அரசியல் கட்டுரைகள்

இலங்கைத்தீவில் அமெரிக்காவின் வியூகங்கள் விஸ்தரிக்கப்படுகின்றது?

தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் அமெரிக்காவுக்குமான தனிப்பட்ட உறவு வலுவடைந்து அரசியல் பொருளாதார இராணுவ உறவாக விரிவடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. சமகாலத்தில் ஐரோப்பிய யூனியனுக்கும் இலங்கைக்குமான உறவுக்கான பலப்படுத்தல் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அமெரிக்க-இலங்கை உறவும் பல விடயங்களில் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தில் முக்கிய புள்ளியாக அடையாளப்படுத்தப்பட்ட இலங்கை அமெரிக்க உறவு சீன-இலங்கை உறவினால் பாதிப்படையுமென்ற அச்சத்தை அமெரிக்கா சீர்செய்துள்ளது. அத்தகைய சீர்படுத்தல் தனித்து இலங்கையுடனான உறவு என்பதை கடந்து பிராந்திய அடிப்படையிலும் தென்னிலங்கை ஆட்சியாளர்களை மாற்றி அமைக்கும் நோக்கு நிலையிலும் நகர்வதாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் இலங்கை தீவில் அமெரிக்கா எத்தகைய உபாயங்களை கொண்டு இயங்குகின்றது என்பதனை தேடுவதாக அமையவுள்ளது.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமான உறவு கடந்த பல மாதங்களாக தாழ்நிலையிலிருந்து மீண்டுள்ளதாகவே பொது வெளியில் விவாதிக்கப்படுகிறது. அத்தகைய உறவு சீனா எதிர் அமெரிக்கா என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதும் இலங்கை அமெரிக்கா உடனான நட்பை வலுப்படுத்தி இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்குட்பட்ட அனைத்து விடயங்களையும் காலந்தாழ்த்துவதற்கு வழிவகுத்துள்ளது. அத்தகைய இடைவெளியை சரியாக பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா தனது பூகோள நலன்களையும் பிராந்திய நலன்களையும் அடையும் விதத்தில் செயற்பட ஆரம்பித்துள்ளது. அதாவது, தென்னிலங்கை ஆட்சியாளர்களோடு நெருக்கமான உறவை வைத்துக்கொண்டு அவர்களை அமெரிக்க நலனுக்கு விசுவாசியாக மாத்துவது அல்லது அவர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி அத்கைய விசுவாசத்தை பலப்படுத்துவது என்ற எதிர்பார்க்கையுடன் செயற்பட முனைகிறது. இதனை புரிந்து கொள்வதற்கான தகவல்களை இங்கு குறிப்பிடுவதே பொருத்தமானதாகும்.

முதலாவது, தற்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பதவி நிறைவுபெறும் போது புதிதாக தென்கொரியாவை பூர்வீகமாக கொண்ட ஜூலி சுங்கின் நியமனத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உறுதிபடுத்தியுள்ளார். இவரது வருகை இலங்கை ஆட்சியாளர்களுக்கு இருவிதமான தாக்கங்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்று, இலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இருக்கும் நெருக்கமான நட்பு அமெரிக்க-தென்கொரியா நட்பினூடாக உறவை அமெரிக்க-இலங்கை உறவில் ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கருதுகின்றனர். அதுமட்டுமன்றி ஜூலி சுங் ஆசிய நாட்டவராக காணப்படுவதால் இலங்கை ஆட்சியாளர்கள் இலகுவாக அணுகவோ கையாளவோ முடியுமென எதிர்பார்க்கின்றார்கள். அதுவொரு வகை இலங்கை-அமெரிக்க உறவின் சுமூகத்தன்மைக்கு வாய்ப்பை உருவாக்க முடியும்.

