இந்திய -ஈழத்தமிழர் உறவில் காணப்படும் முரண்பாடுகள் ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் தென் இலங்கை -இந்திய நெருக்கமான உறவுக்கான திட்டமிடலை உருவாக்க முயலும் காலப்பகுதியாக சமகாலம் அமைந்துள்ளது. 1987 முதல் ஈழத்தமிழருக்கும் இந்தியாவுக்கான விரிசலை ஏற்படுத்துவதில் தென்இலங்கை ஆட்சியாளர்கள் அதிக கவனத்துடன் செயல்படும் போக்கு காணப்படுகிறது. அதனை ஊக்குவிக்கும் நோக்கில் தென் இலங்கை செயல்பட தமிழ் அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது போல் செயல்படும் போக்கும் நிலவுகிறது. அதாவது கிட்டுப்பூங்கா பிரகடனம் மட்டுமல்ல இந்திய மீனவர்களுக்கு எதிரான ஈழத்து மீனவர்களது போராட்டம் இந்திய மீனவர்களது படகுகள் ஏலவிற்பனை இந்திய மீனவர்கள் கைது ஈழத்து மீனவர்கள் கொல்லப்படுவது போன்ற விடயங்கள் அதிக இந்திய விரோதப் போக்கினைக் காட்டுகிறது. இவற்றுக்கான ஆரம்பமாக முல்லைத்தீவிலிருந்து வடமராட்சி கடல்பகுதி வரையுமான படகுப் போராட்டம் விளங்கியது என்பது தவிர்க்க முடியாது ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இக்கட்டுரையும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரது இந்திய விஜயம் ஏற்படுத்தியுள்ள விளைவுகளைத் தேடுவதாக அமையவுள்ளது.
கடந்த 07.02.2022 மூன்று நாள் விஜயமாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மற்றும் வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். அதன் போது இரு நாட்டுக்குமான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நெருக்கமான உறவினை பற்றி உரையாடியதுடன் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் கைமாற்றிய உடன்படிக்கை பற்றி இருநாட்டு உறவிலும் வெற்றியளிக்கும் நிலையினை உருவாக்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவம் நீதி சமாதானம் கௌரவம் என்பனவற்றை உறுதி செய்வதே இலங்கையின் நலனுக்கு உகந்த விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக அவரது அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் தமிழருக்கான விடயங்களை உறுதி செய்வதற்கு அதிகாரப் பரவலாக்கம் மிக முக்கியமானது என தெரிவித்ததாக அவ்வறிக்கை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமன்றி இந்தியா இலங்கை இடையேயான பாதுகாப்பு, கலாசாரம்,கல்வித்துறை தொடர்பான உடன்படிக்கைகளை விரைவில் பூர்த்தி செய்வதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இணக்கம் தெரிவித்ததாக அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்துப் பத்திரிகைக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் தெரிவிக்கும் போது, அதிகாரப் பகிர்வு மற்றும் 13வது திருத்தம் தொடர்பான விடயங்களில் தற்போது இந்தியாவுக்கு எந்த வகிபாகமும் இல்லை எனவும் பிரதான பொறுப்பு இலங்கைக்கே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் இலங்கை அரசியல் கட்சிகள் முதன்மையாக இலங்கை அரசாங்கத்துடன் பேசவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களது வெளிப்பாடுகளையும் அவதானிக்கும் போது முரண்பட்ட நிலை ஒன்றை காணமுடிகிறது. ஈழத்தமிழரது அரசியல் விடயத்தில் வழமை போன்று இரு தரப்பும் வேறுபட்ட விடயங்களை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் வழமையான உரையாடலையே மீளவும் பதிவு செய்துள்ளார் என்பது ஒருபுறம் அமைய அவருடனான உரையாடலை தென் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் கையாளும் விதத்தில் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார் என்பது