January 19, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கைத் தீவின் வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக் கொள்ளா இனமாக ஈழத்தமிழர்கள்?

இலங்கை அரசியல் வரலாறு இன உணர்வுகளால் கட்டிவளர்க்கப்பட்டது என்பது பல நூற்றாண்டுகாக உணர்த்தப்படுகிறது. அண்மையில் (15.11.2025) தமிழர் தலைநகரான திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவிய செயல்பாடு இடதுசாரிகள் வலதுசாரிகள் என்ற வேறுபாடு இன்றிய இன உணர்வும் நிலவுகிறதென்பது தெரிகின்றது. இலங்கை தீவின் சட்டமும் ஒழுங்கும் அரசியலமைப்பும் காவல்துறையும் பௌத்த மதத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதென்பது தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. பௌத்தமதத்திற்கு இருக்கும் பலம் அரசியலமைப்புக்கு கிடையாது என்பது மீண்டும் ஒரு தடவை நிறுவப்பட்டுள்ளது. எத்தகைய ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் அரசு மாறாத சூழலில் இனவாத உணர்வை முடிபுக்குக் கொண்டுவர முடியாதது என்பதை இன்றைய சமூகமும் நேரடியாக கண்டு கொண்டுள்ளது. இக்கட்டுரையும் ஈழத்தமிழர்கள் இலங்கை தீவில் கடந்த கால வரலாறுகளில் இருந்து எதனை கற்றுக்கொண்டார்கள் என்ற கேள்விக்கு பொருள்கோடல் செய்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக வரலாற்றில் பிரபஞ்சத்தில் உண்மைகளை அதிகம் தந்தவரும் மாக்ஸிஸத்தின் வருகைக்கு மூலவருமாக விளங்கிய ஹகல் (Friedrich Hegel) குறிப்பிடுகின்ற போது, கவனத்திற்குரிய விடயம் என்னவெனில் நாம் வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்றார். (The only thing we learn from the history is that we learn nothing from the  history) அதுவே ஈழத்தமிழர்களுக்கும் அவர்களின் அரசியல் தலைமைகளுக்கும் மிகப் பொருத்தமான வாசகமாக தெரிகின்றது. அத்தகைய விடயத்தை ஆழமாக நோக்குவது அவசியமானது.

முதலாவது, திருக்கோணமலையில் புத்தர்சிலை பொலீசாரால் நீக்கப்பட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாசா பாராளுமன்றத்தில் முக்கியமான கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்காவை விழித்து பௌத்த மதத்திற்க்கு முன்னுரிமை அளியுங்கள், திருகோணமலை புத்தர் சிலை நீக்கப்பட்டமை தேசிய பிரச்சினை. எனவே ஜனாதிபதி அநுர மகாநாயக்கர்களிடம் உடனடியாக ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும் என்றும் யார் புத்தர் சிலை அகற்ற உத்தரவு இட்டது என கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பௌத்த மதத்தின் மீதான பற்றும் ஏனைய மதங்கள் மீதான அவரது வெறுப்பும் புதியதல்ல. தமிழர்கள் பூர்வீகமாக வாழும் பிரதேசங்களில் ஒன்றாக திருகோணமலை நகரத்தில் பௌத்த மதத்தின் பெயராலேயே புத்தர் சிலை வைக்க்கப்பட்டது. அவ்வகையான சூழலில் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை ஆக்கிரமிக்கும் நடைமுறைகளை அனைத்து பெரும்பான்மை தலைவர்களும் காலத்திழற்கு காலம் மேற்கொண்டார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது இலங்கையின் வரலாறு முழுவதும் கண்டுகொள்ள முடிகிற சம்பவமாகவே உள்ளது. ஆனால் துயரம் எதுவெனில் இத்தகைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஈழத்தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அதிகளவிலான வாக்களிப்பை நிகழ்த்தியிருந்தனர் என்பதேயாகும். வுடமாகாணத்தில் மட்டும் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட(2,16599) வாக்குகளை பெற்றிருந்தார். ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் தமது அடையாளத்தை நிறுவுவதற்காக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்திய போது அதற்கு எதிராக தமிழரசு கட்சியின் தற்போதைய பிரதிச் செயலாளர் தமிழ் பொது வேட்பாளரை தோற்கடிப்பேன் என்றும் சஜித்பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் வடக்கு கிழக்கு முழுவதும் பிரச்சாரம் செய்திருந்தார். அப்போதைய தமிழரசுக் கட்சியின் தலைவர் பிரதான மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களித்ததாக ஊடகங்கள் மத்தியில் தெரிவித்திருந்தார். (இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வேறுபட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்) ஈழத்தமிழர்களை அவர்களது ஆதரவை பெற்றுக் கொண்டு ஈழத்தமிழர் மீது அவர்களது வாழ்விடம் மீது நிகழ்த்தப்படுகின்ற ஆக்கிரமிப்புக்களை கேள்விக்கு உட்படுத்தாது மட்டுமல்ல அவர்கள் மீது ஆக்கிரமிப்பையே நிகழ்த்தும் செயல்பாடு எதிர்க்கட்சித் தலைவவருக்கு வாக்களிக்க வலியுறுத்திய தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் தேசிய மக்கள் சக்தியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை விடுவதென்பது ஒருபுறம் வேடிக்கையாக அமைய மறுபக்கத்தில் தமிழ் மக்கள் சஜித்பிரேமதாசாவுக்கு வாக்களித்தமையானது தமிழ் மக்கள் வரலாற்றிலிருந்து எத்தகைய பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

