இலங்கையில் தீவில் நிகழ்ந்த டித்வா புயலின் பேரிடர் பாரிய விளைவுகளை தந்துள்ளது. பேரிடர் இலங்கைத் தீவின் மக்களின் வாழ்வியலை அவர்களது இருப்பை பொருளாதார பலத்தையும் முழுமையாகவே அழித்துள்ளது. இதை மீளக்கட்டி எழுப்புவது மிகக் கடினமானது மட்டுமன்றி காலம் தேவை என்பதையும் ஆட்சியாளர்களே எழுப்பி வருகின்றனர். ஆனால் இப்பேரிடர் இலங்கை தீவின் அரசியலில் இரண்டு பிரதான மாற்றங்களை வலிமையாக கொண்டிருக்கிறது. குறிப்பாக ஜே.வி.பி. இன் ஆட்சிக்கான நீடிப்பை உறுதிப்படுத்தும் உத்தியையும், பிராந்திய நாடுகளுக்கு முன்னுரிமையை கொடுத்துள்ள இந்தியாவின் வகிபங்கு பொறுத்தும் கவனம் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. இவை இரண்டும் ஒரு வகையான பேரிடராக அமைந்து விடுமோ என்ற அச்சத்தை எழுப்பி இருக்கிறது. இக்கட்டுரையும் அத்தகைய பேருடரின் பகுதிகளை முழுமையாக தேட முயலுகின்றது.
முதலாவது இலங்கை தீவின் அரசியலுக்குள் இடதுசாரி ஜே.வி.பி. அரசாங்கத்தின் வருகை ஆழமான பதிவுகளை ஏற்படுத்த தொடங்கியிருக்கின்றது. கடந்த கால அரசாங்கங்களோடு ஒப்பிடுகின்ற விதத்தில் இயற்கை பேரிடரை சரியான முறையில் கையாளுவதில் ஜே.வி.பி. அரசாங்கம் வெற்றிகரமான பக்கத்தை காட்டுகின்றது. ஒரு வகையில் மக்களின் துயரங்களோடு ஜே.வி.பி. அரசாங்கம் கலந்திருப்பதும் மக்களை மீட்டெடுப்பதற்கு தனது வசீகரமான கொள்கைகளுக்கு உள்ளால் செயல்படுவதும் வரவேற்கப்பட வேண்டிய அம்சமாகவே தெரிகின்றது. ஆனால் மறுபக்கத்தில் ஜே.வி.பி.இன் பிரதேச கட்டமைப்புகள், அதன் உள்ளூர் அரசியல் தலைவர்கள், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் நிவாரணங்களை பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களை அணுகுகிற போது கட்சி அடிப்படையிலும் கட்சியின் நலன் அடிப்படையில் இயங்குவதாக தென்னிலங்கையில் கிராமியமட்ட அமைப்புகள், மற்றும் சங்கங்கள் பெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. கிராம சேவையாளர்களின் சங்கங்கங்கள் (SLUGNA) மற்றும் தென்னிலங்கை ஊடகங்கள் பல்வேறுபட்ட தகவல்களை வெளிப்படுத்தியிருக்கின்றன. ஜே.வி.பி. கட்சி உறுப்பினர்களின் தலையீடு என்பது ஜே.வி.பி. குறிப்பிடுவது போல் அல்லாது அரசியல் தலையீடாகவே மாறியிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு எழுகின்றது. இலங்கை தீவின் அரசியலில் மக்கள் நலன்களை கையாளும் போது அரசியல் தலையீடுகளை முற்றாகவே நீக்குவது என்ற கோரிக்கையுடன் ஆட்சியை கைப்பற்றிய ஜே.வி.பி. அரசியல் தலையீட்டுக்குள்ளாலேயே நிவாரணங்களையும் பேரிடர் கட்டுமானங்களையும் அபிவிருத்திகளையும் நிகழ்த்தி வருவதாக தென்னிலங்கை ஊடக பரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கையை ஜெர்மனியில் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஹிட்லர் பின்பற்றிய பணிகளை அப்படியே பின்பற்றுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக Gleichschaltung என்ற உபாயத்தையே ஜே.வி.பி. மேற்கொண்டுவருவதாக குறிப்பிடப்படுகிறது. அதாவது சர்வாதிகார ஆட்சி நிலவும் நாடுகளில் அரசியல், பொருளாதார, சமூக நிறுவனங்களின் அரசின் தலையீட்டைக் குறிப்பதாகும். ஓத்திசைவு அல்லது ஒருங்கிணைவு என்பது நாசிக்களின்(ஜெர்மனியில்) ஆதிக்கத்திற்கான நிறுவனத்தை உருவாக்கி அதன் கீழ் பொருளாதாரம், சமூக மற்றும் கல்வி என்பவற்றை ஒருங்கிணைத்து செயல்பட்ட சர்வாதிகார அணுகுமுறையை குறிப்பதாகும். இதனையே ஜே.