அவரது பதிலிருந்து அறிய முடிகிறது. குறிப்பாக அதிகாரப் பகிர்வு விவகாரம் புதிய அரசியல் வரைபில் சந்தேகத்திற்கு இடமின்றி கவனத்தில் கொள்ளப்படும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்னோர் கேள்விக்கு பதிலளிக்கும் போது, ஜனாதிபதியுடனான தமிழ் தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு கொவிட் தலையீடு காரணம் எனத் தெரிவித்துள்ளமை அதிக வேடிக்கையான பதிலாக அமைந்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் பீரிஸ் இந்துப் பத்திரிகைக்கு வழங்கிய பதில்களில் அதிக வார்த்தைகள் இந்தியாவுக்கும் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் மறைமுகமாக சிலவிடயங்களை தெரிவித்துள்ளதைக் காணமுடிகிறது. குறிப்பாக தமிழ் கட்சிகள் இலங்கை அரசாங்கத்துடனேயே முதலில் பேசவேண்டும் என்பதை அழுத்தமாக தெரிவித்துள்ளார். அதன்மூலம் தமிழ் தரப்பு இந்தியாவுக்கு கடிதம் எழுதிய விடயத்தை முற்றாகவே தென் இலங்கைத் தரப்பு நிராகரிப்பதை உணரமுடிகிறது. அவ்விடயம் அதிக நெருக்கடியை தென் இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.நீதி அமைச்சரும் வெளியுறவு அமைச்சரும் வடக்குக்கு விஜயம் செய்த போதும் அத்தகைய விடயத்தையே வலியுறுத்தியிருந்தமை கவனிக்கத்தக்கது. ஆனால் கடந்த எழுபது வருடங்களுக்கு மேல் இலங்கை அரசாங்கங்களுடன் பேசியதால் எந்தவித பயனையும் ஈழத்தமிழர்கள் அடையவில்லை. அது மட்டுமன்றி ஈழத்தமிழரது தேசிய இனப்பிரச்சினை பிராந்திய அரசியலைக் கடந்து சர்வதேசப் பிரச்சினையாகியுள்ளது. இவை எல்லாவற்றையும் முடிபுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பிரயத்தனத்துடனேயே தென் இலங்கை ஆட்சி செயல்படுகின்றதை உணர முடிகிறது.
அவ்வாறே புதிய அரசியலமைப்பு வரைபுக்குள் அதிகாரப் பரவலாக்கம் சந்தேகமின்றி கவனத்தில் கொள்ளப்படும் எனக்குறிப்பிட்ட வெளியுறவு அமைச்சர் பீரிஸ் ‘ஆனால் எதைச் செய்தாலும் நாட்டில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் ஒரு பாரியளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டால் அதை களத்தில் செயல்படுத்துவது கடினமாக இருக்கும்’ என்றார் எனவே தென் இலங்கை அரசாங்கம் எவ்வாறு அதிகாரப் பகிர்வு விடயத்தை கையாளப் போகிறதென்பதை தெளிவாக அடையாளப்படுத்தியுள்ளார் வெளியுறவு அமைச்சர். அதாவது அதிகாரப் பகிர்வுக்கு எதிரான சக்திகளை முன்னிறுத்திக் கொண்டு புதிய அரசியமைப்பு வரைபில் அத்தகைய விடயம் எதுவுமே இல்லாது வரைபை தயார் செய்யத் திட்டமிட்டுள்ளதையும் அதற்கான ஒப்புதலை இந்தியாவிடம் பெறுவதற்கும் முயல்வதையே வெளிவிவகார அமைச்சரது நகர்வு காட்டுகிறது.
மறுபக்கத்தில் இந்தியா தற்போதைய தென் இலங்கையின் நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு அதிகம் இலங்கைத் தீவில் தனது பிரசன்னத்தை அதிகரிக்க திட்டமிடுகிறது. அதற்கமைவாகவே இந்தியாவுடனான உடன்பாடுகளை அமுல்படுத்துவது பற்றி இலங்கை வெளியுறவு அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை ஒப்புதலளித்துள்ளதையும் இந்தியத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி இலங்கை ஆட்சியாளர்கள் எப்படி இந்தியாவை கையாள நகர்கிறார்களோ அவ்வாறே இந்தியத் தரப்பும் இலங்கையை கையாள ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இந்திய வெளியுறவு அமைச்சரது விஜயம் விரைவில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மார்ச்சில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிம்ஸ்ரிக் மகாநாட்டுக்காக இலங்கை வருகைதரவுள்ளமை கவனத்திற்குரிய விடயங்களாகும்.
