை செய்யப்படும் துயரம் தேசியங்களும் தேசிய இன பிரச்சினைகளுக்குமான உலகின் தீர்வுகள் எது என்பதை கோடிட்டுகாட்டுகிறது. இதிலிருந்து உலகத்தை மீட்பது கடினமானது. தேசிய இனங்கள் காணாமல் போவது கரைந்து போவதும் வரலாற்றின் நியதியாக மாறிக் கொண்டிருக்கின்றன. இப்போரில் சில ஆய்வாளர்கள் வியட்னாம் போருடன் ஒப்பீடு செய்ய முயற்சிக்கின்றனர். அமெரிக்கா வியட்நாம் எப்படி வீழ்ச்சி கண்டதோ அதேபோன்று இஸ்ரேல் வீழ்ச்சி அடையும் என்று கணக்கு வகுத்துள்ளார். ஆனால் நடைமுறை அத்தகைய முக்கியத்துவத்தை கொடுக்குமா என்ற சந்தேகத்தை தர ஆரம்பித்திருக்கின்றது. அதன் ஊடாக ஏற்படக் கூடியமாற்றங்களை முன் கொண்டு செல்கின்ற தேசங்களின் எண்ணமே எழுச்சி பெறவில்லை. அமெரிக்காவுக்கு பதிலாகவும் மேற்குக்கு பதிலாகவும் சீனாவின் நூற்றாண்டு அரங்குகின்றது. அதுவே 21ம் நூற்றாண்டு தேசிய இனங்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையவுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)