இலங்கை அரசியலில் இந்திய செல்வாக்கு வளர்ச்சியடைந்து வருவதாகவே தென் இலங்கை அரசியல்வாதிகளும் புலமையாளர்களும் குறிப்பிடுகின்றனர். ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் இந்திய விஜயத்திற்கு பின்பான தென் இலங்கை அரசியலில் மீளவும் இந்திய எதிர்ப்புவாதம் எழுச்சியடையத் தொடங்கியுள்ளது. ஈழத்தமிழர் மீதான தென் இலங்கையின் அடக்குமுறைக்கு அடிப்படைக் காரணமாக இந்தியா மீதான அச்சமே என்பதை ஈழத்து வரலாற்று ஆசிரியரான மு.திருநாவுக்கரசு தனது ஆய்வுகளில் குறிப்பிடுகின்றனர். இலங்கையின் வரலாறு முழுவதும் தென் இலங்கை ஆட்சியாளரின் இந்திய எதிர்ப்புவாதம் ஈழத்தமிழர் மீது வன்முறையையும் நில ஆக்கிரமிப்பினையும் படுகொலை அரசியலை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. அத்தகைய நிகழ்வின் தொடர்ச்சியாக இரு நாட்டுக்குமான இணைப்பினை உருவாக்கும் விதத்தில் பாலம் அமைப்பது பற்றிய உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய எதிர்ப்புவாதத்தை கொண்டுள்ள தென் இலங்கை ஆட்சியாளர்கள் ஏன் இரு நாட்டுக்குமான நிலத் தொடர்பினை முதன்மைப்படுத்தும் உரையாடலை ஏற்படுத்தியுள்ளனர் என்பதற்கான காரணத்தை தேடுவதாக அமையவுள்ளது.
இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சிக்கிறார்கள். பாலத்தை நிர்மாணிப்பதால் இந்தியாவின் நலன்களே நிறைவேறும். இலங்கையின் தேவை நிறைவேறாது என பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவருமான பேராசிரியர் ஆனந்த ஜயவிக்கிரம குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது, இலங்கையின் தேவைப்பாட்டுகளன்றி இந்தியாவின் நலன்களுக்கு ஏற்பவே பாலம் அமைக்கும் விடயம் கையாளப்படுகிறது. இதனால் இலங்கையின் நலன்களைவிட இந்தியாவின் தேவையே மேலோங்கியுள்ளது. இலங்கையில் 6.7 சதவீதமானவர்கள் வேலையின்றியுள்ளனர். வறுமை 27.4 சதவீதமாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் சரியான நிலைக்குள் இன்னும் வரவில்லை அதிகாரத்தை பெறும் நோக்கிலான பொறுப்பற்றவிதத்தில் அரசியல் விளையாட்டிலேயே தற்போதைய ஜனாதிபதியுடன் மொட்டுக் கட்சி ஈடுபட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அதானி குழுமத்திற்கு வடக்கின் தேசிய வளங்களை விற்பதே இந்த அரசாங்கத்தின் கொள்கையாகும். நாடுகளுக்கு வழங்களை ஏலம்விடுவது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகாது என்கிறார்.
இந்தியாவிற்கு செல்லும் பயணத்தை அதிகரிப்பதற்கு தரைப்பாலங்கள், பாலங்கள், எண்ணெய்க்குளாய்கள்,மின்சாரம் தருவிக்கும் தொடர்புகள், மற்றும் தரையிறக்கும் உட்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியத்தூதுவர் மிலிந்த மொறக்கொட தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடும் போது பொருளாதார வளர்ச்சியில் இருந்து பயனடைவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்கும் அவசியமானது. அத்துடன் தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியாவுக்கும் அதன் அண்டைத்தீவுக்கும் இடையிலான உறவுகளை இணைப்பதற்கு நில இணைப்பு முக்கியமானதெனக் குறிப்பிட்டார்.
இதே கருத்துநிலையைக் கொண்டுள்ள தயான் ஜெயத்திலக்கா Ceded Island: Ranil’s Indianisation of Sri Lanka எனும் கட்டுரையில் ரணில்விக்கிரமசிங்ஹாவின் இலக்கு இலங்கைத்தீவு இந்தியாவின் கூட்டாட்சியில் ஒரு நடைமுறை மாநிலமாக விளங்கும் என்றும் இலங்கைப் பிரஜைகள் இத்தீவை கூட்டாக சொந்தமாக கருதமாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடும் போது, பெரும்பாலான தீவு வாசிகளை கூலி-அடிமைகளாகவும் மாற்றப்படுவதையும் ஒரு சிலர் இந்திய பெரிய மூலதனத்தின் இளைய பங்காளிகளாக ஒத்துழைப்பதனையும் பரந்த பொருளாதார நெறிமுறையின் தர்க்கம் உறுதி செய்யும் எனவும் எச்சரித்துள்ளார்.
