இலங்கையின் அரசியல் பரப்பில் அதிக மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. தென் இலங்கை மரபாந்த இந்திய எதிர்ப்புவாதத்தை கொண்டு இயங்குகிறது. அத்தகைய எதிர்புணர்வானது தமிழ் மக்கள் மீதான நெருக்கடியை மீளவும் உருவாக்கும் என்ற எச்சரிக்கைகளை இந்திய புலனாய்வுத் துறையே முன்னிலைப்படுத்தி வருகிறது. குருந்தூர்மலை விவகாரத்தையே மையப்படுத்தி இனங்களுக்கிடையே முரண்பாடு மீளவும் ஏற்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் தரைப்பாதை அமைப்பதிலிருந்து தொடங்கிய முரண்பாடு படிப்படியாக தமிழர் வாழ்விடம் சார்ந்து வளர்ந்து வருகிறது. பதின்மூன்றாவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலும் அதில் இந்தியாவின் பங்களிப்புப் பற்றியுமே முரண்பாட்டின் தொடக்கம் அமைந்திருந்தது. அது வளர்ந்து குருந்தூர்மலை விவகாரமாக காட்சிப்படுத்தப்படுகிறது. ஆனால் அடிப்படையில் இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்துவிடக்கூடாது என்பதே பின்னாலுள்ள வலுவான காரணமாகும். இதனை ஆட்சியாளர்கள் கையாள இந்தியாவையும் அரவணைத்துக் கொண்டு சீனாவையும் துணைக்கு வைத்துக் கொள்ள முற்படும் போக்கு அண்மையில் அதிகரித்துள்ளது. மறுபக்கத்தில் தீவிரத் தன்மையுடையவர்களை தமிழருக்கு எதிராக தூண்டிவிடுவதும் அத்தகைய தீவிர போக்குடைய அரசியல்வாதிகள் மற்றும் பௌத்த மதவாதிகளது உரைகளையும் அறிக்கைகளையும் மௌனமாக கடந்து செல்வதை வழமையான அரசியலாக அரசாங்கம் கொண்டுள்ளது. இக்கட்டுரையும் உள்நாட்டில் எழுந்துள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் இந்தியாவிடமிருந்து கடல் கண்காணிப்பு விமானங்களையும், சீனாவிடமிருந்து தகவல் தொழில்நுட்ப வாகனங்களையும் இராணுவ பயன்பாட்டுக்காக அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதன் உள்ளார்ந்த அரசியலை தேடுவதாக அமையவுள்ளது.
16.08.2023 அன்று இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முதன்மைப்படுத்திக் கொண்டு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்காவிடம் டோர்னியர்-228என்ற கடல்சார் விமானத்தை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. கடந்த வருடம் கையளிக்கப்பட்ட டோர்னியர் கண்காணிப்பு விமானம் பராமரிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதன் பிரகாரம் மாற்று கண்காணிப்பு விமானம் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு இருநாட்டுக்கும் இடையில் நிகழ்ந்த பேச்சுக்களின் விளைவாக கண்காணிபட்பு விமானங்களை இலங்கைக்கு வழங்குவதென இணக்கப்பாடு எட்டப்பட்டது. இது இலங்கையின் கடல் கண்காணிப்பினை மேற்கொள்ள வேண்டிய திறன்களை வலுப்படுத்துவதே நோக்கம் என இந்தியத்தரப்பு அறிவித்துள்ளது. இதனை இருவருடங்களுக்கு இலவசமாக வழங்குவதெனவும் தெரியவருகிறது. இத்தகைய அடிப்படையில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் கோபால் பாக்லே கட்டுநாயக்காவிலுள்ள விமானபடைத் தளத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இது பற்றி ஜனாதிபதி ஊடகப்பிரிவு இத்தகைய விமானங்களின் கண்காணிப்பின் மூலம் இலங்கையின் வான்வெளி மற்றும் பிரத்தியோக பொருளாதார வலையத்தை பாதுகாத்தல் கண்காணித்தல், தேடல், மீட்புப்பணிகளை மேற்கொள்ளல் என பலவிடயங்களை பங்களிப்பினை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடல் மாசுபாட்டை தடுக்கவும் உதவியுள்ளதாக அறிக்கை செய்துள்ளது.
