March 17, 2026
அரசியல் கட்டுரைகள்

இந்தோ-பசுபிக் கூட்டு உபாயத்திற்குள் இலங்கைத் தீவை மையப்படுத்தி அமெரிக்க நகர்கிறதா?

இலங்கை தீவின் அரசியல் அண்மைய காலப்பகுதி அதிக குழப்பத்தை தருவதாக ஊடகங்களும் ஆய்வுகளும் வெளிப்படுத்துகின்ற செய்திகளாக உள்ளன. குறிப்பாக டித்வா புயலுக்கு பின்னர் இலங்கையித் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார உதவிகளும் ஒத்துழைப்புக்களும் பாரியளவில் வெளி வல்லரசுகளின் பிரசன்னத்தை அதிகப்படுத்தியுள்ளது. இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் மத்தியில் இருப்பதனால் அதிக முக்கியத்துவத்தை வல்லரசுகள் கொண்டிருப்பது இத்தகைய போட்டி ஒன்றுக்கான காரணமாக கொள்ளப்படுகிறது. கடந்த வருடத்தின் இறுதியில் (04-06.12.2025) ரஷ்சிய ஜனாதிபதி புட்டினது இந்திய வருகையுடன் அத்தகைய போட்டி இந்து சமுத்திரத்தின் தீவிரம் அடைந்ததாக ஆய்வாரள்கள் அதிகம் முதன்மைப்படுத்துகின்றனர். இக் கட்டுரையும் வல்லரசுகளுக்கிடையில் நிலவும் போட்டிச் சூழலை புரிந்து கொள்ளும் வகையில் அமைய உள்ளது.

இதே பகுதியில் கடந்த வாரம் வெனிசுவெலா மீதான அமெரிக்க நகர்வுகளை ஜே.வி.பி. உம் அதன் அரசாங்கமான என.பி.பி.உம் கண்டனம் செய்திருந்தமை பற்றி உரையாடப்பட்டிருந்தது. அதன் நிழ்ச்சியாகவே இப்பகுதி அமைய உள்ளது. காரணம் ஜே.வி.பி. ஏன் அமெரிக்கா மீது கண்டனங்களை முன்வைத்தது என்பது தொடர்பில் அதிக குழப்பங்கள் உண்டு. அத்தகைய குழப்பத்தை புரிந்து கொள்ளும் விதத்தில் ஆழமான ஒரு அரசியல் டித்வா புயலுக்கு பின்னர் இலங்கைத் தீவை மையப்படுத்தி நகர்ந்திருக்கிறது. அத்தகைய நகர்வே ஜே.வி.பி.இனதும் அரசாங்கத்தினதும் கண்டனத்துக்கு பின்னால் இருந்த வலுவான காரணமாகும். அதனை ஆழமாக நோக்குவது அவசியமானது.

