இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த 21.05.2021 சாத்தியமாகியது. ஏறக்குறைய 11 நாள் போர் முடிபுக்கு வந்துள்ளது. நடந்து முடிந்த போர் இரு தரப்பையும் பாரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் பாலஸ்தீன தரப்பே அதிக இழப்பினை எதிர் கொண்டிருந்தது. கொல்லப்பட்ட மக்களது எண்ணிக்கையை மட்டுமல்ல சொத்திழப்பு அகதி வாழ்வு இயல்புவாழ்க்கையின் போக்குகள் என பலவிடயங்களில் பாலஸ்தீன மக்களும் பிரதேசமும் அதிக இழப்புக்களை எதிர் கொண்டுள்ளன. இத்தகைய இழப்பினை சரிசெய்ய உலக நாடுகள் முன்வந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மனிதாபிமான அமைப்புக்களும் அத்தகைய உதவிகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதுடன் உதவித்திட்டத்துடன் காஸா நோக்கி ஐ.நா வின் காவு வண்டிகள் பயணமாகிக் கொண்டிருக் கின்றன. ஆனால் நடந்து முடிந்த போரில் இரு தரப்பும் தாமே வெற்றி பெற்றதாக அறிவித்துவருகின்றன. இக் கட்டுரையும் இப்போரில் எந்த தரப்பு வெற்றி பெற்றுள்ளது எப்பதை தேடுவதாக அமையவுள்ளது.
முதலாவது, இஸ்ரேலிய பிரதமர் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நடந்து முடிந்த போரில் தாம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அத்தகைய வெற்றி ஹமாஸ் அமைப்புக்கே தெரியாது என்றும் போரின் இலக்கை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதே நேரம் ஹமாஸ் அமைப்பு ஏவிய எறிகணைகளில் 90 சதவீதமானவற்றை தமது எதிர்பு ஆயும் மூலம் அழித்துள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பின் ஆயுத உற்பத்தி நிலையம் அழிக்கப்பட்டதாவும் சிரேஸ்ட தளபதிகள் உட்பட 200 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாகவும் ஏறக்குறை ஹமாஸ் அமைப்பின் சுரங்கப் பாதை முழுமையாக தகர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இரண்டாவது, ஹமாஸ் அமைப்பினர் இந்த போர் வரலாற்று வெற்றி எனவும் தாம் ஏவிய ஏவுகணைகள் அனேகமானவை இஸ்ரேலின் நகரங்களை தாக்கியுள்ளதாகவும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் அதிகமானவை எனவும் இஸ்ரேல் இலக்கினை அடையமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அவ்வமைப்பின் அறிக்கையொன்றில் இஸ்ரேலியப் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியிருப்பதுடன் இஸ்ரேல் கைப்பற்றிய நிலங்கள் மற்றும் யூதர்களது குடியிருப்புக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாகவும் அச்சத்தால் யூதர்கள் முதல் தடவையாக காணப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த இரு தரப்பினரது வெளிப்பாடுகளை அவதானித்தால் போரின் இழப்பீடுகளைக் கொண்டு போரின் வெற்றிகளை மிதிப்பிடுகின்றனர். அதனையும் தமக்கு சார்பான முடிபுகளை முன்வைத்தே இரு தரப்பும் வெற்றிகளை அளவீடு செய்கின்றனர். ஆனால் இரு தரப்பினதும் வெற்றியை இரு தரப்பும் அடைந்த விளைவுகளைக் கொண்டே அளவீடு செய்தல் பொருத்தமானதாக அமையும்.
