April 25, 2026
அரசியல் கட்டுரைகள்

சீனாவின் அணுவாயுத குவிப்பும் உலக வல்லரசுக்கான அறிவிப்பா?

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்திவரும் சீனாவின் கதை இருபதாம் நூற்றாண்டின் அளப்பரிய வெற்றிக் கதைகளில் ஒன்று என அலெக்ஸாண்டர் நெல் குறிப்பிட்டிருந்தார். அதில் தொழில்நுட்ப வலுவுடைய ஆயுதங்களோடு அணிவகுத்த சீனா படைகளின் நகர்வு ஜின் பிங் ஆட்சிக்கு வருகைதந்த போதே திட்டமிடப்பட்டு விட்டதுடன் 2049இல் முழு நீள இராணுவ வலுவுடைய சக்தியாக வளந்துவிடும் என 2015 இலே அலெக்ஸாண்டர் நெல் கணித்திருந்தார். அவரது கணிப்பு தவறவில்லை என்றே கூறலாம். 2049 முன்பே சீனாவின் இராணுவ பலம் அதீதமாக உள்ளது என்பதை உலகளாவிய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இக்கட்டுரையும் சீனாவின் அணுவாயுத பெருக்கத்தை பற்றிய அமெரிக்காவின் குற்றச்சாட்டின் முக்கியத்துவத்தை தேடுவதாக உள்ளது.

சீனா அணுவாயுதங்களை குவித்து வருவது கவலை தருவதாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிறைஸ் தெரிவித்துள்ளார். சீனா மிக வேகமாக அணுவாயுதங்களை குவித்துவருவதை அதன் நடவடிக்கைகள் மூலம் அறிய முடிகிறது. சீனா தனது மேற்கு மாகாணத்தின் பாலைவனப்பகுதியில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ எனப்படும் தளங்களை கட்டமைத்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டிவருகிறது. இதனை ஆதாரப்படுத்தும் வித்தில் நூற்றுக்கு மேற்பட்ட அணுவாயுத ஏவுகணைக் கிடங்குகளை மேற்கு பாலைவனப்பகுதிகளில் நிறுவி வருவதாக வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதிப்படுத்தியதுடன் இவ்வாறான விடயங்களை சீனா மறைக்க முடியாதென வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது சீனாவின் அணுவாயுதக் கொள்கையிலிருந்து மாறுபட்டுச் செல்கிறது என்பதைக் காட்டுவதுடன் அதிகளவான அணுவாயுதங்களை சீனா உருவாக்கியிருக்கலாம் எனவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலாக பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமெரிக்க வெளியுறவு தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் அணுவாயுதங்களின் தொகை ஏறக்குறைய 320-350 இடைப்பட்டதென தெரியவருகிறது. அதேர நேரம் உலகளாவிய ரீதியல் அதிக அணுவாயுதத்தை கொண்ட நாடாக ரஷ்சியாவும் அடுத்த இடத்தில் அமெரிக்காவும் உள்ளன. ஆனால் சீனா ஏன் அதித விரைவாக அணுவாயுதங்களை உருவாக்க முயல்வதுடன் அதனை ஏவுகணைகளிலும் போர்க்கப்பல்களிலும் நீர்மூழ்கிகளனிலும் இணைத்துவருகிறது என்பதே பிரதான கேள்வியாகும்.

முதலாவது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கொம்யூனிஸக் கட்சி அதிகாரிகளுடன் உரையாடும் போது  (25.06.2021) தெரிவித்த விடயங்கள் கவனத்திற்குரியதாகும். குறிப்பாக சீனா குறித்து கனிவான மென்மையான பிம்பங்களை உருவாக்குமாறு பணித்துள்ளார். உலகளாவிய கருத்து மதிப்பீட்டின் அடிப்படையில் எமது தொனியை சரியாக அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் திறந்த மற்றும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனால் அடக்கமாகவும் தாழிமையாகவும் இருக்க வேண்டும். மேலும் சீனாவின் நம்பகமான மரியாதைக்குரிய விம்பத்தைக உருவாக்க வேண்டும். இவை அனைத்தும் சீனாவின் உலகளாவிய வல்லரசுக்கான எழுச்சியைக் காட்டுகிறது. சீனா உலகத்தை ஆளுதல் என்ற இலக்கை எட்டிவிட்டதாகவே தெரிகிறது. அதற்கான அணுகுமுறைகளை முதன்மைப்படுத்தி வருவதுடன் அதற்கான பலத்தை நிறுவுவதற்கு அணுவாயுதம் அவசியமானதாக அமைந்துள்ளது என்பதை சீன உணர்ந்ததன் பிரதிபலிப்பே அணுவாயுத குவிப்பிற்கு காரணமாகும்.

