ஈழத்தமிழருக்கும் அமெரிக்காவிற்குமான உறவு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர்களின் விஜயத்தோடு அதிகம் முக்கியத்துவம் பெறுகின்ற ஒன்றாக காணப்படுகிறது. ஈழத்தமிழரின் அரசியல் இருப்பில் அதிக திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய பிராந்திய அரசான இந்தியாவும் சர்வதேச வல்லரசான அமெரிக்காவும் காணப்படுகின்ற சூழல் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கமான உறவு ஈழத்தமிழருக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. இத்தகைய நிலையிலே தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழு அமெரிக்க விஜயம் நிகழ்ந்துள்ளது. தற்போது அமெரிக்காவில் இருக்கும் இக்குழு கனேடிய அரசாங்கத்தையும் பிரித்தானிய ஆட்சியாளர்களினையும் சந்திக்க இருப்பதாகவும் இந்நிபுணர் குழுவோடு இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் கலந்து கொள்ள இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இக்கட்டுரையும் அமெரிக்க விஜயத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழு உரையாடி வரும் விடயங்களையும் அதன் அரசியல் பெறுமானங்களை தேடுவதாகவும் உள்ளது.
அமெரிக்கா சென்றிருக்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்டநிபுணர் குழுவும் அதனோடு இணைந்திருக்கும் இலங்கை அரசின் கறுப்பு பட்டியலுக்கு உட்பட்ட உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஏற்பாட்டில் பலசுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் வொஷிங்டனில் நிகழ்ந்த உரையாடலை தொடர்ந்து நியூயோர்க்கில் ஐ.நா அதிகாரிகளுடன் இக்குழு கலந்துரையாட உள்ளது. இதுவரை நிகழ்ந்த அமெரிக்க இராஜாங்க திணைக்கள மட்டங்களுடனான உரையாடலை அவதானித்தல் அவசியமாகும்.
முதலாவது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் உள்ள இரண்டாம் நிலை அதிகாரிகளுடன் ஈழத்தமிழர் தரப்பு இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பு நிலைப்பாடுகளையும் தீர்மானங்களையும் எடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னகர்த்தும் நோக்கில் தமிழர் தரப்புடன் பேச்சுக்களை இராஜாங்க திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. அதாவது அமெரிக்கா எத்தகைய இலங்கை பொறுத்த கொள்கைகளை வகுக்க வேண்டும் என்பது தொடர்பில் தமிழர் தரப்புடன் உரையாடிக்கொள்வதாக விளங்கிக்கொள்ள முடியும்.
இரண்டாவது, தமிழர் தரப்பு கொடுமைகளுக்கு எதிரான பொறுப்புக்கூறலை மேம்படுத்துகின்ற பூகோள குற்றங்களிலிருந்து பாதிக்கப்படுவோரை பாதுகாக்கின்ற நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை மேம்படுத்துகின்ற பிரிவுகளோடு உரையாடலை நிகழ்த்தியுள்ளது. அதாவது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்டநிபுணர் குழு உரையாடியுள்ளது.
மூன்றாவது, நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு இலங்கையில் சிறுபான்மை இனக்குழுக்களின் எதிர்பார்க்கை மற்றும் கவலைகளை செவிசாய்ப்பதோடு பூரணத்துவமான நிலைமாறுகால நீதிக்குரிய பொறிமுறையாக அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் நல்லிணக்கம் குறித்து தமிழ்த்தரப்புடன் தாம் உரையாடி உள்ளதாக அமெரிக்க தரப்பு டுவிட் செய்துள்ளது.
நான்காவது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இன்னொரு பிரிவான ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் பணியகம் தமிழ்த்தரப்போடு நிகழ்த்திய உரையாடலில் இலங்கையில் சிறுபான்மைக்குழுவின் பாதுகாப்போடு அரசியல் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவது அமெரிக்க அரசின் முன்னுரிமை விடயமென்பதோடு இலங்கையில் தற்போது நிகழும் மனித உரிமை பிரச்சினைகள் புலம்பெயர் சமூகங்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தரப்பு டுவிற் செய்துள்ளது.