இரண்டு, குறிப்பாக ஜூலி சுங்கின் தகைமைகளே அவரது இராஜீக நகர்வுகளையும் இராஜதந்திர பணிகளையும் அளவீடு செய்கின்ற போது அமெரிக்காவிடம் காணப்படும் இன்னொரு உபாயத்தையும் அவரது பதவிக்கூடாக புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக அவரது புலமை கலிபோர்னியா ஷாங் டியாகோ பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் தொடங்கி கொலம்பிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரத்தில் உயர்நிலை கல்வியை பெற்றதோடு கொரியா, ஜப்பான், ஸ்பானிய மொழிப்புலமையோடு இலத்தின் அமெரிக்க நாடுகளின் உள்ளூர் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராக காணப்படுகிறார். அவரது இராஜீக பணிகள் 1996ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு சேவைகளில் பணிகளூடாக ஆரம்பிக்கப்பட்டள்ளது. இறுதியாக மத்திய அமெரிக்க நாடுகளின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை உதவிச்செயலாளராக பணியாற்றி இருந்தார். அதுமட்டுமன்றி கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரங்களில் ஜப்பானிய இயக்குனராக பணிபுரிந்ததோடு பிற்பட்ட காலப்பகுதியில் துணைச்செயலாளராகவும் கம்போடியா துணைத்தூதராகவும் தாய்லாந்து பொருளாதார ஆலோசகராகவும் பதவி வகித்துள்ளார். அத்தோடு அமெரிக்காவுக்கான கொலம்பியாவின் துணை அரசியல் ஆலோசகராக கடமையாற்றிய காலப்பகுதியில் அமெரிக்க துணை இராணுவம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பில் அமெரிக்க அரசின் திட்டங்களை நிர்வகித்தார். கொலம்பியாவின் ஜி-24 அமெரிக்க திட்டத்தின் பிரதிநிதியாகவும் மற்றும் கண்ணிவெடி அகற்றல், மனித உரிமைகள், தொழிலாளர் நலன்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியதோடு ஈராக்கின் தலைநகரான பக்தாத்தில் 13இற்கும் மேற்பட்ட முகவர்களுடனும் பிரிவுகளுடனும் சிவில் இராணுவ வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்கும் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றினார். அத்துடன் தற்கொலை குண்டுவெடிப்புக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவசர உதவி ஒருங்கிணைப்பு குழுவை நிர்வகித்ததோடு வோஷிங்டனில் உள்ள கொரிய விவகார அலுவலகத்தின் பணியாளராகவும் அக்காலப்பகுதியில் இரு கொரியாக்களுக்குமிடையிலான இராணுவ வலயத்திற்கு பலதடவை விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க-வடகொரிய ஒப்புக்கொண்ட கட்டமைப்புக்களை செயற்படுத்தினார். சீனா, ஜப்பான் மற்றும் வியட்னாம் ஆகியவற்றின் பொது இராஜதந்திரியாகவும் ஆசிய-பசுபிக் பொருளாதார மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

எனவே ஜூலி சுங்கின் இலங்கைக்கான விஜயம் அதிக முக்கியத்துவம் பெறக்கூடியதாக அமையுமென எதிர்பார்ப்பதில் மாற்று எண்ணப்பாங்குக்கு மாற்றமில்லை என்றே கூற முடியும். ஏறக்குறைய அமெரிக்கர்கள் தென்னிலங்கை ஆட்சி பரப்பின் திட்டமிடல்-Bஆக (Plan-B) ஜூலி சுங்கை கருதுகிறார்களா என்று எண்ணத்தோன்றுகிறது.

இரண்டாவது, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக முயற்சியில் பல்லேகல நில அதிர்வு மையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிர்வினை அளவீடு செய்யும் கருவி இந்தியாவையும் பாகிஸ்தானையும் உளவு பார்க்கும் நோக்கத்தோடு நிறுவப்பட்டதாகவே தெரியவருகிறது என புவி சரித்திரவியலாளர் மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளராகிய அஜித் பிரேமி சந்தேகம் வெளியிட்டுள்ளார். அதாவது இப்பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய அதிர்வுகளை மதிப்பிட்டு அதுதொடர்பான எச்சரிக்கைகளை வழங்குவதற்காக நிறுவப்பட்ட பலலேகல மையம் பாகிஸ்தானும், இந்தியாவும் அணுவாயுதங்களை பரிசோதனை செய்கின்றனவா என்பதனை கண்காணிக்கவும் உளவு பார்க்கும் நோக்கத்துடனும் இக்கருவி நிறுவப்பட்டிருக்கலாமெனவும் அவர் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார். 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிலையம் 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்படும் வரை எத்தகைய தரவுகளையும் வழங்கியிருக்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அவ்வகை அவரது சந்தேகம் உறுதிப்படுத்தப்படுமாயின் அமெரிக்க-இலங்கை உறவின் முக்கியத்துவம் தெளிவுபடுத்தப்படுவதோடு அதனை எவ்வாறு அமெரிக்கா பிராந்திய மட்டத்தில் கையாள முனைகின்றது என்பதையும் விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும். இந்திய-அமெரிக்க உறவும் சீனா-பாகிஸ்தானிய உறவும் நேர்க்கணியத்தில் இருந்தாலும் அவற்றின் வளர்ச்சியினை அல்லது அவற்றினது போக்குகளினை கண்காணிப்பதுவும் கையாள்வதும் அமெரிக்க தேசிய நலனுக்கு உட்பட்டவையாகவே விளங்குகின்றது. மன்மோகன்சிங் பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்குமிடையே அணுவாயுதம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை இந்தியாவின் அணுவாயுத பரிசோதனைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. இதனுடைய தொடர்ச்சியாக ஒருபுறம் அமைய, இந்தியா அமெரிக்காவோடு இராணுவ பொருளாதார வர்த்தகரீதியில் அதிக நெருக்கங்களை பின்பற்றி வருவதோடு இந்தோ-பசுபிக் உபாயத்திலும் குவாட் அமைப்பிலும் அமெரிக்காவிற்கு சேவை புரியும் ஒரு நாடாக விளங்குகின்றது. அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயம் அதன் பெறுபேறுகள் பலவீனமானது என்பதை கோடிட்டு காட்டியது. எனவே இலங்கை விடயத்தில் அமெரிக்கர்களின் அணுகுமுறையில் எற்பட்ட மாற்றம் இலங்கை-அமெரிக்க உறவில் மாத்திரமின்றி பிராந்திய உறவையும் அதிலும் குறிப்பாக அமெரிக்கா நட்பு நாடான இந்தியாவை நோக்கி அமெரிக்காவின் சந்தேகங்களை வெளிப்படையாக அடையாளப்படுத்தி உள்ளது. நட்பு நாடான இந்தியாவையே அதிக அவாதனிப்புடன் அமெரிக்கா செயற்படுவதென்பது இந்திய-சீன உறவை மட்டுமன்றி சீனாவின் இருப்பிற்கு எதிரான அணுகுமுறைகளையும் இதனூடாக அமெரிக்கா முதன்மைப்படுத்தும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை.