முதலாவது, இந்த போர் ஏன் 11 நாட்கள் நீடித்தது என்பது பிரதான கேள்வியாகும். அதாவது ஏதாவது ஒரு தரப்பு பலவீனமானதாக அமைந்திருக்குமாயின் இலகுவில் போர் முடிந்திருக்கும். அதனால் இரு தரப்புமே சமவலுவுடன் போரை எதிர் கொண்டிருந்தன என்பது தெளிவாகிறது. வரலாற்றில் அதிக திருப்பங்களை இஸ்ரேலுக்கு ஏற்படுத்திய 1967 ஆம் ஆண்டு போர் கூட ஆறு நாட்களில் முடிந்தது. 13 மேற்பட்ட அரபு நாடுகள் அந்த போரில் ஈடுபட்ட போதும் யூதர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் நடந்து முடிந்த போரை அவ்வாறு இஸ்ரேலால் முடிக்க முடியவில்லை என்பதே ஹமாஸின் பக்கம் வலுவான தாக்குதல் உத்தியும் திட்டமிடலும் அமைந்திருந்தது என்பதைக் காட்டுகிறது. அமெரிக்க ஜனாதிபதிக்கும் இஸ்ரேல் பிரதமருக்குமான உரையாடல் ஒன்றில் மூன்று நாட்களில் இந்தப் போரை முடிப்பதாக இஸ்ரேல் அமெரிக்காவுக்கு உறுதியளித்திருந்ததாக தகவல்கள் உண்டு. அப்படியாயின் யூதர்கள் உரிய இலக்கை அடையமுடியவில்லை என்பதே போர் நீடித்ததற்கு காரணமாக தெரிகிறது.
இரண்டாவது, இந்த போரின் இஸ்ரேல் தரப்பின் பிரதான இலக்காக ஹமாஸ்ன் போராளிகளும் அவர்களது மெற்றே என்று அழைக்கப்பட்ட சுரங்கப் பாதையுமாகும். அதற்கான திட்டமிடலுடனேயே யூத படைகள் போரைத் தொடக்கியிருந்தன. யூதர்கள் போரைத் தொடக்கும் போது ஒரு உத்தியுடனேயே ஆரம்பிப்பது வழமையாகும். ஒவ்வொரு போரும் அவ்வாறானதே. அதே போன்றே இந்த போரையும் தொடக்கும் போது ஹமாஸ் அமைப்பினை ஏமாற்றுவதற்காக தரைப்படை நகர்வை மேற்கொள்ள இஸ்ரேலியப் படைகள் ஆயத்தமாவது போல் காஸா எல்லை நோக்கி பாரிய வாகன அணிவகுப்பினையும் சிறிய அளவிலான படைகளையும் நகர்த்தினர். ஹமாஸ் தனது படைகளைப் பாதுகாக்க மெற்றோ என அழைக்கப்பட்ட சுரங்கபாதைக்குள் தமது போராளிகளை குவிக்கும் எனவும் அப்போது விமானத் தாக்குதலை மெற்றே நோக்கி மேற்கொள்வதெனவும் இஸ்ரேல் திட்டமி-ட்டது. ஆனால் ஹமாஸ் இஸ்ரேலின் திட்டத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு எந்தவித நகர்வையும் செய்யாது தரையிலேயே தனது படைகளை வைத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் தரை நகர்வை அப்படியே கைவிட்டுவிட்டு விமானம் மூலம் மெற்றே எனும் சுரங்கப்பாதை நெடுகிலும் தாக்குதலை இடைவிடாது தொடர்ந்தது.பாரிய கட்டிடங்களை தகர்த்தமைக்கும் அடுக்குமாடிக் கட்டடங்களை தாக்கபியமைக்கும் சுரங்கப்பாதைகளே காரணம். ஆனால் அத்தகைய சுரங்கப்பாதைகளை ஹமாஸ் இஸ்ரேலிய போர் விமானங்களின் தாக்குதலுக்கு அகப்படாத வகையில் ஆழமான பகுதியில் அமைத்திருந்தது. அது மட்டுமன்றி அதன் பலத்தையும் அதிகரித்திருந்தது. அதனால் இலக்கு எதுவும் இஸ்ரேலுக்கு சாத்தியமாகவில்லை. மாறாக ஹமாஸ் ஏவுகணைத் தாக்குதலை இடைவிடாது இஸ்ரேலிய நகரங்களையும் சொத்துக்களையும் நோக்கி நிகழ்த்திக் கொண்டிருந்தது. இறுதி வரையும் இஸ்ரேலிய படைகளால் ஹமாஸ்ன் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை.
