ஈழத்தமிழருடைய அரசியல் புலம்பெயர் தமிழர்களின் பொராட்டத்தால் தக்க வைக்கப்படுகின்றத என்ற வாதம் மீண்டும் ஒருமுறை ஸ்கொட்லாந்தில் நிறுவப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதிக்கு எதிராக அணிதிரண்ட புலம்பெயர் மக்கள் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த அழிவுகளுக்காகவும் அதனால் விளைந்த விளைவுகளை முதன்மைப்படுத்தியதோடு இனப்படுகொலைக்கு எதிரான நீதியை கோரிய போராட்டமாக நகர்த்தியிருந்தார். இக்கட்டுரையும் ஸ்கொட்லாந்தின் தலைநகரான க்ளாஸ்கோவில் நிகழ்ந்த புலம்பெயர் ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் விளைவுகளையும் அதன் எதிர்காலம் பற்றியதாகவும் அமைய உள்ளது.
கோப்-26 என அழைக்கப்படும் சுற்றுச்சூழலுக்கான மநாட்டில் உலகத்தலைவர்களோடு இலங்கையின் ஜனாதிபதியும் கலந்து கொள்வதற்காக ஸ்கொட்லாந்துக்கு சென்றிருந்தார். அச்சயமயம் அவர் தங்கியிருந்த விடுதியை சுற்றி வளைத்த புலம்பெயர் ஈழத்தமிழர்கள் போராட்டத்தை நிகழ்த்தினார்கள். ஸ்கொட்லாந்த காவல்துறையினர் அவரை மாநாட்டுக்கு அழைத்து செல்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கியதோடு பலம்பெயர் ஈழத்தமிழர்களுடைய போராட்டம் ஸ்கொட்லாந்த ஊடகங்களாலும், அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுபடுத்தும் காட்சிகள் அடங்கிய வெளியீடுகள் ஸ்கொட்லாந்து தேசிய பத்திரிகையில் பிரதான இடம்பெற்றிருந்ததுடன், இனப்படுகொலைக்கான காட்சிகள் வீதிகளில் உள்ள தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்டன. க்ளாஸ்கொ போராட்டத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டதுடன் இலங்கை அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான கோசங்களை முன்வைத்தனர். போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவிதத்தில் போராட்டங்களை நிகழ்த்தியதாக க்ளாஸ்கோ நகரவாசி ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான புலம்பெயர்ந்தவர்களின் போராட்டங்கள் மாநாட்டை ஒழுங்குபடுத்திய தரப்பினருக்கோ அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் நிகழ்ந்துள்ளது. இவ்வகைப்போராட்டம் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் எவ்வாறாக அமையுமென்பதை நோக்குகின்ற அதேவேளை புலம்பெயர்ந்த போராட்டக்காரர்கள் மேற்கொண்ட வழிமுறை இன்னும் அதிக முக்கியத்துவத்தை கொண்டிருக்க வேண்டுமென்ற வாதம் எழுந்திருக்கிறது.
முதலாவது, க்ளாஸ்போவில் நிகழந்த புலம்பெயர் ஈழத்தமிழர்களின் போராட்டம் ஈழத்தமிழர்களின் அரசியலை சர்வதேசமயப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது. தொடர்ச்சியாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் ஈழத்தமிழர்கள் புலத்தில் நிகழும் நெருக்கடிகளுக்கும் அதனூடாக சர்வதேசத்தின் பங்களிப்போடு தீர்வினை எட்டுவதற்கான முனைப்பினை முதன்மைப்படுத்துகின்றதொரு சூழல் காணப்படுகின்றது. க்ளாஸ்கோவில் கூடிய பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் வெளிப்படுத்திய செய்திகளும் உணர்வுகளும் அதகையே வலியுறுத்துவதாக அமைந்தது. ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை தொடர்ந்து நிகழ்ந்து வரும் செயல்கள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனிக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்புக்கான தீர்வை நோக்கி செயற்படுவதில் கவனம் செலுத்துகிறார்கள். இவ்வகை போராட்டங்கள் அரசுக்கும் ஆட்சியாளருக்கும் எதிரானது என்பதை கடந்து தீர்வினை முன்வைக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் உலக நிறுவனங்களுக்கும் மறைமுகமாக உணர்த்தப்பட்டுள்ளது.
