அரசியல் கட்டுரைகள்

காலிமுகத்திடல் போராட்டம் இலங்கைத்தீவில் ஆட்சிமாற்றத்தையா கட்டமைப்பு மாற்றத்தையா ஏற்படுத்தப் போகிறது?

இலங்கைத் தீவின் அரசியல் காலிமுகத்திடலை நோக்கியதாகவே உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கான போராட்டமாக தொடங்கியது படிப்படியாக அதன் மையமான தற்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை பதவியிலிருந்து நீக்குவதிலும் நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்குவதற்கானதாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்கான போராட்டக்காரர்கள் தனித்துவமான உத்திகளுடன் காலிமுகத்திடலில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளையும் நிறைவு செய்கின்ற செயல்பாட்டுடன் போராட்டம் மூன்றாவது வாரத்தை நோக்கி நகர்கிறது. இக்கட்டுரை அப்போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பிந்திய நிலையையும் கட்டமைக்கப்பட வேண்டிய அடிப்படைகளையும் தேடுவதாக உள்ளது.

இது ஒரு அரச எதிர்ப்பு போராட்டமாக அமைந்தாலும் ஒட்டுமொத்தமான இலங்கையர்கள் தம்மை அளவிடவேண்டிய போராட்டமாக அமைந்துள்ளது. அதாவது இலங்கைத் தீவில் கடந்த கால வரலாறு முழுவதும் இனமோதலால் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவே உள்ளது. அதனையும் கடந்து வர்க்க ஆட்சி மாற்றத்தை நோக்கிய ஆயுதப் போராட்டமும் வடக்கு கிழக்கு மக்களுக்கு எதிரான மோதலாலும் இஸ்லாமிய சமூகத்திற்கு விரோதமான போக்குகளாலும் அரச இயந்திரம் கட்டமைக்கப்பட்டிருந்தது. 2009 போர் முடிந்த பின்பும் வடக்கு கிழக்கு நோக்கியும் ஏனைய தேசியங்கள் மற்றும் வர்க்கங்களை நோக்கியும் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார முகாந்திரமற்ற அரசியல் ஆக்கிரமிப்புத் தனத்தின் பிரதிபலிப்பாகவே தற்போதைய நிலை உருவாகியுள்ளது. தென் இலங்கை மட்டுமல்ல வடக்கு கிழக்கில் அரசாங்கங்கள் மேற்கொண்ட அனைத்து அரசியலுக்கான பொருளாதார முதலீடுகளும் உற்பத்தியையோ மீள் உருவாக்கத்தையோ சாத்தியப்படுத்தவில்லை. இவை அனைத்தும் அரசியல் பொருளாதார முதலீடுகளாகவோ அல்லது பொருளாதார முதலீடுகளாகவோ அமையாது வெறும் அரசியல் முதலீடுகளாகவே காணப்பட்டன. அதனையே உதவி வழங்கும் நாடுகளும் நிதி நிறுவனங்களும் மேற்கொண்டன.

குறிப்பாக சீனா தனது பொருளாதார முதலீடுகள் அனைத்தையும் அரசியல் நலனுக்காக மேற்கொண்டதாவே தெரிகிறது. அதாவது இலங்கையின் அமைவிடம் சார்ந்து இந்துசமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை தக்க வைப்பதற்கும் இந்தியா அமெரிர்க்கா போன்ற சக்திகளை அரசியல் ரீதியில் தோற்கடிப்பதற்குமாக துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் விருத்தி செய்ததே அன்றி அதனால் ஏறட்படக் கூடிய பொருளாதார ஈட்டங்களைப் பற்றி கருத்தில் கொள்ளவில்லை. அதனை இலங்கை ஆட்சியாளர்களும் அதன் புலமைத்தளத்தில் இருந்தவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கருத்தில் கொள்ளவில்லை. அவ்வாறே இந்தியர்களும் அமெரிக்கர்களும் சீனாவுக்கு எதிராகன எண்ணத்துடன் இலங்கைத் தீவில் தமது முதலீடுகளையும் உதவி நன்கொடைகளையும் மேற்கொள்வதன் மூலம் இலங்கைத் தீவை தமது ஆதிக்கத்திற்குள் கொண்டுவரலாம் எனக் கருதினர். இவ்வாறான அனைத்தையும் இலங்கைத் தீவை ஆட்சி செய்த அரசியல் தலைமைகள் இனப்பிரச்சினைக்கான அணுகுமுறையில் ஜெனீவாவையும் இந்தியா மற்றும் அமெரிக்காவையும் கையாளுவதற்கான முதலீடுகளாக மாற்றினார்களே அன்றி உற்பத்தி பெருக்கத்திற்கான முதலீட்டு உபாயங்களாக அவற்றை கையாளவில்லை. இதனை ஆட்சியாளர்கள் மட்டுல்ல தென் இலங்கை புத்திஜீவிகளும் கொள்கை வகுப்பாளர்களும் தற்போது கூட ஏற்க மறுக்கின்றனர்.

