உலகம் முழுவதும் மக்கள் போராட்டங்கள் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அதிலும் ஐரோப்பிய நாடுகளில் ஆட்சிகளுக்கும் அவற்றின் கொள்கைகளுக்கும் எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். அவ்வாறே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட நிலத்தை ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. யூதர்கள் அரசமைத்த போது எழுச்சி பெற்ற மக்கள், மீளவும் தமது அரசுக்கு எதிராகவே நியாயம் கோரி வீதியில் இறங்கிப் போராடும் ஜனநாயக மரபுகளையும் யூதர்கள் கொண்டுள்ளனர். இது யூதர்களின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள புதிய அத்தியாயமாகவே தெரிகிறது. ஐரோப்பிய மக்களும் ஏனைய கண்டங்களில் உள்ள மக்களும் அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளுக்காக போராடும் போது யூதர்கள் நீதிப் பொறிமுறையினை பாதுகாப்பதற்காக போராடத் தொடங்கியுள்ளனர். இக்கட்டுரையும் யூதர்களின் எழுச்சிகரமான போராட்டத்தின் விளைவுகளைத் தேடுவதாக அமையவுள்ளது.
இஸ்ரேலிய அரசாங்கம் நீதித்துறையில் ஏற்படுத்தவுள்ள சீர்திருத்தத்துக்கு எதிராகவே மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரேலிய பிரதமர் தனது நலனுக்குஅமைவாக நீதித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முயல்வதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். புதிதாக அமைந்த அரசாங்கத்தின் நீதித்துறை அமைச்சர் உயர்நீதிமன்றத்திற்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தியதுடன் நீதித்துறையின் அதிகாரங்களை குறைப்பதற்கான சீர்திருத்தத்தினை அறிவித்துள்ளார். நீதித்துறையின் அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்கியிருப்பதுடன் பிரதமர் நெதன்யாகுவின் ஊழல் விடயங்களை விசாரிக்கும் நீதித்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் விதத்தில் இத்தகைய சீர்திருத்தங்கள் முன்வைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகளும் ஆர்ப்பாட்டக்காரரும் குற்றம்சாட்டிவருகின்றனர். டெல்அவிவை மையப்படுத்தி ஆரம்பமான மக்கள் போராட்டம் படிப்படியாக விஸ்தரிக்கப்படுவதுடன் வாரம் தோறும் போராட்டம் வலுவடைவதனையும் காணக்கூடியதாக உள்ளது. கடந்த ஜனவரி 7இல் இருபதாயிரம் பேருடன் தொடங்கிய போராட்டம் படிப்படியாக அதிகரித்து ஒரு இலட்சத்தை தாண்டியதுடன் ஏனைய நகரங்களையும் நோக்கி போராட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
யூதர்களிடையே ஆட்சித்துறைக்கு எதிரான போராட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவியேயே நிகழ்வதுண்டு. ஆனால் பலஸ்தீனர்களுக்கு எதிரான அணுகுமுறையில் ஆட்சித்துறை விடும் தவறுகளுக்கு எதிரான போராட்டங்கள் பெரியளவில் நிகழ்த்தப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவற்றைவிட யூத ஆட்சியாளரின் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் பெரியளவில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காரணம் அரசாங்கமும் யூத இன மக்களும் ஒன்றிணைந்தே அரசாங்கத்தையும் ஆட்சியையும் நிகழ்த்திவருவதுடன் அரசறிவியலின் நியமங்களை கடைப்பிடிக்கும் ஆட்சித்துறையாக இஸ்ரேலிய அரசாங்கங்கள் காணப்படுகின்றன. எதிர்க்கட்சி கூட ஆளும் கட்சிக்கு எதிரான தீர்மானங்களை எடுப்பதைவிட மக்களுக்கான நலனையும் பாதுகாப்பையுமே முதன்மையாக கருதுகின்றது. இஸ்ரேல் அராபியர்களிடமிருந்தும் பலஸ்தீனரிடமிருந்தும் பாதுகாக்கப்படுவதையே கவனத்தில் கொள்ளும் எதிர்க்கட்சிகளாக இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் காணப்படுகின்றன. அத்தகைய பண்புள்ள எதிர்க்கட்சிகள் தற்போது யூதர்கள் நிகழ்த்தும் போராட்டங்களில் போராட்டக்காரருடன் ஒன்றிணைந்து போராடுவதைக் காணமுடிகிறது.
