June 23, 2024
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசி கொல்லப்பட்டார்!

அரசுகளுக்கிடையிலான சர்வதேச அரசியலில் ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரம்பெற ஆரம்பித்துள்ளது. ஈரான் தனது ஜனாதிபதி இப்ராகிம் ரைசியை (19) இழந்துள்ளது. ஹெலிக்கொப்டர் விபத்தில் அஜர்பைசான் -ஈரான் நாட்டு எல்லையிலுள்ள அஜர்பைசான் மாகாணத்தின் ஜோல்பா நகரத்திற்கு அருகே ஜனாதிபதி ரைசி மற்றும் ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சர் உட்பட எட்டுப்போ பறந்து கொண்டிருந்த ஹொலி விபத்திற்கு உள்ளானதில் இத்தகைய துயரம் நிகழ்ந்துள்ளது. இது விபத்தா? அல்லது திட்டமிட்ட தாக்குதலா? ஏன்ற கோணத்தில் பல உரையாடல்களும் தேடுதல்களும் விவாதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கிறன. அதிக சந்தேகங்கள் ஒருபக்கம் அமைய அதிகமான சதிக்கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு முதன்மைப் படுத்தப்படுகிறது இத்தகைய கொலைக்குப் பின்னால் உள்ள யதார்த்தத்தை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமுமாகும்.

ஹமாஸ்-இஸ்ரேல் போரின் பிரதான பங்காளி ஈரான் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். ஏனைய சக்திகள் முன்பின்னாக செயல்பட்டாலும் அடிப்படையில் ஈரான் என்பது இஸ்ரேல்-அமெரிக்கா நன்கு தெரிந்து கொண்ட நாடுகள் என்பது அறிந்தவிடயம். மேற்குலகத்தின் உலகளாவிய கட்டமைப்புக்கும் (Global Structurer) நலன்களுக்கும் (Politico-economic and Military Interest) விரோதமான எத்தகைய நகர்வுகளையும் ஒரு காலப்பகுதியிலும் மேற்குலகம் ஏற்றுக் கொள்வதில்லை என்பதை கண்டு கொள்ள முடிந்தது. அதில் உலகளாவிய ரீதியில் தென்பூகோள நாடுகளுக்கு அதிக அனுபவமுண்டு. இந்தியா சிறப்பான அனுபவத்தை அடைந்துள்ளது. மகாத்மாகாந்தி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்ற தலைவர்களின் நிலையை ஆதாரம் தேடும் கொலைகளாக நிகழ்த்திவிட்டு தற்போது மேற்குக்கு இசைவான ஆட்சியாளரை நிறுத்தி நாடுகளுக்கிடையிலான உறவுகளை நகர்த்திவருகிறது. அத்தகைய வரிசையில் 600 மேற்பட்ட கொலை முயற்சியில் தப்பிக்கொண்ட ஓரே தலைவராக கியூபாவின் பெடல்காஸ்ரே மட்டுமே காணப்படுகிறார். லுமும்பா முதல் யசீர்அரபாத் வரை மேற்குலகத்தின் நலனுக்கு விரோதமான தலைவர்கள் ஆதாரமற்று கொல்லப்பட்ட வரலாற்றை நினைவில் கொள்வது அவசியமானது. சதாம் உஷன் மற்றும் கேணல் கடாபி உட்பட தலைவர்களை தெளிவான உபாயங்களை வகுத்து மேற்குலகம் பெரும் கதையாடல் மூலம் அத்தகைய கொலைகளை கையாண்டுள்ளது. இதனை எல்லாம் சதிக்கோட்பாடு என்று கடந்துவிட்டு செயல்பட முடியாது. அத்தகைய வரிசையில் ரைசியும் மேற்குலகத்தின் நலனுக்கு எதிரானவர்.