இரண்டாவது, புலம்பெயர்ந்த போராட்டக்காரர்கள் தெளிவானதொரு கோரிக்கையை முன்வைத்து இக்கோரிக்கையை முன்னெடுத்திருக்க வேண்டிய சூழல் அவசியமானதாக காணப்படுகின்றது. அத்தகைய அணுகுமுறையொன்று கையாளப்பட்டிருக்குமானால் ஈழத்தமிழர் சார்ந்து சர்வதேச தலைவர்கள் மத்தியில் கரிசணையும் விழிப்பும் தீர்வுக்கான முன்மொழிவுகளும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மாநாட்டிற்கு தலைமை தாங்குகின்ற நாட்டின் தலைமைக்கு அத்தகைய கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற தேவைப்பாடும் உணருகிறது. இதனடிப்படையில் புலம்பெயர் ஈழத்தமிழரது போராட்டங்களை மேற்கு நாடுகளின் சட்டதிட்டங்களையும் அரசியல் எண்ணங்களையும் நிராகரிக்காத வகையில் அதற்கு இசைவான எண்ணங்களும் அவசியமானதாகும். கடந்த செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி புலம்பெயர்ந்த அமைப்புக்களோடு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். க்ளாஸ்கோ போராட்டம் அத்தகைய கோரிக்கைகளுக்கு எதிராக அமைந்திருப்பதுடன், புலம்பெயர் அமைப்புக்களின் உள்ளார்ந்த எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இதனால் புலம்பெயர்ந்த அமைப்புக்களோடு இலங்கை அரசாங்கம் சுமூக தன்மையை ஏற்படுத்த முடியாத சூழலை க்ளாஸ்கோ போரட்டம் வெளிப்படுத்துவதென்பது இலங்கை ஆட்சியாளர்கள் மீதான அணுகுமுறைய மாற்றிக்கொள்கிள்ற மாதிரி சர்வதேச அழுத்தங்களை பிரயோகித்தல் அவசியமானதர்கும். இலங்கை ஆட்சியாளர் மீதான நிரகாரிப்பு என்பது, உலக நாடுகளுடனான உரையாடலுக்கான அடிப்படையை தோற்றுவிப்பதாக அமைய வேண்டும். அதற்கான உபாயங்களும் தந்திரோபாயங்களும் புலம்பெயர் அமைப்புக்கள் வகுத்திரந்தாலும் அதனை பலப்படுத்தவதில் முனைப்பான கவனத்தை கொள்ள வேண்டும்.
மூன்றாவது, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களது ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் அதிக உணர்ச்சிகளை முதன்மைப்படுத்தியதாக அவதானிக்க முடிகிறது. அதுசார்ந்து எத்தகைய விமர்சனம் எழுந்தாலும் போராட்டம் உணர்ச்சி பிரதிபலிப்புக்கூடாகவே நிகழ்த்தப்படுகின்றது என்பது தவிர்க்க முடியாது. இத்தகைய அடையாளப்போராட்டங்கள் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மற்றாத்தையோ முன்னோக்கிய நகர்வையோ சாத்தியப்படுத்தாது என்பது புலப்படுத்தப்பட வேண்டியதொரு அம்சமாகும். உணர்வுகளும் அறிவுபூர்வமான அணுகுமுறைகளும் ஒன்றிணைந்து கையாளப்படுகின்ற போது அது மேலும் வலுவான முடிவுகளுக்கு விட்டு செல்லம் எனவே அந்த சந்தர்ப்பத்தை புலம்பெயர் தரப்பில் இயங்கும் அனைத்து தரப்புக்களும் முதன்மைப்படுத்த வேண்டும். ஏற்கனவே அவ்வகைய உபாயத்துக்குள் பயணிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மேலும் அதனைப்பலப்படுத்துதல் அவசியமாகும்.
