சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடல் வழங்க முன்வந்துள்ளதுடன் கடன் பெறும் தகுதியை இலங்கை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. நீண்டகால இழுபறிக்குப் பின்னர் சர்வதேச நாணயநிதியத்தின் அறிவிப்பு அதிக நம்பிக்கையை தந்துள்ளதாகவும் இலங்கை வங்குரேத்து நாடல்ல எனவும் இலங்கையின் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார். ஆனாலும் ஆளும்-எதிர் கட்சிகளுக்கிடையே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பில் அதிக கேள்விகளும் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணயநிதியம் வழங்கிய நிபந்தனைகளை வெளியிடுமாறு எதிர்கட்சி பாராளுமன்றத்தில் கோரியுள்ளது. எல்லையில்தாத நிபந்தனைகளுக்கு அரசாங்கம் உடன்பட்;டுள்ளதாகவும் எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கடன்வழங்குவதற்கான ஒப்புதலை நாணயநிதியம் அறிவித்ததும் தென் இலங்கையில் ஆளும் தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ளதுடன் அதனைக் கொண்டாடியது. ஆனால் தென் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தோன்றிய போது தமிழர் பிரச்சினைசார்ந்து எழுந்த கேள்விகள் அனைத்தும் மௌனமாகிவிட்டதையும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளது நிலைப்பாட்டையும் தேடுவதாக இகக்ட்டுரை அமையவுள்ளது.
முதலில் ஐ.எம்.எப். பணிப்பாளரது அறிவிப்பினை நோக்குவது பொருத்தமானதாக அமையும். இலங்கை எதிர்கொள்ளும் பெரும் பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள்வதற்கு வலுவான சீர்திருத்தங்கள் அவசியம் என நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறீஸ் டலினா ஜோர்ஸஜீவா தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கும் போது ஊழலுக்கு எதிரான சட்டங்கள் மறுசீரமைப்பது உட்பட ஊழலை எதிர்கொள்ளும் முயற்சிகள் தொடரவேண்டும். வரிநிர்வாகம், பொதுநிதி, செலவு மேலாண்மை மற்றும் எரிசக்தி விலை நிர்ணயம் போன்றவற்றுக்கான நிதி நிறுவன சீர்திருத்தங்கள் அவசியம் என்றார்.
நாணயநிதியத்தின் செயற்பாட்டை வரவேற்றுள்ள அமெரிக்கா இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பாதையில் ஒரு முக்கிய படி எனவும் சீர்திருத்தங்கள் தொடருவதுடன் வேலைத்திட்டங்கள் பொருளாதார பாதையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜீலி சுங் தெரிவித்துள்ளார். மேலும் அவரது தெரிவிப்பு அனைவரும் பயன்பெறும் வகையில் சிறந்த நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு தீர்வுகாணும் கட்டமைப்பு நீடித்த சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்று குறிப்பிட்டிருந்தார்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய வெளிப்பாடுகள் சுட்டிக்காட்டப்படவில்லை. புலம்பெயர்ந்த தமிழரின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல செய்திகளை ஜனாதிபதியும் சர்வதேச சக்திகளும் உரையாடிவந்தனர். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதும் இனப்பிரச்சினைக்கு சுதந்திரதினத்திற்கு முன்னர் தீர்வு முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி உரையாற்றியிருந்தார். பேச்சுவார்த்தைக்கான திகதிகள் முன்வைத்துதுடன் ஒரு சில சந்திப்புகளை மேற்கொண்டதுடன் தீர்வு சுதந்திரதினத்தன்று அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதற்கான உரையாடல்களும் எண்ணங்களும் பரவலாக பேசப்பட்டு வந்தது. அதற்கான எந்த முகாந்திரமும் அன்றி தேர்தலும் கடன்பெறுவதற்கான நடவடிக்கைகளும் அதனைக் கொண்டாடும் மனோநிலையும் மட்டுமே தென் இலங்கையில் காணப்படுகிறது. தென் இலங்கை அரசியல் தலைமைகள் எப்போதும் தந்திரோபாயமாக நகர்வதாக இப்பகுதி பலதடவை சுட்டியுள்ளது. தமிழ் தரப்பு தனது எல்லைக்குள் இருந்து கொண்டு தீர்வை சாத்தியப்படுத்துவதாக கருதுவதும் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் எல்லையை மீறி உரையாடல்களை மேற்கொள்வதும் இன்றய நிலைக்கு அடிப்படையாகும். அதனை சற்று விரிவாக நோக்குவது அவசியமானது.