ரைசியின் மேற்குலகத்தின் நலனுக்கு எதிரான திட்டமிடல்கள் அதிகமாகக் கொண்ட ஜனாதிபதியாக விளங்கியவர். பிரதானமாக ரஷ்சியா-வடகொரியா சீனா உட்பட்ட உலக அரசியலின் ஓரணியை வடிவமைப்பதிலும் அதற்குள் ஏனைய நாடுகளை இணைப்பதிலும் கவனம் கொண்டவர். ரஷ்சியா உக்ரையின் போரில் அதிகமான இராணுவ உதவிகளை ரைசி வழங்கியுள்ளார். இந்தியாவுடன் இணைந்து கொண்டு வலுவான பொருளாதார உள்கட்டுமானங்களை ஏற்படுத்திவருபவர். இலங்கைக்கு ரைசியின் பொருளாதார ஒத்துழைப்பு அவ்வாறே அஜர்பைசானுக்குமான ஈரானின் உதவி மேற்குலகத்தின் உதவி மூலமான ஆக்கிரமிப்பை சிதைக்கிற கோட்பாடாக உள்ளது. தனித்து இஸ்ரேலிய-அமெரிக்கப் போரை காஸாவில் நெருக்கடிக்கு உள்ளாக்கியது மட்டுமல்ல மேற்குலகத்தின் உலகளாவிய அரசியல்-பொருளாதார இராணுவக் கொள்கைக்கும் விரோதமாகச் செயல்பட்டவர் இப்ராகிம் ரைசி. நீண்டகால நோக்கில் மேற்குலகத்தை சவாலுக்கு உட்படுத்தும் கொள்கையை தென்பூகோள நாடுகள் மத்தியில் ஏற்படுத்திவிடுவார் என்ற அச்சம் அமெரிக்கா உட்பட்ட மேற்கிடமிருந்தது. ரஷ்சியாவையும் சீனாவையும் அரவணைத்துக் கொண்டு நகரும் அணுகுமுறை மேற்குக்கு அபாயமானதாகவே அமைந்திருந்தது.

இத்தகைய சூழலிலேயே ஈரான் ஜனாதிபதி கொல்லப்பட்டார். இதன் மூலம் ஈரானின் ஆட்சியை தமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட தலைமையினூடாக நகர்துவதே மேற்குலகத்தின் திட்டமிடலாகும். ஐரசிக்கு பின்னர் ஈரானை ஆட்சி செய்யப்போகும் தலைமையுடன் மேற்குலகம் கூட்டுச்சேர முனையும். அதிலும் நெருக்கடி ஏற்படுமாயின் கொலைகளை கண்டுபிடிக்க முடியாத வழிமுறையினூடாக நிகழ்த்தும். இது இஸ்ரேல்-அமெரிக்க கூட்டின் உத்தியாக உள்ளது. ஈரானின் இராணுவத் தளபதி, அணுவிஞ்ஞான் என்ற வரிசையில் ரைசி மீதான படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை உலகம் தேடிக்கொண்டே இருக்கும். ஒரு போதும் கண்டு கொள்ள முடியாது. அதற்கு அமைவாகவே படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனை அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக மேற்கொண்டதற்கு மேலே குறிப்பிட்ட ஆதாரத்தைக் கடந்து நேரடியாக இருக்கும் ஆதாரங்களை தெரிந்து கொள்வது அவசியமானது.

ஒன்று, ஈரான் ஜனாதிபதியுடன் பயணித்த ஏனைய இரு ஹெலிக்கொப்டர்களும் பத்திரமாக நாட்டுக்குள் வந்துள்ளன. ஏன் ரைசி பயணித்த ஹெலி மட்டும் காணாமல் போனது என்பதற்கான விடை ஹெலியிலுள்ள குறைபாடு மற்றும் காலநிலையிலுள்ள குழப்பம் போன்ற சந்தேகங்கள் முடிபுக்கு வருகிறது. இதனை திட்டமிட்டு மொசாட் மற்றும் சிஐஏ தனது முகவர்கள் ஊடாக வெளிப்படுத்தியிருக்க வாய்ப்பு அதிகமுண்டு.

