December 12, 2024
அரசியல் கட்டுரைகள்

தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்? | பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் செவ்வி

தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்?

அரசுக்கு எதிரான போராட்டம் தென்னிலங்கையில் தீவிரமடைந்துள்ள நிலையில் – அரசியல் நெருக்கடி ஒன்றும் உருவாகியுள்ளது. இந்த நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களுடைய அணுகுமுறை குறித்தும் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் லண்டன் உயிரோடைத் தமிழ் தாயக களம் நிகழ்வில் தெரிவித்தவற்றில் முக்கியமான சில பகுதிகளை இலக்கு வாசகர்களுக்குத் தருகின்றோம்.

கேள்வி:
ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் எனக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கின்றது. இந்தப் போராட்டம் குறித்த உங்கள் பார்வை என்ன?

பதில்:
தென்னிலங்கையில் எழுந்திருக்கின்ற இந்தப் போராட்டமானது, பொருளாதார ரீதியானதாகவே பிரஸ்தாபிக்கப்படுகின்றது. இந்தப் பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்த அரசாங்கம்தான் காரணம் என்ற கருத்து தென்னிலங்கையில் வலிமை யடைந்திருக்கின்றது. இது நிச்சயமாக ஒரு நீண்ட காலப்பகுதியில் ஏற்பட்ட இலங்கையின் முதலீடு, உற்பத்தி, இலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் என்ற அனைத்துமே ஒரு அரசியல் முதலீட்டுக்கான அணுகுமுறையாக இருந்ததன் பிரதிபலிப்புத்தான் இன்றைய  நெருக்கடிக்கு காரணம்.

ஆனால், ஒரு நீட்சியான போராட்டமாக இது மாறுவதற்கு அரசியல் காரணமாக இருக்கின்றது. இந்தப் போராட்டத்தின் நீட்சி மேலும் ஒரு பொருளாதார நெருக்கடி, வறுமை, போசாக்கற்ற நிலை, கல்வி சார்ந்த சுகாதாரம் போன்ற துறைகளின் கட்டுமானங்கள் அனைத்தையும் தகர்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பிலும், அரசாங்கம் பதவி விலகுவது தொடர்பிலும் ஒரு இழுபறி நிலை நீடிப்பதால் இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறக்கூடிய நிலை உள்ளது.

கேள்வி:
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை ஜனாதிபதி முன்னெடுத்திருக்கின்றார். அவரது இந்த முயற்சி வெற்றிபெறுமா?

பதில்:
அது தொடர்பாக மகாசங்கங்களுக்கு எதிர்க்கட்சிககள் வழங்கியுள்ள பதில் இவ்விடயத்தில் சுமுகமான ஒரு நிலையை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. தற்போதைய ஜனாதிபதி, பிரதமருடன் இணைந்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு தாம் தயாராகவில்லை என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் கண்டியிலிருந்து இதற்காக பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்திருக்கின்றது. இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வதன் மூலமாக இந்த நெருக்கடிக்கு ஒரு தீர்வைக் கண்டுவிட முடியும் என அரசாங்கம் கருதுகின்றது.

ஆனால், தற்போதைய அரசியல் – பொருளாதார நெருக்கடிக்கு இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வது ஆரோக்கியமான தீர்வு ஒன்றைக் கொண்டுவருமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகின்றது.  ஒரு தற்காலிகமான தீர்வை நோக்கித்தான் இலங்கையின் அரசியல் இப்போது நகர்ந்து கொண்டிருக்கின்றது. நிரந்தரமான கட்டமைப்புக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாக அது அமைந்திருக்கவில்லை. அதனால், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வது இந்தப் பிரச்சினைக்கு எந்தளவுக்குத் தீர்வைக் கொண்டுவரும் என்பது குறித்த விவாதங்களும் இப்போது கட்சி அரசியலில் முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் இந்த இடைக்கால அரசாங்கத்தை நிர்ணயம் செய்வதில் அதிக நெருக்கீட்டைக் கொண்டதாக இருக்கின்றது.

