அரசியல் கட்டுரைகள்

உலக அரசியலில் புடின்-ட்ரம்ப் சந்திப்பு இராஜதந்திரத்திற்க்கும்-வியாபாரத்திற்க்குமான உரையாடலா?

உலக அரசியலின் போக்கு வேகமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசுகளும் பிராந்திய அரசுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு வரிவர்த்தகத்துக்கும் இராஜதந்திரத்திற்குமான போட்டியாக உலக அரசியல் நகர்ந்து செல்கிறது. இந்தியா மீதுதான அமெரிக்காவின் வரி கொள்கை இந்திய ரஷ்சிய உறவை மேலும் பலப்படுத்துவதோடு பிரிக்ஸ் கட்டமைப்பை புதிய திசைநோக்கி எடுத்துச் செல்ல தொடங்கி இருக்கிறது. சீனாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பிரிக்ஸ் அமைப்பானது உலக வர்த்தகத்திலும் பொருளாதார கொள்கைகளில் மட்டுமல்லாது அரசியல் இராஜேந்திர ரீதியிலும் வலுவான நிலையை நோக்கி எழுச்சி பெறத் தொடங்கி இருக்கிறது. இக்கட்டுரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கும் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பின் விளைவுகளைத் தேட முயலுகின்றது.

ரஷ்சிய-உக்ரையின் போர் முடிவுகளை நோக்கி அமெரிக்காவில் அணுகுமுறைகள் தொடர்ச்சியான தோல்விகளை எதிர்கொண்டு வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட காலக்கெடுவையும் பொருளாதாரத் தடைகளையும் எச்சரிக்கைகளையும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ரஷ்சியா மீது முன்வைத்த போதும் பிற நாடுகளை ரஷ்சியாவுக்கு எதிராக தூண்டிய போதும் உக்ரைன் போரை தடுத்து நிறுத்த முடியாதுள்ளது. இத்தகைய சூழலுக்குள் மீண்டும் ஒரு சந்திப்புக்கான வாய்ப்பை இரு நாட்டு தலைவர்களும் திட்டமிட்டு இருப்பதாகவும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீவ் விக்கோவ் (US special envoy Steve Witkoff) கரம்பிளின் விஜயமும் இரு தலைவர்களுக்குமான சந்திப்பு தீர்மானம் ஆகியுள்ளது. ஸ்ரீவ் விக்கோவ் ரஷ்சிய விஜயம் ட்ரம்ப்ன் 50 நாள் போர்நிறுத்தக் காலக் கெடுவிலேயே நிகழ்ந்துள்ளது. இதே நேரம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜிற் டோவால் (Ajit Doval) ரஷ்சியாவுக்கு விஜயம் மேற்கொண்டதுடன் புட்டினுடனான சந்திப்பின் பின் வெளிவரும் கருத்துக்களும் இந்திய ரஷ்சிய கூட்டுறவின் பலத்துடன் ரஷ்சிய ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க திட்டமிடுகிறார் என்பது தெரிகிறது. புட்டின் முன்னாள் உளவுத்துறையின் பணிப்பாளர் மட்டுமின்றி ரஷ்சியாவின் நீண்டகால ஆட்சியாளரும் சிறந்த இராஜதந்திரியாகவும் பார்க்கப்படுகின்றார். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒரு வர்த்தகராக அல்லது ஒரு வியாபாரியாக அரசியலைப் பார்க்கும் ஒருவர். இது இவ்விருவருக்கும் இடையிலான சந்திப்பாக பார்க்கப்படுகிறது. அதனை விரிவாக புரிந்து கொள்ளுதல் அவசியம்.