இதே நேரம் திருகோணமலை எண்ணெய் குதங்கள் கைமாற்றப்பட்ட உடன்பாட்டை வெற்றிகரமானதென இந்தியத் தரப்புக் கருதினாலும் இலங்கை பெற்றோலியத் துறை அமைச்சினால் அந்த விடயம் பாராளுமன்றத்திற்கு விவாதத்திற்குவர இருக்கிறது. பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நகர்த்த இருந்த இரு நாட்டுக்க்கான மீனவர் பிரச்சினை சார்ந்த ஒத்திவைப்பு பிரேரணையை இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரியின் உறுதிமொழியை அடுத்து கைவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளமை மட்டுமன்றி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியா எந்த அழுத்தமும் இலங்கைக்கு வழங்கவில்லை என்ற பகிரங்க வெளிப்பாடும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாக காணப்படுகின்றன. வெளிவிவகார அமைச்சரின் அறிப்பு ஒன்றும் புதியதல்ல. இலங்கை ஆட்சியாளருக்கு இந்தியாவையும் ஈழத்தமிழரையும் எப்படிக் கையாளுவதென்பது நன்கு தெரிந்த விடயம். இதனூடாக இந்தியாவுக்கும் -ஈழத்தமிழருக்கும் இடையிலான நம்பிக்கை சிதைவை உருவாக்கலாம் என்பதே அவர்களது பிராதான நோக்கமாகும். இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் எந்தக்கரிசனையும் கொள்ளாது என்பதை மீள மீள உணர்த்துவதில் தென் இலங்கை ஆட்சியாளர்கள் கவனமாகச் செயல்படுகிறார்கள். இதனைக் கேட்டுக் கொண்டு ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் செயல்பட முடியாது. இந்தியாவின் நலனும் ஈழத்தமிழருக்கான நலனும் ஓரிடத்தில் உள்ளதென்பதை கருத்தியல் ரீதியில் கண்டுகொள்வது அவசியமானது. அதனை இந்தியத் தரப்புக்கு கடிதம் எழுதுவதால் மட்டும் உணர்த்த முடியாது. அதனைக்கடந்து சந்திப்புகளையும் உரையாடல்களையும் தொடர்ச்சியாக நிகழ்த்த வேண்டும். இலங்கையிலுள்ள அனைத்து இந்தியத் தூதரகங்களையும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அணுகுதல் வேண்டும். தொடர்ச்சியாக அணுகுதல் வேண்டும்.
எனவே, இந்தியாவை தொடர்ச்சியாக கையாளும் தென் இலங்கையின் அரசியலை ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜெனீவாவையும் ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் இந்தியாவுக்கூடாக அணுகுதல் ஈழத்தமிழருக்கு பொருத்தமான விளைவைத் தரக்கூடியதாய் அமைய வாய்ப்புள்ளது. இந்தியா ஈழத்தமிழருக்கு எதனையும் பெற்றுத்தராது என்பதற்கு அப்பால் ஈழத்தமிழரது அரசியல் தீர்வு ஈழத்தமிழரிடமே இருக்கிறதென்பதை உணரவேண்டும். அதற்கான அரசியல் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். ஈழத்தமிழரது அரசியல் தீர்வுக்கு இந்தியாவின் அனுசரணை அவசியமானது. தற்போது அத்தகைய அனுசரணை புவிசார் அரசியலாக மட்டுமல்ல புவிசார் பொருளாதாரமாகவும் அவசியமானது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அணுக்குண்டை வீசி இலட்சக்கணக்கான ஜப்பானியரை கொன்றொழித்த அமெரிக்காவுடன் போர் முடிந்ததும் ஜப்பான கைகோர்த்தது. அதனால் ஜப்பான் பொருளாதார வல்லரசாக எழுச்சிபெற்றது. தற்போது அரசியலிலும் இராணுவத்திலும் தனது நிலையை உறுதிப்படுத்த ஆரம்பித்துள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