இலங்கையில் நெருக்கடி உருவாகிய காலகட்டத்தில்தான் பாகிஸ்தானில் ஒரு நெருக்கடி உருவாகியது. ஆனால், பாராளுமன்றத்தின் மூலமாக அந்த நெருக்கடி மிகவும் இலகுவான முறையில் தீர்த்துவைக்கப்பட்டிருக்கின்றது. பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு இலங்கை எவ்வாறு பிரச்சினையைக் கையாள்கின்றது என்பதைப் பார்க்கும் போது இலங்கை அரசியல் கலாசாரத்தின் பலவீனத்தை புரிந்துகொள்ள முடிகின்றது. இலங்கைத் தேசியம் மீது அவர்கள் கொண்டிருந்த பற்றுதல்கள் கூட கேள்விக்கு உட்படுத்தப்படுபவையாகவே உள்ளன.

கேள்வி:
ஜனாதிபதியின் அதிகாரங்களை வெட்டிக்குறைக்கும் வகையில் 21 ஆவது திருத்தம் கொண்டுவரப்படவிருக்கின்றது. இதற்கான வரைவு ஒன்றை பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்திருக்கின்றார். தற்போதைய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர இது உதவுமா?

பதில்:
இதன்மூலம் பிரதமருக்கு அதிகாரத்தை கைமாற்றலாமே தவிர, தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வைக்கண்டுவிட முடியாது. இதன் மூலம் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்ற தவறான கற்பிதம் தென்னிலங்கையில் பரப்பப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான பிரச்சினைக்கு தீர்வைக்கண்டுவிட முடிந்தாலும் கூட, பொருளாதாரப் பிரச்சினைக்கு இது தீர்வாக அமைந்துவிடாது. பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதைப் பொறுத்தவரையில் – ஜனாதிபதி, பிரதமருடன் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய உரையாடல்களே முன்னெடுக்கப்பட வேண்டும்.

21 ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரையில் 19 ஐ மீளக்கொண்டுவருவது என்ற அடிப்படையிலான உரையாடல்களே இடம்பெறுகின்றன. முழு இலங்கைக்குமான கட்டமைப்பை பொறுத்தவரையிலான உரையாடல் கூட இதில் எழவில்லை. பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைத் தேடிச் சென்றால், அதற்கு பிரதான காரணமாக இருப்பது போரும், போருக்குப் பின்னரான அணுகுமுறைகளும்தான். இரண்டாவதாக – போருக்குப் பின்னரான இந்த 12 வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வெளிநாட்டு, மற்றும் உள்நாட்டு முதலீடுகளும் அரசியல் நோக்கம் கொண்டவையாகவே இருந்துள்ளன. பொருளாதார முதலீட்டுக்கான திட்டமிடலையோ அது கொண்டிருக்கவில்லை.

கேள்வி:
அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மக்களின் பங்கு போதியளவுக்கு இல்லை என்ற கருத்து ஒன்று முன்வைக்கப்படுகின்றது. இது குறித்து உங்கள் பார்வை என்ன?

பதில்:
ஈழத் தமிழர்கள் தமது அரசியல் ரீதியான பக்கங்களை முதன்மைப்படுத்துவதற்கான போராட்டங்களை போருக்குப் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள். இந்தப் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்கள் தத்தமது பிரதேசங்களிலிருந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.

ஆனால், காலிமுகத்திடலிலோ வேறு இடங்களிலோ இணைந்து போராடுவதற்கான அச்ச உணர்வு அவர்களுக்குள்ளது. குறிப்பாக தென்னிலங்கையில் உருவாகி யிருக்கின்ற சிவில் சமூகங்கள், தொழிற்சங்கங்கள் கூட தமிழர்களுடைய அடிப்படை பிரச்சினைகளை – அல்லது கோரிக்கைகளை முதன்மைப்படுத்திக் கொண்டு அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடியளவுக்குக்கூட, அதற்றை முன்வைக்கத் தயாராக இல்லாமையும் தமிழ் மக்கள் விலகியிருப்பதற்கான அடிப்படைக் காரணமாகத் தெரிகின்றது.

அதேபோல இந்தப் போரின் விளைவுகளையும், போரின் பின்னரான விளைவுகளையும் குறித்து பதிவுகளைக் கூட – இந்த பொருளாதார நெருக்கடியின் பின்னர் அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தவோ, ஒரு புலமைத் தளத்தில் அவை குறித்து விவாதிப்பதற்குக்கூட அவர்கள் தயாராகவில்லை என்பதும் ஈழத் தமிழர்களிடமுள்ள முதன்மையான விமர்சனமாகவுள்ளது.

