அரசியல் கட்டுரைகள்

இந்திய-பாகிஸ்தான் போர் நீண்ட போராக மாறுவற்கான வாய்ப்புகள் உண்டா?

இந்திய-பாகிஸ்தான் போர் நீண்ட போராக மாறுவதற்குரிய புறச்சூழலை அதிகம் கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் இது ஒரு மட்டப்படுத்தப்பட்ட போராக நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஒரு நீண்ட போராக பரிமாணம் எடுக்க தொடங்கியுள்ளது. இருதரப்பு பரஸ்பரம் எல்லைதாண்டிய தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதும் தாக்குதல்களை பரஸ்பரம் முறையடித்து வருவதும் இயல்பான ஒன்றாகவே காணப்படுகிறது. இரு தரப்பும் ஆளில்லாத விமானங்களையும் ஏவுகணைகளையும் போர் விமானங்களையும் கொண்டே தாக்குதலை நிகழ்த்திவருகின்றன. 06.05.2025.அன்றைய இரவு முழுவதும் 125 மேற்பட்ட விமானங்கள் இருதரப்பாலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே 300-400 இடையிலான ஆளில்லாத விமானங்கள் பாகிஸ்தான பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதலை நிகழ்த்தியதாக இந்தியத் தரப்பினர் குற்றச்சாட்டியுள்ளனர். கடந்த சில நாட்களாக பாரிய தாக்குதலுக்குரிய நகர்வுகளை இரு தரப்பும் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பாகிஸ்தானின் தலைநகரங்களை நோக்கி தாக்குதலை விஸ்தரித்துள்ளது. பதிலுக்கு பாகிஸ்தானும் டெல்லிய நோக்கி ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவை முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இப் போரின் போக்கினை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இந்தியா ஒப்ரேஷன் சிந்தூர் என்று அடையாளப்படுத்தியுள்ளது. இப்போரின் உள்ளடக்கம் அதன் முக்கியத்துவத்தையும் மனித எண்ணங்களில் இருந்தும் உணர்வுகளிலிருந்தும் தூண்டி இருக்கின்றது. அத்தகைய தாக்குதலை பஹல்காம்ல் கொல்லப்பட்ட 26 பேருடன் அவர்களது உறவினருடன் அவர்களின் கலாச்சாரத்துடன் பிணைத்திருப்பதாகவே தெரிகிறது. இந்தியா இந்த போரை ஒரு முழு நீள போராக நகர்த்துவதற்கு திட்டமிடுவதாக தெரிகிறது. இதில் பிரதானமாக பாகிஸ்தான் இராணுவ ரீதியில் பலவீனமான நிலையில் இருப்பது மட்டுமின்றி பொருளாதாரத்திலும் பாரிய பின்னடைவை சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு நாடு. அதனால் இந்த போரை அதிகம் வெல்லக்கூடிய சூழல் இந்தியாவுக்கு இருந்த போதும் இஸ்லாமிய நாடுகளின் இரகசியமான ஒத்துழைப்பும் உக்ரையின்-ரஷ்சியப் போரைப் போன்று பாகிஸ்தான்-இந்தியப் போரை நிலையான ஒரு நீண்ட போருக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. அதனை மையப்படுத்திய தயாரிப்புகளும் உலக நாடுகளின் அணுகுமுறைகளும் காணப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சி முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கும் சீனாவுக்கும் அதன் அயல் நாடுகளுக்கும் உண்டு. இந்த சந்தர்ப்பத்தினை அத்தகைய வல்லரசுகளும் அயல் நாடுகளும் சரியாகவே பயன்படுத்த வாய்ப்புள்ளது. சீன-பாகிஸ்தான் உறவு இராணுவ ரீதியான இரகசிய உறவு தரைவழியான உறவு பாரிய பங்களிப்பை போரில் ஆற்றக்கூடியது. அது மட்டுமன்றி ஈரான் துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பை பாகிஸ்த்தான் இராணுவ ரீதியில் முன்கூட்டியே கோரி வருகின்றது. நீண்ட தூரம் பயணிக்க கூடிய ஆளில்லாத விமானங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். எனவே அதன் ஆளில்லாத விமானங்கள் பாகிஸ்தானின் இராணுவத் திறனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஒரு நகர்வை ஈரான் எந்த அடிப்படையில் மேற்கொள்ளும் என்ற கேள்வி ஒரு பக்கத்தில் வைக்க வேண்டியதே அன்றி நடைமுறை அர்த்தத்தில் பொருத்தப்பாடு உடையது அல்ல. அதற்கான அடிப்படை காரணம் பாகிஸ்த்தான் இஸ்லாமிய நாடு என்ற அடிப்படையிலான உறவு மட்டுமன்றி ஆயுத ஏற்றுமதியும் சந்தையும் பிரதானமானதாகும். போர் என்பது ஆதிக்க சக்திகளின் நலனுக்குட்பட்டது அன்றி இந்திய பாகிஸ்தானுக்குட்பட்டது என்ற முடிவுக்கு வர முடியாது. போரில் உண்மைகளை விட பொய்கள் அதிகமாக உலாவுவது தவிர்க்க முடியாது. உலகளாவிய போர்கள் அனைத்தும் அவ்வாறே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. பஹல்காமில் 26 பேரின் படுகொலைக்கு பதில் கொடுக்க முனையும் இந்தியா எத்தனை அப்பாவி உயிர்களை பலியிடப் போகிறது என்பது தெரியவில்லை. பதிலுக்கு பாகிஸ்தான மேற்கொள்ள முனையும் தாக்குதலில் எத்தனை படுகொலைகள் நிகழப் போகின்றது என்று தெரியவில்லை. இரு தரப்புக்கும் இழப்பு என்பது இராணுவ ரீதியில் மட்டுமின்றி சாதாரண பொது மக்கள் என்ற அடிப்படையில் ஏற்படக்கூடியது. இந்தியாவின் நகரங்கள் மக்களின் தொகையை அதிகம் கொண்டவை. அத்தகைய நகர்வுகள் இலகுவாக சாதாரண மக்களின் படுகொலையை அதிகபடுத்தக் கூடியது. அந்த நிலை ஒன்று ஏற்படுமாக இருந்தால் பாரிய அழிவுகளுக்கு உள்ளாகும். அணுவாயுதங்களை இரு நாடுகளும் கொண்டிருக்கின்றன. அப்துல் கலாமின் வார்த்தைகளில் கூறுவதானால் அணுவாயுத பரிசோதனைக்கு பின் இரண்டு நாடுகளும் பாரிய போர் ஒன்றை நிகழ்த்தாதென தெரியப்படுத்தியது நினைவு கொள்ளத்தக்கது. அத்தகைய சூழலை நோக்கிய இப் போர் நகரும் என்ற எதிர்பார்க்கை எல்லா தரப்புகளிடமும் உண்டு.