மேற்குறித்த உரையாடல் வெளிப்படுத்தகின்ற செய்திகளை அவதானிக்கும் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழு நிலைமாறுகால நீதி பற்றியும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான உரையாடலுக்கான களத்தை மீண்டும் இலங்கை பரப்பில் திறப்பதற்கான களமாகவே அமெரிக்கா விஜயம் காணப்படுகிறது. இத்தகைய முடிவுகளுக்கான நகர்வுகளை அவதானிக்கின்ற போது இலங்கை அரசியல் பரப்பில் காணப்படும் நெருக்கடிகளை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்வதற்கான எத்தனமும் இலங்கை அரசாங்கம் பொறுத்தான உரையாடலின் வெளிப்பாடாகவும் அத்தகைய டுவிற் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதுமட்டுமன்றி டுவிற் செய்யப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அமெரிக்க தரப்பு சிறுபான்மையின குழுக்களாகவே கருத்தாட முயலுகிறது. இலங்கைத்தமிழர் ஒரு தெசிய இனம் என்ற எத்தனத்தை எந்த சந்தர்ப்பத்திலும் அமெரிக்க தரப்பு தனது டுவிற் பக்கத்தில் முதன்மைப்படுத்தவில்லை. எனவே இவற்றினூடாக அல்லது வெளிவந்த தகவல்களினூ;டாக அல்லது டுவிற் செய்யப்பட்ட விடயங்களினூடாக விளங்கிக்கொள்ளக்கூடிய அடிப்படைகளாக சிலவற்றை குறிப்பிடுதல் அவசியமாகும்.
ஒன்று, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தோடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்டநிபுணர் குழு உரையாடும் என எதிர்பார்கக்ப்பட்ட விடயங்கள் வெளிவந்த டுவிற் தகவல்களின் படி எதனையும் கண்டு கொள்ள முடியாது. ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினை தொடர்பிலும் அல்லது புதிதாக உருவாக உள்ள அரசியல் யாப்பு பற்றியோ அல்லது நிபுணர் குழு உருவாக்கி சமஸ்டி பற்றியோ உரையாடப்பட்ட கடந்த 4 நாட்களில்(14-18) 11 பிரிவுகளோடு மேற்கொண்ட உரையாடலில் வொஷிங்டனிலம் நியூயோர்க்கிலும் உரையாடிய விடயங்களில் எத்தகைய தகவலும் உச்சரிக்கப்படவில்லை. அவ்வாறாயின் அமெரிக்க நலனை இலங்கை அரசின் மீது பிரயோகப்படுத்துவதற்கான உத்தியாக இந்நிகழ்வை கண்டுகொள்ள முடியுமா என்ற கேள்வி நியாயமானதாக தெரிகின்றது. இதனூடாக தென்னிலங்கை ஆட்சியாளர்களை அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்களோடு ஒத்துழைத்து பயணிப்பதற்கான உபாயத்தையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழு செயற்படுத்தம முயன்றிருப்பது என்பது அத்தகைய கேள்வியின் நீட்ச்சியாக உள்ளது.
