June 27, 2026
அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழர் அரசியலில் இடைக்கால ஜனாதிபதி தேர்தலும் தமிழ்த்தேசிய கட்சிகளும்!

இலங்கை அரசியலில் ஏற்பட்ட நெருக்கடிக்கு பாராளுமன்றம் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்ததன் மூலம் தீர்வு கண்டுள்ளது என்ற வாதம் முதன்மைப்படுத்தப்படுகின்றது. ஆனாலும் காலிமுகத்திடல் போராட்டக்குழுவினர் புதிய ஜனாதிபதிக்கான எதிர்வினையை ஆரம்ப காலப்பகுதியிலிருந்து வெளிப்படுத்தி வருகின்றார். புதிய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதில் காலிமுகத்திடல் போராட்டக்குழுவினர் திட்டமிட்ட முடிவுகளை சமகாலத்திலும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் மீண்டும் ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழலுக்குள் இலங்கைத்தீவின் அரசியல் காணப்படுகின்றது என்ற சந்தேகம் நிலவுகிறது. ஆனால் புதிய ஜனாதிபதியின் அண்மைய நகர்வுகளை அவதானிக்கும் போது இரத்த களரிக்கான வாய்ப்பு சாத்தியமற்றுப் போகும் நிலை தென்படுவதாகவே தெரிகிறது. இதேநேரம் புதிய ஜனாதிபதியின் தெரிவில் வடக்கு-கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியத்துக்கான அரசியல் கட்சிகள் வெளிப்படுத்திய நகர்வுகள் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாக காணப்படுகின்றது. அத்தகைய கருப்பொருளையே இக்கட்டுரை பிரதிபலிக்க முனைகிறது.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் துயரத்துக்கு பின்னர் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு காத்திரமான பங்கினை கொண்ட அரசியல் கட்சியாக அடையாளப்படுத்தியது. அதனை அத்தகைய அடையாளத்துக்குள் முதன்மைப்படுத்தியவர்களாக விடுதலைப்புலிகள் அமைப்பு காணப்படுகின்றனர். ஆனால் கடந்த 13ஆண்டுகளில் அத்தகைய தமிழ்த்தேசிய கட்சிகளின் கொள்கைகளும் அவை அடைந்த இலக்குகளும் அதீதமான குழப்பங்களையும் தோல்விகளையும் தந்துள்ளன. இலங்கைத்தீவின் அரசியலில் எதிர்ப்புவாத உணர்வு என்பது காலம் காலமாக ஏற்பட்டுவரும் விடயமாகவே உள்ளது. தென்னிலங்கையோடு எல்லா காலத்திலும் எதிர்ப்பு அரசியலை நிகழ்த்துவதனூடாக நெருக்கடிகளிலிருந்து விலக்கி கொள்ள முடியுமென்ற கருத்துநிலையை தமிழ்த்தேசிய அரசியல் சக்திகள் கொண்டு விளங்குகின்றது. ஆனாலும் அத்தகைய எதிர்ப்பு அரசியலினால் அதிக நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற சூழலையே முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான காலப்பகுதி வெளிப்படுத்துகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் எதிர்பு அரசியலாக உரையாடிவிட்டு தென் இலங்கையோடு ஆதரவு அரசியலையே தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தும் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக மகிந்த ராஜபக்ஷhவை தோற்கடிப்பதற்கு தமிழ் மக்கள் மீதான போரை நடாத்தி முடித்த தளபதி பொன்சேகாவை ஆதரித்தது போல் கோத்தபாய ராஜபக்ஷhவை எதிர்ப்பதற்கு சஜித் பிரேமதாசாவை ஆதரித்தனர். அவ்வாறே ரணில் விக்கிரமசிங்காவை தோற்கடிப்பதற்கு டலஸ் அழகப்பெருமாவை ஆதரித்தார்கள். அதுமட்டுமன்றி டலஸ் அழகப்பெருமாவோடு யானை-புலி உடன்படிக்கை போன்று ஒரு உடன்படிக்கையையும் மேற்கொண்டார்கள். எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தென்னிலங்கை பொறுத்து தேர்ந்தெடுக்கும் அனைத்து தெரிவுகளும் தோல்வியையே வெளிப்படுத்துகின்றது. இது சஜித் பிரேமதாசவினுடனான 