வி.பி. அரசாங்கமும் மேற்கொண்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிவாரண பணியாளர்கள் நிவாரண வழங்குனர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கின்ற பாதிக்கப்பட்டோர் பட்டியல் போன்ற பல விடயங்கள் அங்கு ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் நிகழ்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஜே.வி.பி.யை பொறுத்தவரை இப்பேரிடர் அவர்களது அரசியல் கட்சியின் ஆட்சியை பலப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே கருதுகின்றது. கிராமங்கள் தோறும் மக்கள் மையங்களை ஜே.வி.பி அரசியல் கட்சிகளின் பெயர்கள் அமைத்து இடர்களில்; பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாத்து வருகின்றது. அத்தகைய பாதுகாப்பின் நடைமுறை என்பது ஒருவகையில் ஆழமான அரசியல் தலையீட்டுக்கான நடைமுறையாகவே காணப்படுகின்றது. இதனை விசாரிப்பதற்கும் இதற்கான ஆணை குழுக்களை அமைப்பதற்கும் தென்னிலங்கையினுடைய எதிர்க்கட்சி தரப்புகள் கோரிக்கை விடுகின்றன. அதே நேரம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் முழுமையாக அரசியல் நலன்களுக்கு உட்படுத்தப்பட்டதாக அமைந்திருப்பது போன்றே ஆளும் தரபின் நகர்வுகளும் அரசியல் நலனுக்கு உட்பட்டதாகவே காணப்படுகிறது.
இரண்டாவது பேரிடரில் சர்வதேச மட்டத்தில் நாடுகளின் உதவி என்பது பாரிய அளவில் ஏற்பட்டுவருகிறது. சுனாமி பேரழிவின் போமுது நிலவியதற்கு ஒப்பானதாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக இலங்கையின் உற்ற நண்பனான இந்தியா பாரிய உதவிகளை பேரிடர் சிக்கிய மக்களை மீட்டெடுப்பதில் பங்காற்றி வருகிறது. பேரிடர் நிகழ்கின்ற ஆரம்ப நாட்களில் கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல் பேரிடரின் அதிகமான இழப்புகளை தவிர்ப்பதற்கு உதவி இருக்கின்றது. அது மட்டுமின்றி உணவு மருந்து உட்கட்டமைப்புகளுக்கான வசதிகள் என பாரிய அளவில் இந்தியாவின் ஒத்துழைப்பு காணப்படுகிறது. இந்திய ராணுவம் பெரும் அளவுக்கு பேரிடரின் போது ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தீவின் அனைத்து பாகங்களிலும் இந்திய இராணுவத்தின் பிரசன்னம் காணப்படுகிறது. உலக நாடுகள் பொருளாதார அடிப்படையிலும் மருந்து மற்றும் உணவு அடிப்படையில் உதவிகளை வழங்க முன் வந்த சூழலில் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் தமது கடல் படை மற்றும் இராணுவத்தை ஈடுபடுத்தி நெருக்கடியில் இருந்து இலங்கை தீவை பாதுகாத்திருக்கின்றது. ஆனாலும் அத்தகைய நடவடிக்கை ஒரு நீண்ட வாய்ப்புகளுக்கான ஒரு களத்தை இலங்கையில் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியா இலங்கையை தனது நட்பு சக்தியாகவும் பிராந்திய ஒத்துழைப்புக்குரிய நாடாகவும் மட்டும் கருதாது இந்திய மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இலங்கையில் கருதுவது போன்று அதனுடைய நடவடிக்கைகள் காணப்படுகிறது. இது ஒரு வகையில் இலங்கை மீது இந்தியா நேரடியாக தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களைக் கொடுத்துள்ளது. இலங்கை தீவு