முதலாவது, அமெரிக்காவின் நோக்கம் அடிப்படையில் உக்ரையின் மீதான போரை ரஷ்சியா நிறுத்துவதற்கான சூழலை உருவாக்குவதாகும். ஆனால் அத்தகைய சூழலை அமெரிக்காவே நிராகரித்துவிட்டு அல்லது ரஷ்சியாவுக்கு எதிரான ஏகப்பட்ட தடைகளை விதித்துவிட்டு இத்தகைய சந்திப்பை வெற்றிகரமானதாக சாத்தியப்படுத்தலாமா என்பது பிரதான கேள்வி யாகும். ரஷ்சியாவைப் பொறுத்தவரைக்கும் மேற்குலக நாடுகள் விதித்த அனைத்து வகையான சவால்களையும் தாம் வெற்றிகண்டிருப்பதாகவும் தமது எல்லைக்குள் உரையாடல் அமைவதற்கான சூழல் இருப்பதாகவும் கருதுகிறது. ரஷ்சியாவை உக்ரைனினுடனான போரை ரஷ்சியாவே தீர்மானிக்க வேண்டும் எனவும் ஐரோப்பாவின் நேட்டோ விஸ்த்தரிப்பு என்பது அபாயமானது. அதனை முறியடிப்பதற்கான உத்திகள் தவிர்க்க முடியாது என்ற நிலையிலுமே பேச்சுக்களை தொடர திட்டமிடுகிறது. ஆனால் அமெரிக்கர்கள் அல்லது டொனால்ட் ட்ரம்ப் உக்ரையின் கனிமவளங்களை பங்கீடு செய்வதிலும் உபரியான வர்த்தகத்தை சாத்தியப்படுத்துவதும் அமெரிக்க-மேற்கு கூட்டாக இப்ராந்தியத்தை சூறையாட திட்டடமிழடுவதுமே பேச்சுவார்த்தையின் அடிப்படைகளாக தெரிகிறது. இதனால் பேச்சுவார்த்தையின் அரங்கம் அதிக மாற்றத்தை தரக்கூடியதாக அமைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறைகளுக்கு ஊடாக சமாதான உரையாடலை சாத்தியப்படுத்துவது என்பது வெற்றிகரமானதாக அமையுமா என்பது சந்தேகமானதாகவே தெரிகிறது. வேண்டுமாயின் அமெரிக்காவுக்கும் ரஷ்சியாவுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி குறைக்கலாம். இரு தலைவர்களும் உரையாடலை நீடிக்கலாம். விளைவுகள் பலவீனமானதாகவே அமைய வாய்ப்பு அதிகம் உண்டு.

இரண்டாவது, உக்ரையினைப் பொறுத்தவரை இப்பேச்சுவார்த்தையின் மூலம் ரஷ;சியாவை கட்டுப்படுத்துவது நோக்கமாக இருக்கின்றது. ஆனால் ரஷ்சியா பேச்சுவார்த்தையில் ஒரு பங்குதாரராகக் கூட கருத முடியாத அளவுக்கு உக்ரையினில் நடவடிக்கை அமைந்திருந்தது. நேட்டோவை கிழக்கு ஐரோப்பாவுக்குள் ஊடுருவச் செய்வதன் மூலம் பிராந்தியவளங்களை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு வலுவானதாக உள்ளது. அதனால் உக்ரையினை பெரிய விடயமாக கருத்தில் கொள்ளாது புடின் அமெரிக்க ஜனாதிபதியோடு உரையாடுவதை வேறொரு கோணத்தில் முதன்மைப்படுத்த முனைவது தெரிகிறது. அவரது இராஜதந்திர அணுகுமுறைகள் மிகத் தெளிவாகவே உக்ரையினை ஓரம்கட்டுவதில் வெற்றி கண்டிருக்கிறது. மறுபக்கத்தில் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் தனிமைப்படுத்துவதற்கு முயன்றுள்ளார். அமெரிக்காவுக்கும் ரஷ்சியாவுக்குமான உறவு ஐரோப்பா ஐரோப்பிய யூனியன் நேட்டோ அமைப்புகளை கடந்து முக்கியமானது என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளார். எனவே பேச்சுவார்த்தை உக்கிரனுடைய இருப்பை மேலும் பலவீனப்படுத்துவதோடு உக்ரையின் பலியிடுவதற்கான வாய்ப்புகள் இருதரப்பாலும் நிகழ்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. போரிலும் போர்க்களத்திலும் எதிர் கொள்ள முடியாத நெருக்கடிகளை உத்திகளாலும் இராஜதந்திரத்திலும் நகர்த்துகின்ற பொறிமுறையோடு இரு தரப்பினரது சந்திப்புக்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இப்பேச்சுவார்த்தை ரஷ;சியா மீதான அமெரிக்காவின் தடைகளை தகர்ப்பதோடு ரஷ்சியா அமெரிக்க ஒத்துழைப்பு சாத்தியமானதாக அமையப்போகின்றது. இதன் விளைவுகள் உக்கிரனுடைய இருப்பை அதிகம் பலவீனப்படுத்துவதாக அமையும். ரஷ;சியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிகழும் மறைமுக மோதல் என்பது வெளிப்படையான சில முடிவுகளை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவிருக்கிறது.