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் நிகழ்ந்துள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கும் வேட்பாளர்கள் தோல்வியை தழுவுகின்றார்கள். மறுவலமாக குறிப்பிட்டால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் தீவிர போக்குடைய சிங்கள தேசிய இனம் வெற்றி பெறுகின்றது. பொதுஜன பெரமுனாவின் உறுப்பினரான டலஸ் 2004இலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ள அக்கட்சிக்கு உழைத்தவரை நிராகரித்துவிட்டு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்காவை தேர்ந்தெடுத்தமையும் அதனையே புலப்படுத்துகிறது. அவ்வாறாயின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களில் நிகழ்ந்த அனுபவங்களை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துவதுடன் அதன் இருப்பபையும் துரநோக்கிலும் காணப்படும் பலவீனங்களையும் சரிசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த அனைத்து தேர்தல்களையும் விட தற்போது நிகழ்ந்த பாராளுமன்றத்துக்கு உட்பட்ட இடைக்கால ஜனாதிபதி தெரிவு தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நோக்கு நிலை தமிழ் மக்களின் மனோநிலையிலிருந்து உருவாக்கப்பட்டதாக காணமுடியாது என்பதையே காட்டகிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் எஞ்சியுள்ள தாராண்மைவாத மிதவாத முகமாக அடையாளப்படுத்தக்கூடியவர்களில் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர். அதுமட்டுமன்றி நல்லாட்சி காலத்திலும் 2018 அரசியலமைப்புசார் நெருக்கடி ஏற்பட்ட போதும் ரணில் விக்கரமசிங்காவுக்கு அரணாகவும் அணியாகவும் செயற்பட்டதை மறந்துவிட முடியாது. இலங்கைத்தீவின் ஜனநாயகத்தின் குரலாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அதன் ஊடகப்பேச்சாளருமான பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் காணப்பட்டார். ஆனால் அண்மைய காலங்களில் ரணில் விக்கிரமசிங்காவோடு ஏற்பட்ட கொள்கை சாராத தமிழ் மக்களின் நலன்சாராத முரண்பாட்டினால் தீவிர மோதல் போக்கு பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காணப்பட்டது. கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் சேர்ந்து இத்தகைய எதிர்ப்புவாதத்தை முதன்மைப்படுத்தினார். ஆனால் இத்தகைய தனிப்பட்ட மோதல்களுக்கு கட்சிக்கூடாக கட்டமைக்கப்பட்டு கட்சிக்குழுவின் தீர்மானமாக மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதர தமிழ்த்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்தது வேறுவிடயம். ஆனால் ரணில் விக்கிரமசிங்க மீதான எதிர்ப்புவாதம் ஈழத்தமிழரின் அரசியல் சார்ந்து முன்னெடுக்கப்பட்ட ஓரு விடயமா என்பது நியாயமான கேள்வியாகவே உள்ளது. காரணம் ரணில் விக்கிரமசிங்காவோடு இதயங்களால் ஒன்றிணைந்த கனவான் உடன்படிக்கைக்கூடாக பயணித்த தமித்தேசிய கூட்டமைப்பு ஏன் புதிய ஜனாதிபதியோடு முரண்பாட்டினை ஏற்படுத்தியது. கடந்த காலங்களிலும் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் மக்களை வாக்களிக்க செய்துவிட்டு மகிந்த ராஜபக்சாவுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததும், சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்துவிட்டு கோத்தபாயவோடு பேச்சுவார்த்தைக்கு முயன்றதும் தற்போது டலஸ் அழகப்பெருமாவுக்கு வாக்களித்துவிட்டு ரணில் விக்கிரமசிங்காவோடு பேச்சுவார்த்தைக்கு நகர முற்படுவது தீர்வுகளை பெறுவதில் ஆரோக்கியமனான செயற்பாடா என்பது கேள்விக்குரிய விடயம்.

தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் அதன் ஆட்சியாளர்களும் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கக்கூடாதென்ற மனேநிலையுடனேயே கடந்த காலம் முழுவதும் செயற்பட்டிருந்தனர். அதற்கு தமிழ்த்தரப்பும் ஒரு காரணமாகும். தனிப்பட்ட நலனுக்கு செவிசாய்ப்பது அல்லது பிராந்திய சர்வதேச சக்திகளுக்கு முண்டு கொடுப்பது என்ற அடிப்படையில் எதிர்ப்புவாதத்தை வளர்த்து தீர்வற்ற அரசியல் நிலையை முன்னெடுப்பதிலும் தமிழ் மக்களை தோற்கடிப்பதிலும் தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு அதிக பங்கு காணப்படுகிறது. அதன் நீட்சியே ரணில் விக்கிரமசிங்காவுடனான மோதலும் ஆகும்.

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிரான அரசியல் கட்சிகளின் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட போதும் காலிமுகத்திடல் போராட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் தமிழ் அரசியல் கட்சிகள் சார்ந்த அணுகுமுறைகளள் எதுவும் அதிகம் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தோடு எதிர்ப்பினை வெளிப்படுத்த முயன்ற போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டிருந்தனர். ஆனால் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் சஜித் பிரேமதாசாவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்ததுடன் ஏனைய வேட்பாளர்களையும் நிராகரித்தது. அதுமட்டுன்றி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு எதனையும் எந்த வேட்பாளர்களும் வழங்க முன்வராமையே ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரித்ததாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவ்வாறாயின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயத்தின் ஒரு அங்கமான பங்கேற்பு ஜனநாயத்தின் பெறுமானம் என்னவாக உள்ளது. தென்னிலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளும் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை தருவார்கள் என்ற எண்ணம் காணப்படுகின்றதா என்ற கேள்வி எழுகிறது. அப்படியாயின் இதுவரை காலமும் அவ்வாறானதொரு தீர்வை ஏன் எந்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வைக்க முன்வரவில்லை. அவ்வாறாயின் ஏன் தமிழ் மக்களுக்கு தென்னிலங்கை பாராளுமன்றம் தேவைப்படுகின்றது. பகிஸ்கரிப்பும் வாக்களிக்காது வெளியேறுவதும் முன்வைக்கும் விடயங்களை நிராகரிப்பதும் ஜனநாயகமாகுமா? மக்களால் தெரிவ செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழுவினதும் அரசியல் குழுவினதும் கட்சிக்குழுவினதும் தீர்மானத்துக்கு கட்டுப்பட்டு பகிஸ்கரிப்பது அல்லது ஒரு வேட்பாளருக்கு ஆதரிப்பது என்ற முடிவை முன்னெடுக்க முயலுகின்றது. சிவில் அமைப்புக்களதும் மக்களதும் எவ்வித அபிப்பிராயங்களையும் கருதாது மத்திய குழு செயற்குழு கூடி முடிவெடுப்பது ஜனநாயகமாக கருத முடியுமா? குறைந்தபட்சம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களோடு உரையாடிவிட்டு செயற்குழுவில் பொர்துக்குழுவில் முடிவெடுக்கிறார்களா? தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மக்களோடு நெருக்கடியான காலப்பகுதியில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்காக கலந்துரையாடுவதாக பதிவுகள் இல்லை. அவ்வாறாயின் தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக பாராளுமன்றத்தை ஒரு ஊடகமாக பயன்படுத்தி உள்ளனர். அவர்களது தனிப்பட்ட நலன்களையும் பொருளாதார தேவைகளையும் செல்வாக்குகளையும் வளர்த்து கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்துகின்றார்கள் என்ற முடிபுக்கே வரவேண்டியுள்ளது.