இரண்டாவது 2009ஆம் ஆண்டு போர் முடிந்த சூழலில் போரை வழிநடத்திய ஜனாதிபதி வேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை தமிழரசு கட்சி நிர்பந்தித்ததோடு பலமான வாக்களிப்பை மேற்கொள்வதற்கு வழிவகை செய்திருந்தனர். வடமாகாணத்தில் மட்டும் 2,20617 வாக்குகளை சரத்பொன்சேகா பெற்றிருந்தார். மஹிந்தராஜபக்ஷவுக்கு எதிராக அணி திரட்டப்பட்ட தமிழ் மக்கள் போரை நடத்தி விடுதலைப்புலிகளை அழித்து விடுதலைப் புலிகளின் தலைமையை இல்லாமல் செய்து ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களை கொண்றெழித்த தளபதிக்கு வாக்களித்த துயரத்தை வெளிப்படையாக கண்டுகொள்ள முடிகிறது. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே ராஜபக்ஷ வெற்றி பெற்ற போதும் வடக்கு கிழக்கு முழுமையாக ஃபீல் மாஷலுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தனர். அல்லது வாக்களிக்க நிர்பந்திக்கப்பட்டனர். தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போரின் இரத்தக்கறை காயமுன்னர் போரை நிகழ்த்திய தளபதிக்கு வாக்களிக்க நிர்பந்த்த்தமை மோசமான அரசியல் என்பதை வரலாற்றுத் துயரமாகவே உள்ளது. வாக்களிப்பதற்கான அரசியலை தமிழரசு கட்சியை முதன்மைப்படுத்திய அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அதனை மேற்கொண்டு இருந்தனர். இங்கும் வரலாற்றில் இருந்து ஈழத்தமிழர்கள் எதனை கற்றுக்கொள்ளவில்லை என்பதே தெரிகிறது.

மூன்றாவது 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்து சிரிசேன-ரணில்விக்ரமசிங்க அரசாங்கத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக தமிழரசு கட்சியின் தலைமையில் ஒத்துழைப்பும் அனுசரணையும் வழங்கப்பட்டதோடு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அந்த அரசாங்கத்தை பாதுகாப்பதில் வெற்றிகரமான பங்களிப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிகழ்த்தியது. 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மைத்திரிபாலா வெற்றி பெறுவதற்கு வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை திரட்டி கொடுப்பதில் தமிழரசு கட்சியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் பாரியபங்களிப்பை வழங்கி யிருந்தனர். இருதயத்தால் ஒன்றிணைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய தலைமை சம்பந்தன்; தென் இலங்கைத் தலைவர்களான சந்திரிகா குமாரணதுங்க ரணில்விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்ற தலைவர்களோடு ஒன்றிணைந்து அரசாங்கத்தை உருவாக்கினர். அது மட்டுமல்ல எதிர்க்கட்சி என்ற பெயரில் ஆளுங்கட்சிக்கு முண்டு கொடுத்து அதன் ஆட்சியையும் அதிகாரத்தையும் பாதுகாத்த முழு பொறுப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசு கட்சி நிகழ்த்தி இருந்தது. இங்கும் வரலாற்றிலிருந்து ஈழத்தமிழர்கள் எத்தகைய பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

