ஈரான் மீதான போர் முழுமையாக அமெரிக்க இஸ்ரேலியலியர் தரப்பினால் தயாராகிவிட்டது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்கப் போரை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க-இஸ்ரேல் தரப்புக்கு எச்சரிக்கை செய்கின்றதாகவும் தெரிகிறது. போர் தொடங்குவதற்கு முன்னர் போரை வெற்றிகொள்பவனே சிறந்த தலைவன் என்று சீனாவின் போரியல் வல்லுனரான சஞ்-சூ (Sun-Tzu) குறிப்பிட்டுகின்றார். அமெரிக்க-இஸ்ரேலிய தரப்பு தனது ஊடக பலத்தினாலும், புலனாய்வு திறனாலும் போரை கணிசமாக வெற்றி கொண்டுவிட்டதாகதே தெரிகிறது. ஆனாலும் தரைவழிப் போரை எதிர்கொள்ளும் ஈரான் ஆகாயவழிப் போரை தயார் செய்யும் அமெரிக்கா என்ற நிலையிலேயே போர் நகர்த்தப்படுகிறது. இக் கட்டுரையும் ஈரான் எதிர் இஸ்ரேலிய-அமெரிக்கப் போரின் நிலையை தேடுவதாக அமையவுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கப் போர் கணிசமான வெற்றியை அமெரிக்க தரப்புக்கு ஏற்படுத்தும் என்பது இரு நாட்டின் இராணுவ பலத்தைக் கொண்டும் ஆயுதளபாடங்களில் அளவீடுகளை வைத்துக்கொண்டும் முன்கூட்டியே யாரும் இலகுவில் மதிப்பீடு செய்துவிட முடியும். அது மட்டுமின்றி புதிய உலக ஒழுங்கு உருவான பின்னர் அமெரிக்கா உலகத்தில் நிகழ்த்திய அனைத்து போர்களிலும் ஒரு சிலவற்றில் பின்னடைவுகளை சந்தித்த போதும் வெற்றிகரமான அடைவுகளை எட்டியிருக்கிறது. அதனால் இத்தகைய போரையும் வெற்றி கொள்வதற்கான வலிமை அமெரிக்கா பக்கம் உண்டு என்பது கணிப்பிடப்படுகிறது. இதக்கு இன்னெரு வலுவான காரணம் மேற்காசியாவில் போரியல் ரீதியில் நிலப்பரப்பிலும் மற்றும் ஆகாயபரப்பிலும் நன்கு அனுபவமும் திறனும் கொண்ட இஸ்ரேல் அமெரிக்கா பக்கம் உள்ளது என்பதாகும். இதுவே இப்போரின் பிரதான மையமாக விளங்கப் போகிறது. கடந்த போர்களை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கூடாகவும் ஐ.நா.சபையின் அனைத்து நாடுகள் சார்பாகவும் அமெரிக்கா முன்னெடுத்தது. தற்போது இஸ்ரேலுடன் மட்டும் கூட்டுச்சேர்ந்து அமெரிக்கா போரை நிகழ்த்துகிறது. அமெரிக்கா இத்தகைய போரின் நிகழ்த்துவது, இஸ்ரேலுக்கானது என்பதை இஸ்ரேலிய பிரதமர் அண்மையில் வெளியிட்ட கருத்தொன்றில் பதிவு செய்திருந்தார். யூதர்களை அல்லது இஸ்ரேலியர்களை கைவிட்டு அமெரிக்கா எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என குறிப்பிட்டிருந்தார். இதனால் ஈரான் மீதான போரை அமெரிக்கா மேற்கொள்ளது என்பதற்கு பதிலாக இஸ்ரேலியர்களுடைய போரை அமெரிக்கா நிறைவேற்றுவதன் ஊடாக மேற்காசிய அரசியலையும் உலக அரசியலையும் அடுத்து வரும் தசாப்தங்களில் தலைமை ஏற்க முடியும் என்ற நிலையொன்றை ஏற்படுத்த முயலுகிறது. இப் போரில் அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு ஈரானுக்கு அபாயமானது அல்லது அழிவு அதிகமுண்டு என்பதை மறுக்க முடியாது.
