February 8, 2026
அரசியல் கட்டுரைகள்

டொனால்ட் ட்ரம்ப்-ஜின் பிங் சந்திப்பு ஏகாதிபத்தியங்களின் சமரசத்திற்கான உடன்பாடாகும்?

ஏகாதிபத்தியங்களில் உலகம் சமரசத்துக்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டிருக்கக் கூடியது. ஆபத்தான போர்களையும் அழிவுகளையும் தமக்கிடையே தவிர்ப்பதற்கான சமரசங்களை மேற்கொள்வதற்கு எப்போதும் தயாராகும் போட்டிக்குள்ளேயே ஏகாதிபத்திய சக்திகளின் உலக அதிகாரம் விளங்குகிறது. இரண்டாம் உலகப் போர் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான விபத்தாகவே நோக்கப்படுகிறது. அதற்கு பின்வந்த உலக ஒழுங்கு அத்தகைய போர்களை தவிர்த்தே வந்துள்ளது. அத்தகைய வடிவம் ஒன்றுக்குள்ளே சீன- அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு தென்கொரிய நகரத்தில் நிகழ்ந்து முடிந்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் இடையில் நிகழ்ந்த சந்திப்புகளை பெருமையாக கொள்வதுடன் உலகத்தலைவர்களும் அதற்கான வாய்ப்புகளை நாகரீகமாக அங்கீகரித்துள்ளனர். உலகத்தில் முதல் இரு நாட்டின் தலைவர்களின் சந்திப்பு மாற்றத்துக்கான சந்திப்பாக கொல்லப்படுகிறது. இக்கட்டுரையும் சீன-அமெரிக்க தலைவர்களின் சந்திப்பின் விளைவுகளை தேடுவதாக வடிவமைக்கப்படுகிறது.

தென்கொரியாவின் பூசான் (Busan) நகரில் உள்ள விமான நிலையம் ஒன்றில் உலகத்தின் முதல் தர தலைவர்கள் சந்தித்த நிகழ்வு உலக வர்த்தகப்போரை ஒரு வருடங்களுக்கு ஒத்தி வைத்திருக்கின்றது இரு தலைவர்களது சந்திப்பின் நோக்கங்களும் உரையாடப்பட்ட விடயங்களும் பரஸ்பரம் உலக பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான செய்முறையாக அளவிடப்படுகிறது. உலக அரசியல் பொருளாதரத்தின்போக்கினைவரியும் அதற்கான முறையும் தீர்மானிக்கும் ஒரு உலக பரப்பில் அரசுகளும் ஆட்சியாளர்களும் போட்டியிடுகின்ற அல்லது அதற்காக போரிடுகின்ற சூழல் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதிக்காக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தபின் தொடங்கியது. அத்தகைய வர்த்தகப் போர் உலக அரசியல் பொருளாதரத்தின் மைய நீரோட்டமாக காணப்படுகிறது. உலகம் பொருளாதாரம் என்பது வர்த்தகமும் சந்தையும் என்ற ஒரு நிலைக்குள் இயங்குகின்ற சூழலானது அமெரிக்காவின் வீழ்ச்சியை அல்லது நலன்களை பாதுகாப்பதற்கான ஒரு உத்தியாகவே வரியறவீட்டை பார்க்கப்பட்டது. அதிக ஒத்துழைப்பின்மையின் நகர்வு உலகளாவிய ரீதியில் அமெரிக்கா மீது ஏற்பட்டதுடன் அமெரிக்க ஜனாதிபதி மீதான விமர்சனங்களும் மதிப்பீடுகளும் மாற்றத்திற்கான அறிகுறியாக தென்படுகிறது. ஆனாலும் அமெரிக்க ஜனாதிபதி அவரது கொள்கை வகுப்பாளர்களும் வேகமாக சீனாவுடனான அல்லது உலகத்துடனான நிபந்தனைகளை மாற்றிக் கொள்ள கூடியவர்கள். அதற்கான வாய்ப்புகள் கடந்த காலத்தில் இருந்து அளவிடப்படக்கூடியதாக உள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த புரிந்துணர்வை விரிவாக நோக்குவது அவசியமாகும்.

முதலாவது, இரு தலைவர்களின் சந்திப்பிலும் எட்டப்பட்ட விடயங்களை முக்கியமானது கணிமங்கள் தொடர்பில் சீனாவின் தடையை கைவிடுவதற்கான விண்ணப்பமாகும். வரி தொடர்பில் இரு நாடுகளும் பின்பற்றிய அல்லது மேற்கொண்ட நடவடிக்கை அடுத்து வரும் ஒரு ஆண்டு கைவிடுவதாக அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் பொருட்கள் இறக்குமதி 200 பில்லியன் என்ற இலக்கை சீனா மேற்கொள்ள உடன்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின் சுமூக தன்மையை வெளிப்படுத்திய இரு தலைவர்களும் காண்பித்த உடல் மொழிகளும் அதிக நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இது ஒரு வகையில் உலகத்துக்கு நம்பிக்கை ஊட்டும் உடன்பாடாக பார்க்கப்படுகின்றது. இரு வல்லரசுகளின் வர்த்தகப் போட்டியானது உலகம் முழுவதுமான நெருக்கடியை உருவாக்கியது. அத்தகைய நெருக்கடியில் இருந்து உலகம் விடுபடுவதற்கான சூழலை உடன்படிக்கை சாத்தியப்படுத்தியுள்ளது.

