April 20, 2026
அரசியல் கட்டுரைகள்

பெருவல்லரசுகளின் அதிகாரப் போட்டிக்குள் மீண்டும் உலகம் நுழைகிறதா?

சுவிஸ்லாந்தில் நகரங்களில் ஒன்றான டோவாஸில் (Dovas) நடைபெற்ற(22.01.2026) உலகப் பொருளாதார மாநாடு அதிக மாற்றங்களை உலக அரசியலில் தந்திருக்கிறது. அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்ன் தாக்குதல் அறிவிப்புகளால் அதிர்ந்து போன உலகம் மீளவும் அமைதியான அறிவிப்புகளாலும் அதிர்ச்சிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைதிச் சூழல் நிரந்தரமானதா என்ற கேள்விகள் கிரின்ஸ்லாந்து மக்களுக்கு மட்டுமல்ல உலகத் தலைவர்களுக்கும் உலகத்துக்கும் ஒரு வியப்பான விடயமாகவே காணப்படுகிறது. கிறின்ஸ்லாந்து மீதான இராணுவ நடவடிக்கையை கைவிட்டு அமைதி உடன்படிக்கை ஒன்றின் ஊடாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ள முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருக்கின்றார். இதே நேரம் இன்றைய உலக ஒழுங்கு மாறுதலுக்கு உள்ளாகிறது என்று ஜெர்மனின் தலைவர் பிறீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) உலகப் பொருளாதா அமையத்தில் ஆற்றிய உரை அதிக முக்கியத்துவம் பெற்றதாக நோக்கப்படுகிறது. இக் கட்டுரை சமகால உலக ஒழுங்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அடையாளப்படுத்த முயல்கின்றது.