ஏறக்குறைய ஈரான் மீதான போரில் கணிசமான பகுதியை இஸ்ரேலிய அமெரிக்க தரப்பு அடைந்திருப்பதாகவே தெரிகின்றது. அங்கு நிகழும் ஈரானி ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி என்பது ஈரானிய மக்களின் எதிர்ப்பு என்ற அடிப்படையில் ஒரு பக்கம் அமைய மறுபக்கத்தில் ஈரானிய உயர்தலைவர் அயத்துல்லா ஹாமேனியினதும் அவரது ஆட்சியாளர்களும் அமெரிக்க இஸ்ரேலிய ஊடுருவலே கிளர்ச்சிக்கப் பின்னால் இருக்கும் முக்கிய காரணம் என முதன்மைப்படுத்துகின்றனர். அப்படியானால் ஈரானின் நிலப்பரப்பில் அமெரிக்க இஸ்ரேலிய தரப்புகள் ஊடுருவி இருப்பதோடு காத்திரமான நெருக்கடியை ஈரானுக்கு ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு வலிமை பெற்றிருக்கின்றனர் என்ற முடிபே உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட முக்கியமான கருத்து ஒன்று காணப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் மீதான ஈரானிய தாக்குதல்கள் கொல்லப்பட கூடாதவர்களை கொன்றிருப்பதாகவே தெரிகிறது. இச் செயலானது அமெரிக்கா ஈரானிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கு அடிப்படைக் காரணம் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அப்படியாயின் அமெரிக்க தயார் செய்து பயிற்சி கொடுத்து ஈரானிய நிலத்துக்குள் ஊடுருவியவர்களை ஈரானிய இராணுவம் கொலை செய்திருக்கிறது என்பதே அதன் அர்த்தமாகும். இதுவே ஈரானியர்களை கிளர்ச்சியை நோக்கி ஊக்குவிக்கவும் அத்தகைய கிளர்ச்சிக்கான ஆதரவை தாம் வழங்க தயாராக இருப்பதாகவும் உதவி அவர்களை நாடி வருவதாகவும் தெரியப்படுத்தியமைக்கு காரணமாகும். ஏறக்குறைய ஈரானின் எல்லா நகரங்களையும் கிளர்ச்சியாளர்கள் பெயரில் இஸ்ரேலிய அமெரிக்க புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது இதன் புரிதலாகவுள்ளது. அத்தகைய புலனாய்வாரள்கள் ஆயுதங்களுடனும் தயாரிப்புகளுடனும் ஈரானிய நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ளனர் அத்தகைய செய்திகளையும் ஈரானிய அரசாங்கத்தை ஆதாரப்படுத்திக் கொண்டு ஈரானிய ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகிறன.