இவற்றின் புரிதலுக்கு உட்பட்டதாக காலிமுகத்திடல் போராட்டம் அமைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உயர்வர்க்கத்தின் நலன்களுக்குள் மீண்டும் இலங்கைத் தீவு உட்படுமாக இருந்தால் தற்போதைய போராட்டங்களதால் எத்தகைய பயனும் இலங்கைத் தீவுக்கு ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக இந்த ஆட்சியாளரிடமிருந்து அதிகாரத்தை பிடுங்கி இன்னோர் தரப்பிடம் ஒப்படைப்பதாகவே அமையும். தற்போதைய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து பயணித்தவர்களே எதிரணியிலிருந்து எதிர்வாதங்களை புரிக்pன்றனர். இதில் இடது வலது முற்போக்கு தீவிரம் மிதவாதம் என்று எதுவும் கிடையாது. எல்லாமே அரசியல் இலாபத்தை மட்டும் கொண்டது. அதற்கு காலிமுகத்திடல் முகம் வாய்ப்பளிக்கப் போகிறதா என்ற கேள்வியே யதார்த்தமானது.

முதலாவது இப்போராட்டம் வலுவான எண்ணத்துடன் தொடக்கப்பட்டது. அதன் தூர நோக்கு சரியாகவே காணப்பட்டது. அதற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் ஆரம்ப செயல்பாடுகள் அமைந்திருந்தன. அரசியல் கலப்பின்றி அரசியல் தலைமைகளின்றி தன்னார்வமாக எழுச்சியடைந்தது. ஆனால் கால நீடிப்பும் அதனை கையாள ஆரம்பித்த அரசாங்கமும். அதற்கான உதவுவதாக கூறிக் கொள்ளும் முன்னாள் அரசியல் தலைமைகளும் நிதிநிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் இலங்கைத் தீவில் கவனம் கொள்ளும் நாடுகளும் போராட்டத்தை தமக்கு இசைவாக பிரயோகிக்கிறார்களோ என்ற சந்தேகத்தை தர ஆரம்பித்துள்ளது. அது சார்ந்து முகநூல் பக்கங்கள் அதிக விமர்சனங்களை தருகின்றன. அவற்றை தனிப்பட்டதும் கட்சி நலன் எனவும் விட்டுவிட்டாலும் இப்போராட்டத்தில் சாதாரண மக்களது பங்களிப்பு ஏன் குறைந்துள்ளது என்ற கேள்வி மேற்படி விமர்சனங்களை முற்றாக கைவிடமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையாகவே காலிமுகத்திடலில் உருவான கிராமம் போராட்ட உத்திகளை முதன்மைப்படுத்த வேண்டும். அது ஒரு தெளிவான கருத்தியலை தனதாக்கிக் கொண்டு கட்டமைக்க வேண்டும். அவ்வகை கருத்தியல் இலங்கைத் தீவை மையப்படுத்தியதாக அமைய வேண்டும். மாற்றம் என்பது இலங்கைத் தீவிலுள்ள சகல தேசியங்களது நலன்களுக்குள்ளாலும் ஏற்படவும் ஏற்படுத்தக் கூடியதாகவும் காணப்பட வேண்டும்.

