அரசியல் கட்டுரைகள்

இந்தோ-பசுபிக் நாடுகளுடனான ஒத்துழைப்பு-இராஜதந்திரத்தின் மூலம் நெருக்கடிகளிலிருந்து தென் இலங்கை மீள்கிறதா?

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் அரசாங்கத்தின் முயற்சி இனப்பிரச்சினைக்கு விடயத்தில் ஏமாற்றும் உத்தியை கொண்டுள்ளது என்பது வெளிப்படையானது. அத்தகைய கையாளுகை அரசியலில் குவாட் நாடுகளும் தென் இலங்கை ஆட்சியாளருடன் இணைந்து செயல்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மீளவும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் நல்லிணக்கம் என்ற செய்முறைக்கூடாக இனப்பிரச்சினையை மட்டுமல்ல அதற்கான காலத்தையும் கடந்து செல்ல முனைகிறதை கண்டுகொள்ள முடிகிறது. மைத்திரி-ரணில் அரசாங்க காலத்திலும் இத்தகைய நல்லிணங்கம் பற்றிய உரையாடலே முதன்மையாக அமைந்ததுடன் தமிழ் மக்கள் எந்தவித முன்னேற்றத்தையும் அடையாத ஏமாற்றுத்தனத்திற்கு துணைபோனதாகவே அமைந்திருந்தது. தென் இலங்கை எப்போதும் தனது நெருக்கடியை கையாள நல்லிணக்கம், பேச்சுவார்த்தை, உடன்பாடு மற்றும் புதிய அரசியலமைப்பு என உரையாடுவதன் மூலம் காலத்தை கையாள்வதில் வெற்றிகண்டுவருகிறது. மீளவும் அதற்கான காலப்பகுதியாகவே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. அத்தகைய காலநீடிப்பை தென் இலங்கை அடைய குவாட் நாடுகளையும் துணைக்களைத்துக் கொண்டு செயல்படுகிறது. இக்கட்டுரையும் திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ-பசுபிக் வளையத்திற்குள் இலங்கைத்தீவை குவாட் நாடுகள் உட்படுத்துவதில் மேற்கொள்ளும் நகர்வுகளையும் அதற்குள்ளால் ஈழத்தமிழரது தீர்வு பலியிடப்படுவதையும் தேடுவதாக அமையவள்ளது.

ஜப்பானின் நிதி உதவியுடன் திருகோணமலைத் துறைமுகத்தில் Night Navigation Operation நிலையம் ஒன்று அண்மையில் (17.02.2023) திறந்துவைக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சிறிபாலா டீ சில்வாவும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரான முசுகோசி கிடாக்கியும் (mizukoshi hideaki) இணைந்து அதற்கான நடவடிக்கையை தொடங்கிவைத்துள்ளனர். 2017 ஆண்டு இரு நாட்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட நிதியுதவியின் அடிப்படையில் NNO ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் ஜப்பானிய யென் நிதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டமானது ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முறைமைக்குள்ளால் கையாளப்பட்டுள்ளது. இதன் தொழில்நுட்பம் திறன் கொண்டதாக இரவு நேரச் செயல்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கில் திருகோணமலைத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் துறைமுகத்திற்குள் கப்பல்கள் தரித்து நிற்கும் பட்சத்தில் புதிதாக நுழையும் கப்பல்கள் மறுநாள் அதிகாலை வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் துறைமுகத்தின் செயல்திறன்கள் இடையூறுக்கள் உள்ளாக்கப்படுகின்றன. இவற்றை தவிர்ப்பதே NNO இன் பிரதான நோக்கமாகும்.

இதே நேரம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சுங் குறிப்பிடும் போது இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ள பொருளாதார சவால்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெப்போதையும் விட தற்போது சுபீட்சமான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரும் இணங்க வேண்டியது அவசியமானதாகும் என்று தெரிவித்துள்ளார். இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட இலக்கு தெறகாசியப்பிராந்தியம் மீதான தாக்கம் எனும் நூல் வெளியீட்டின் போதே ஜீலி சுங் மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவரது உரையில் இந்தோ-பசுபிக் செயல்திட்டத்தின் அடிப்படைக் கூறுகள் சுதந்திரமானதும் சுபீட்சமானதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் மீண்டெழக்கூடியதும் பாதுகாப்பானதாகவும் உள்ளது. இதனை உறுதி செய்வதே இந்தா-பசுபிக் பிராந்தியத்தின் பிரதான நோக்கம் எனவும் தொவித்தார்.