உலகப் பொருளாதார மாநாட்டில் கூடிய தலைவர்களில் ஜெர்மனிய தலைவர் குறிப்பிட்ட விடயம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது உரையின் சாராம்சத்தில் உலகம் அதிகாரப் போட்டி அரசியலின் சகாப்தத்துக்குள் நுழைகிறது என்றும் ஐரோப்பிய நாடுகள் போட்டித் தன்மையை அதிகரிக்க வேண்டும் எனவும் தமது சொந்தப் பாதுகாப்பில் முதலீடுகளை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் போட்டி நாடுகளாக ரஷ்சியாவும் சீனாவும் சவால் மிக்க சக்திகளாக உள்ளன என்றும் மூலோபாய ரீதியான மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குள் அமெரிக்க வெளியுறவும் பாதுகாப்புக்குக் கொள்கையும் சவாலுக்கு உட்படுத்தி இருக்கிறது என்றும் தெரிவித்தார். உலகம் அத்தகைய அதிகார அரசியலுக்கான போட்டியின் போது புதிய உலக சக்திகளையும் அவற்றின் வலிமைகளையும் தேவைப்படும் போது பலத்தையும் அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளையும் தூண்டுகிறது என்றும் குறிப்பிட்டதோடு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை உக்ரையின் மீதான ரஷ்சியப் போர் தொடக்கி இருந்தது என்றும் நினைவு கொண்டார். ஆனால் தோன்றியிருக்கும் புதிய சகாப்தம் மிக ஆழமான மாற்றங்களை தந்திருக்கிறது. சீனா மூலோபாய தொலைநோக்கு பார்வையுடன் பெரு வல்லரசு என்ற வரிசைகுள் நுழைந்துவிட்டது என்றும் அமெரிக்கா இந்த சவால்களை முறியடிக்க எதிர்வினை ஆற்ற ஆரம்பித்திருக்கிறது என்றும் வெளிப்படுத்தினார். அதே நேரம் இத்தகைய புதிய புவிசார் அரசியலுடன் ஐரோப்பாவின் ஒற்றுமை நேட்டோவின் ஒருமைப்பாடு அவசியமென்ற வாதங்களை முன்வைத்ததோடு ஐரோப்பாவும் அதன் ஒத்த எண்ணம் கொண்ட கூட்டு நாடுகளும் நெருக்கமாகவும் ஒன்றாகவும் பயணிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஐரோப்பிய நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை போட்டி தன்மை வாய்ந்ததாக மாற்ற வேண்டும் எனவும் ஐரோப்பாவை பாதுகாத்துக் கொள்ளும் திறனில் பெருமளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதிகாரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும் உலகம் ஆபத்தான இடத்தை நெருங்குகிறது என்று ஜெர்மனியின் ஹிட்லர் கால நினைவுகளை முதன்மைப்படுத்தி இருந்தார். ஜெர்மனிய தலைவரின் இத்தகைய உரையாடல் ஆழமான உலக ஒழுங்கில் மாற்றங்களை தரக்கூடியது என்ற எண்ணத்தை பிரதிபலிக்கின்றது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது உலகப் பொருளாதார மாநாட்டில் ஐரோப்பிய நாடுகளுடனான பகைமையில் மாற்றத்தை அமெரிக்க ஜனாதிபதி ஏற்படுத்த முனைந்துள்ளார். கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற எதிர்க்கும் நாடுகள் மீதான வரியை அறவிடப்போவதாக முதன்மைப்படுத்திக் கொண்ட ட்ரம்ப்; அமைதி உடன்படிக்கை மூலமாக கிரீன்ஸ்லாந்தை அமெரிக்கா செல்வாக்குக்கு கொண்டு வரும் உபாயத்தை வெளிப்படுத்தி இருந்தார். இது ஒரு நம்பிக்கை ஊட்டும் அமைதி வழியான செய்முறையாக காணப்பட்டது. இது ஒரு வகையான ஏகாதிபத்தியங்களில் சமரசமாகவும் கிரீன்ஸ்லாந்து மீதான ஆக்கிரமிப்பின் அமைதிவழி நகர்வு என்றுமே கருதப்படுகிறது. ஆனாலும் ட்ரம்ப் இராஜதந்திர ரீதியான கைப்பற்றுகைக்குள் கிரீன்ஸ்லாந்து என்னும் அகப்பட்டு இருக்கின்றது என்பது தான் இதன் சாரம்சமாகும். ஐரோப்பிய தலைவர்களின் எதிர்ப்புணர்வும் நேட்டோ உடைவுக்கான வாய்ப்புகளும் அமெரிக்க ஜனாதிபதியின் நகர்வுகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு காரணமாக குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு அரசியல் பேச்சுக்களை முழுமையாக கைவிட்டதா என்ற கேள்வி காணப்படுகிறது. ட்ரம்ப்ன் இரண்டாவது ஆட்சி காலத்தின் முதலாவது ஆண்டு நிறைவில் வெள்ளைமாளிகையில் ஏ.ஐ மூலமாக காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துகின்ற போது கிரீன்ஸ்லாந்து, கனடா, வெனுசுவெலா போன்ற நாடுகளில் அமெரிக்காவின் அங்கங்களாக அடையாளப்படுத்தி இருந்தவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