முழுவதும் தனது படைகளை நகர்த்தி அனுபவம் கொண்ட இந்திய மீளவும் பேரிடர்ரோடு செல்வாக்கை நகர்த்தி உள்ளது. இது ஒரு வகையான மென் வலு மூலமான தலையீடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2009 களுக்கு பின்னர் படிப்படியாக இந்தியா இலங்கையோடு மிக நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கியதன் மூலம் அது தனது செல்வாக்கு உட்பட்ட பிராந்தியமாக அல்லது பகுதியாக இலங்கைத் தீவை மாற்றியுள்ளது. கடல் வழியாகவும் ஆகாய மார்க்கமாகவும் இலங்கையின் கட்டுப்பாட்டை தனது பிடிக்குள் வைத்துள்ள இந்தியா ஒரு ஆரோக்கியமான நட்புறவை பலப்படுத்தி உள்ளது. அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கை இலங்கை தீவை வெற்றிகரமாக அதனோடு சேர்ந்து பயணிப்பதற்கான வாய்ப்புகளை கொடுத்திருக்கின்றது. இது இலங்கையின் ஒருமைப்பாட்டையோ ஐக்கியத்தையோ இறைமையையோ குழப்புகின்ற செய்முறை எதுவும் கிடையாது. மாறாக மென்மையான நட்பு கலந்த நேசிப்புடனான உறவின் மூலம் இந்தியாவின் செல்வாக்கையும் நேரடி கண்காணிப்பையும் இலங்கை தீவுக்குள் நகர்த்தியுள்ளது. இந்த சூழலில் சீனாவின் அணுகுமுறையை இந்தியா ஒருவகையில் வெற்றி கொண்டிருக்கின்றதாகவே தெரிகின்றது. இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் இந்தியாவுக்கு பாரிய வாய்ப்புகளையும் தென்னாசியாவுக்குள் இந்தியாவுக்கு ஒரு சிறந்த அனுபவத்தையும் இலங்கை தீவு கொடுத்துள்ளது. அதேபோன்று இலங்கை தீவும் இந்தியாவின் நட்புடன் தனது பேரிடர்கள் இருந்து மீள்வதற்கான சூழலை வலுப்படுத்தி உள்ளது. தென்னிலங்கையின் ஊடக பரப்பும் தென்னிலங்கையின் புலமையாளர்களும் இந்தியா பற்றிய விவாதங்களை தற்போது மௌனமாகவே கடந்து செல்கின்றனர். அதற்கான அடிப்படை பேரிடரில் இருந்து இலங்கை தீவை இந்தியாவே பாதுகாத்துள்ளது. அத்தகைய மீட்டெடுப்பானது இலங்கை தீவுக்கான நலனை முதன்மைப்படுத்தி இருக்கின்றது. இலங்கை தீவு பொருளாதாரம், பாதுகாப்பு, இயற்கை அனத்தம் மற்றும் அரசியல் ரீதியான உறுதிப்பாடு சார்ந்து இந்தியாவையே கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேல் தங்கியிருக்கிறது.
எனவே பேரிடர் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள இரண்டு விடயமும் வாய்ப்புக்களா அல்லது நெருக்கீடுகளா என்ற குழப்பம் இயல்பானது. இலங்கை தீவை அடுத்து வரும் தசாப்தங்களில் ஆட்சியை ஜே.வி.பி.யிடமிருந்து வேறு சக்திகள் கைப்பற்றுவது மிகக் கடினமானது. அவ்வாறே இலங்கை தீவை இந்தியா தனது நேரடி கண்காணிப்புக்குள்ளும் நட்புறவுக்குள்ளும் உட்படுத்தி உள்ளது. இதன் விளைவுகள் இந்தியாவுக்கும் இலங்கை தீவுக்கும் எதிர்கால நலன் கருதி வாய்ப்புகளையும் திறங்களையும் தரக்கூடியதாக அமையலாம். அல்லது கடந்த காலங்களைப் போன்று நெருக்கடிக்கும் உள்ளாகலாம். போருக்கு பிந்திய அனுபவம் இந்தியாவுக்கு அதிகமானது. தென் இலங்கை இந்தியாவை எப்படி கையாளும் என்பதில் ஈழத்தமிழருக்கு தெளிவான புரிதல் உண்டு. இந்தியாவின் அணுகுமுறை நட்புறவின் ஊடான செல்வாக்கு என்றும் ஜே.வி.பி.இன் செய்முறை நிவாரண பணியின் மூலம் அரசியல் மேலாதிக்கம் என்றும் புரிந்து கொள்ள முடியும். இரு நலன்களும் ஓரிடத்தில் சந்தித்துள்ளன.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