ஒன்று, புலம்பெயர்ந்த அமைப்புக்களே சர்வதேச அரசியவைப் பற்றிய கரிசனையுடன் செயல்படுபவை. அவை பல உரையாடல்களை பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது நிகழ்த்தியவை. நாணயநிதியத்துடனும் உலக வல்லரசுகளுடனும் அதிக உரையாடல்களை மேற்கொள்ளும் திறனுடன் மட்டுமன்றி அவ்வகை முயற்சிகளை மேற்கொள்வதாக நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தன. இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் உரையாடுவதாகவும் நாணயநிதியத்தின் உதவி இலங்கைக்கு கடைக்க வெண்டுமாயின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனை முன்வைத்ததாகவும் உரையாடப்பட்டது. அதன்வாயிலாக முதலீடுகளை புலம்பெயர்ந்த தளத்திலிருந்து கொண்டுவர முடியுமெனவும் அத்தகைய உரையாடலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான முயற்சிகள் ஒருபக்கம நிகழ்நது கொண்டிருக்க மறுபக்கத்தில் அவற்றை குழப்பும் நகர்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. புலம்பெயர்ந்த தளத்தில் நிலவிய முரண்பாடுகளும் பகைமையும் தனிப்பட்ட நலன்களும் அத்தகைய உரையாடலுக்குட்பட்ட அனைத்தையும் தோற்கடித்தன. அதுமட்டுமன்றி சர்வதேச அரசியலையோ சர்வதேச அரசியலுக்கான நிறுவனங்களையோ புலம்பெயர் அமைப்புக்கள் கட்டுப்படுத்தும் திறனோ அல்லது செல்வாக்குச் செலுத்தும் வல்லமையோ கொண்டிருக்காத தன்மையும் தோல்விக்கு பின்னாலுள்ள வலுவான காரணமாகும். கடந்த காலங்களில் எவ்வாறு கோசங்களால் தமிழர் அரசியல் கட்டமைக்கப்பட்டதோ அதே போன்ற கோசங்களால் புலம்பெயர்ந்த தமிழர் அரசியலும் அமைந்துள்ளது. இவை எதனையும்மாற்றாது சர்வதேச நிறுவனங்களையோ நாடுகளையோ வல்லரசுகளையோ கட்டுப்படுத்தவோ செல்வாக்குச் செலுத்தவோ முடியாது. தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஆளும் கட்சியினரையும் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஈடுபடுத்துகின்றனவே அன்றி வலுவான ஒரு சக்தியின் செயல்பாடாக புலம்பெயர்ந்த தமிழர் அரசியலால் உருவாக்க முடியவில்லை. ஈழத்தமிழரது நூற்றாண்டு தோல்விக்கான நிலை சர்வதேச அரசியலாலேயே ஏற்பட்டதென்ற புரிதல் தமிழர் அரசியலில் முழுமையாக உருவாகவில்லை. இது புலத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த அரசியலிலும் ஏற்படவில்லை. புலம்பெயர்ந்த சூழலில் இருந்து கொண்டு புலத்தை கட்டமைக்க முயலுகிறார்களே அன்றி சர்வதேச அரசியலை கட்டுப்படுத்தும் உத்திகளை கட்டமைக்க தயாரில்லாத நிலையே தொடர்கிறது.
இரண்டு, தென் இலங்கை அரசியலுடன் ஒத்துழைக்கும் புலம்பெயர்ந்த சக்திகளது செல்வாக்கு வளர்ந்ததுடன் அரசின் வேண்டுதலுக்கு கட்டுப்பட்டு இலங்கைத் தீவில் முதலீடுகளை மேற்கொள்ள சில தனிநபர்களும் நிறுவனங்களும் முன்வந்துள்ளன. அவை அனைத்துமே வர்த்தக நோக்கத்துடன் செயல்பட்டனவே அன்றி எந்த ஒரு சிறிய அளவிலும் தமிழ் தேசிய அரசியல் இருப்புப்பற்றிய பிரஞ்னையுடன் செயல்படுபவர்களாக தெரியவில்லை. வடக்கு கிழக்கிலும் தென் இலங்கையின் சில பகுதிகளிலும் அத்தகைய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது இலங்கைத் தீவின் பொருளாதார மீட்சிக்கு உதவுகின்றமை ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் ஈழத்தமிழர் அரசியலையும் அதன் இருப்பையும் நிபந்தனையின்றி நிராகரிக்கின்றதாகவே தெரிகிறது. இவை ஒவ்வொன்றும் தென் இலங்கையின் ஆக்கிரமிப்பு அரசியலை ஏற்கொள்வது மட்டுமல்லாது அதற்கான முகாந்திரத்தையே காணாமல் செய்துள்ளது.
