March 17, 2026
அரசியல் கட்டுரைகள்

இந்தியாவின் பிரதமரது இஸ்ரேலிய விஜயமும் இந்திய வெளியுறவுக் கொள்கையும்?

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்கு சென்றிருந்தமை அதிக குழப்பங்களை சமகாலத்தில் தந்துள்ளது. கடந்த 25-26.02.2026 திகதிகளில் இஸ்ரேலுக்குச் சென்ற இந்திய பிரதமர் இரு நாட்டுக்கும் இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் போன்ற விடயங்களில் பல உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இரு தலைவர்களும் நெருக்கமான உறவை வெளிப்படுத்தியதோடு இந்தியாவின் வெளியுறவு முக்கிய அம்சமாக இஸ்ரேலிய நாட்டுடனான உறவு பார்க்கப்படுகின்றது. ஈரான் மீது போர் நிகழ்த்துவதற்கு காரணமாகவும் அமெரிக்காவுடன் கூட்டாகவும் செயல்படும் இஸ்ரேலுடன் இந்தியா வைத்துள்ள நட்பு அதிக விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரையும் இந்திய பிரதமரது இஸ்ரேலிய விஜயம் ஏற்படுத்தி இருக்கக் கூடிய அரசியல் விவாதங்களை தேடுவதாக உள்ளது.

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவு நீண்ட பரிமாணம் கொண்டது. 1950ஆம் ஆண்டு இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தது முதல் இரு நாட்டுக்குமான உறவு படிப்படியாக வளர்ச்சி பெற்றது. ஆரம்பகால இந்திய ஆட்சியாளர்களை விட பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிற்பாடு இந்திய இஸ்ரேலிய நட்புறவு பலமானதாக மாறியது. 1990களுக்கு பின்னர் இரு அரசுகளும் விரிவான பொருளாதார இராணுவ மற்றும் அரசியல் உறவை பலப்படுத்திக் கொண்டன. 1947ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டாலும் 1950 களில் இஸ்ரேலை அங்கீகரித்ததுடன் இரு நாட்டுக்குமான சுமூக உறவு முக்கிய அம்சமாக மாறியது. 1953ஆம் ஆண்டு மும்பாய் நகரில் இஸ்ரேலிய இராஜீக உறவை பலப்படுத்தும் நகர்வாக தூதரகம் நிறுவப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் நிகழ்ந்த போதெல்லாம் இஸ்ரேல் இந்தியா பக்கம் இருந்ததோடு ஆயுத தளபாடங்களையும் மருத்துவ உதவிகளையும் உளவுத்துறை ஆலோசனைகளையும் இந்தியாவுக்கு வழங்கி இருந்தது. இதனை அடுத்து 1992ஆம் ஆண்டு இந்தியா டெல்அவிவ்ல் தூதரகத்தை நிறுவியதுடன் இரு நாட்டுக்குமான இராஜதந்திர உறவு பலமானதாக மாறியது. இதனை அடுத்து புதுடில்லியில் அமைக்கப்பட்ட இஸ்ரேலிய தூதரகம் இராஜேந்திர ரீதியான நட்புறவை மேலும் பலப்படுத்தியது.

2019களில் இந்தியா இஸ்ரேலின் மூன்றாவது பெரிய ஆசிய வர்த்தக கூட்டாளியாகவும் வர்த்தக பங்காளியாகவும் விளங்கியதோடு உலகளாவிய ரீதியில் பத்தாவது பெரிய வர்த்தக கூட்டாட்மை நாடாகவும் இஸ்ரேல் விளங்கியது. இராணுவ ரீதியில் ஆயுததளபாடங்களை கொள்வனவு செய்யும் நாடாக இந்தியா விளங்குவதுடன் இருதரப்பு வர்த்தகத்தில் 6.3 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக உறவு காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். 2015ஆம் ஆண்டு புள்ளிவிபரணத்தின் படி இரு நாடுகளும் தகவல் தொழில்நுட்பத்திலும் உயிரியல் தொழில்நுட்பத்திலும் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் பரஸ்பரம் விரிவான இருதரப்பு உடன்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒரு வலுவான நட்புறவை சாத்தியப்படுத்தியது. 2022ஆம் ஆண்டு இராணுவ ஆயுததளபாடங்களை இஸ்ரேலிடமிருந்து பெறுகின்ற மிகப்பெரிய வாடிக்கையாளராக இந்தியா காணப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது பெரிய இராணுவ பொருட்களுக்கான கொல்வனவு நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது. ஏறக்குறைய இஸ்ரேலிய மொத்த ஆயுத ஏற்றுமதியில் 42.1 சதவீதம் இந்தியா இறக்குமதி செய்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 1999ஆம் ஆண்டு கார்க்கிலில் நிகழ்ந்த மோதலுக்கு பின்னர் 2019 இடைப்பட்ட காலப் பகுதியில் இஸ்ரேலிடமிருந்து பாதுகாப்புக்கு தேவையான ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா 9.0 பில்லியன் அமெரிக்க டாலரை செலவிட்டிருந்தது.