முதலாவது டித்வா புயலுக்கு பின்னர் அமெரிக்கா தனது பொருளாதார உதவிகளை நேரடியாக இலங்கைக்கு வழங்கியிருந்தது. போர் விமானங்கள் மூலம் அத்தகைய உதவிகளை தனது படைகளை நேரடியாக இலங்கை தீவிற்குள் இறக்கி அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அவ்வாறே இந்தியாவும் நகர்ந்திருந்தது. இலங்கைத் தீவில் அமெரிக்காவின் நகர்வைப் பார்க்கின்றபோது அதே பாணியில் வெனிசுவெலாவில் அமெரிக்கா படை நகரத்தியதாக ஆய்வாளர்கள் அதிகம் உரையாடுகின்றனர். அதையும் கடந்து வெனுசுவெலாவில் அமெரிக்காவால் தரையிறக்கப்பட்ட டெல்ரா (Delta) படை அனுப்பிவிட்டு இந்தியாவின் டெல்டா கம்பெனி, 11.10.1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மருத்துவபீட மைதானத்தில் தனது படைகளை இறக்கி விடுதலைப் புலிகளின் தலைமையை கைது செய்வதற்கு திட்டமிட்டதென்றும் அத்தகைய போரியல் ஆய்வாளர்கள் உரையாடுகின்றனர். இத்தகைய தகவல்களுக்கு அப்பால் அமெரிக்காவின் நேரடியான இராணுவ பிரசன்னத்தை இலங்கை தீவில் சுனாமியின் போதும் நிகழ்த்தியதாகவும் ஆனால் அது கொழும்பை மையப்படுத்திய கடற்படை நடவடிக்கை என்றும் தற்போது நிகழ்ந்தது பலாலி விமான நிலையத்தையும் இலங்கைத்தீவின் இதர பகுதிகளில் உள்ள விமான நிலையங்களையும் மையப்படுத்திய விமானப்படை நடவடிக்கை என்பதும் இதில் அதிகம் கவனம் கொள்ள வேண்டிய விடயமென விவாதிக்கின்றனர். ஆனால் இவ்வாறு அமெரிக்கா விமானங்களை நேரடியாக தரையிறக்கி மேற்கொண்ட நகர்வுகள்எதனையும் இந்திய தரப்பு மௌனமாக கடந்து சென்றது என்பது முக்கியத்துவம் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாக தெரிகிறது. சீனாவின் போர்க் கப்பல்கள் இலங்கை கடல் பரப்பு நுழைகின்றபோது இந்திய தரப்பு அதிகம் எதிர்ப்புணர்வுகளையும் தூதரகம் மட்டத்திலான உரையாடல்களையும் தீவிர படுத்துகின்ற போது அமெரிக்க நகர்வை மௌனமாகக் கடந்து செல்வதன் நோக்கம் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டியது அவசியமானது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான வரி தொடர்பான மோதல்கள் மூலோபாய ரீதியான மோதல்கள் வேறுபட்டதாகவே தெரிகிறது. இந்தோ-பசுபிக் உபாயத்தில் அமெரிக்கா இந்தியா ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் மூலோபாய ரீதியில் சீனாவுக்கு எதிரான ஒரு களத்தை இந்து சமுத்திரத்திலும் பசுபிக் சமுத்திரத்திலும் கட்டமைத்திருக்கின்றன. இந்தோ-பசுபிக் உபாயம் என்பதே சீனாவின் விஸ்தரிப்புக்கு எதிரானதே. இந்து சமுத்திரம் சார்ந்து அமெரிக்கா இலங்கைத் தீவில் தனது விமானங்களை தரையிறக்கம் செய்கிற போது இந்தியாவின் அணுகுமுறை மூலோபாய ரீதியில் ஒன்றானதாகவே தெரிகிறது. வரி தொடர்பிலும் வர்த்தகம் தொடர்பிலும் மோதிக் கொள்கின்ற இரு தரப்பும் மூலோபாய ரீதியான இராணுவ நகர்வுகளில் மௌனத்தோடு கடப்பதை கண்டுகொள்ள முடிகிறது. இந்தியா உக்ரையின் மீதான ரஷ்சியாவின் இராணுவ நடவடிக்கையை எவ்வாறு மௌனமாகவும் போருக்கு எதிரானதாகவும் ரஷ்சியாவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு காட்டாமலும் நகர்ந்ததோ அவ்வாறு வெனிசுவெலா மீதான அமெரிக்கா நடவடிக்கையும் அமெரிக்காவுக்கும் அமெரிக்கா ஜனாதிபதிக்கும் எதிரானதாக கண்டன அறிக்கையை முன்வைக்காது கடந்து சென்றுள்ளது. அவ்வாறே காஸா மீதான தாக்குதலையும் இந்தியா கண்டனத்திற்கு உட்படுத்தாது கடந்து சென்றுள்ளது. எனவே தான் இலங்கையின் அமெரிக்க விமானங்களில் தரையிறக்கமும் ஜப்பானில் அந்தமான் நிக்கோபார் தீவிலுள்ள இந்திரா முனையில் கட்டப்படும் விமானத்தளத்தையும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நிறுவிவரும் விமான தளத்தையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இங்கே இந்தியா சீனாவை நேரடியாக எதிர் கொள்ள முடியாத சூழ்நிலையில் மூலோபாய ரீதியில் இந்தோ-பசுபிக் உபாயம் அமெரிக்காவின் ஒத்துழைப்போடு இப் பிராந்தியத்தில் நகருகின்றது. இந்தியாவை அணுகாமல் அதன் அனுசரணை இல்லாமல் இலங்கை தீவில் இந்து சமுத்திரத்திலோ அமெரிக்காவின் நகர்வுகள் சாத்தியப்படுவது மூலோபாய ரீதியில் கடினமானது. இங்கு சீனாவின் வெளியுற அமைச்சர் இலங்கை தீவுக்கு வர இருந்ததும் அவரது விஜயத்தை முடித்துக் கொண்டு வேகமாக சீன நகர்ந்ததும் அதீதமாக உள்ளார்ந்த ரீதியில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அதிக படிப்பினைகளைக் கொண்டிருக்கின்றது. 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் (14) தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமெரிக்காவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை (U.S.-Sri Lanka State Partnership Program -SPP) கைச்சாத்திட்டுள்ளது. அத்தகைய உடன்பாடு இராணுவ ரீதியில் இரு நாட்டுக்குமான ஒத்துழைப்பினை பலப்படுத்தக் கூடியது. அதன் அடிப்படையிலேயே இந்திய அமெரிக்க அரசியலை அளவீடு செய்வது அவசியமானது. சீனாவின் இலங்கை தீவுக்கான பிரசன்னத்தை முடிவுக்கு கொண்டு வருவதும் வெனுசுவெலாவில் சீனா மேற்கொண்டிருந்த பெற்றோலியம் தொடர்பான உடன்படிக்கைகளை நோக்குவதும் கிரீன்லாந்து மற்றும் அந்தாட்டிக்காவின் பிராந்தியத்தில் சீனாவின் நகர்வுகளை எதிர்கொள்வதும் ஈரானில் சீனாவுக்கு இருக்கும் நெருக்கமான உறவை எதிர்கொள்வதும் சர்வதேச அரசியல் பரப்பில் சமமானவையாக தெரிகின்றது. சீனாவினால் ஆபிரிக்காவில் மேற்கொள்ளப்படும் பட்டி மற்றும் பாதை முன்முயற்சிகளும் அதில் எண்ணெய் வயல்களை கொள்ளளவு செய்துள்ளமையும் அமெரிக்காவின் எதிர்கால நகர்வுகளுக்கானதாகவே தெரிகிறது. அமெரிக்காவின் இத்தகைய நீட்ச்சி ஈரானின் தாக்குதல் வெற்றியிலேயே தங்கியுள்ளது. எனவே அமெரிக்காவின் நகர்வு என்பது அத்தகைய போட்டியாளர்களை அல்லது அமெரிக்காவுக்கு சமமான ஏகாதிபத்திய சக்திகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கவும் அத்தரப்புக்களை போட்டியிலிருந்து அகற்றுவதற்கான அணுகுமுறையாகவே தெரிகின்றது. வரி அதிகரிப்பு தொடக்கம் ஈரான் மீதான தாக்குதலுக்கான முனைப்பு வரை தெளிவான அரசியல் பொருளாதார உரையாடலாக நகர்வாதாகவே தெரிகின்றது.

