January 19, 2026
அரசியல் கட்டுரைகள்

தேர்தல் கூட்டுக்கான அழைப்பே தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கான விண்ணப்பம்?

இலங்கைதீவின் உள்நாட்டு அரசியல் அடுத்த கட்ட தேர்தல் முகாந்திரங்களை நோக்கி நகர்கிறது. எதிர்க்கட்சித் தலைவரின் இந்திய பயணம் அதற்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி உள்ளது. வடக்கு கிழக்கிலும் தமிழ் கட்சிகள் தேர்தலுக்கான கூட்டுக்களை தயார் செய்கின்ற முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழரசு கட்சியின் செயல்குழுவின் (06.11.2025) உரையாடல்கள் அதனையே வெளிப்படுத்துகிறது. தமிழரசுக் கட்சி மீளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இயங்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இக்கட்டுரையும் தமிழ் தேசியக் கட்சிகளின் அரசியல் போக்கில் காணப்படும் மாற்றங்களை தேடுவதாக உள்ளது.

தமிழரசுக் கட்சியின் செயல்குழுக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக இயங்குவதற்கு விருப்பம் தெரிவித்து ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு அறிவித்துள்ளது. அதே நேரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக ஊடக சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும், பதில் செயலாளரும் அறிவித்துள்ளனர். தமிழ் தேசிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது தமிழரசுக் கட்சி பலமான கூட்டணியை அமைக்க திட்டமிடுவதாகவும் தமிழ் மக்கள் எதிர்பார்த்த ஒற்றுமைக்கான எண்ணத்தை கொண்டிருப்பதாகவும் அவதானங்கள் வெளிவருகிறது. ஆதன் உண்மைத் தன்மை எதுவென்பதை விளங்கிக் கொள்வது தேவையான ஒன்றாகவுள்ளது.

முதலாவது விடுதலைப்புலிகளின் காலத்தில் கட்டமைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யாமலும் கட்சி ரீதியாக எழுந்த போட்டி தன்மைகளின் பிரகாரமும் 2009 க்கு பின்னர் நெருக்கடிக்கு உள்ளாகி படிப்படியாக காணாமல் போக வைக்கப்பட்டது. அதற்கான அடிப்படையை தமிழ் தேசியத்தை அதிகம் உச்சரிக்கும் தமிழரசு கட்சியே ஏற்படுத்தியது என ஏனைய கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். அதன் பிரகாரமே தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதாக பொது வெளியில் குறிப்பிட்டிருந்தனர். அது மட்டுமின்றி தமிழரசுக் கட்சிக்குள் இயங்கிய பெருமளவான அடுத்த கட்ட தலைமைகள் என்று கருதப்பட்டவர்களும் அக்கட்சியில் இருந்து ஒழுக்காற்று நடவடிக்கையின் காரணமாக வெளியேற்றப்பட்டனர். இத்தகைய வெளியேற்றங்களுக்குப் பின்னால் நிகழ்ந்த தேர்தல்களில் தமிழரசுக்கட்சி பாரிய பின்னடைவை வடமாகாணத்தில் எதிர்கொண்டது. கிழக்கு மாகாணத்தின் ஆசனங்களை வைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சி தனது மக்கள் ஆதரவை அளவீடு செய்ய முயற்சிக்கிறது. ஆனாலும் தமிழரசின் மக்கள் ஆதரவு பாரிய வீழ்ச்சியை எதிர் கொண்டுள்ளது. இதன் விளைவாகவே மீளவும் நிகழவிருக்கின்ற தேர்தல்களை இலக்காகக் கொண்டு மீளவும் தமிழ்த் தேசியக் கூட்டமைமைப்பாக இயங்க திட்டமிடுகிறது. ஆனாலும் அத்தகைய அழைப்பில் தெளிவான வெளிப்பாடு எதனையும் கண்டு கொள்ள முடியாதுள்ளது. தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு எதுவென்பது ஊடக சந்திப்பில் தெரியப்படுத்ப்பட்டதாக காணப்படவில்லை. தமிழ் தேசியக் கட்சிகள் ஒற்றுமைப்படுவது தமிழ் மக்களின் அரசியலில் ஆரோக்கியமான விடயமாகவே விளங்கும் ஆனால் ஒற்றுமை என்பதை ஊடகங்கள் முன் காட்டிவிட்டு நடைமுறையில் எத்தகைய உபாயமும் இன்றி தமிழ் மக்களை கையாளத்திட்டமிடுவதாகவே தெரிகிறது. காரணம் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு எதுவென்பதை தெரியப்படுத்தாது எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைவது என்பது பிரதான கேள்வியாகும்.
இவ்வகை அணுகுமுறையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் முன்வைத்து தமிழரசுக் கட்சியுடன் உரையாடியிருந்தது. அதன் பிரகாரம் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளோடும் விவாதித்து இறுதியில் தமிழ் தேசிய பேரவை என்ற கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியிருந்தது. அதனோடு சங்குக் கூட்டணியும் இணைந்து கொள்வதற்கான உரையாடல்கள் மேற்கொண்டிருந்தது. ஆனாலும் 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் சங்குக் கூட்டணியின் அண்மைக்காலப் போக்குகள் இரு தரப்புக்கும் இடையில் உறவினைப் பலவீனப்படுத்தியது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முயற்சியை தட்டிக்களித்துவிட்டு மீளவும் தமிழரசு கட்சி அதே பாணியில் செயல்படுவது பற்றிய உத்தியை வகுக்கின்றது. இவை அனைத்தும் அரசியல் கட்சிகள் தேர்தலை இலக்காகக் கொண்டு உத்திகளை வகுக்கின்றனவே அன்றி தமிழ் மக்களது நெருக்கடியை எதிர்கொள்வதற்கானதாக தெரியவில்லை.