நான்காவது 1965 ஆம் ஆண்டு டட்லிசேனநாயக்காவின் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அமுதலிங்கம் தமிழரசு கட்சியின் வெளியீடு ஒன்றில் சேனநாயக்கா அரசாங்கத்தோடு கூட்டுச் சேர்ந்ததன் விளைவுகளை வெளிப்படுத்தியிருந்தார். பாரிய நெருக்கடியை தமிழர் தரப்பு சந்தித்தது என அவர் தெரிவித்திருந்தார். 1965 ஆம் ஆண்டு அரசாங்கத்தோடு ஒன்றிணைந்து பயணித்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைமையின் ஒப்புதல் வாக்குமூலம் 2019 அரசாங்கத்தில் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளும் கண்டு கொள்ளவில்லை. அதனை ஒரு பாடமாக கற்றுக் கொள்ளவுமில்லை. தமிழ் மக்களும் அத்தகைய பாடத்தை கற்றுக் கொண்டு வெளிப்படுத்தவும் இல்லை. தமிழர் தரப்பு மீளவும் பேசுவதற்கு தயாராகிறது. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பேசுவதும் உடன்பாடுகளை எட்டுவதும் மீளக்கிழிப்பதுவும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தலைமைகள் மாறாதாது மட்டுமல்ல மக்களும் மாறாது உள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில் ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவின் அரசியல் காணப்படும் பெரும்பான்மை இனத்தின் இனவாத நடவடிக்கைகளை வரலாறு முழுவதும் கற்றுக் கொள்ளாதவர்களாகவே காணப்படுகின்றனர். மீளவும் மீளவும் ஒரே உபாயங்களையும் தந்திரங்களையும் பயன்படுத்தி அல்லது பிரயோகித்து தோல்வி மேல் தோல்வி கண்டுவரும் ஒரு இனமாக காணப்படுகிறனர். அதற்காக தலைமை தாங்கின்ற தலைமைகளும் அதனை பின்தொடர்கின்ற மக்களும் கேள்விக்கிடமின்றி செயல்படுகின்ற போக்கொன்றை தமிழர் வரலாற்றில் கண்டுகொள்ள முடிகிறது. இதனுடைய மறுவடிவத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையிலும் கண்டு கொள்ள முடிகிறது. ஜே.வி.பி. அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களும் வாக்களிக்க வைத்தவர்களும் இத்தகைய அனுபவத்திலிருந்து எதனைக் கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பது புரிந்து கொள்ள முடியாதுள்ளது. இதிலிருந்தும் தமிழ் மக்களும் தமிழ அரசியல் தலைவர்களும் எத்தகைய பாடத்தையும் கற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஏன் மாகாண சபை தேர்தலிலும் கடந்த காலத்தில் விட்ட அதே தவறை மீள ஒப்புவிப்பதற்கு தயாராகின்ற சூழலை கண்டுகொள்ள முடிகிறது. கோமாளிகளுக்கான அரங்கமாக தமிழர் வாக்குகள் மாறிவிட்டது. இது தமிழ் தலைவர்களால் மட்டும் உருவாகியதல்ல. கேள்விக்கிடமின்றி பின்பற்றும் மக்களும் அத்தகைய வரலாற்றுத் தவறுக்கு பொறுப்புடையவர்களே. இது தமிழ் இனத்தின் இருப்பை முழுமையாக விழுங்கும் காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இவை எதிலிருந்தும் தமிழர் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே துயரமானதாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)