உலகளாவிய ஆட்சித்துறைகளில் நீதித்துறை வலுவானது. சட்டத்துறை, நிறைவேற்றுத்துறையை அடுத்து தனித்துவமானதாக அடையாளப்படுத்தப்படுவது நீதித்துறையாகும். ஒருநாட்டின் நீதித்துறை தோல்வியடையுமாயின் ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி உரிமைகள் சுதந்திரம் சமத்துவம் கூடிய நியாயாதிக்கம் காணாமல் போகும். அது பொருளாதார சமூக மற்றும் அரசியல் நியமங்களை அழிவுக்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும். சுதந்திரமானதாக நீதித்துறை கட்டமைக்கப்படுவதுடன் பக்கச்சார்பற்றதாகவும் இயங்க வேண்டும். அரசியல் இலாபங்களுக்காக நீதித்துறை இயங்குவது ஒட்டுமொத்த ஆட்சியையும் நாட்டையும் பலவீனப்படுத்தும். அத்தகைய நீதியின் முக்கியத்துவத்தை மீளவும் சட்டத்துறையிடம் ஒப்படைப்பதென்பது ஆட்சியமைப்புக்கே முரணானதாகும். அதிகார வேறாக்கம் எனும் கோட்பாடானது ஆட்சித்துறையின் அலகுகளை தலையீடின்றி சமநிலையாக மேற்கொள்வதுடன், அதுவே ஆட்சித்துறையின் சிறப்புக்கும் சுதந்திரமான செயல்பாட்டுக்கும் வழிவகுக்கும். அதுவே அரசறியவியல் கோட்பாடுகளின் ஆட்சித்துறை சார்ந்த நியமமாக கருதப்படுகிறது. முடியாட்சி முறைமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடிய ஐரோப்பியர்கள் மீளமைத்த ஆட்சியானது சட்டவலுவுடையதாகவும் நீதியின் பாற்பட்டதாகவும் காணப்பட அதிகார வேறாக்கமே காரணமாக அமைந்திருந்தது. இத்தகைய கோட்பாட்டு நியதியை யூதர்கள் ஏற்படுத்துவதற்கே வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். இஸ்ரேலிய ஆட்சித்துறையானது எழுதப்பட்ட விதிகளை விட எழுதப்படாத ஆனால் மரபார்ந்த விடயங்களை கொண்டுள்ள அரசியலமைப்புடைய நாடாகவுள்ளது. இஸ்ரேல் ஒரு நாடாக மட்டுமல்ல அது ஒரு தேசிய இனத்தைக் கொண்ட தேசிய அரசாகவும் காணப்படுகிறது. பொருளாதார அர்த்தத்திலும் விஞ்ஞான-தொழில்நுட்பத்திலும் தேசமாக இயங்க முனைப்புக் கொண்டுள்ள அரசாகவுள்ளது. மொத்தத்தில் இஸ்ரேல் உலகளாவிய ரீதியில் வலுவான தேசிய அரசாகவுள்ளது. ஆனால் அராபியர்களுக்கு எதிரான அதன் எழுச்சியான ஆட்சித்துறையில் இராணுவ இயந்திரத்திற்கே முதன்மை என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அத்தகைய நியதிக்குள்ளால் உருவான இஸ்ரேல் ஆட்சித்துறையால் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் அவர்களது நலனுக்கானதாகவே உள்ளது. மாறாக ஆட்சித்துறையின் நலனுக்கானதாக அமையவில்லை என்பதை மக்களும் எதிர்க்கட்சியினரும் உணரத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவுகள் இஸ்ரேலிய ஆட்சித்துறையின் புதிய அத்தியாயத்தை தோற்றுவிக்கக் கூடியதாக அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனை புரிந்து கொள்வது அவசியமானது.