இதே நேரம் சீனாவின் ஆய்வுக்கப்பலான ஷி யான்-6 25.08.2023 வருகைதரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது 17 நாட்கள் தங்கியிருந்து ஆய்வுகளை கடல்பகுதியில் மேற்கொள்ளும் எனவும் அது நாராநிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் எனவும் இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது. றுகுணப் பல்கலைகக்கழகத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டின் பிரகாரமே இவ்வாய்வுக் கப்பல் வருகைதந்துள்ளதாக நாரா எனும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷி யான் கடந்த வருடம் ஏப்ரலில் வருகைதந்து 10 நாட்கள் தரித்திருந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக றுகுணப் பல்கலைக்கழக கடல்சார் தொழில்நுட்பப் பீடம் தெரிவித்துள்ளது. இது பற்றி இந்தியா தனது அதிருப்தியை இராஜதந்திர மட்டத்தில் அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6.2 மில்லியன் டொலர் பெறுமதியான 11 இராணுவ வாகனங்கள் (Emergency Command and Communication System Vehicle Fleet) (11 automobiles) சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சு இலங்கைக்கு (22.08.2023) வழங்கியுள்ளது. இலங்கை இராணுவத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் விசேட கடமைக்கு ஈடுபடுத்துவதற்கு இந்த வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்ட இவ்வாகனங்கள் இராணுவ நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டதென்பது கவனத்திற்குரியதாகும். இது இலங்கை இராணுவத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு விருத்தி செய்வதே நோக்கம் என சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவற்றை அவதானிக்கும் போது இலங்கை அரசாங்கம் அதிக இராணுவத் தேவைகளை கொண்டுள்ள சூழலில் செயல்படுவது போலவே தெரிகிறது. இவ்வாறு இலங்கை இராணுவத் தேவைகளை அதிகம் கொண்டுள்ளதாக காட்டப்படுவது கவனத்திற்குரியதாகும். சீனாவும், இந்தியாவும் இலங்கையில் ஒர் இராணுவ வலுவுள்ள நாடாக மாற்ற முனைவது எதற்கானது என்பது பிரதான கேள்வியாகும். அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.
ஒன்று, இந்தோ-பசுபிக் சூழலில் இலங்கையின் பாதுகாப்பு நங்கூரம் இந்தியா என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மிலிந்த மொறகொட ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கொழும்பும் புதுடில்லியும் சிறப்பு உறவை பகிர்ந்தது கொள்கிறது. அதனை ஏனைய நாடுகளின் இருதரப்பு உறவுடன் ஒப்பிடமுடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இலங்கையின் மூலோபாய இருப்பிடம் மற்றும் இந்திய நிலப்பகுதிக்கு அருகாமையில் அமைந்திருப்பதனால் கொழும்பின் பாதுகாப்பு நலன்கள் புதுடில்லியின் நலன்களுடன் இணைந்திருக்கிறது. அதனால்தான் இலங்கை இந்தியாவை நங்கூரம் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறது. இதனால் இலங்கை வாழக்கற்றுக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனார். அனைத்து நெருக்கடியிலும் இந்தியா இலங்கைக்கு பாதுகாப்பளித்துள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் இராணுவ ரீதியான நெருக்கடி நிலவிய போதும் இந்தியாவே பாதுகாப்பளித்துள்ளது என்பதை தூதுவர் மொறகொட மட்டுமல்ல அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறு இலங்கை ஆட்சியாளர்கள் மீள மீள அதனை வலியுறுத்துவதன் மூலம் இந்தியாவை திருப்திப்படுத்துகிறார்கள். இந்திய ஆட்சியாளர்களை குளிரவைக்கிறார்கள். இந்திய ஆட்சியாளரும் அதனை அதிகம் நம்புவதமாகவே தெரிகிறது. இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை இலங்கையின் நங்கூரம் என்று கூறிக் கொண்டு சீன போர்க் கப்பல்களை நீர்மூழ்கிகளையும் கொழும்புத் துறைமுகத்திலும், ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திலும் நங்கூரமிட வழிவிடுகிறார்கள். (Sri Lanka’s Defense Anchor India) தொடர்ச்சியாக சீனாவின் இராணுவ நகர்வுகள் நிகழுகிறது. இலங்கைத் தீவில் பொருளாதார நெருக்கடி முடிபுக்கு வராத நிலையில் இராணுவத்தின் அளவையும் அதன் வலுவையும் சர்வதேச நாணய நிதியம் குறைக்குமாறு கோரிய போதும் அதற்கான எந்த நகர்வுமின்றி அரசாங்கம் செயல்படுகிறது. இலங்கைக்கு கடன் கொடுப்பதில் அதிக கவனம் கொண்டுள்ள இரு நாடுகளுமே இலங்கையின் பாதுகாப்பில் அக்கறை செலுத்திவருகிறன. மாறாக இரு நாடுகளும் பரஸ்பரம் தமது இராணுவ கண்காணிப்பினை மற்றய நாடு மீது அதிகரித்து வருவதாகவே தெரிகிறது.