இரண்டு, வரவு செலவு திட்டத்தில் நிலைமாறு நீதிப்பொறிமுறைக்கான திதி ஒதுக்கம் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவுபெறுகின்ற சூழலில் அதற்கான உரையாடலை இராஜாங்க திணைக்களத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழு உரையாடியிருப்பதும் அது பற்றிய விபரம் டுவிற் செய்யப்பட்டிருப்பதுவும் இலங்கை அரசோடு அமெரிக்கா அரசின் பயணம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை தெளிவாக்கிறது. அல்லது டிதிர்காலத்தில் ஈழத்தமிழர்களது விவகாரம் எவ்வகை எல்லைக்குள் நகர்த்தப்பட போகிறது என்பது இவ் உரையாடலில் தெரிகிறது. அவடவாறான வடிவாத்துக்குள் சட்ட நிபுணர் குழுவும் உலகத்தமிழ பேரவையும் இணைந்து பயணிப்பதற்கான பொறிமுறையை இச்சந்திப்பு கட்டமைக்கப்பட்டிருப்பது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை அவர்களது அமைப்புக்களை இலங்கை அரசியன் பேரால் கையாளப்படுகின்ற பொறிமுறையொன்று இதனூடாக நகர்த்தப்படுகின்றதா என்ற கேள்வியும் எழுகிறது. அதாவது இலங்கை தரப்பின் பணியை தமிழ்த்தேசிய சுட்டமைப்பின் சட்ட நிபுணர் குழு அமெரிக்காவுடன் இணைநற்து செயற்படுத்துகிறதா என்ற சந்தேகமும் வலுவானதொன்றாக மாறுகிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் உலகப்பேரவையின் 6 பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து இருப்பது இச்சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
மூன்று, சமஸ்டி பற்றிய உலையாடல்களையும் புதிய அலசியலமைப்பு பற்றிய விடயங்களையும் உரையாடப்போவதாக அறிவித்த சட்ட நிபுணர் குழு இதுவரை(18.11.2021) உரையாடிய விடயங்களை அவதானிக்கும் போது எத்தகைய முக்கியத்துவமும் தமிழர் இனப்பிரச்சினை தொடர்பாக முன்னெடுக்கப்படவில்லை என்பது தெரிகிறது. வொஷிங்டனிலும் நியூயேபாரக்கிலும் உரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட் டுவிற் தரவுகள் அத்தகைய செய்தியை உறுதிப்படுதர்தியுள்ளது. அவ்வாறாயின் சட்ட நிபுணர் குழு எதனை அடிப்படையாக கொண்டு சமஷ்டியையும் அரசியல் யாப்பையும் ஊடகப்பரப்பில் முதன்மைப்படுத்தினர். ஈழத்தமிழரின் அரசியல் எண்ணங்களில் சமஸ்டி என்பது ஆழமான முரண்பாட்டின் தீர்வுக்கான அடிப்படை என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள். தமிழரசுக்கட்சியின் ஆரம்ப பெயரும் சமஷ்டிக்கட்சியாகும். அவ்வாறாயின் அதற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர்குழுவிற்கு தலைமை தாங்கிய பேச்சாளரின் உரையாடல் எதற்கானது என்ற கேள்வியும் நியாயமானது.
நான்கு, ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமென்றும் இறைமையுடைய மக்கள் என்றும் அடையாயப்படுத்தப்டும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தாம் வெளிப்படுத்துகின்ற உரையாடலில் அதனை முதன்மைப்படுத்தாது சிறுபான்மை இனக்குழுக்கள் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் டுவிற் செய்யுமளவுக்கு தமிழ்த்தரப்பின் உரையாடல் பலவீனம் தெளிவாக தெரிகிறது.
எனவே, சட்ட நிபுணர் குழுவுடன் நிகழ்ந்த உரையாடலில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை அடிக்கடையாக கொண்டு அமெரிக்க இந்திய நலன்களின் தேவைகளை நிறைவு செய்யும் விஜயமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவின் அமெரிக்க விஜயம் அமைந்தது. அமெரிக்காவோ இந்தியாவோ தமது நலனுக்கு உட்பட்டே உலக அரசியலை முன்னகர்த்தும் என்பது இயல்பான அதிகார அரசியலின் அளவீடாகும். ஆனால் அதற்காக தமிழ்த்தரப்பு அல்லது சட்ட நிபுணர் குழு கொடுத்த முக்கியத்தவம் தான் தமிழ் மக்களையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் அதிக நெருக்கடிக்கும் அபாயமான நிலைக்கும் தள்ளி உள்ளது. எத்தகைய முக்கியத்துவமற்ற உரையாடலை நிகழ்த்துவதாலேயோ அல்லது அதற்காக ஈழத்தமிழர் அரசியலை மாற்றி கொள்ள முடியுமென்று வாதிப்பதையோ கருத்து நிலையாக கொள்ள முடியாது. போலியான முகங்களும் அதனை நியாயப்படுத்தும் அமைப்புக்களும் அதற்கு பின்னால் இயங்கும் ஊடகங்களும் அதற்கான எழுத்துக்களும் ஈழத்தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்குமேயன்றி மாற்றத்தை கொண்டு வர வழி ஏற்படாது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: ஈழநாடு 21.11.2021)
