இந்தோ -பசுபிக் அரசியல் சீனாவுக்கு எதிரான நகர்வை முதன்மைப்படுத்துவதில் முனைப்புச் செலுத்துகிறது. உக்ரைன் போருக்கு பின்னர் கிழக்கு ஐரோப்பாவை நோக்கிய மேற்குலக அரசியல் சீனாவின் நகர்வை முற்றாக கைவிடாது செயல்படுவதாகவே தெரிகிறது. ரஷ்ய -உக்ரைன் போர் எந்தளவுக்கு ரஷ்யாவுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளதோ, அதேயளவுக்கு அமெரிக்காவுக்கும் உண்டு. சீனாவின் விஸ்தரிப்பையும் அதற்கான உபாயங்களையும் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் நகர்த்துவதில் ரஷ்ய- உக்ரைன் போர் உதவியதாகவே தெரிகிறது. அந்தகைய போட்டி அரசியலில் இன்னோர் இராணுவ நகர்வாக நீர்மூழ்கிகப்பல் படையை அமைக்க AUKUS நாடுகள் திட்டமிட்டுள்ளன. அதற்கான உடன்பாட்டையும் அந்நாடுகளின் தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்கா,பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் 2021ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆக்கஸ் உடன்பாட்டின் பிரகாரம் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நகர்வாக நீர்மூழ்கி கப்பல்படை அமைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் உடன்பாட்டின் உள்ளடக்கத்தையும் விளைவையும் தேடுவதாக அமையவுள்ளது.
15.03.2023 அன்று கலிபோர்னியாவிலுள்ள சாங்கிய நகரில் ஜோ பைடன், ரிஷி சுனக்,மற்றும் அன்ரனி அல்பினஸ் ஆகிய தலைவர்கள் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் உள்ளடக்கம் அனைத்துமே மூன்று நாடுகளின் கடற்படையை பலப்படுத்துவதுடன் இராணுவ ரீதியில் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் கண்காணிப்பையும் கட்டுபாட்டையும் உறுதிப்படுத்துவதாகவே தெரிகிறது. இந்த உடன்பாட்டின் அடிப்படையில் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அணுசக்திகளைக் கொண்ட நீர்மூழ்கிகளை கடற்படையில் இணைக்கும் வலிமையை அவுஸ்திரேலியா பெறவுள்ளது. அமெரிக்காவினதும், பிரிட்டனினதும் நட்புநாடான அவுஸ்திரேலியா இதுவரை அணுவாயுதங்களை கொண்டிராத நாடாகவே உள்ளது. முதல்தடவையாக அணுசக்தியைக் கொண்ட நீர்மூழ்கிகளை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க இராணுவ வளர்ச்சியாகவே உள்ளது. அது மட்டுமன்றி பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தை பெறுகின்ற நாடாகவும் அவுஸ்திரேலியா மாறவுள்ளது. தற்போதுள்ள டீசல் இயந்திரங்களைக் கொண்ட நீர்மூழ்கிகளைவிட அணுசக்தியைக் கொண்ட நீர்மூழ்கிகள் நீண்டதூர இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறனை பெற்றுள்ளதுடன் நீண்ட தூரத்திற்கு சென்று தாக்கும் திறனையும் கொண்டதாக மாறவுள்ளது. இந்த உடன்பாட்டின்படி அவுஸ்திரேலிய கடற்படைகள் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நீர்மூழ்கித் தளங்களுக்கு இந்த ஆண்டு முதல் அனுப்பி வைக்கப்படுவர். இதன் நோக்கம் அவுஸ்திரேலிய கடற்படையினர் நீர்மூழ்கிகளை கையாளுவது தொடர்பிலான பயிற்சியாக அமைவதுடன் அதன் தொழில்நுட்பத்தையும் பிரயோகிக்கும் திறனையும் பெறுவதாகவும் அமையும்.