இரண்டாவது சீனா பொறுத்து ஜெர்மனியின் தலைவர் உரை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததென்றாக சர்வதேச அரசியலில் அவதானிக்கப்படுகிறது. குறிப்பாக சீனா பெரு வல்லரசுக்குரிய சக்தியாக மாறி உள்ளது என உலக தலைவர்கள் கணிப்பிடுகின்ற சந்தர்ப்பத்தில் சீனாவுக்கும் உலக நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கையும் ஐரோப்பாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருப்பதையும் அமெரிக்காவுக்கு மாற்றுடான சக்தியாக உலகத்தில் சீனா மாறிவருவதையும் சுட்டிக்காட்டியிருந்தார். இதே நேரம் சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உடன்படிக்கை அதிகம் விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதியின் முன்னிலையில் உலக வர்த்தக ஒழுங்கில் ஐரோப்பாவுடன் சீனா கொண்டுள்ள நெருக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். நேட்டோவையும் ஐரோப்பிய யூனியனையும் அரவணைத்து செயல்பட வேண்டிய பொறுப்புக்குள் அமெரிக்காவில் உலக ஆதிக்கம் தங்கி இருக்கிறது. ஆனாலும் ஐரோப்பிய நாடுகள் நேட்டோவின் கட்டமைப்பை தொடர்ந்து பேணுவதற்கு முயலுகின்ற சூழலொன்றை அவதானிக்கின்ற வேளை புதிய ஐரோப்பிய இராணுவ கட்டமைப்பு பற்றிய உரையாடல்கள் ஐரோப்பிய தலைவர்களிடம் ஏற்பட தொடங்கி இருக்கின்றது. அமெரிக்கா இல்லாது நேட்டோவோ அல்லது புதிய இராணுவ அணியோ ஐரோப்பாவுக்கு தேவை என்பதை அவர்களது உரைகள் முதன்மைப்படுத்தியிருந்தன. பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அதில் அதிக கவனம் கொண்டிருந்ததை காணமுடிந்தது.

மூன்றாவது ஈரான் மீதான அமெரிக்க எச்சரிக்கைகள் முடிவுக்கு வந்திருக்கும் சூழல் என்பது அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ட்ரம்ப்ம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவும் இணைந்து பாரிய தாக்குதல் ஒன்றை ஈரான் மீது நிகழ்த்த திட்டமிட்ட போக்கும் சீன ரஷ்சிய நகர்வுகளால் முடிவுக்கு வந்திருப்பது என்ற விவாதத்துக்கு புறம்பாக ஈரானின் தந்திரோபாயங்கள் அமெரிக்காவின் போர் உத்தியை குழப்பியதாகவே தெரிகின்றது. கிரீன்ஸ்லாந்து மற்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் அணுகுமுறைகள் நெருக்கடி மிக்க தான சூழலை தந்திருக்கும் அதேபோல உலகப் பெருவல்லரசுகளில் அமெரிக்க ஆதிக்கம் பலவீனம் அடைவதற்கான புறச்சூழலை ஏற்படுத்தி இருக்கிறதா என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

நான்காவது ரஷ்யாவின் எண்ணைக் கப்பல்களையும் வெனிசுவெலாவுடனான எண்ணை பரிமாற்றத்திற்கான நடவடிக்கைகளையும் அதிகம் நெருக்கடி உள்ளாக்கிய போதும் அமெரிக்கா மீது பதில் நடவடிக்கையின்றி ரஷ்சியா நகர்ந்து செல்வது அதிகமான குழப்பத்தை உலகத்துக்கு முன் வைத்திருக்கின்றது. ஆனாலும் ரஷ்சியா பதில் நகர்வுகளை பிராந்தியத்தைக் கடந்து நகர்த்துவதில் கவனம் கொண்டு செயல்படுகிறது. உக்ரையின் மீதான ரஷ்சியாவின் நடவடிக்கைகள் தீவிரம் மிக்கதாக மாறியிருக்கின்றது. ரஷ்சியா தனது பிராந்தியம் மீதான பாதுகாப்பில் தீவிரம் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் பிராந்தியத்துக்குள் ஏற்பட்ட நடவடிக்கைகளுக்கு பதிலை கருங்கடல் பகுதியிலும் உக்ரையினுக்குள்ளும் மேற்கொண்டு வருகிறது. இது ஒரு வகையில் அமெரிக்காவின் அணுகுமுறை மாற்றங்களை பிராந்தியங்களை கடந்து நகர்த்த முடியாது என்பதை கோடிட்டு காட்டுகின்ற விடயமாக தெரிகிறது.