இதனால்தான் காலிமுகத்திடலில் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை சேர்ந்து வெளிப்படுத்தவில்லையே தவிர, தமது பிரதேசங்களில் தமது போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள். இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உரையாடல்களை அவர்கள் முன்னெடுக்கின்றார்கள். ஆகவே அது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகவே உள்ளது.

தமிழ் மக்களுடைய நீண்டகால பிரச்சினைகள் தொடர்பாக தென்னிலங்கையில் எந்தவிதமான பிரதிபலிப்புக்களையும் காணமுடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மட்டும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவது குறித்த கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கேள்வி:
இந்தப் போராட்டம் தொடர்பில் தமிழ் மக்கள் எவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதையிட்டு தேவையான வழிகாட்டல்களை தமிழ்க் கட்சிகள் மேற்கொண்டுள்ளனவா?

பதில்:
தமிழ்க் கட்சிகள் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறைகளைத்தான் எப்போதும் கொண்டிருக்கின்றார்கள். சில கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளன. சில கட்சிகள் பிரதமருக்கும் அதேவேளையில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஆலோசனை வழங்குகின்றன. 21 ஆவது திருத்தத்துக்கான வரைபிலும் ஆலோசனை வழங்குபவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள். தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் சில கட்சிகள் அண்மைக்காலத்தில் ஒன்றிணைந்து சில உரையாடல்களை நடத்தியிருக்கின்றன. ஆனால், இதன்மூலமாக தீர்மானங்கள் எதுவும் முதன்மைப் படுத்தப்படாத ஒரு சூழலும் காணப்படுகின்றது.

ஆனால், இந்த இடத்தில் தமிழ் மக்கள் தமது கட்சி நலன், தேர்தல் நலன் என்பவற்றை கடந்து ஒன்று சேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுத்து நகர்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. தென்னிலங்கையின் நெருக்கீடுகளை எதிர்கொள்வது என்பது ஒருபுறமிருக்க – ஈழத் தமிழர்கள் அரசியல் நெருக்கீடுகளையும் முதன்மைப்படுத்த வேண்டிய கடமைப்பாடு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. அவ்வாறான உரையாடல்களை அவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்து செயற்படுத்துகின்ற போக்கு ஈழத் தமிழர்களின் அரசியல் பரப்பில் பெருமளவுக்கு இல்லாமலிருக்கின்றது.

சில கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. அதன் உள்ளடக்கம் என்ன என்ற கேள்விகள் கூட இப்போது எழுப்பப்படுகின்றது. தென்னிலங்கை அரசியலை எவ்வாறு கையாள்வது என்பதையிட்டு தெளிவற்ற ஒரு சூழ்நிலைக்குள்தான் இவர்கள் பயணிக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. இதிலிருந்து விடுபடுவதற்கான ஒரு களத்தை நோக்கி இவர்கள் நகர்ந்திருந்தால், இந்த நெருக்கடியான சூழலில் கூட – குறிப்பாக ஈழத் தமிழர்கள் எதிர்கொள்கின்ற நெருக்கீடுகள் தொடர்பில் – தற்போதைய ஆட்சியை மாற்ற வேண்டும் என முயற்சிக்கின்ற தரப்புக்களுடன் உரையாடல்களை அவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்.

கேள்வி:
தென்னிலங்கையில் உருவாகியிருக்கும் இந்த நிலைமையை தமிழ்த் தரப்பினர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத்தக்க வகையிலான முன்னெடுப்பை சிவில் சமூகமோ அல்லது பல்கலைக்கழக சமூகமோ முன்னெடுக்க முடியாதா?

பதில்:
அவ்வாறான சில உரையாடல்களை சிவில் சமூகங்களும், பல்கலைக்கழக சமூகமும் முன்னெடுக்கின்றது. அவ்வாறு முன்னெடுக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதற்கான ஒத்துழைப்பு மிகவும் பலவீனமானதாகவே இருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாகக் கலந்துகொள்ளாத கூட்டங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது நலன்களை முன்னிலைப்படுத்துவது, சிவில் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் தயங்குவது போன்ற பல விடயங்கள் இவ்வாறான செயன்முறையில் காணப்படும் பலவீனங்களாக இருக்கின்றது.

(நன்றி : இலக்கு)