மேலும் 2027இல் பிரித்தானியாவும் அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவிலுள்ள டேர்பன் துறைமுகத்தில் அமைக்கவுள்ள அணுசக்தியினாலான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்ட துறைமுகத்தை பராமரிக்கும். 2030 களின் தொடக்கத்தில் மூன்று வேர்ஜினியா நீர்மூழ்கிக் கப்பல்களை அவுஸ்திரேலியா வாங்குவதுடன் தேவையின் நிமித்தம் மேலும் இரண்டு கப்பல்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கும் உடன்பாட்டில் ஏற்பாடுகள் அமைந்துள்ளன. அதன்பின்னர் மூன்று நாடுகளும் இணைந்து புதிய வகை தொழில்நுட்பத்தைக் கொண்ட நீர்மூழ்கிகளை வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்தகைய புதியவகை நீர்மூழ்கிகள் எஸ்.எஸ்.என் ஆக்கஸ் என அழைக்கப்படும் எனவும் வரைபு முன்மொழியப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல் வகை நீர்மூழ்கிகள் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் கட்டப்படுவதாகவும் உடன்பாடு குறிப்பிட்டுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல்படை என்பது புதிய கடற்படை உபாயமாக அமைந்துள்ளது. உலக நாடுகள் மத்தியில் கடற்படை விரிவாக்கம் தொடங்கியது முதல் தற்போதுவரை இவ்வாறான நடவடிக்கைகள் நிகழ்ந்ததாக தெரியவரவில்லை.
நாடுகள் தமது தனித்துவத்தையும் உலக ஆதிக்கத்தையும் வரையறுத்துக் கொள்ள கடற்படையை அதிகரிப்பதும் அதற்கான ஆயுததளபாட உற்பத்தியை முதன்மைப்படுத்துவதும் வழமையானதாக அமைந்திருந்தது. ஆனால் முதல்தடவையாக நீர்மூழ்கி கப்பல்படை எனும் உத்தியை ஆக்கஸ் நாடுகள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ளன.இதன் விளைவுகளை விரிவாக தேடவேண்டிய அவசியப்பாடு காணப்படுகிறது.
ஒன்று, சீனாவின் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படுத்திவரும் இராணுவ விரிவாக்கத்தை தடுப்பதற்கான நகர்வாகவே தெரிகிறது. 2021இல் உடன்பாடு எட்டப்பட்ட ஆக்கஸ் அமைப்பை கண்டித்துவரும் சீனா, தற்போது எட்டப்பட்டுள்ள நீர் மூழ்கிகப்பல் படைக்கான நடவடிக்கையையும் சீனாவின் வெளிவிவகார அமைச்சு கண்டித்துள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சு இத்தகைய உடன்படிக்கை இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் ஆயுதப் போட்டியையும், அணுவாயுத உற்பத்திற்கான நகர்வுகளையும் அதிகரிக்க மேற்கத்திய நாடுகள் முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளது. இது பிராந்திய பாதுகாப்புக்கும் அமைதிக்கும் ஆபத்தானதென சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு, உடன்பாட்டு எட்டப்பட்ட போது ஆக்கஸ் நாடுகளுக்கு தலைமை தாங்கும் அமெரிக்க ஜனாதிபதி உரையாற்றிய சந்தர்ப்பத்தில்,இது ஜனநாயக நாடுகளின் உடன்படிக்கை என்றும், மரபான ஜனநாயக நட்பு நாடுகளின் கூட்டு உடன்பாடு எனவும் வர்ணித்ததுடன், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மட்டுமன்றி உலகளாவிய ரீதியான பாதுகாப்புக்கும் அமைதிக்குமான உடன்பாடு எனக்குறிப்பிட்டார். மேலும் அவர் இது அணுவாயுதங்களை கொண்ட உடன்பாடு இல்லை எனவும் அணுசக்தியைக் கொண்ட நீர்மூழ்கிக்கான உடன்பாடு எனவும் அவுஸ்திரேலியா அணுவாயுதமற்ற நாடு என்ற கொள்ளையை பாதிக்காது எனவும் தெரிவித்தார். ஆனால் அணுசக்தியை கொண்ட பயன்பாட்டுக்கு அணுக்கள் செறிவூட்டப்படுவது அவசியமான செய்முறையாகவே அமையும். அது படிப்படியாக அணுவாயுதத்தை நோக்கிய நகர்வுகளை நாடுகளின் அரசியல் ஏற்படுத்தும். உலகளாவிய ரீதியில் அணுவாயுத நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அவுஸ்திரேலியாவும் அதனை நோக்கி செயல்பட வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாக அமையும். அதுவே ஆக்கஸ் உடன்பாட்டின் இராணுவ வியூகமாக மாற்றம் அடையும்.