மூன்று, தென் இலங்கை அரசியல் மீதான குற்றச்சாட்டுகள் புலத்திலுள்ள அரசியல் சக்திகளால் எவ்வாறு முன்வைக்கப்படுகிறதோ அவ்வாறே புலம்பெயர் அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. சில சந்தர்பங்களில் புலத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் தொழில் சங்கங்களுக்கும் புலம்பெயர்ந்த அமைப்புக்களே ஆலோசனை வழங்குபவையாகவும் நிதியுதவி செய்பவையாகவும் காணப்படுகின்றன. இதனால் எந்த மாற்றத்தையும் அடையமுடியாத நிலை இருதரப்புக்கும் ஏற்பட்டுள்ளதுடன் மாற்றத்தைப் பற்றிய எந்த உந்துதலும் இல்லாத மனோநிலையே வளர்ந்துள்ளது. தற்போதும் பழைய கோட்பாடுகளுக்குள்ளும் கோசங்களுக்குள்ளும் தமழர் அரசியலை கட்டி பராமரிப்பதில் கவனம் கொள்கின்றன. மறாக புதிய உலகம் பற்றிய கரிசனையோ உலக ஒழுங்கில் ஏற்பட்டுவரும் மாற்றத்தையோ கவனத்தில் கொள்ளத் தவறுகின்றன. புலமும் புலம்பெயர் தமிழ் சக்திகளும் எதிரிகளை உருவாக்குவதில் கவனம் கொண்டுள்ளனர். நாடுகளையும் அதன் அரசியலையும் நிராகரிக்கும் தமிழர் தரப்பு அனைத்திலும் தூய்மைவாதம் பேச முனைகிறது. ஆனால் அத்தகைய தூய்மைக்குள் அத்தரப்புகளது அரசியல் இல்லை என்பதை விட அதனால் இனத்திற்கு எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை என்பதை உணரவும் தவறுகிறன. புலத்தில் தமிழ் தேசியம் பேசப்படுவது போலவே புலம்பெயர்ந்த தளத்திலும் உரையாடப்படுவதாகவே தெரிகிறது. தேசியம் அகமுரண்பாடுகளால் கட்டியெழுப்பப்பட முடியாது. அகமுரண்பாடுகளை தோற்கடிப்பதே தேசியம் என்ற மந்தித்தாலே. அது தமிழர் அரசியலில் அகத்திலும் இல்லை புலம்பெயர்ந்த தளத்திலும் இல்லை என்பது துயரமான அரசியலாகவே உள்ளது.
நான்கு, தென் இலங்கை அரசியலால் ஈழத்தமிழரது அரசியல் இருப்பு தோற்கடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியிருந்த புலம்பெயர்ந்த தரப்பும் மீளமுடியாத நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. தென் இலங்கை அரசியலுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஈழத்தமிழருக்கான அரசியலுக்கான வாய்ப்பாக கையாள முடியாது நிலை புலம்பெயர் அரசியலின் தோல்வியாகவே கொள்ள தோன்றுகிறது. ஏற்கனவே புலத்திலுள்ள அரசியல் சக்திகளால் முடியாது என்று கருதிய நிலை தற்போது புலம்பெயர்ந்த தளத்திலும் ஏற்பட்டுள்ளது.
எனவே பேச்சுவார்த்தைக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் உரையாடல்கள் முடிபுக்கு வந்துள்ளது. இது இலங்கைத் தீவின் அரசியலை இந்தோ-பசுபிக் உபாயம் எதிர் பட்டி மற்றும் பாதை முன்முயற்சிக்குள்ளால் நகருகிறது என்பதை மீண்டும் ஒருதடவை உறுதிப்படுத்தியுள்ளது. நாணயநிதியத்தின் கடன் உதவியானது சீனாவின் கடன் பொறியை விட ஆபாயமானதாகவே எதிர்கட்சிகளால் மட்டுமல்ல அனேக தரப்புக்களால் பார்க்ப்படுகிறது. ஆனால் இரண்டுமே ஒரே வகையான விளைவையே இலங்கை அரசியலில் ஏற்படுத்தப் போகிறது. அது மட்டுமன்றி இரு அணிகளது கடன் பொறிக்குள்ளால் ஈழத்தமிழரது அரசியல் காணாமல் போகிறது என்ற செய்தியே எஞ்சியுள்ளது. புலம் மட்டுமல்ல புலம்பெயர் அமைப்புக்களும் கவனம் கொள்ள தவறும் அரசியலை புரிந்து கொள்வது அவசியமானது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