இரண்டாவது, சீனா இரு பெரும் அணுவாயுத வல்லரசுகளுக்கு சவாலாக எழுச்சி பெறவேண்டிய நிலையில் உள்ளதனால் அவற்கை எதிர் கொள்ள அணுவாயும் அவசியமாகிறது. அதாவது அமெரிக்கா மற்றும் ரஷ்சியா எனும் இரு பெரும் வல்லரசுகள் அணுவாயுத வலிமையுடைய தேசங்களே. அதனால் அவற்றை எதிர்கொள்ளவும் உலகத்திற்கு அச்சத்ரைத தரவும் அடிப்படையான ஆயுதம் அணுவாயுதமாகும். அதனை நோக்கிய நகர்வையே சீனா மேற்கொண்டுவருகிறது. சீனாவின் அணுவாயுத எண்ணிக்கை மிகக் குறைந்தளவில் இருப்பதனால் அதனை ரஷ்சியாவுக்கோ அமெரிக்காவுக்கோ நிகரானதாக ஆக்க வேண்டிய தேவை சீனாவுக்கு எழுந்துள்ளது.

மூன்றாவது, சீனா இராணுவ ரீதியில் தொழிநுட்ப ஆயுதங்களுக்கு குவிப்பதில் ஈடுபடுவதாக சிஐஏ குற்றம் சாட்டிவரும் சந்தர்ப்பத்தில் அணுவாயுதக் குவிப்பு அதன் இன்னோர் பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. தவிர்க்க முடியாது இராணுவ வலிமையானது உலகளாவிய வல்லரசாக எழுச்சி பெறும் தேசத்தின் இருப்பையும் பிற தேசங்களுக்கு தெரியப்படுத்த முனைகிறது. எப்படி இரண்டாம் உலக போர் முடிவடைந்து ஜப்பான் சரணடைந்த போது அமெரிக்கா அணுவாயுதம் கொண்டு உலகத்தை தனது பிடிக்குள் கொண்டுவந்ததோ அவ்வாறான உபாயங்கள் பொருந்தியதாக சீனாவின் நகர்வு கோடிட்டுக் காட்டுகிறது. அதற்காக சீனா ஆணுவாயுதத்தை பிரயோகப்படுத்தும் என்பதல்ல விளக்கம். மாறாக அணுவாயுதத்தை கொண்டு பலமான உலகத்தில் அச்சத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்த முடியும் என்பதே சீனாவின் புரிதலாக உள்ளது. அது வல்லரசுக்காக போட்டியிடும் தேசத்திற்கு தவிர்க்க முடியாத விடயமாகும்.