காரணம் உடன்பாடு தொடர்பில் உரையாற்றிய பிரித்தானியப் பிரதமர் உலகளாவிய மட்டத்தில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், வடகொரியா மற்றும் ஈரானின் அதீதமான இராணுவ வளர்ச்சி உலக அமைதிக்கும் மனித உரிமைக்கும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதுடன் ரஷ்யாவின் உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை அதிக ஆபத்தை உலக அமைதிக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மூன்று, ஆக்கஸ் உடன்பாட்டில் இல்லாத குவாட் நாடுகளில் அங்கம் பெறும் இந்தோ- பசுபிக் உபாயத்தில் பிரதான இந்து சமுத்திர நாடான இந்தியாவின் நிலை முக்கியமானதாக தெரிகிறது. ஏறக்குறைய ஆக்கஸ் உடன்பாட்டில் இந்தியா தவிர்க்கப்பட்டதன் விளைவே ரஷ்ய- -– இந்திய நெருக்கத்திற்கும் தீவிர போக்குக்கும் காரணமென குறிப்பிடப்படுகிறது.
அதாவது மேற்குலக நாடுகளான அமெரிக்காவோ, பிரித்தானியாவோ தமது இராணுவ தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க தயாரில்லை என்பதே இதன் உள்ளடக்கமாகும். மாறாக தமது மூதாதையரைக் கொண்ட அவுஸ்திரேலியாவுக்கு வழங்குவதில் எத்தகைய குழப்பமும் இல்லை என்பதை ஆக்கஸ் உடன்படிக்கை வெளிப்படுத்தியிருந்தது. இதுவே இந்திய- – ரஷ்ய நெருக்கத்திற்கும் மேற்குடனான முறுகலுக்கும் காரணமாகவுள்ளது. இதுபோன்ற மேற்குலகத்தின் நடவடிக்கைகளே இந்தியாவின் கீழைத்தேச நாடுகளுடனான ஒத்துழைப்புக்கு பிரதான காரணமாக உள்ளது. இலங்கைத் தீவிலும் அமெரிக்காவின் அண்மைய மென்மையான இராணுவ நடவடிக்கை இந்தியாவை அதிகம் பாதித்துள்ளது. விடுதலைப்புலிகளின் தலைமை தொடர்பிலான தமிழகத்தின் தகவல் சார்ந்து இந்திய புலனாய்வுத்துறையின் மௌனம் அதிக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே நீர்மூழ்கிப்படையின் நடமாட்டமும் இந்தியாவை பாதிப்பதாகவே அமையும். மேற்கின் நீர்மூழ்கிப்படை இந்தியாவுக்கும் எதிரானதே. தனித்து சீனாவுக்கு மட்டும் எதிரானதாக அமையுமென கணிப்பிடுவது தவறானது.
இது இந்துசமுத்திரத்தின் மீதான மேற்குலகத்தின் கண்காணிப்பும் நகர்வுகளும் அதிகரிக்கவும் மென்மையான இராணுவ நகர்வுகளை நிகழ்த்தவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மென்மையான இராணுவ நகர்வுகளில் மாற்றங்களையும் எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய சூழல் காணப்படுகிறது. இந்தியா, அமெரிக்காவின் கீழ்படிவுக்குள் இருக்கும் வரை உறவு சுமுகமானதாகவே அமைந்திருந்தது. அமெரிக்காவை கட்டுப்படுத்த முயலும் போதெல்லாம் அமெரிக்க – -இந்திய உறவு விரிசலடைவதை காணக்கூடியதாக உள்ளது. இதன் எதிரெலிப்பு இந்தியா குவாட் அமைப்பிலிருந்தும், இந்தோ -பசுபிக் உபாயத்தின் ஒத்துழைப்பிலிருந்தும் வெளியேற வேண்டும். அதனையே மேற்குக்கான இந்திய சந்தைகளிலும் ஏற்படுத்த வேண்டும்.
எனவே நீர்மூழ்கிப்படையின் பிரசன்னம் அதிக நெருக்கடியை இந்துசமுத்திரப் பிராந்தியத்திலும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்தோ- பசுபிக் பிராந்தியம் என்ற உபாயம் நிலைத்திருக்க முயலுவதுடன் இது முழுமையாக மேற்கு நாடுகளின் இராணுவ பிராந்தியமாக மாறவாய்ப்புள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