இவ்வாறு இந்தியாவுக்கான தரைத் தொடர்பு சார்ந்து தென் இலங்கை புத்திஜீவிகள் அரசியல்வாதிகள் முன்வைக்கும் கருத்துக்கள் அமையும் போது தென் இலங்கை அரசியல் தலைமைகள் இணைப்பினை வலியுறுத்துவதன் நோக்கம் எதுவாக அமையும் என்பதே பிரதான கேள்வியாகும்.
ஒன்று, இத்தகைய இணைப்பின் மூலம் இந்தியாவை திருப்திப்படுத்த தென் இலங்கை அரசியல் முனைகிறதென்பது தெளிவாக தெரிகிறது. அதாவது இந்தியாவை அரவணைத்துக் கொண்டு ஈழத்தமிழரது அரசியல் தீர்வை இலங்கை ஆட்சியாளர்களின் விருப்புக்கு உட்படுத்துவதாகவே உபாயம் உள்ளது. அதனை மிலிந்த மொறக்கொட தனது வெளிப்படுத்துகையில் தெரிவித்துமுள்ளார். மிலிந்த மொறகொட தமிழரின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப் பரவலாக்கவே போதுமானது எனக்கருதுபவர். அதனால் ஈழத்தமிழரது அரசியல் பிரச்சினையை இலங்கைத் தீவுக்குள் முடித்துக் கொள்வதே ஆட்சியாளர்களது விருப்பாக உள்ளது. இந்தியாவின் தலையீட்டை இனப்பிரச்சினையிலிருந்து அகற்றுவதற்கு இந்தியாவுடன் பொருளாதார வர்த்தக ரீதியில் பலமாக ஒத்துழைப்பதன் மூலம் சாத்தியப்படுத்த முடியுமெனக் எண்ணுகின்றனர். இந்தியா தமிழர் விடயத்தில் கவனம் செலுத்தும் என்ற அச்சம் தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கு மிக நீண்டகாலமாக உள்ளது. ஏற்கனவே இந்தியாவே ஆயுதப் போராட்டத்தை தொடக்கியது என்பது தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கு வலுவான ஆதாரமாக உள்ளது. மீளவும் அதற்கான வாய்ப்புக்கள் உண்டா என்பதில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொள்ளவதாக தகவலட்கள் உண்டு என்பது நினைவுபடுத்தக் கூடிய விடயமாகும். அதனால் இந்தியாவிடம் சரணடைவதன் மூலம் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற எண்ணத்துடன் தென் இலங்கை தரப்பு பயணிக்க முனைகிறது.
இரண்டு, ஆதாம் பாலம் மற்றும் சேது தொடர்பில் எழுந்துள்ள கற்பனைகளுக்கு முன்னால் அத்தகைய பாலம் அமைப்பதற்கான வாய்ப்புக் குறைவானதென்றே தென் இலங்கை கருதுகிறது. இந்தியாவில் மதசார் கருத்தியலாக எழுச்சியடைந்துள்ள இந்துத்துவம் இராமர் அணைக்கு மரபுசார்ந்து கொடுக்கும் முக்கியத்துவம் யாவருமே அறிந்த விடயமே. அதனால் அத்தகைய மரபை நிராகரிக்க முடியாத நிலை ஏற்படும் போது பாலம் அமைப்பதற்கான சாத்தியப்பாடு காணாமல் போய்விடும் என்ற புரிதல் தென் இலங்கைக்கு உண்டு. இந்துமதவாதிகளின் எழுச்சியானது இராமர் அணைக்கு பங்கம் விளைவிக்க அனுமதியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் இது ஒரு இராஜதந்திர செய்முறையாக கையாண்டுவிடலாம் என தென் இலங்கை ஆட்சியாளர்கள் எண்ணுகின்றனர். கட்டாத பாலத்திற்கான அனைத்து பூர்வாங்க வேலையையும் மேற்கொள்கின்ற அதே நேரம் மறுபக்கத்தில் இந்துத்துவவை தூண்டுதல் மூலம் பிரச்சினையை முடிபுக்கு கொண்டுவர தென் இலங்கை முனைய வாய்ப்புள்ளது.