இவ்வாறு இரு நாட்டுக்குமான நட்புறவு வலுவானதாக காணப்படுகின்றது. ஆனால் ஈரான் மீதான அமெரிக்க போர் சூழல் நிகழ்கின்ற போது இந்திய பிரதமரது இஸ்ரேலிய பயணம் அதிகமான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அவற்றை எல்லாவற்றையும் கடந்து இந்திய பிரதமர் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட விஜயம் இரு நாடுகளதும் தேசிய நலனை முன்னிறுத்தி கொண்டதோடு இந்தியா இஸ்ரேலுடன் இராணுவ ரீதியில் வைத்திருக்கும் நட்புறவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக தெரிகின்றது.

இந்திய பிரதமர் இஸ்ரேலியா பாராளுமன்றத்தில் உரையாற்றுகிற போது தெரிவித்த கருத்துக்கள் அதிக சர்ச்சைமிக்கதாகவே தெரிகின்றது. குறிப்பாக ஹமாஸ்ன் பயங்கரவாத நடவடிக்கை (அக்டோபர் 07) மும்பைத் தாக்குதலோடு (நவம்பர் 26) ஒப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலிய பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் எதனையும் கண்டிக்காதது வருத்தமளிக்கும் விடயமாகவே நோக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் குறிப்பாக மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளுகின்ற அடாவடித்தனமான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா அங்கீகரிப்பது போன்றே அவரது உரையின் சாராம்சம் அமைந்திருந்தது. தான் பிறந்த அன்றைய தினமே (செப்.17) இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தது எனவும் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் (Knesset) தெரிவித்திருந்தார். பயங்கரவாத தாக்குதல்களை எத்தகைய அம்சங்களுக்கு ஊடாகவும் சமரசம் செய்ய முடியாது என தெரிவித்த நரேந்திர மோடி இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு துயரம் தெரிவிக்காது கொல்லப்பட்ட யூதர்களுக்கு மட்டும் அஞ்சலி செலுத்தினார். அக்டோபர் 07 தாக்குதலை முதன்மைப்படுத்தி உரையாடியதோடு பயங்கரவாதத்தின் வலிகளை இந்திய மக்கள் போன்று யூதர்கள் அனுபவிப்பதை தான் புரிந்து கொள்வதாகவும் வெளிப்படுத்தியிருந்தார். இது ஒரு வகையில் யூதர்களின் நியாயப்படுத்துவது போன்று அமைந்திருந்தது. ஹமாஸ் தாக்குதல் எந்த அளவுக்கு மோசமானதோ அதே அளவுக்கு மோசமான தாக்குதலாகவே இஸ்ரேலிய தாக்குதலும் அமைந்துள்ளது. இந்திய பிரதமர் இந்திய நாகரீகத்தின் அடையாளமாகவும் இந்திய மரபு சார்ந்த அம்சங்களில் அடையாளமாகவும் மனிதாபிமானத்தின் அடையாளமாகவும் அடையாளப்படுத்தப்பட வேண்டியவர். ஆனால் ரஷ்சிய ஜனாதிபதியையும் இஸ்ரேலிய பிரதமரையும் கட்டித்தளுவதும் உறவு கொள்வதுவும் மிக மோசமான உலகத் தலைவர்களை அங்கீகரிப்பதும் அவர்களுக்கு பின்னே அணிவகுத்து இருப்பதும் இந்திய நாகரீகத்தின் மரபை அவமதிப்பதாகவே தெரிகின்றது. இந்தியா உலகில் உள்ள எல்லா நாடுகளோடும் உறவு கொள்வதற்கும் நட்பு பாராட்டுவதற்கும் அந்த நாட்டுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. எந்த நாட்டோடு நட்புறவு கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகளை யாரும் முன் வைத்து விட முடியாது. ஆனால் அதே நேரம் இந்தியா நாகரீகத்தினால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு தேசம். அது உலகத்தில் அகிம்சை அணிசேராமை போன்ற கோட்பாடுகளுக்குள்ளால் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு தேசம். அதன்படி உறவு ஆரோக்கியமான சமாதானபூர்வமான நியாயப்பாடுடையதானதாக பார்க்கப்பட வேண்டும். அதனுடைய நாகரீக எல்லைகளோடு மோதுகின்ற போது அதன் விளைவுகள் பிராந்தியத்திற்கும் உலகத்திற்கும் அபாயமானதாக அமைய வாய்ப்புள்ளது.