அதே நேரம் பாகிஸ்தானிடம்; இப்போரில் காஷ்மீரை இணைப்பது என்ற இலக்கு ஒன்று ஆழமாக காணப்படுகிறது. அதன் தாக்குதல்களும் ஜம்மு காஷ்மீரை இலக்கு வைத்ததாகவே காணப்படுகிறது. இப்போரில் இரு காஷ்மீரையும் ஒன்றிணைப்பது பாகிஸ்தான் கவனம் கொள்வதாகவே தெரிகின்றது. காஷ்மீர் இரு நாட்டுக்குமான நீண்ட போருக்கான அடித்தளமாகக் காணப்படுகிறது. இவ்வாறே இந்தியாவிடம் காஷ்மீர் பொறுத்து பாகிஸ்தானுடைய அதே கொள்கை காணப்படுகிறது. பரஸ்பரம் இரு நாடுகளும் காஷ்மீரை இணைப்பதில் கவனம் கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே தெரிகிறது. தற்போது இதனை கடந்து இன்னொரு விடயமும் தீவிரமடைந்திருக்கின்றது. அதாவது பாகிஸதானில் இருந்து பிரிந்து தனியரசாக தம்மை அடையாளப்படுத்த விரும்புகின்ற பாலுஸ்தான் ஆயுதப்போராட்டமும் தனி அரசுக்கான போராட்டமும் சமகாலத்தில் தீவிரம் பெற்று வருகிறது. 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரித்ததன் விளைவுகள் பாகிஸ்த்தானை பலவீனப்படுத்துவதற்கான உத்தியாக கருதப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தியிடம்காணப்பட்ட தந்திரேபாயமாக அமைந்திருந்தது என விமர்சனங்கள் உண்டு. தீவிர அணுகுமுறைகளை பின்பற்றிக் கொண்டு அத்தகைய ஆயுதப் போராட்டத்தை இந்தியா ஊக்குவித்து இருந்தது. அவ்வகை சூழல் ஒன்றை பாலுஸ்தான் பொறுத்து இந்தியா பின்பற்றுமா என்ற கேள்வி அதிகரித்துள்ளது. பாலுஸ்தான் விடுதலைப் போராளிகளும் பாகிஸ்தான் இராணுவத்துக்கு எதிரா தீவிர தாக்குதல்களை தொடங்கியுள்ளனர். இது தனி நாட்டுக்கான வாய்ப்பு அல்லது இந்தியாவோடு இணைப்பதற்கான வாய்ப்பாகின்றதா என்ற கேள்வி பிரதானமானது. ஏனெனில் தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் பரந்த இந்திய தேசத்தை கட்டமைப்பது பற்றி அதன் பிரதான அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கொண்டுள்ளது. அதனை முதன்மைப்படுத்துகின்ற நோக்கிலும் இப்போரின் போக்கினை இந்தியா நகர்த்த வாய்ப்புள்ளது. இந்தியாவினுடைய இராணுவ பலமும் சர்வதேச ஆதரவும் அத்தகைய மாற்றங்களை நோக்கி இந்தியா போவதற்கான சூழல் அதிகமாகவே உண்டு.