இரண்டாவது, உடன்படிக்கைக்கான சந்திப்பிற்க்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி அணு ஆயுதம் பொறுத்து வெளியிட்ட அறிவிப்பு உலக அரசியல் போக்கில் அதிக குழப்பத்தை தந்துள்ளது. ஏகாதிபத்தியங்கள் தமக்கு இடையிலான போர்களை தவிர்ப்பதும் மறைமுகமான தனியாள் போர்களை (Proxy war)நகர்த்துவதும் இயல்பான அம்சமாக காணப்படுகின்ற போது அணு ஆயுதப் போட்டி என்பது அனைத்து ஏகாதிபத்தியங்களில் இருப்புக்கான மற்றும் பாதுகாப்புக்கான அம்சமாகவே விளங்குகிறது. வர்த்தகப் போர் ஆயுத போருக்கான அடிப்படை என்பதை கோடிட்டுகாட்டுகின்ற அம்சமாகவே டொனால்ட் ட்ரம்ப்ன் உத்தரவு அணு ஆயுதம் பொறுத்த நோக்கப்படுகிறது. 1990 களுக்கு பின்னர் அத்தகைய உத்தரவு ஒன்றின் அவசியப்பாடு இல்லாதிருந்ததுடன் சீனாவுடனான சந்திப்பு அத்தகைய அணுவாயுதத்தின் உற்பத்திறக்கான உத்தரவு அமெரிக்க இராஜதந்திரத்திற்கானதாக தெரிகிறது.

மூன்றாவது உடன்பாட்டில் எட்டப்பட்ட மிகப் பிரதான அம்சமாக சீனாவின் கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்காக விதிக்கப்பட்ட தடையை கைவிடுவதாக சீனா அறிவித்துள்ளமையாகும். அப்படியானால் இரு தலைவர்களது உரையாடலின் மையமான அம்சமாக சீனாவின் கனிமங்கள் முக்கிய இடத்தை வகித்திருக்கின்றது. மின்சார வாகனங்கள் முதல் தொலைபேசி உற்பத்தி வரை இத்தகைய கணிமங்களே பிரதானமானதாக உள்ளன. அதனை உலகளாவிய ரீதியில் அதிகம் கொண்ட நாடாக சீனாவே காணப்படுகிறது. இது ஒரு வகையில் அமெரிக்கா சீனாவை நோக்கி நகர்ந்திருப்பதற்கான அல்லது விட்டுக்கொடுப்புக்கான உடன்பாட்டைப் புலப்படுத்துகின்றது. சீனாவின் கனிமங்களின் ஏற்றுமதியில் அமெரிக்காவின் தொலைத் தொடர்பு மற்றும் மென்வகை ஆயுத உற்பத்திகள் விண்வெளி ஆய்வுக்கான அம்சங்கள் என அவற்றின் தேவைப்பாடு அதீதமானதாகவே காணப்படுகிறது. எனவே அமெரிக்காவின் விட்டுக் கொடுப்புகள் சீனாவின் கனிம வளங்களை நோக்கிய ஒன்றாகவே நோக்கப்படுகிறது. அதனை சீனாவும் முதன்மைப்படுத்தியே வர்த்தகப் போரை தனது ஆதிக்கத்திற்குள் வைத்திருந்தது. அதற்கான தேவைப்பாட்டை அதிகம் கொண்ட நாடுகளில் முதன்மையானது அமெரிக்காவாகும். இதுவே உடன்பாட்டுக்கும் அமெரிக்காவின் விட்டுக் கொடுப்புக்கும் பிரதான காரணமாகும்.

நான்காவது ஏகாதிபத்தியங்களின் சமரசங்கள் உலகப் பொருளாதாரத்தை அல்லது போர் சூழலை புதிய வடிவத்தினை எதிர்கொள்வதற்கான உத்திகளாகவே எப்போதும் அமைந்திருக்கின்றன. ஏகாதிபத்தியத்தின் பட்டியலில் காணப்படும் அனைத்து அரசுகளும் அத்தகைய வாய்ப்புகளை நோக்கிய சமரசங்களை முதன்மைப்படுத்துகின்றன. சீனா பக்கமும் அமெரிக்கா பக்கமும் அத்தகைய சமரசத்துக்கான அணுகுமுறை என்பது அடுத்து வரும் உலக ஒழுங்குக்கான நகர்வாகவே தெரிகின்றது.

எனவே சீன அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உறவை தமக்கவைக்க வழி வகுத்துள்ளது. இரு நாடுகளும் உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மையோடு நேரடியான போரை தவிர்க்கின்ற அணுகுமுறையை மேற்கொண்டுள்ளனர். இரு தரப்பின் இராஜதந்திரமும் இரு தேசங்களின் நலன்களை கட்டமைத்திருப்பதோடு அதன் விளைவுகள் உலகத்தின் வர்த்தகப்போரின் புதிய அத்தியாயமாக அமைய வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)