நான்காவது, க்ளாஸ்கோவில் நிகழ்ந்த போராட்டத்தை அடுத்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஜனாதிபதி நாடு திரும்பியதும் தமிழ்த்தேசிய கூட்டமைப்போடு பேச்சுவார்த்தை நடைபெறுமென தெரிவித்திருந்தார். இதனை அவதானிக்கும் போது தற்போதைய இலங்கை அரசாங்கத்தக்கு தமிழ் மக்களோடு பேச்சுவார்தைய ஆரம்பிக்க வேண்டிய தேவைப்பபாடு காணப்படுகிறது. அதனை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களோடு மேற்கொள்ள திட்டமிட்ட போது அது ஏற்படுத்திய எதிர்ப்புவாதம் மீளவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்போடு பேச வேண்டிய நகர்வை முதன்மைப்படுத்தி இருக்கின்றது. இத்தகைய பேச்சுவார்த்தையின் உள்நோக்கங்கள் கடந்த காலத்து அனுபவத்திலிருந்து நோக்கும் போது காலத்தை கையாள்வதற்கான பொறிமுறையாகவே தெரிகிறது. புலத்தை விட புலம்பெயர்ந்தவர்களே ஈழத்தமிழர்களின் அரசியலை முதன்மைப்படுத்த முயல்வதனால் அதனை நோக்கிய கையாடலே இலங்கை ஆட்சியாளர்கள் முன்வைக்க தயாராக உள்ளனர். க்ளாஸ்கோ போராட்டம் அத்தகைய பேச்சுவார்த்தைக்கான அழைப்பை முற்றாக நிராகரித்துள்ளது. எனவே மீளவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்போடு காலத்தை கையாள இலங்கை அரசாங்கம் முயலுகின்றதா என்ற கேள்வி நியாயமானதொன்றாக தெரிகிறது.
ஐந்தாவது, இலங்கை வெளிவிவகார அமைச்சின் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையின் முன்மொழிவு உலக தலைவர்களை கையாளும் உத்தியாக தெரிகின்றதா என்ற சந்தேகத்தையும் உருவாக்கி உள்ளது. காரணம், க்ளாஸ்கோ போராட்டம் உலகத்தமிழர்களிடம் இலங்கை ஆட்சியாளர்களின் அணுகுமுறை தொடர்பாக யதார்த்தத்தை ஒப்புவிப்பதாக அமைந்துள்ளது. அதனை எதிர்கொள்கின்ற நோக்கிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை வெளிவிவகார அமைச்சு முன்வைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷா ஆட்சியிலுருந்த போது பதினொரு கட்ட இரகசிய பேச்சுவார்த்தைகளை நிகழ்த்திய போதும் முடிவற்ற தீர்வுமற்ற உரையாடலாக அமைந்திருந்தது மீளவும் நினைவுபடுத்துவதாகவே வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு காணப்படுகிறது. எனவே இச்சந்தர்ப்பத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிபந்தனைகளை முன்வைத்து அதற்கான காலப்பகுதியை வரையறுத்து தீர்வை நோக்கிய உரையாடலை முன்வைக்க வேண்டுமென்பது தேவையான பார்வையாக காணப்படுகின்றது. கடந்த காலங்களில் போன்ற உரையாடலாக இல்லாது வெளிப்படைத்தன்மையும் காலவரையறையும் நிபந்தனைகளையும் உள்ளடக்கியதாக இருத்தல் அவசியமாகும்.
ஆறாவது, க்ளாஸ்கோ போராட்டத்திற்கு பதிலீட்டை அரசாங்க தரப்பு மேற்கொண்டது போல் தமிழ்த்தேசிய தரப்பும் புலம்பெயர் போராட்ட சக்திகளின் அணுகுமுறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் பதிலீட்டை முதன்மைப்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட விதத்தில் போராட்டத்தை நிகழ்த்தியது போன்று தமிழ்த்தேசிய சக்திகள் அதன் விளைவுகளை தமது எல்லைக்குட்பட் விதத்தில் பயன்படுத்த வேண்டும். இதனை விடுத்து ஒருவர் அல்லது இருவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு கட்டுப்படுவதென்பது தனிப்பட்ட நலன்களையும் கட்சி நலன்களையும் திருப்திப்படுத்துவதாகவே அமையும்.
எனவே, புலம்பெயர் ஈழத்தமிழர்களது க்ளாஸ்கோவில் நிகழ்ந்த போராட்டம் அதிக அரசியல் மாற்றங்களை புலத்தில் எற்படுத்தக்கூடியது. ஒருபுறம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தாலும் மறுபக்கத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வாதங்களுக்கும் அதன் தீவிரத்தன்மைக்குமான ஆபத்தான அரசியலை நோக்கி நகர்த்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தமா என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