நான்காவது, 2017இல் ஜின் பிங் கொம்யூனிஸக் கட்சியினர் மத்தியில் உரையாற்றும் போது சீனக் கம்யூனிஸக்கட்சி தனது சொந்த மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு பாடுபடுகின்ற அதே வேளை உலகின் பொதுவான அபிவிருத்தியை மோம்படுத்துவதிலும் பற்றுறிதி கொண்டிருகிறது. சீன மக்கள் தங்களுக்கும் அதே வேளை ஏனைய நாடுகளிலுள்ள மக்களுக்கும் சிறப்பான வாழ்வு கிட்ட எதிர்பார்கிறார்கள் எனக் குறிப்பிட்டார். 2000ஆம் ஆண்டு ஜின பிங் பூஜியான் மாகாணத்தில் ஆளுனராக இருந்த போது பப்புவான் நீயூகெனிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக உருவாக்கிய ஜங்காவோ திட்டத்தை ஆரம்பித்திருந்ததுடன் அத்திட்டத்தை ஆசியா தென்பசுபிக் மற்றும் ஆபிரிக்காவில் உள்ள 100 மேற்பட்ட நாடுகள் அத்திட்டத்தை பின்பற்றி வருகின்றன. எனவே ஜின் பிங் குறிப்பிடுவது போல் உலகளாவிய கண்ணோட்டத்தில் சீனா வடிவமைக்கப்பட்டதுடன் உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் கவரும் விதத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. அதனால் சீனாவின் உலக விசையை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் அணுவாயுதம் மட்டுமன்றி இராணுவ வலிமை அவசியமாகிறது. அதனாலேயே அணுவாயுதங்களை குவிப்பதுடன் ஏவுகணைகளால் உலகத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதை காட்ட சீனா முயலுகிறது.

ஐந்தாவது, சீனக் கம்யூனிஸக் கட்சி அரசியலிலும் பொருளாதாரத்திலும் வலுவான தேசமாக சீனாவை மாற்றிவிட்டது. பொருளாதார பலம் வலுவடைய அந்த நாடு இராணுவ ரீதியான நகர்வையே முதன்மைப்படுத்த முயலும். அதுவே சர்வதேச அரசியலின் யதார்த்தவாதக் கோட்பாடு குறித்து நிற்கிறது. மேற்கின் ஆதிக்கவாதத்திற்கு பின்னால் மாக்கியவல்லி மற்றும் ஹான்ஸ் மோகன்தோ நிற்பது போல் சுன்சூவின் இராணுவவாதம் சீனர்களின் யதார்த்தவாதமாகவுள்ளது. அதிகார மையவாதத்தின் பலக்கோட்பாடாக இராணுவம் விளங்குவதனால் இராணுவத்தின் பலத்தை அதரிகரிக்க முயலுவது அரசுகளின் பிரதான உத்தியாகவே உள்ளது. கடந்த காலத்தில் மேற்குலகம் தனது அணுவாற்றலை அதிகரிக்கும் போதும் பிறநாடுகளில் அதனை கொண்டு தாக்கும் போதும் எத்தகைய உபாயம் அமைந்ததோ அதே உபாயத்தை தற்போது சீனா கொண்டு நகருகிறது. இது உலகளாவிய ஏகாதிபத்தியத்தின் யதார்த்தவாதம் இராணுவமே.

எனவே அலெக்ஸாண்டர் நெல் குறிப்பிடுவது போல் சீனாவை நோக்கி உலக வரலாறு சுழல ஆரம்பித்துள்ளது. 2019இல் சீன ஜனாதிபதி ஜின்பிங் சாஜோ நகரில் சீன கடற்படை முகாமுக்கு சென்ற போது போருக்கு தயாராகுங்கள். எல்லையில் மிகவும் விழிப்புடன் இருங்கள் முழுவிசுவாசமும் அர்ப்பணிப்பும் நம்பிக்கையுடன் இருங்கள் அவைதான் நாட்டுக்குத் தேவை எனத் தெரிவித்தார். இதிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாவது சீனா ஒரு போருக்கு தயாராகிறது என்பதாகும். அது வல்லரசாக பிரகடனப்படுத்த ஒரு போர் தேவை என்பதை உணரும் காலம் நெருங்குவதாகவே தெரிகிறது. மென் அதிகாரத்தையும் சமவலு உறவையும் (Win-Win) பேணிய சீனா இராணுவ பலத்தை எட்டுவதற்கான காலத்தை நெருங்குகிறதாகவே அதன் நகர்வுகள் உணர்த்துகின்றன. தொழில்நுட்ப ஆயுதங்கள் மட்டுமன்றி அணுவாயுதங்களையும் ஏவுகணைகளையும் நிகராக பெருக்குவதன் மூலம் இராணுவ வலிமையை பலப்படுத்தி உலகத்தை அச்சுறுத்தி தனது ஏகாதிபத்தியக் கனவை எட்ட முயலுகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தீம்புனல்)