ஐந்தாவது இந்தியா பொறுத்த அமெரிக்கா கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் முரண்பாடு உடையதாகவும் அதிக ஏற்ற இறக்கங்களை பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. ஆனால் இந்தியா அதிகம் மௌனமாக சூழலை எதிர்கொள்வதோடு ஆசியா ஆபிரிக்கப் பிராந்தியங்களிலும் ஐரோப்பாவுடனும் நெருக்கமான வர்த்தக உறவை கட்டமைப்பதில் வெற்றிகரமான வழிமுறையை பின்பற்ற தொடங்கி இருக்கின்றது. ஆனால் இந்தியா உலகளாவிய ரீதியில் அதிகார சக்தியாக தன்னை அடையாளப்படுத்துவதில் மேற்குடனும் கீழைத்தேச நாடுகளுடனும் சம அளவிலான பரிமாற்றத்தையே பிரதிபலிக்கும் உபாயத்தைக் கொண்டுள்ளது.

ஆறாவது அமெரிக்க ஜனாதிபதி உலகப் பொருளாதார மாநாட்டில் புதிய உலக அமைப்புக்கான அடிப்படையை தோற்றுவித்திருந்தார். காசாவை மீளமைப்பதற்கு கட்டமைத்த புதிய சமாதானத்துக்கான அமையத்தை (Board of Peace) ஐ.நா.வுக்கு நிகரானதாகவும் ஐ.நா. முடிவுக்கு வந்திருப்பதாகவும் தனது உரையில் தெரிவித்திருந்தார். காசாவை மீளமைக்க தேவையான நிதியினை திரட்டுவதற்காக அவ்வகை அமைப்பு ஒன்றை டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கி இருப்பதாகவும் அதற்கான நிதியினை பெற்றுக் கொள்ளுகின்ற முயற்சிகள் உறுப்பு நாடுகள் நிதி பங்களிப்புடன் அமைப்பினை உருவாக்குகின்ற சூழலை வெளிப்படுத்தியிருந்தார். உலக சமாதானத்தில் ஐ.நா. சபை தோற்றுவிட்டது என்றும் உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐ.நா.வுக்கு பதிலாக அமெரிக்காவே மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்கு மட்டுமே வீட்டோ அதிகாரம் கொண்ட அமைப்பு ஒன்றை ஸ்தாபிப்பது பற்றி உலகப் பொருளாதார மாநாட்டில் உரையாடியிருந்தார். இதில் பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரோனிபிளேயர் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரூபியோ, மற்றும் விசேட தூதுவர் குஷ்னர் மற்றும் பல ஆசிய ஆபிரிக்க தலைவர்கள் காணப்பட்டனர். முன்னதாக 59 நாடுகள் சமாதான அமையத்தில் கையொப்பம் இட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

இவை அனைத்தும் உலகம் ஓர் ஒழுங்குக்கான குழப்பநிலையில் உள்ளது என்பது தெளிவாக காட்டுகிறது. இது உலகம் புதிய ஒழுங்கை நோக்கியும் நகர்கிறது என்பதை கோடிட்டு காட்டுவதாகவே தெரிகின்றது. 1991 ஆம் ஆண்டு உருவான புதிய உலக ஒழுங்கு கட்டமைக்கப்பட்ட வடிவத்திலிருந்து 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் தாக்குதலோடு மீண்டும் ஒரு மாற்றத்தை அடைந்தது. அதே சூழலை உலகம் எதிர்கொண்டது. கொவிட்-19 தொற்று நிகழ்கின்ற போதும் இவ்வகையான உரையாடல்கள் மேல் எழுந்திருந்தது. ஆனால் 2026 ஆண்டு ஏற்படக் கூடிய அத்தகைய உலக வடிவத்தில் புதிய பெரு வல்லரசுகளின் அதிகாரப் போட்டிகுள் அகப்பட்டிருக்கிறது என்பதையும் அது குழப்பப்பட்டு உள்ளது என்பதையும் சமகாலப்பகுதி தெளிவாக அடையாளப்படுத்துகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)