மூன்று, இந்தியாவுடனான நிலத்தொடர்ச்சிக்கு எதிராக தென் இலங்கையின் தீவிர அரசியல் சக்திகளை பயன்படுத்துவதன் வாயிவலாக இந்தியாவின் அணுகுமுறையை கையாளலாம் என தென் இலங்கை கருதுகிறது. உள்நாட்டில் எதிர்ப்புவாதத்தை தூண்டுவதன் மூலம் இந்தியா தனது விருப்பிலிருந்து பின்வாங்கவைக்க முடியுமெனவும் திட்டமிட வாய்பட்புள்ளது. இதற்கு வலுவான ஆதாரமாக அமைவது இந்தியாவிடம் 2004 இருந்தே தற்போதைய ஜனாதிபதி பாலம் அமைப்பது பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்தி வருகின்றார். ஆனால் இன்றைய சூழல் வேறுபட்டது. அதாவது வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் இல்லாத காலம். இதனால் சிங்கள மக்களை பாலம் அமைப்பதற்கு எதிராக தூண்டுவதன் மூலம் அதன் முயற்சியை முடிபுக்கு கொண்டுவர முடியுமென தென் இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். அதற்கு அமைவாகவே புலமையாளர்களும் அரசியல் வாதிகளும் அது தொடர்பில் உரையாடலைத் தொடங்கியுள்ளனர். இது பௌத்த மகாசங்கங்களால் பரிசீலிக்கப்பட்டு தீவிரத் தன்மைக்கு உட்படும். அப்போது தீவிர எதிர்ப்புவாதம் எழுச்சியடையும்.
நான்கு, 13 வது திருத்தச் சட்டமூலம் எவ்வாறு இந்தியாவை மீளமுடியாதவாறு இலங்கைக்குள் சிக்கவைத்ததோ அவ்வாறே பாலம் அமைக்கும் உபாயத்தை முன்னிறுத்தி இந்தியாவை மீளமுடியாதவாறு இலங்கை சிக்கவைக்க திட்டமிடுகிறது. பங்குகொண்டு பலன்பெறல் (Engagement)கொள்கைக்கு பதிலாக பொறிவலை(Entanglement) கொள்கையை பின்பற்றுவதன் மூலம் இந்தியாவை நிரந்தரமாக சிக்கவைக்க திட்டமிடுகிறது தென் இலங்கை. இதன் பிரதிபலிப்பாக எழுந்துள்ள உறவே தற்போதைய இலங்கை-இந்திய உறவாகும். இந்திய-இலங்கை நிலத் தொடர்ச்சிக்கான அரசியல் நீண்ட உரையாடலை ஆரம்பிக்க முனைகிறது. இதற்கான இந்திய அணுகுமுறையே பதில் அரசியல் விளைவைத் தரக்கூடியதாக அமையும். இந்தியா வெளிப்படையாக இலங்கைத் தீவை முழுமையாக செல்வாக்குச் செலுத்த முடியாது என்பதை உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. அதுவே அதன் பாலம் பற்றிய உரையாடலை தொடக்கியதற்கான முனைப்பாகவுள்ளது.
எனவே இலங்கை இந்திய உறவின் புதிய வடிவமாக எழுந்துள்ள நிலத் தொடர்ச்சிக்கான பாலம் அமைப்பதானது தென் இலங்கையின் அரசியலின் இராஜதந்திர அணுகுமுறையாகவே தெரிகிறது. அதனை எதிர் கொள்ளும் உபாயத்திற்குள் இந்தியா இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 13வது திருத்தத்திற்குள் எவ்வாறு மீளமுடியாத பொறிக்குள் அகப்பட்டதோ அவ்வாறே மீளவும் சிக்கவைப்பதற்கான உபாயத்திற்குள் இந்தியா Engagementக்குள் அகப்பட ஆரம்பித்துள்ளது. தென் இலங்கை வகுத்துள்ள Engagement கொள்கை என்பது Entanglement கொள்கையாகவே உள்ளது. இது பொருளாதார அர்த்தத்திலும் அரசியல் அர்த்தத்திலும் பரஸ்பரம் பிரயோகப்படுத்தப்படுகிறது. பொருளாதார ரீதியில் Engagement கொள்கையை பின்பற்றிக் கொண்டு அரசியல் ரீதியில் Entanglement கொள்கையை இந்தியாவுக்கு எதிராக பிரயோகிக்கின்றதைக் காணக்கூடியதாக உள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