மூன்றாவது, உளரீதியாக யூதர்கள் அச்சமடைந்திருந்தார்கள். குறிப்பாக ஏவுகணைத் தாக்குதல் ஆரம்பித்ததும் எச்சரிகை ஒலி எழுப்பி மக்களை பதுங்கு குழிகளுக்குள் மறைத்துவைக்க வேண்டிய நிலை இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஏற்பட்டது. இதில் இராணுவம் நெருக்கடியை சந்தித்ததை விட யூதர்கள் அதிக உளப்பாதிப்புக்குள் தள்ளப்பட்டனர். எத்தகைய பலத்துடன் இஸ்ரேல் மேற்காசியாவில் அரசமைத்துக் கொண்டாலும் அரபுக்களின் அச்சுறுத்தலுக்குள்ளும் ஆபத்துக்குள்ளும் தொடர்ந்து அந்த மக்கள் வாழவேண்டிய நிலையை ஆட்சியாளரும் இராணுவமும் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவு நீண்ட காலத்தில் ஆபத்தானதாக அமைய வாய்ப்புள்ளது. காரணம் ஹமாஸ்ன் தாக்குதல் மட்டுமே நிகழ்ந்ததாக குறிப்பிட்டாலும் லெபலான் சிரியா மற்றும் ஈரானிய ஆதரவு பெற்ற குழுக்கள் பாலஸ்தீனக் குழுக்கள் என பலதரப்பும் தாக்குதலை நிகழ்த்தியிருந்தது.இதனை அவதானிக்கும் போது எதிர்காலத் தாக்குதல்கள் ஆபத்துமிக்கதாக அமையப் போகிறது என்பதை அடையாளப்படுத்துகிறது. இதில் துருக்கியின் நிலைபாடும் ஈரானின் போக்கும் இஸ்ரேலுக்கு அபாயமானதே.
நான்காவது, இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டுச் சேர்ந்து நிகழ்த்திய போர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அத்தகைய வல்லரசின் ஒத்துழைப்பும் இராணுவ பலமும் அனுபமும் கொண்ட இஸ்ரேலியத் தாக்குதல் இலக்கினை அடைய முடியாது முதல் தடவையாக போர் நிறுத்தத்தை எட்டியுள்ளது. அப்படியாயின் அமெரிக்க இஸ்ரேல் கூட்டின் இலக்கு மேற்காசியாவில் நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளது. ஏற்கனவே மேற்காசியாவின் கணிசமான பகுதிகளை ரஷ்சியாவும் சீனாவின் பொருளாதார உபாயமும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டன. தற்போது வரை இஸ்ரேல் சவுதியரேபியா கட்டார் ஐக்கிய அரபு ஏமிரேற் போன்ற நாடுகளே அமெரிக்க நட்பு நாடுகளாக உள்ளன. ஆனால் அவற்றின் போராளிக்குழுக்கள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கு எதிரான குழுக்களாக உள்ளன. அது மட்டுமல்லாது ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலை பலமாக சீனாவும் ரஷ;சியாவும் எதிர்த்துள்ளன. அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக வீட்டோவைப் பயன்படுத்திய பின்பு சீனா இஸ்லாமிய நாடுகளுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்காவின் அணுகுமுறையைப் பற்றிய குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வரையும் அத்தகைய தொலைபேசி உரையாடல் சீனா மேற்கொண்டுள்ளது. அவ்வாறு நோக்கும் போது உலகளாவிய ரீதியில் அமெரிக்க வல்லரசுப் பலம் சரிவடைகிறதா என்ற சந்தேகம் வலுவானதாகிறது. குறிப்பாக மத்திய ஆசியா கிழக்காசியா தென்னாசியா இந்தோ-பசுபிக் பிராந்தியம் அந்தாட்டிக்கா பகுதி என்ற வரிசையில் மேற்காசியாவையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதென்பது இஸ்ரேலின் இருப்புக்கான அபாயமாகும்.