மூன்றாவது, இந்தியா மீது அமெரிக்காவின் வரி தொடர்பிலான அணுகுமுறைகள் இந்தியாவை அதிகம் பாதித்திருக்கிறது. அமெரிக்கா மீதான அதீதமான அதிர்ச்சியை இந்தியாவுக்கு ஏற்படுத்த தொடங்கியுள்ளது. ரஷ்சியாவுக்கும் இந்தியாவுக்கும்மான பலமான உறவை மேலும் பலப்படுத்தும் அதே நேரம் பிரிக்ஸ் அமைப்பை வலுவான வர்த்தகப் பொருளாதாரக் கூட்டாகவும் இராஜேந்திரரீதியான சக்தி மிக்க நிறுவனமாகவும் மாற்றுவதில் அமெரிக்காவின் அணுகுமுறை வெற்றிகரமானதாக மாறி வருகிறது. இதில் குழப்பத்தை ஏற்படுத்துவதும் அல்லது பிறிக்ஸ்சை பலவீனப்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் இரு தலைவர்களின் சந்திப்பு சாத்தியமாகும் என்பது பற்றி அமெரிக்க தரப்பினர் விவாதிக்கின்றனர். ஆனால் ரஷ்சிய ஜனாதிபதியைப் பொறுத்த வரை அத்தகைய வாய்ப்புக்களுக்கு ஒரு போதும் சந்தர்ப்பம் வழங்காத இராஜதந்திர உத்திகளை அதிகம் கொண்ட உலகத் தலைவர்களில் ஒருவராக காணப்படுகின்றனர். அதனால் அமெரிக்காவின் திட்டமிடல் பெரும் அளவுக்கு பிரிக்ஸ் கட்டமைப்பு மீதான நெருக்கடியை உள்ளாக்காது.

எனவே புட்டின் ட்ரம்ப் சந்திப்பு உலக அரசியலில் புதிய அணிகளையும் புதிய ஒழுங்கு முறையையும் கட்டமைக்க உதவலாமே தவிர உக்ரையின் போர் பொறுத்து முடிவுகளை ரஷ்சியாவே மேற்கொள்ள வாய்ப்பு அதிகமுள்ளது. அதே நேரம் அமெரிக்காவின் அணுகுமுறைகள் காலம் தாழ்த்தியதோடு தடைகளையும் நெருக்கடிகளையும் எச்சரிக்கைகளையும் வைத்துக்கொண்டு ரஷ்சியாவை அடிபணிய வைக்கலாம் என்று கருதுவது பலவீனமானதே. ரஷ்சியாவை மேலும் பலப்படுத்தும் நகர்வாகவே அமைய வாய்ப்புண்டு. பிரிக்ஸ் அமைப்பையும் அதன் அணியினரையும் வலுவான நட்புறவுக்குள் அமெரிக்காவின் அணுகுமுறை எடுத்துச் செல்லும். அரசியல் வியாபாரிக்கும் ஒரு இராஜதந்திரிக்குமான சந்திப்பாகவே இரு தலைவர்களின் சந்திப்பு அமையவிருக்கின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)