இரண்டு, இலங்கை அரசாங்கம் சீன ஆய்வுக் கப்பலான ஷியான்-6 இன் இலங்கைத் துறைமுகத்திற்கான நுழைவுக்கு அனுமதி வழங்காதுள்ள நிலையை ஊடகங்கள் வாயிலாக பெரிதுபடுத்தியுள்ளது. இத்தகைய செய்முறையை வழமையாகக் கொண்டுள்ளது. யுவான் வாங்-5 வருகையின் போதும் இவ்வாறே இந்தியாவை இலங்கை கையாண்டது. ஆரம்பத்தில் நிராகரித்துவிட்டு பின்னர் இந்தியாவின் ஒப்புதலுடன் அனுமதிப்பது போன்று செயல்பட முனைகிறது. அதனை சீனாவும் விரும்புவதாகதே தெரிகிறது. காரணம் சீனா இந்தியாவுடன் அதிக மோதல் போக்கினை தற்போது மேற்கொள்ள விரும்பாமையேயாகும். பிரிக்ஸ் அமைப்பு மற்றும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பன சிறப்பான தகவலாகவுள்ளது. இரு நாடுகளும் நெருக்கமான வளர்ச்சியையே அதிகம் முதன்மைப்படுத்துவது போல் தெரிகிறது. இதனால் இரு நாடுகளதும் அணுகுமுறைகளும் மென்போக்குடையதாக அமைந்துள்ளது. அதனை இலங்கை ஆட்சியாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தியாவை முதன்மைப்படுத்தி சீனாவையும், சீனாவை முதன்மைப்படுத்தி இந்தியாவையும் கையாளுகின்றனர். ஆனால் இறுதியில் சீனா பக்கமே இலங்கை ஆட்சியாளர்கள் செயல்பட முனைவார்கள் என்பது கடந்த கால இலங்கையின் வெளியுறவு தெளிவுபடுத்துகிறது. இதனை மீறி இந்தியா இலங்கைத் தீவில் நிலையான இருப்பினைத் தக்கவைக்க வேண்டுமாயின் இராணுவப் பிரசன்னத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கான வாய்ப்பு மிக அரிதானது. காரணம் சீனாவின் இராணுவ ஒத்துழைப்பு இலங்கையில் வலுவானதாக அமையும் போது இந்தியாவின் நகர்வு பலவீனமானதாகவே அமையு வாய்புள்ளது.
மூன்று, இத்தகைய கையாளுகைக்குள்ளால் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை அதிகரிக்க முடியுமென்ற அனுபவத்தை தென் இலங்கை ஆட்சியாளர்கள் கொண்டுள்ளனர். தென் இலங்கை ஆட்சியாளர்கள் 1956 இல் இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருந்து கொண்டே தனிச்சிங்களச் சட்டத்தை சாத்தியப்படுத்தினர். 1983 இல் மட்டுமே ஒரு நெருக்கடியை எதிர் கொண்டனர். பின்னர் அதிலிருந்தும் அனுபவங்களை கற்றுவிட்டார்கள். தற்போது மீண்டும் இந்தியாவுடன் நெருக்கமும் ஒத்துழைப்பையும் அதிகரிக்க ஆட்சியாளர் திட்டமிட மறுபக்கத்தில் நெருக்கடி நிலைக்கான சூழலை உருவாக்கி வருகின்றனர். தமிழர்களை ஒடுக்குவதற்காகவே இந்தியாவுடன் ஒத்துழைப்பதும் பின்னர் அதனை முறித்துக் கொள்வதும் இலங்கை அரசியலின் மரபாக உள்ளது.
எனவே, சீன இந்திய நலனுக்குள் இலங்கைத் தீவின் அரசியல் அகப்பட்டுள்ளது என்ற விவாதத்தை விட இலங்கைத் தீவின் நலனுக்குள் சீனாவும், இந்தியாவும் உட்படுத்தப்பட்டுள்ளன என்பதே யதார்தமானதாக தெரிகிறது. இதில் இந்தியாவைக் காட்டிலும் சீனாவே தென் இலங்கையின் பாதுகாப்பு உத்தரவாதமானது. ஆனால் இந்தியாவை முதன்மைப்படுத்துவதென்பது அதனை கையாளுவதற்கானதே. அது இந்தியாவுக்கு கொடுக்கும் முதன்மையல்ல.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
