December 12, 2024
அரசறிவியல் சொற்களஞ்சியம்

புவிசார் அரசியல் (Geo-Politics)

சர்வதேச அரசியலில் பிரபலமான கோட்பாடுகளில் ஒன்றாக புவிசார் அரசியல் கோட்பாடு விளங்குகின்றது. புவி (Geo) அல்லது புவியியல் (Geography) இயற்கையாகவே ஓர் அரசியல் இருப்பைக் தன்னகத்தே கொண்டுள்ளது. காலநிலை நிலப்பரப்பு கடல்சார் வளங்கள் மற்றும் புவிப்பரப்பிலுள்ள அனைத்து வளங்களும் அரசியலை தீர்மானிக்கும் வலுவைக் கொண்டவை. நாடுகளுக்கிடையிலான உறவிலும் சர்வதேச உறவுகளிலும் அதிகாரம் எழுச்சிக்கு புவிசார் மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் தாக்கத்தை செலுத்துகிறது. அதனை கருப்பொருளைக் கொண்டு புவிசார் அரசியல் அரசுகளுக்கிடையிலான உறவுகளை ஆராய்கிறது. இச்சொற்றொடரின் உருவாக்கத்தை முதல் முதலில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த அரசியல் விஞ்ஞானியான Rudolf Kjellén (1864-1922)அறிமுகப்படுத்தினார். geopolitik எனும் சொற்லையே அவர் முதலில் பிரயோகித்தார். புவியியல் அம்சங்களிலிருந்து ஒர் அரசுக்கு எழும் பிரச்சினைகளையும் அரசுகளின் அதிகாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் பொருளாதாரக் காரணிகளையும் இனக்கூறுகளில் காணப்படும் பிரச்சினைகளையுமே முதன்மைப்படுத்தி ஆராய்ந்தார். அவரது சிந்தனை பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டில் அளப்பரிய கோட்பாடாக மாறியது. முதலாம்(1914-1919) இரண்டாம் உலக(1939-1945) போர்கள் நிலவிய காலப்பகுதியில் புவிசார் அரசியல் கோட்பாடு வலுவான அதிகார அரசியல் கட்டமைப்புக்கான வாதங்களை உருவாக்கியது.

நவீன புவிசார் அரசியல் கோட்பாட்டை சர்வதேச அரசியலுக்குள் உட்படுத்தியவர்களுள் ஐரோப்பிய புவியியலாளர்களே முதன்மையானவர்கள். அவர்களிலும் ஜேர்மனியர்களும் ஆங்கிலேயர்களும் முன்னணி வகித்தனர். Alexander Von Humboidt (1799) Karl Ritter (1804) Arnold Guyot (1849) ஆகியோர் புவிசார் அரசியலுக்குரிய எண்ணக்கருக்களை வெளியிட்டனர். இவர்களின் கருத்துக்களைப் பின்னணியாகக் கொண்டு ஜேர்மனிய புவியியலாளரான Friedrich Ratzel என்பவர் முதன் முதலாக நவீன புவிசார் அரசியலை முறைசார் கற்கைநெறியாக உருவாக்கினார். இவரது சிந்தனை 19ம் நூற்றாண்டின் சர்வதேச அரசியல் தளத்தில் திருப்புமுனையாக அமைந்தன. உலகளாவிய ரீதியில் அரசுகளின் அதிகாரப் போட்டிக்கு Ratzel இன் புவிசார் அரசியல் கொள்கைகள் அடிப்படையாக அமைந்தன. ஓர் அரசின் அமைவிடத்திலும் (Location) அதன் பரந்த விசாலமான இடைவெளியிலும் (Space) அவ் அரசின் அதிகாரப் பிரயோகத்தின் ஆதிக்கம் தங்கியிருந்ததனால் அது, புவிசார் அரசியலை வலுப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் நடுப்பகுதி புவிசார் அரசியல் கோட்பாடுகளை Halford Mackinder, Nicholas Spykman Alfred T.Mahan Alexander de Seversky ஆகியோர் முன்வைத்தனர்.

(ஆதாரம்: கே.ரீ.கணேசலிங்கம் (2002) மாறிவரும் புதிய உலக ஒழுங்கு : புவிசார் அரசியல் நோக்கு எஸ்.எஸ் ஆர். வெளியீடு யாழ்ப்பாணம் பக்: 1-133)