மறுபக்கத்தில் ஈரானியரின் பலம் என்பது 1979 ஆம் ஆண்டிலிருந்து ஒரு நீண்ட நிலையான முடியாட்சி முறைக்கு எதிரான இஸ்லாமிய ஆட்சியாகவே காணப்படுகிறது. அதுவும் அமெரிக்க-இஸ்ரேலியர்களுக்கு எதிரானதாகவே கட்டமைக்கப்பட்டதாகும். முடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து இஸ்லாமியப் புரட்சியின் ஊடாக ஆட்சியை கைப்பற்றிய ஆட்சியாளர்களின் நிலைத்திருப்பு என்பது முக்கியமானது. கடந்த காலம் முழுவதும் பல போர்களை ஈரான் எதிர்கொண்டிருந்தது. அதன் நிலப்பரப்பும் அந்த மக்களின் இஸ்லாம் மீதான ஈடுபாடும் பிராந்திய ரீதியாக ஆதரவளிக்கும் தீவிர இஸ்லாhமிய அடிப்படைவாதிகளும் ஈரானின் நிலைத்திருப்புக்கு பிரதான காரணமாகும். அத்தகைய சக்திகளின் பலத்துடனே ஈரான் தனது இருப்பை பல தசாப்தங்களாக நிலைப்படுத்தி உள்ளது. அதன் மீது அமெரிக்கா ஒரு நீண்ட ஆள் யுத்தத்தை நிகழ்த்தியது. அத்தகைய ஆள் யுத்தம் தற்போது ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப்ன் காலத்தில் நேரடி யுத்தமாக மாறி உள்ளது. இதன் விளைவுகள் பிராந்திய மட்டத்தில் அபாயமானதாகவே இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இப்போரில் ஈரான் தோல்வி நிலைக்கு தள்ளப்படுகின்ற போது அணு ஆயுதத்தை கையில் எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உண்டு என போரியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வெனுசுவெலா மீதான அமெரிக்க நடவடிக்கையும், ஈரான் மீதான அமெரிக்க நடவடிக்கையும் வேறுபட்டது. இரண்டுமே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டாலும் அடிப்படையில் இரண்டிற்கு பின்னால் இருக்கும் சக்திகள் மீதான போராகவே இப்போர்கள் காணப்படுகின்றன. நவதாரண்மை வாதத்தின் சரிவுகளை அமெரிக்காவுடன் போட்டியிட்டு முன்னகர்த்தும் சீனாவின் நடவடிக்கை இதற்கான பின்புலமாக தென்படுகிறது. வெனிசுவெலா மீதான நடவடிக்கையும் ஈரான் மீதான நடவடிக்கையும் உலகத்தின் மீதான அமெரிக்காவின் வரி தொடர்பான நடவடிக்கையும் சம தூரத்தில் பயணிக்கும் அமெரிக்க அரசியல் பொருளாதார இராணுவ இலாபங்களை கொண்ட நகர்வாகவே தெரிகிறது. அனைத்துமே அமெரிக்காவுக்கும் போட்டியாளர்களாக உள்ள சக்திகளை முடிவுக்கு கொண்டு வருவதற்குமானது. திறந்த பொருளாதாரத்தை புதிய வடிவுக்குள் வரையறுக்கவும் அத்தகைய திறந்த பொருளாதரத்தின் போட்டியாளர்களை கட்டப்படுத்திக் கொள்ளவும் அமெரிக்கா நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. வெளிப்படையாக பார்த்தால் சீனாவின் போட்டிச்சந்தை (Market Bomb) பொருளாதாரத்துக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்திலே ரொனால்ட் ட்ரம்ப்ன் தலைமையிலான அமெரிக்கா உலகத்தை நோக்கி நகருகின்றது. இதன் நீட்ச்சி ஆப்பிரிக்கா ஆசியாவின் இதர பகுதிகளையும் ஏனைய கண்டங்களை நோக்கியும் மேலும் விஸ்தரிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கான அமெரிக்காவின் முடிவை ஈரானே தீர்மானம் எடுக்கும் சக்தியாக விளங்கும்.
எனவே ஈரான் மீதான போரில் அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு கணிசமான வெற்றி இலக்கை அடைந்திருந்தாலும் அதற்கான முழுமையை சாத்தியப்படுத்துவதிலேயே உலகத்தின் அடுத்து வரும் தசாப்தங்களின் அத்தியாயங்கள் வரையப்பட வாய்ப்புள்ளது. வெனிசுவெலா கிரீன்லாந்து ஈரான் போன்று பல நாடுகள் அமெரிக்காவின் இவ்வகையான தாக்குதலில் அகப்பட வாய்ப்புள்ளதா இல்லையா என்பதை ஈரான் மீதான போரே தீர்மான சக்தியாக அமையும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