முழுமையாக பார்த்தால் இலங்கை தீவின் சீனாவின் நடவடிக்கையை நெருக்கடிக்கு உள்ளாக்குவது இதன் நோக்கமாக தெரிகின்றது. ஆனாலும் சீனா ஆழமான செல்வாக்கை அல்லது தலையீட்டை இலங்கை தீவில் கொண்டிருக்கின்றது. இலங்கை தீவின் ஆட்சியும் சீன சார்பானதாக உள்ளது. அதனால் இலகுவில் சீனவை வெளியேற்றுவது அல்லது கையாளுவது சாத்தியமானதாக தென்படவில்லை. அதாவது கொடைகளாலும் நட்புறவாலும் கையாளுவதை விட மென்மையான இராணுவ நகர்வே பொருத்தமானதாக தெரிகின்றது என்பதை அமெரிக்க நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப்ன் அண்மைக்கால நகர்வுகள் அனைத்துமே சீனா மீதான அல்லது அமெரிக்காவுக்கு எதிராக எழுச்சி பெறும் நாடுகள் மீதான பதில் நடவடிக்கையாகவே தென்படுகின்றது. இதுவே ஜே.வி.பி. அரசாங்கத்தின் கண்டணங்களுக்கு பின்னாலுள்ள சந்தேகமும் எச்சரிக்கையுமாகும். அதில் இந்தியாவின் நகர்வும் ஏற்கனவே உள்ள அனுபமும் கவனத்தில் கொதள்ளப்பட வேண்டியதாகவே தெரிகிறது. ஈரான் போருக்கு இலங்கைத் தீவு ஏதாவது ஒருவகையில் அமெரிக்க அணிக்கு உதவ வாய்ப்புள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)