ஐந்தாவது, ஹமாஸ் ஈரான் கூட்டு பலமான மாற்றத்தை இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என்பதை நடந்து முடிந்த போர் தெளிவுபடுத்தியுள்ளது. காரணம் ஹமாஸ் பிரயோகித்த ஏவுகணைகள் ஈரான் தயாரிப்பு என்றும் போரில் ஈரான் நேரடியாக ஈடுபடாத போதும் ஆயுததளபாட உதவிகளை வழங்கியதுடன் தனது போராளிக் குழுக்களை பயன்படுதியுள்ளதாவும் தெரியவருகிறது. அது மட்டுமல்ல ஐ.நா. அணுவாயுத கண்காணிப்பகம் ஈரானின் அணுவாயுத உற்பத்தி தொடர்பான தகவல்களையோ படங்களையோ பார்வையிட முடியாது எனவும் ஈரான் வழங்காது எனவும் தெரிவித்துள்ளது. ஈரானின் அணுவாயுத உற்பத்தி நிலையத்தையும் உற்பத்திக்கான தொழில் நுட்பத்தையும் பல தடவை இஸ்ரேல் அழித்துள்ளது. நடந்து முடிந்த போரின் போது இஸ்ரேலின் அணுவாயுத உற்பத்தி நிலையம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாரிய வெடியோசை அப்பிராந்தியத்தில் அதிர வைத்ததாகவும் செய்திகள் உண்டு. ஆனால் அதனை மறுத்த இஸ்ரேல் சிரியாவில் இயங்கிவந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகளே அவை என்றும் அவை தவறுதலாக அணுவாயுத நிலையத்தின் மீது வீழ்ந்து வெடித்தாகவும் செய்தி வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது. அது மட்டுமன்றி அவ்விமான எதிர்ப்பு ஆயுதம் ரஷ்சியாவினுடையதெனவும் சிரியா மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலை எதிர்த்து அத்தகைய ஏவுகணைகள் இயக்கப்படுதெனவும் தெரியவந்துள்ளது. எதுவாயினும் இது இஸ்ரேலுக்கு அபாயமான செய்தியாகவே உள்ளது.
எனவே இஸ்ரேல்-ஹமாஸ் போர் இரு தரப்புக்கும் மாற்று அணுகுமுறைக்கான காலத்தை வழங்கியுள்ளது. அது அமெரிக்காவின் வல்லரசுக்குமானதாக தெரிகிறது. அமெரிக்க -இஸ்ரேலியக் கூட்டின் போர் அணுகுமுறையொன்று நெருக்கடியை சந்தித்துள்ளது என்பது அதன் போக்கின மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது. இப் போரில் ரஷ்சியா சீனா நேரடியாக பங்கேற்காது விட்டாலும் அந்நாடுகளது அணுகுமுறை அமெரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவின் எஞ்சிய பகுதிகளையும் அமெரிக்கா இழக்கிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. இஸ்ரேல் தனது அணுகுமுறைகளில் மாற்றம் செய்யத் தவறுமாயின் பலஸ்தீனர்களும் யூதர்களும் ஒரே மனேநிலைக்குள் தள்ளப்படுவார்கள். எதிர்காலப் போர்கள் அத்தகைய விளைவுகளையே ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. நடந்து முடிந்த போர் யூத வரலாற்றின் திருப்பத்திற்குரிய காலம். அதனை இஸ்ரேல் புரிவதை விடுத்து அடுத்த போருக்கு தயாராவது போல் அதன் தலைமைகளும் இராணுவத்தினதும் உஎரையாடல்கள் அமைகிறது. அவை ஆபத்தான விளைவுகளை யூதர்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கோ ஏற்படுத்தும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தீம்புனல்)