இரண்டு, ரைசிக்கு எதிரான உட்நாட்டுச் சக்திகள் இத்தகைய வேலையை செய்திருக்கலாம் என்று உரையாடப்படுகிறது. இன்றைய சூழலில் ஈரானின் உள்நாட்டச் சக்திகள் தனது தாய்நாட்டக்கு துயரம் விளைவிக்கும் நகர்வை மேற்கொள்ள முயலுவனவையா? என்ற கேள்வி இயல்பானது. அத்தகைய சூழலால் ஒட்டுமொத்த ஈரானும் காணாமல் போவது மட்டுமல்ல மேற்காசியாவின் இருப்பே காணாமல் போகும். அது இஸ்ரேலுக்கு அடிமையாவதற்கு சமமானது. ஆத்தகைய செயலை ஈரானியன் மேற்கொள்வானா என்பது தான் முக்கியமானது. அதனால் அத்தகைய செய்திகளும் உரையாடல்களும் திட்டமிட்டு சூழலைக் குழப்பும் நடவடிக்கையாகும்.

மூன்று, மிக முக்கியமானவிடயமாக உள்ளது. ரைசியின் ஹெலிகொப்டர் அஜர்பைசானில் தரையிறங்கும் முன்னர் அதெரிக்காவின் சி–130 விமானம் ஏன் தரையிறங்கியது என்பது அஜர்பைசானிய அரசாங்கத்திற்கே குழப்பமாக உள்ளது. அவ்வாறான ஒரு செயல் ரைசி இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் அமெரிக்க விமானம் இலங்கைக்குள் வருகை தந்ததாகவும் தகவல் உண்டு. அப்படியாயின் ஏன் அமெரிக்க விமானம் அஜர்பைசானுக்கு வருகைதந்ததென புரிந்து கொள்வது முக்கியமானது. அது மட்டுமன்றி இஸ்ரேல் அஜர்பைசானுடன் இராஜீக உறவுகளைக் கொண்டுள்ள நாடு என்பதையும் கவனத்தில் கொள்வது சிறப்பானது. அத்தகைய வாய்ப்புக்களை மொசாட் பாவிக்க வாய்ப்பு அதிகம். அதனை அஜர்பைசான்கூட கண்டு கொள்ள முடியாது.

நான்கு, ஈரானின் முதல்கட்ட விசாரணை வெளியாகியுள்ளது. அதில் எந்த தாக்குதலும் ஹெலிக்கொப்டர் மீது நிகழ்ந்ததாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தெரியவருகிறது. இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். ஈரானின் இராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதும் ஈரானின் அணுவிஞ்ஞானி மொஹசன் பக்ரிஷட் கொல்லப்பட்ட முறைமையை விளங்கிக் கொள்ள வேண்டும். இருவரும் அண்டவெளி தொழிநுட்பத்தின் பிரயோகத்தின் மூலமே கொல்லப்பட்டனர். அத்தகைய சூழலில் இத்தாக்குதல் சைபர் மூலம் நிகழ்த்தபப்பட்டிருக்கலாம் என்ற முடிபுக்கு வரலாம். சிஐஏ மற்றும் மொசாட்டின் கொலைகள் அவ்வாறானதாகவே வளர்ச்சியடைந்துள்ளன. ஆதாரங்களைக் கண்டு கொள்ள முடியாதவாறு நிகழ்த்துவது. அதனை தேடுவதற்கான வாய்ப்பக்களை உருவாக்கிவிட்டு செல்வது என்று பல உத்திகளைக் கொண்டுள்ளன. விமானத்திலிருந்து அல்லது செயற்கைக்கோளிலிருந்து சைபர்த் தாக்குதலை நிகழ்த்தும் தொழில் நுட்பத்தை இரு நாடுகளும் கொண்டுள்ளன. Iron Dome மற்றும் Iron Beam என்பது சிறந்த புரிதலைத்தரும்.