இரண்டாவது கிராமிய மக்களது பங்களிப்பு இப்போராட்டத்திற்கு அவசியமானது. அவர்களே பொருளாதார நெருக்கடியின் முதல் பலியாளர்கள். அவர்களை நோக்கியே இப்போராட்டத்தின் தோற்றுவாய் காணப்பட்டது.. அதனால் போராட்டம் மையக் கருவான கிராமங்களை விட்டு தூரவிலகிவடுவது ஆரோக்கியமானதாக அமைய வாய்ப்பில்லை. பொருளாதா நெருக்கடியும் வாழ்வாதார நெருக்கடியும் அதிகம் பாதித்த மக்களாக கிராமிய மக்களே உள்ளனர். அதே நேரம் தற்போதைய அரசாங்கம் கிராமங்களை மையப்படுத்தி கட்டிய அமைப்புக்கள் பலவீனப்பட்டனவே அன்றி அவை முற்றாக சீர்குலையவோ இல்லை. அவை வலுவான அமைப்புக்களாக வேகமாக மாற்றம் பெறும் நிலையிலேயே உள்ளன. அதற்கு ஈடாக செயல்படக் கூடியதாக போராட்டக் களம் இல்லாதுள்ளது. இது தற்போதை ஆட்சியாளர்களுக்கு நன்கு புலப்படும் நிலை காணப்படுகிறது.

மூன்றாவது அரசியல் கலப்பின்றி இயங்கும் அமைதியான போராட்டம் என்ற பெயருடன் காலிமுகத்திடல் போராட்டம் காணப்படுகிறது. அதே நேரம் சிறப்பான தலைமையில்லாத நிலை ஒன்றையும் கொண்டிருக்கின்றது. ஆனால் அத்தகைய சூழல் நிலையான வடிவத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விகளை உருவாக்குகின்றது. கட்சி அரசியலை தவிர்ப்பது தனித்துவமானது. ஆனால் இதற்கென ஓர் அரசியல் இலக்கு அவசியமானது. அது தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். அரசாங்கத தரப்பு குறிப்பிடுவது போல் எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போராட்டத்தை பின்புலத்தில் நின்று தூண்டுவதாகவும் அதற்கான ஆதாரங்கள் உண்டு என்பதையும் இலகுவில் அசட்டை செய்து விட்டுச் செல்ல முடியாது. அத்தகைய விடயங்கள் நிகழ்கிறது என்பதை விட அதுசார்ந்து வெளியாகும் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டி அவசியம் போராட்டத்தில் உள்ள தரப்புக்குரியது.
நான்காவது பிந்திய தகவலின் படி தொழில் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பற்றிய தீர்மானங்களை எடுத்துள்ளன. அது ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அதற்காக தொழிசங்கங்களது போராட்டமாக மாற்றமுறாது பார்த்துக் கொள்வதுடன் பொதுமக்களையும் தொழில் சங்கங்களையும் ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பும் இப் போராட்டத்திற்கு உரியமதாகும். எவ்வாறு அனைத்து மக்களது பிரசட்சினைகள் கருத்தில் கொள்ளப் படுகின்றதோ அதே அளவுக்கு தமிழ் இஸ்லாமிய மக்களது கோரிக்கைகள் அனுசரிக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல அதுவே இலங்கைத் தீவில் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படை என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகவுள்ளது.

எனவே காலிமுகத்திடல் போராட்டத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறையும் அதற்கு பதிலான போராட்டக்காரர் அணுகுமுறையும் ஒன்றாகப் பயணிப்பது தெளிவான நிலையைத் தராது. காலிமுகத்திடல் முன்போக்குத்தனமாக முழு இலங்கைத் தீவிலுள்ள மக்களையும் ஒன்றிணைத்து செயல்படுத்த வேண்டிய நிலைக்குள் உள்ளது அதனை நோக்கிய சிந்தனையும் மாற்றத்திற்கான அணுகுமுறையும் அவசியதமானது. இலங்கைத் தீவிலுள்ள தேசியங்களின் முரண்பாடுகளையும் அவற்றின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்வதே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக அமையும். இலங்கைத் தீவின் பொருளாதார வாய்ப்புக்கள் என்பது அதன் அரசியல் பொருளாதார வாய்ப்புக்களால் ஏற்படுத்தப் படவேண்டியதாகும். அதனையும் அதற்கான வாய்ப்புக்களையும் உருவாக்கும் பொறுப்பு போராட்டத் தரப்புக்குரியது. இலங்கைத் தமிழருக்கு காலிமுகத்திடல் கடந்த காலங்களில் அதிக அனுபவங்களைத் தந்ததுள்ளது என்பதை நினைவுகொள்வது தவிர்க்க முடியாததாக உள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)