மூன்றாவது, இலங்கையின் நிலப்பரப்பில் அதிக் ஈடுபாட்டை காட்டிவரும் அமெரிக்கா கெரவலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40சதவீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையை இலங்கை அரசாங்கத்துடன் கையொப்பமிட்டுள்ளதாக அமெரிக்காவின் நிவ்போர்ட்ஸ் எனர்ஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவொன்றும் புதிய விடயமாக இல்லாவிட்டாலும் இதுபற்றி எதிர்க்கட்சிகளும் ஆளுந்தரப்பினுள் உள்ள இடதுசாரி எனக்கூறிக்கொள்பவர்களும் எதிர்ப்புவாதங்களை முதன்மைப்படுத்தி உள்ளனர். ஆனால் கெரவலப்பிட்டிய மின்உற்பத்தி நிலையத்தின் உடன்படிக்கையின் பிரகாரம் கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் இயற்கை திரவ வாயு முனையம் ஒன்றை நிர்மானித்தல் அதிலிருந்து கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் வரை குழாய் கட்டமைப்பை அமைத்தல் ஆகியனவே இவ்ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளென அவ்நிறுவனம் பகிரங்கப்படுத்தி உள்ளது. தற்போது இவ்மின்உற்பத்தி நிலையம் 310மெஹா வட் கொள்ளளவினையே கொண்டிருக்கின்றதெனவும் 2023ஆம் ஆண்டளவில் மேலதிகமாக 700மெஹா வட் உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எதுவாயினும் இவ்உடன்படிக்கை கொழும்பு துறைமுகத்தை சார்ந்து முதன்மைப்படுத்தப்படுவதே இங்கு பிரதான உரையாடலுக்கான பின்புலமாக தெரிகிறது. இலங்கையில் இருந்து கொண்டு இந்தியாவையும் பாகிஸ்தானையும் கண்காணிக்கும் அமெரிக்கா கெரவலப்பிட்டியாவில் நிறுவிய மின் உற்பத்தி நிலையத்தை மையப்படுத்தி கொழும்பு துறைமுக நகரையும் சீனாவின் நகர்வுகளையும் கண்காணிக்க தவறாது என்பதை புரிந்து கொள்ளல் அவசியமாகும். இதுதொடர்பில் திறைசேரி, அமைச்சரவை, பாராளுமன்றம் எத்தகைய வாதங்களை முன்வைத்தாலும் இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொள்கையானது இந்தோ-பசுபிக் உபாயம் பொறுத்து மிக முக்கியமானது என்பதை உறுதிப்படுத்துகிறது.

எனவே, இலங்கை-அமெரிக்கா உறவானது இந்தோ-பசுபிக் உபாயம் பொறுத்து, பிராந்திய அரசியல் பொறுத்து, இந்து சமுத்திர நாடுகளின் பொறுத்தும் முக்கியமானதாகும். நேட்டோ-02 என அழைக்கப்படும் குவாட் நாடுகளின் தலைமை நாடான அமெரிக்கா சீனாவின் உபாயங்களை தகர்க்கும் முனைப்பிலும் அமெரிக்கா தலைமையிலான மேற்கின் மீழெழுச்சியை உறுதிப்படுத்தும் விதத்திலும் இலங்கையுடனான உறவை அணுக திட்டமிட்டுள்ளது. 1949ஆம் ஆண்டு 12 நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ தற்போது 52 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வட அத்திலாந்திக் பாதுகாப்பு உடன்பாடு வோர்ஷோவையும் சோவியத் யூனியனையும் எதிர்கொள்வதில் வெற்றி கண்டது போல் இந்தோ-பசுபிக் நாடுகளின் கூட்டு ஒப்பந்தமானது சீனாவின் உபாயங்களை தோற்கடிக்கும் நோக்கோடு நேட்டோ-02ஆக அடையாளப்படுத்தப்படுகிறது. இது 10ஆம் நூற்றாண்டில் சோழர் வகுத்த இந்தோ-பசுபிக் உபாயத்துக்கு நிகராக அமெரிக்கர்களின் இந்தோ-பசுபிக் உபாயம் இரண்டு கண்டங்களையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை மிகப்பிரதான மைய நாடாக அமெரிக்கர்களால் இலகுவில் கையாளக்கூடிய நாடாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்துக்குமான முதலீடு ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினையாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)