ஐந்து, ஈரானின் முதல்கட்ட விசாரணையில் வெளியான அறிக்கையில் ஈரானின் பலவீனங்களை மறைப்பதாக உள்ளது. அதன் வலுவற்ற இராணுவ கட்டமைப்பும் புலனாய்வுத் துறையின் அவதானமின்மையும் மட்டுமன்றி ஐந்து அணுவிஞ்ஞானிகளையும் இராணுவத் தளபதியையும் இழந்த பின்பும் எச்சரிக்கையுடன் ஈரானிய ஆட்சியாளர்கள் செயல்படத் தவறியமை பற்றிய குறைபாடுகள் வெளிவருவதை அறிக்கை தடுத்துள்ளது. இதனால் உள்நாட்டிலும் இராணுவத்திற்குள்ளும் நிகழக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க இந்த அறிக்கை முயன்றிருக்கலாம். அதனை எல்லா அரசுகளம் மேற்கொள்வது வழமையானது. ஆண்மையில் இஸ்ரேல் கூட ஈரானின் தாக்குதலில் 99 சதவீதமான தாக்குதலை முறியடித்துவிட்டதாக அறிக்கை இட்டதை நினைவு கொள்ளுதல் வேண்டும். எனவே ஈரானின் முதல்கட்ட அறிக்கையில் எத்தகைய தெளிவான பதிலும் அமையவில்லை என்பதற்காக மொசாட்டும்-சிஐஏ உம் தாக்குதலை மேற்கொள்ளவில்லை என்ற முடிபுக்கு வரமுடியாது. ஆனால் இதற்கு பதிலளிக்கும் தரப்பாக ஈரான் இல்லாத நிலை வளர்கிறது. அது இஸ்ரேலுக்கும் மேற்குலகத்திற்கும் பாரிய வெற்றியாகும். அதே நேரம் ரஷ்சிய ஜனாதிபதியின் அணுகுமுறை வேறுவிதமானதாக உள்ளது. அது ரைசிக்கு இன்னோர் பதிலீட்டைச் சாத்தியப்படுத்துமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஆறாவது, ரைசி மீதான தாக்குதல் பாரிய அல்லது மூன்றாம் உலக போரை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் மேற்குலக ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் ஈடுபட்டுவருவதைக் காணமுடிகிறது. இத்தாக்குதலை அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு மேற்கொள்ளவில்லை என்பதற்க பல சப்புக்கட்டுத்தனமான காரணங்களை மேற்குலக ஆய்வாளர்களும் முன்வைக்கின்றனர். ஒரு பெரும் போரை தவிர்க்க முனைகிறார்கள். அதுவே மேற்குலகத்தின் ஜனநாயகம், தாரண்மைவாதம் , மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள். இவ்வாறு பலவிடயங்களை குறிப்பிட்டுக் கொள்ள முடியும்.

எனவே அனைத்து ஆதாரங்களையும் தேடுவதைக் காட்டிலும் தாக்குதலின் மூலம் எதுவோ அதனை அடிப்படையாகக் கொண்டு அளவிடும் போது இஸ்ரேல்-அமெரிக்காவின் பங்கை புரிந்து கொள்ள முடியும். இது ஒரு கூட்டு தாக்குதல் நடவடிக்கை. இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு கடந்தகாலத்தில் ஏற்பட்ட நிலையையே ரைசி மீதான தாக்குதலும் தந்துள்ளது. இதனைவிட காடைத்தன அரசியல் வேறு எதுவாகவும் அமையாது. இதுவே மேற்குலகத்தின் இறுதி உத்தியாகவுள்ளது. கடந்தகாலம் முழுவதும் அதனையே மேற்குலகம் தென்பூகோள நாடுகளின் தலைவர்கள் மீது நிகழ்த்தியுள்ளது. முடிந்தவரை அத்தகைய தலைவர்களை வளைத்துப்போட முயல்வது அல்லாத சூழல் ஏற்பட்டால் முடித்துவிடுவது. அமெரிக்கா-இஸ்ரேல் அத்தகைய நகர்வையே மேற்கொண்டு தனது இருப்பை உறுதிப்படுத்திவருகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)