ஏறக்குறைய அமெரிக்க தூதுவர் இலங்கைத் தீவில் விஜயம் செய்யும் அனைத்து பிரதேசங்களிலும் இந்தோ-பசுபிக் உபாயத்திற்கான அவசியப்பாட்டை வலியுறுத்திவருகிறார். அவரது டூவிட்டரை அவதானிக்கும் போது இந்தோ-பசுபிக் பிராந்தியத் திட்டத்தின் முக்கியத்துவத்தை அனைத்து இலங்கைப் பிரஜைகளின் முன்னும் முதன்மைப்படுத்தி வருகிறார் அதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபல இராஜதந்திரியாக மாறிவருகின்றார். மத்தியதர மக்கள் மத்தியில் தனது எண்ணத்தை குவித்துவரும் இராஜதந்திரியாகவும் காணப்படுகின்றார். அதன் மூலம் இலங்கைத் தீவில் புதிய அல்லது மாறுபட்ட அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முயல்வதனைக் காணக்கூடியதாக உள்ளது. அதன் மூலம் இந்தோ-பசுபிக் திட்டத்தின் நோக்கத்திற்குள் இலங்கைத்தீவை உட்படுத்துவதில் முன்னேறியுள்ளார் என்பதைக காட்டுவதாகவே அவரது நகர்வுகள் காணப்படுகின்றன. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 75 ஆவது ஆண்டு இராஜதந்திர உறவை நினைவு கொள்ளும் தூதுவர் அதன் மூலம் இலங்கையுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவை அமையாளப்படுத்துகின்றார். அதன் அவசியப் பாட்டையும் தனித்தன்மையையும் கோடிட்டுக் காட்டுவதில் அவரது பதவிக்காலம் முதன்மையானதாக உள்ளது.

அவ்வாறே ஜப்பானியத் தூதுவரும் தூதரகமும் வடக்கு கிழக்கு உட்பட இலங்கை முழுவதும் அதிகமான தொடர்புகளைக் கொண்டு செயல்படுகிறதைக் காணமுடிகிறது. குறிப்பாக இலங்கைத் தீவில் ஜப்பான் பாரிய பொருளாதார திட்டங்கள் கல்வி வாய்ப்புக்கள், மற்றும் வேலைவாய்ப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் மூலம் இலங்கைத்தீவை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும் உத்தியின் மூலம் இந்தோ-பசுபிக் திட்டத்திற்குள் இணைப்பதிலும் கவனம் கொளண்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வகையான நகர்வுகள் இலங்கைத் தீவிலிருந்து சீனாவை பின்தள்ளி குவாட் நாடுகளது செயல்பாடுகளை முன்னகர்துவதே பிரதான நோக்கமாக தெரிகிறது. இது தென் இலங்கை ஆட்சியைப் பாதுகாப்பதும் அதற்கான உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதும் குவாட் நாடுகளுக்கு அவசியமான செய்முறையாக உள்ளது. தூதுவர்களும் தூதராலயங்களும் அந்த அந்த நாடுகளின் நலன்களை இராஜதந்திர ரீதியில் கையாளுபவர்கள் என்ற வகையிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டியது அரசியலாகும். இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தோ-பசுபிக் திட்டம் அவசியமானது என்ற உரையாடலை குவாட் நாடுகள் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளதாகதே தெரிகிறது. மேற்ப நூல் வெளியீட்டுக்கு சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மஜிலிந்த பீரிஸ் முக்கிய அதிதியாக கலந்து கொண்டிருந்தார். அவ்வாறே அந்நூலின் தொகுப்பாசிரியரான கலாநிதி ஹரிந்திர விதானகே நிகழ்விலும் நூலின் தனித்துவத்தின் முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்தியிருந்தார். இத்தகைய குழுமத்தின் அடையாளப்படுத்தல் தென் இலங்கை இந்தோ-பசுபிக் உபாயத்தை உள்வாங்கியுள்ளதென்பதை கோடிகாட்டியுள்ளது. அதாவது தென் இலங்கையின் புலமைத்தளம், மற்றும் பாதுகாப்பு தரப்பு குவாட் நாடுகளுடனான ஒத்துழைப்பினை அங்கீகரித்துள்ளன என்பதாகும்.

இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட அட்மிரல் பீற்றர் ஏ.குமடாட்டா தெரிவிக்கும் போது, இந்தோ-பசுபிக் திட்டத்தின் நோக்கம் சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான பிராந்தியத்தை கட்டியெழுப்புவதன் அவசியம் உணர்த்தப்பட்டதுடன் இதில் அனைத்துத் தரப்பும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். இவை அனைத்தும் தென் இலங்கையின் அரசியல்,பொருளாதார, இராணுவ தரப்புக்கள் குவாட் நாடுகளுடன் ஒத்துழைக்க தயாராகிவிட்டன என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. அதே நேரம் சீனாவை இத்தரப்பு முற்றாக புறந்தள்ளவும் இல்லை என்பதை புரிந்து கொள்வதும் அவசியமாகவே தெரிகிறது. இது இலங்கை இராஜதந்திரத்தின் 2500 ஆண்டு கால வரலாற்றின் படிப்பினையாகவே உள்ளது. அதுவே சிங்கள-பௌத்தப் படிப்பினையாகவும் தெரிகிறது. அதனைப் புரிந்து கொள்ள ஈழத்தமிழ் அரசியலோ, ஈழத்தமிழ் புலமையோ தயாரில்லாத நிலையே தற்போதைய துயரத்திற்கு அடிப்படையாக உள்ளது என்பது தவிர்க்க முடியாத புரிதலாகும். வேண்டுமாயின் தமிழ் சினிமாவிலும், இலக்கியத்திலும் ஒரே உறையில் இரண்டு வாள்கள் உறங்காது என வசனநடை எழுத முடியும். அது அரசியாகிவிடாது. ஆனால் தென் இலங்கையின் இராஜதந்திரத்திற்கு முன்னால் அத்தகைய வார்த்தைகள் தோல்வியின் முகங்களாகவே தெரிகிறது. இரண்டு வாள்கள் அல்ல பல வாள்களை ஒரே உறைக்குள் உறங்கவைக்கும் திறன் தென் இலங்கை இராஜதந்திரத்திற்கு உண்டு. அதனையே கடந்த வரலாறு முழுவதும் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சியின் தோல்விக்கான காரணத்தை நன்கு விளங்கிக் கொண்ட தென் இலங்கை தரப்புக்கள் அதனை இனியும் ஏற்பட அனுமதிக்காது செயல்பட ஆரம்பித்துள்ளன. அத்தகைய எண்ணத்தை பாதுகாக்கும் உத்தியில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் செயல்படுகின்றன. இது மட்டுமன்றி இலங்கைத் தீவின் இறைமையை பாதுகாப்பதிலும் அமெரிக்காவின் பங்களிப்பு அதீதமாக உள்ளது. இலங்கையின் இறைமை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு. மற்றும் கடலோரப் பாதுகாப்புக்கான உத்தரவாதம் இந்தோ-பசுபிக் திட்டத்திற்குள் அடங்கியுள்ளதுடன் அதற்காகவே இலங்கைத் தீவு இந்தோ-பசுபிக் திட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதை அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தி வருகிறார். அவரது டூவிட்டரை பின்தொடரும் எவரும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

எனவே தென் இலங்கை மேற்கின் உபாயங்களை தனது இலக்குக்குள் வளைத்துப் போடுவதில் வெற்றி கண்டுள்ளது. அமெரிக்காவையும், சீனாவையும்,இந்தியாவையும் ஒரே தளத்தில் கையாளும் திறனுடன் தென் இலங்கை அரசியல், இராணுவம் இயங்குகிறது. ஈழத்தமிழர் அரசியல் சீனாவை பார்ப்பது போல் தென் இலங்கை அமெரிக்காவையோ, இந்தியாவையோ அல்லது மேற்கு நாடுகளையோ நோக்கவில்லை. தென் இலங்கையின் இராஜதந்திரத்திற்குள்ளால் அனைத்து நாடுகளும் அரவணைக்கப்படுகின்றன. எதிரிகளிடம் சரணடைவதன் மூலம் அவர்களையே நண்பர்களாக்கும் திறனை கடந்த வரலாறு முழுவதும் சிங்களத் அரசியல் தலைவர்கள் கொண்டுள்ளனர். ஈழத்தமிழரது நூற்றாண்டுகாலத் தோல்விக்கு பின்னாலுள்ள அடிப்படை சிங்கள-பௌத்தத்தின் இராஜதந்திர செல்நெறியென்பதை மறுக்க முடியாது. 2500 ஆண்டுகால வெளியுறவுக் கொள்கைக்கான வரலாற்றை இலங்கை கொண்டுள்ள நாடு என்பதை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். இதற்கான மேலதிக தேடலை மேற்கொள்ள விரும்பும் எவரும் V.L.B.Mendis எழுதிய Foreign Relations of Sri Lanka: from earliest times to 1965 எனும் நூலை பார்க்கவும். தற்போதும் அதற்கான நகர்வுகளை தெளிவான தந்திரோபாயத்துடன் தென் இலங்கை மேற்கொண்டுவருகிறது. ஈழத்தமிழரது அரசியல் தீர்வுக்கான எந்த முகாந்திரமும் இன்றிய நடவடிக்கையை தென் இலங்கை இந்தோ-பசுபிக் ஒத்துழைப்பின் பெயரால் எடுத்துவருகிறது. ஒட்டுமொத்த இலங்கைத் தீவின் ஒத்துழைப்பே இந்தோ-பசுபிக் அணிக்கும், சீனாவுக்கும் தேவையாக உள்ளது. அதனை தென் இலங்கை தராளமாக முன்னகர்த்த தயாராகிவிட்டது. அதனால் தீர்வும் நல்லிணங்கமும் மீளவும் ஒரு உச்சரிப்பு மட்டுமே.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)