இரண்டாவது தமிழ் தேசிய மக்கள் முன்னணி பலமான கூட்டொன்றைக் கட்டமைப்பதற்கு அதிக விட்டுக் கொடுப்புகளை செய்ய முயற்சித்து தமிழ் தேசிய பேரவையை உருவாக்கி இருக்கின்றது. ஆனால் தமிழரசுக் கட்சியின் அழைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அணிகளுக்கு இடையிலான பலவீனத்தை ஏற்படுத்தக் கூடியதாக தெரிகிறது. வலுவான அரசியல் இருப்பைக் கொண்ட ஆரோக்கியமான தமிழ் மக்களது அரசியலை சிதைத்து விட்டு மீளவும் அவ்வாறே அணுகுவது சாத்தியமானதா என்பது சந்தேகத்திற்குரியதே. அன்றி தமிழ் மக்களின் அரசியலை நோக்கிய கொள்கைமாற்றம் எதனையும் கொண்டிருக்கவில்லை. தேர்தலில் தேசிய மக்கள் முன்னணியையும் ஜே.வி.பி.யையும் எதிர் கொள்வதே இலக்காகத் தெரிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பை அதிகம் முதன்மைப்படுத்தாத தமிழரசுக் கட்சி இழந்து போன மக்கள் ஆதரவை திரும்ப பெறுவதற்கு திட்டமிடுகிறது.

மூன்றாவது தமிழரசு கட்சியின் அழைப்பு புதிய மாற்றம் எதனையும் தமிழ் மக்களின் அரசியலில் கொண்டதாக தெரியவில்லை. குறிப்பாக வடக்கு கிழக்கு நிலவும் பாரிய நெருக்கடிகளுக்கு தீர்வுகளை நோக்கி காணப்பட வேண்டும். போதைப் பொருள் பாவனை வடக்கில் பாரிய சமூக சிதைவுகளையும் வாழ்க்கை முறையின் கட்டமைப்புகளையும் பண்பாட்டு மரபுகளையும் முற்றாகவே சிதைத்துள்ளது. தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாக அதன் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் போதைப்பொருள் ஒழிப்புக்கான திட்டமிடலை முன்வைக்கின்ற போது அதற்கான அணுகுமுறைகள் எதனையும் தமிழ் தேசியக் கட்சிகள் முன்வைக்கவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் முன்வைத்த உரை தவிர போதைப் பொருள் பாவனைக்கு எதிராக வடக்கு கிழக்கு எதனையும் தமிழ் கட்சிகள் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக வடக்கில் ஓர் அணி திரட்ட ஒன்றை தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் மேற்கொண்டுடிருக்க வேண்டிய தேவைப்பாடு இந்த காலப்பகுதியில் எழுந்துள்ளது. இப்பிரதேசத்தில் அழிவுக்கு உள்ளாகின்ற இளம் தலைமுறை பாதுகாப்பதற்கான உத்திகளை வகுத்திருக்க வேண்டும். கடந்த காலங்களைப் போன்று தமிழ் மக்களின் வாழ்வியல் நெருக்கடியில் எத்தகைய அக்கறையுமின்றி தமிழ் தேசியக் கட்சிகள் செயல்படுகின்றன. தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கு முழுவதும் நிகழ்த்தும் எல்லா வகையான ஆக்கிரமிப்புகளையும் அங்கீகரித்துக் கொண்டு தமிழ் மக்களை அரவணைக்க முயற்சிக்கின்றது. இதனை செயல்பூர்வமாக எதிர்ப்பதற்கு எந்தக் கட்சியும் தயாரில்லாத நிலை காணப்படுகிறது. ஐக்கியம் என்பது கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் கட்சிகளுக்கும் அன்றி தமிழ் மக்களுக்கானது அல்ல. தமிழ் மக்கள் ஐக்கியமாகவே உள்ளனர்.

எனவே தமிழரசுக் கட்சி கூட்டமைப்பாக இயங்குவதற்கு முன்வைத்திருக்கும் உத்தி பலமான மாற்றத்தை தரக்கூடியதாக தெரியவில்லை. தமிழ் மக்கள் அதனை விளங்கிக் கொள்ளாதவர்களும் இல்லை. ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியலில் காணப்படும் வறுமையின் மத்தியில் தேர்தல் கூட்டுக்களை விடுத்து தேசியக் கூட்டுக்களை கட்டமைக்க வேண்டும். தேர்தல் கூட்டுக்களும், போலியான கூட்டணிகளும் தமிழ் மக்களது அரசியலில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: யாழ் தினக்குரல்)