புதிய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்காவை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற விடயம் தமிழ் மக்களின் அரசியல் நலன் சார்ந்து நோக்கப்பட வேண்ம.. தென்னிலங்கையில் உள்ள அனைத்து அரசியல்வதிகளும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முரணானவர்களே. அவர்கள் அனைவரம் சமதூரத்தில் கையாள வேண்டியவர்கள். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் மூவரும் தமிழ் மக்கள் பொறுத்து ஒரே எண்ணப்பாங்கு உடையவர்கள் என்பது அவர்களது கடந்த கால செயற்பாடுகள் வெளிப்படுத்துகிறது. எனவே தமிழ்த்தேசிய கட்சிகள் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் தீர்மானத்தை முன்னகர்த்தி செயற்படும் விதத்தில் தனிப்பட்டவர்கள் மீது நம்பிக்கை கொள்வதும் எதிர்ப்புவாதம் புரிவதும் தவறான முன்னுதாரணங்களாக கடந்த காலங்களில் அனுபவங்களாகும் அதேநேரம் தமிழ்த்தேசிய கட்சிகள் என்ற அடிப்படையில் ஒருங்கிணைவு இல்லாத போக்கு விருப்பத்துக்கு உட்பட்ட வாக்களிப்புக்களின் தெரிவு தீர்மானங்களுக்கு முரண்பாடான செயற்பாடு தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு முற்றிலும் வேறுபட்ட நோக்கில் செயற்படுகின்ற வகையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் வெளிப்படுத்தி உள்ளது. இத்தேர்தலில் புதிய ஜனாதிபதிக்கான அணிதிரட்டலும் ஆதரவுதம் உள்நாட்டில் மட்டுமன்றி பிராந்திய சர்வதேச தளத்திலம் விரிந்து உள்ளது. எனவே தமிழ்த்Nதிய கட்சிகள் எடுக்கும் முடிவுகள் உள்நாட்டில் மட்டுமன்றி பிராந்திய சர்வதேச தளத்திலும் விளைவுகளை தரக்கூடியது. அவ்வகை சூழலில் முடிவுகள் எவ்வாறானதாக அமையப்பெற வேண்டும் என்பது முக்கியமானதாகும். புலம்பெயர்ந்த தளத்தில் தமிழ்த்தேசிய சக்திகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு வேண்டிய கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்ற வாதத்தை முதன்மைப்படுத்தினார்கள். அத்தகைய நோக்கு நிலை நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் தீர்மானங்களுக்கு உரியதாக அமையாது போது ஏற்படுகின்ற நெருக்கீடு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எதுவாயினும் அமெரிக்க-இந்திய அனுசரணைக்கு உட்பட்ட இத்தேர்தலை தமிழ்த்தேசிய கட்சிகள் அதிக முரண்பாடுடையதாகவும் பகைமையை ஏற்படுத்துவதாகவும் தமது ஒற்றுமையின்மையை வெளிக்காட்டியதாகவும் காணப்படுகின்றது. இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரோடு எதிர்கால பேச்சுவார்த்தைக்கு தீர்வுகள் பற்றிய உரையாடலக்கு செல்வது மாத்திரமின்றி பிராந்திய சர்வதேச நாடுகளின் ஆதரவை தமிழ் சக்திகள் பெறவேண்டியது தவிர்க்கமுடியாததாகும். ஏறக்குறைய அத்தகைய வாய்ப்புக்ள அனைத்தும் தமிழ்த்தேசிய கட்சிகளின் முடிவுகளால் எதிர்ப்புணர்வினால் பகிஷ்கரிப்பினால் ஒரு சில உறுப்பினர்கள் வாக்களித்தமையால் முடிவுக்கு வந்துள்ளது.

எனவே, ஒட்டமொத்தமாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் கட்சிகளும் மீண்டுமொரு வரலாற்று நெருக்கடிக்கு தமிழ் மக்களை இட்டுச்சென்றுள்ளனர். இத்தேர்தலில் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கு அப்பால் மூன்று வேட்பாளர்களையும் முரண்படாத விதத்தில் கையாண்டிருக்க வேண்டிய வாய்ப்பு காணப்பட்டது. அதனை தமிழ்த்தேசிய கட்சிகள் பயன்படுத்தாது தமது நலனுக்கு ஏற்ப நகர்ந்துள்ளது. அத்தோடு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் எதிர்நோக்க உள்ள சவால்களும் இலங்கைத்தீவின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாக அமைய உள்ளது.

-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)