இத்தகைய அணுகுமுறைகள் ஒரு பக்கம் அமைய மறுபக்கத்தில் தீவிரம் பெற்றிருக்கும் இந்தியாவுக்கான சர்வதேச ஆதரவு போரை நீடிப்பதற்கான வாய்ப்பினை அதிகம் கொண்டுள்ளது. ரஷ்சியா இந்தியாவோடு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்திருப்பதனாலும் நீண்ட உறவை பின்பற்றுவதானாலும் அதன் ஒத்துழைப்பு மிகப் பலமானது. அமெரிக்காவைப் பொறுத்தவரை இப்போரில் இந்தியாவுக்கு ஆதரவு வழங்கினாலும் தலையீடு செய்வதில்லை என்ற முடிவோடு செயல்பட முனைகிறது. சீனாவைப் பொறுத்தவரை பாகிஸ்தானுடன் பலமான அரசியல் பொருளாதார இராணுவ வர்த்தக உறவைக் கொண்டது. இந்தியாவுடன் நெருக்கமாக வர்த்தக உறவைக் கொண்டிருந்தாலும் நடைமுறை சீனா பாகிஸ்தானுடனே பயணிக்க முனையும்.

எனவே இந்த உலக ஒழுங்கிலும் நியதிகளிலும் இந்தியாவுக்கான ஆதரவு என்பது அதிக ஆரோக்கியமானதாக இல்லை என்பது தெரிகிறது. வெளிப்படையாக தெரியும் உறவும் ஒத்துழைப்பும் இராஜதந்திர ரீதியில் எதிரானதாகவே அமையும். இந்த ஒத்துழைப்பும் ஆதரவும் அதிகமான முரண்பாடுகளை அல்லது நெருக்கடிகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தக்கூடியது. இந்தியா எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருளாதார ரீதியில் வர்த்தகரீதியில் வளர்ச்சி நோக்கி நகரும் நாடாக கருதப்படுவதனால் உலகளாவிய ரீதியான சக்திகள் இந்தியாவுக்கு எதிராகவே பாகிஸ்தானை தூண்டிவிடும். எனவே இந்திய பாகிஸ்தான் போர் என்பது நீண்ட போராகவும் எல்லைக்குட்பட்ட போராகவும் அல்லது இருநாட்டுக்குமான போராகவும் பயணிக்க வாய்ப்பு அதிகமுண்டு. ஆனால் அதனை தீர்மானிக்கும் சக்திகளாக உலக வல்லரசுகள் காணப்படுகின்றன. இதில் பாகிஸ்தான தப்பிக் கொள்ள தவறுமாயின் பலியிடப்படும் நிலை ஏற்படும். இது ஒரு தீவிர போராக மாறிவிட்டது. அதனால் நீடித்த போராக மாற்றமடைய வாய்ப்பு அதிகமுண்டு.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)