பதிலுக்கு இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு உரையாற்றும் போது இந்தியா மட்டுமல்ல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நட்பனுக்கு அப்பால் சகோதரர் என்று தெரிவித்தார். Speech of Knesset விருதும் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கௌரவிக்கப்பட்டார்.

ஈரான் மீதான போரை முதன்மைப்படுத்தும் இஸ்ட்ரேலின் நடவடிக்கையை தடுத்து நிறுத்து முயற்சிக்காத இந்திய பிரதமரின் விஜயம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டிச் சேர்ந்து ஈரானை தாக்கி அழிக்க மேற்காசியாவை போரின் எல்லைக்குள் நகர்த்த திட்டமிடுகின்ற போது அதனை கட்டுப்படுத்த வேண்டிய அதற்கு சமாதானம் அளிக்க வேண்டிய அதற்கு அத்தகைய போரை தடுத்து நிறுத்துவதற்கு தலைமை தாங்க வேண்டிய இந்திய பிரதமர் இஸ்ரேலிய பிரதமரோடு உறவாடுவது என்பது நெருக்கமான நட்புறவை வெளிப்படுத்துவது என்பது உலக அரசியல் போக்கில் இந்தியாவின் பலவீனமான பக்கத்தை காட்டுகின்றது. அரசியல் இலக்கணத்தை வரைந்த ஹரேல் லக்ஸ்சி குறிப்பிட்டது போல் சர்வதேச உறவில் நீதியோ நியாயமே எதிர்பார்க்க முடியாது என்பதையே மோடியின் இஸ்ரேலிய விஜயம் உணர்த்துகிறது. இதனை நோக்கிய இந்திய தேசம் வடிவமைக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை தருகின்றது. இந்தியா உலக நாடுகளோடு நட்புறவை வைத்துக் கொள்வதும் மேற்கு ஆசிய நாடுகளோடு நெருக்கமான உறவை பேணுவதும் அதற்கு உரித்துடைய வெளியுறவின் மரபாகும். ஆனால் நடைமுறையில் அத்தகைய வெளியுறவின் பிரதிபலிப்புகள் பரிசீலிக்கப்படவும் விவாதிக்கப்படவும் தேவையானதாக தெரிகிறது.

எனவே இந்திய பிரதமரது இஸ்ரேலிய பயணம் இந்தியாவின் வெளியுறவில் கொள்கையில் அதிக நெருக்கடி மிக்க தருணமாகும். ஆனால் இந்தியாவின் இருப்பு என்பது அதன் பாதுகாப்பு துறைமுறையில் தங்கியிருக்கின்றது என்ற அடிப்படையில் இந்த விஜயம் நோக்கப்படுகின்றது. இந்திய நாகரீகத்தின் வளர்ச்சிக்குள்ளால் நோக்குகின்ற போது இஸ்ரேலுடனான இந்திய நட்புறவு அதிக விவாதங்களை அல்லது விமர்சனங்களை ஏற்படுத்தக் கூடியது. அது தவிர்க்க முடியாததுமாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)