ஒன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ ைபடனது கருத்திற்கு எதிர்வினையாற்றியுள்ள இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்ட கருத்து கவனத்திற்குரியதாகும். அதாவது ஜோ பைடன் போராட்டக்காரருடன் இஸ்ரேலிய அரசாங்கம் சமரசத்திற்கு செல்ல வேண்டும் என குறிப்பிட்ட கருத்திற்கு இஸ்ரேல் இறைமையுடைய அரசு வேறு எந்த நாட்டினதும் எண்ணங்களை திணிக்க முடியாது எனவும் சுயமாக இஸ்ரேல் முடிபுகளை எடுக்குமெனவும் நெதன்யாகு தெரிவித்திருந்தார். இதே நேரம் 75 வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளதுடன் பாஸ்கா விடுமுறையையும் கருத்தில் கொண்டும் நெதன்யாகு நீதித்துறை மீதான சீர்திருத்தத்தினை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார். ஆனால் இத்தகைய அறிவிப்பினை எதிர்க்கட்சிகள் எச்சரிக்கையுடன் ஏற்றுக்ெகாள்ளும் அதேவேளை இவ்விடயம் கைவிடப்படும் வரை போராட்டம் தொடருமென போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அமைதியான போராட்டத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளே போராட்டத்தை தீவிரப்படுத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலட்ன் பதவி நீக்கம் அதிக குழப்பத்தை ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக எழுச்சி பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினரும் புலனாய்வுத்துறையினரும் அரசாங்கத்தை அதிகம் நெருக்கடிக்கு தள்ளியுள்ளனர். ஈரான், உக்ரையின் நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேலுக்கு தற்போதைய போராட்டங்கள் ஆபத்தானதாக அமையுமென முன்னாள் புலனாய்வுத் துறையினர் மற்றும் இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர். நெதன்யாகுவின் பின்வாங்கல் தற்காலிகமானதாகவே தெரிகிறது. அவரது தீவிர மதவாத வலதுசாரியினரது ஒத்துழைப்பு மட்டுமல்லாது பிரதமர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் நீதித்துறை மீதான பாராளுமன்றத்தின் கட்டுப்பாடுகளாகவே சீர்திருத்தம் நோக்கப்படுகிறது. சுதந்திர தினக்கொண்டாட்டத்திற்கு பின்னர் பாராளுமன்றம் கூடும் போது போராட்டக்காரருடன் பேசப்போவதாகவும் நெதன்யாகு அறிவித்துள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
இரண்டு, அராபியர் மத்தியில் இஸ்ரேலியப் போராட்டங்களை ஆதரித்தாலும் அத்தகைய போராட்டத்தை திசைதிருப்பும் வழிமுறைகளை அவதானமாக கையாள முனைவதாகவே தெரிகிறது. ஈரான்-, சவூதி அரேபியா -கட்டார்-, துருக்கி-, சிரியா ஆகிய இஸ்லாமிய நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகள், இஸ்ரேலியரை அதிகம் குழப்பத்திற்கு தள்ளியுள்ளது. அத்தகைய ஒத்துழைப்பு அமெரிக்க நலன்களையும் பாதித்துள்ளதாகவே தெரிகிறது. அதனால் தீவிர அணுகுமுறையுடைய அரசாங்கத்தைவிட மிதமான கொள்கையுடைய அரசாங்கத்தின் அவசியப்பாடு உணரப்படுகிறது. ஏற்கனவே ஓரே ஆண்டில் பல தேர்தல்களைச் சந்தித்துள்ள யூதர்கள் மீண்டும் ஒரு ஆட்சிமாற்றத்தை நோக்கி நகர்வதாகவே தெரிகிறது. எனவே இத்தகைய போராட்டங்களின் நோக்கம் புதிய ஆட்சி ஒன்றுக்கான அடிப்படையைத் தோற்றுவிப்பதாகவே தெரிகிறது. உலகளாவிய மாற்றத்திற்கு அமைவாக இஸ்ரேலிய ஆட்சித்துறையை மாற்றியமைப்பதென்பது அதன் ஜனநாயகம் மீதான பலப்படுத்தலாக அமையாது. மாறாக நெருக்கடி நிலையை தற்காத்துக் கொள்வதற்கான உத்தியாகவே அமையும். அதனை நோக்கியே இஸ்ரேலிய மக்களது போராட்டம் அமைந்துள்ளது.
எனவே, மேற்காசியாவிலும் உலக அரசியல் ஒழுங்கிலும் ஏற்பட்டுவரும் மாற்றங்களை கையாளும் உத்தியாகவே தற்போதைய போராட்டங்களது நகர்வுகள் அமைந்துள்ளன. மக்களின் எழுச்சிகள் நீதித்துறையின் பாற்பட்டதாக அமைந்தாலும் அதனை வழிநடத்தும் தரப்புக்கள் புதிய தேர்தலுக்குள் நாட்டை கொண்டு செல்வதுடன் நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான செய்முறையாகவே அமைய அதிக வாய்ப்புள்ளது. இந்த அரசாங்கம் மீது எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல மக்களும் நம்பிக்கை இழந்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் தலைமுறையினர் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த அரசாங்கத்தை அகற்றுவற்கான அணுகுமுறையாக போராட்டத்தின் உத்திகள் அமைந்துள்ளன.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
