January 19, 2026
அரசியல் கட்டுரைகள்

ஜே.வி.பி. அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டமும் வடக்கு கிழக்கு அபிவிருத்தியும்?

ஜே.வி.பி. அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. இடதுசாரி அரசாங்கம் என்று அழைத்துக் கொள்ளப்படும் தேசிய மக்கள் சக்தி பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொள்வதில் அதிக கவனம் கொண்டு வரவு செலவு திட்டத்தை முன்மொழிந்திருப்பதாக தென்னிலங்கை தரப்புகள் மற்றும் அரசாங்க தரப்புகளும் முன்வைத்து வருகின்றன. வரவு செலவுத் திட்டமென்பது பொருளாதாரத்தை சரிசெய்வது ஒன்றாகவும் அரசியல் பொருளாதாரத்தை சரிசெய்வது இன்னென்றாகவும் காணப்படுகிறது. உலக நாடுகளிடம் இரண்டாவது அம்சமே மேலோங்கியிருப்பதை கண்டு கொள்ள முடிகிறது. ஆனால் இலங்கை போன்ற நாடுகள் இனரீதியில் முரண்பாடுகளை அதிகம் கொண்டிருக்கும் சூழலில் வரவு செலவுத் திட்டத்தை வெறும் பொருளாதார கண்கொண்டே நோக்குகின்றன. அதுவே இந்த நாடுகளின் தோல்விக்கான அடிப்படையாகும். ஈந்த வரவு செலவுத் திட்டம் பொறுத்து எதிர்கட்சிகளால் அதிகமான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. இதன் மீது வைக்கப்படுகிற விமர்சனம் எதுவும் முழுமையாக நிராகரிக்க் கூடியதல்ல. இக்கட்டுரையும் வரவு செலவுத் திட்டம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் முக்கியத்துவத்தை தேடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் முப்பது வருடத்திற்கு மேல் ஆயுதப்போரையும் 75 வருடத்திற்கு மேலான இனரீதியான பாரபட்சங்களையும் எதிர்கொண்டுள்ள வடக்கு கிழக்கு மக்கள் மீது எத்தகைய கரிசனையும் கொண்டுள்ள வரவு செலவு திட்டமாக காணப்படுகிறது என்பது தேடப்பட வேண்டியது. இத்தகைய வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி வடக்கு கிழக்குக்கான பொருளாதார அவிருத்தியை சாத்தியப்படுத்துவதற்கான அடிப்படையானதும் வளர்ச்சிக்கு தேவையானதுமான திட்டமிடலை பலப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளும் முக்கியமானவை. வரவு செலவுத் திட்டம் என்பது நிதி ஒதுக்கீடு என மட்டும் கருதப்படுவதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. இதுவே பொதுவான அவதானிப்பாக தெரிகின்றது. ஆனால் பொருளாதாரத் திட்டமிடலும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளும் பிரதானமானவையாகும். இந்த வரவு செலவுத்திட்டம் வரி வருமானங்களை அதிகமாக நம்பியிருக்கும் ஒன்றாகவும் கடன்படுநிலையை தீர்த்துக் கொள்ள முடியாத நெருக்கடிக்குள் அகப்பட்டு இருக்கும் அரசாங்கம் உலக வங்கியின் கடன் பெறுகையை பாதுகாப்பான பொருளாதார செய்முறைகளை கட்டமைக்க அதிகம் முயன்றிருக்கின்றது. சிறியரக கைத்தொழில் முயற்சிகள், பாரிய கைத்தொழில் திட்டங்கள், டியிற்ரல் பொருளாதாரம், கடன் திட்டங்கள் சலுகைத் திட்டங்கள் மற்றும் உல்லாசப்பயணத் துறையை மேம்படுத்துதல் என பலவிடயங்களுக்கு வரவு செலவுத் திட்டம் வகை செய்துள்ளது. இதனை அவமதானிக்கும் போது அபிவிருத்தித் திட்டங்களுக்கு அதிக நிதியினை ஒதுக்கியுள்ளதாகவே உணரப்படுகிறது. ஆனாலும் வடகிழக்குக்கு ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகின்ற போது திட்டமிடல் பலவீனம் ஒருபக்கம் அமைய அதற்கு அமைவாக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு தன்மை என்பது தனித்துவமில்லாத மிக மோசமான அல்லது பலவீனமான சூழலை உருவாக்கியுள்ளது. இதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது, வரவு செலவுத் திட்டம் என்பது வெறும் பொருளாதாரத்திற்கான பொறிமுறை மட்டும் கிடையாது. அது ஓர் அரசியல் பொருளாதார முறைக்கானது. போரினால் நீண்டகாலம் எத்தகைய அபிவிருத்தி திட்டங்களோ, செயல்பாடுகளோ அற்றதாக வடக்கு கிழக்கு பிரதேசம் காணப்படுகிறது. கல்வி, விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கான அடிப்படை அம்சங்களுக்கான கட்டுமானங்களை மேற்கொள்ளப்பட வேண்டிய பிராந்தியமாக உள்ளது. ஆனால் துரதிஸ்ரவசமாக அதற்கான நடவடிக்கைகள் எதனையும் இந்த அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் கவனம் கொள்ளவில்லை. குறிப்பாக வடகிழக்கில் உள்ள துறைமுகங்கள் கைத்தொழில் நிலையங்கள் விவசாய நிலங்கள் மீட்டெடுப்பதற்கான எந்த செய்முறையும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இல்லாதுள்ளது. உற்பத்திக்கான பொருளாதார செய்முறை எதனையும் வடக்கு கிழக்கு பங்கெடுக்க முடியாத அளவுக்கு நிலப்பயன்பாட்டிலும் கைத்தொழில் நிலையங்களை உருவாக்குவதிலும் கவனமற்ற ஒரு வரவு செலவு திட்டமாக விளங்குகிறது. இதனுடைய முழுமையான வடிவங்கள் அதன் நிதி ஒதுக்கீட்டுத் தன்மையிலிருந்து கண்டு கொள்ள முடிகின்றது. குறிப்பாக உயர்கல்விக்கு வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைகழகங்களும் அவை சார்ந்த இருக்கக்கூடிய உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் நிதி ஒதுக்கங்களில் காட்டிய அவதானம் என்பது தென்னிலங்கை பல்கலைக்கழகங்களுடன் அவற்றின் உயர் கல்வியோடு ஒப்பிடுகின்ற விதத்தில் மிக மோசமான நிலையை காட்டியுள்ளது. இது ஒரு தேசிய வரவு செலவுத்திட்டமாக அமைந்தாலும் பாதிப்புகளை அதிகம் கொண்டுள்ள பிராந்தியத்தின் மீது அரசாங்கம் கவனம் கொள்ளத் தவறியுள்ளது. கடந்தகால அரசாங்கங்கள் இனவாதத்தையும் பாரபட்டத்தையும் வடக்கு கிழக்கு மீது ஏற்படுத்தியதாக குறைகூறும் ஜே.வி.பி. அரசாங்கம் அத்தகைய நடவடிக்கைகளையே பின்பற்றியுள்ளது. இது ஒரு பாரியபாரபட்சமான நடவடிக்கையின் நீட்சியாக தென்படுகின்றது. வடக்கு கிழக்கு போரில் பலவீனப்பட்டிருப்பதுடன் சமகாலத்தில் சமத்துவம் சகோதரத்துவத்தை அதிகம் உச்சரிக்கும் அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் எத்தகைய வளப்பங்கீட்டையோ திட்டமிடலையோ உற்பத்தி செய்முறைக்கான வாய்ப்புகளையோ உருவாக்குவதற்கான முன்மொழிவுகளை சாத்தியப்படுத்துகின்ற நிதி திட்டங்களை உருவாக்க தவறியுள்ளது.

இரண்டாவது வடக்கு கிழக்கின் அரசியல் பொருளாதரத்தில் பிரதான இடம் வகித்திருக்கும் வெஸ்ரேன் யூனியன் பொருளாதாரமே வலுவான ஒன்றாக காணப்படுகிறது. தென்னிலங்கையின் வீதி போக்குவரத்து நீர் நிலைகளின் முதல் கட்டுமானங்கள் கைத்தொழில் நிலையங்களுக்கான விடயங்களை உருவாக்குவதற்கான நிதி திட்டங்களை வரவு செலவுத் திட்டம் முன்மொழிந்துள்ளது. இலங்கையின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடு 432 பில்லியன் ரூபாய்களாகும். ஆனால் அதில் முன்னுரிமையடிப்படையில் வடகிழக்கில் எத்தகைய வீதிப் அமைப்புக்களோ, நீர்த்திட்டங்களோ, தொழில்சார் நிறுவனங்களோ உட்படுத்தப்படவில்லை. அதே நேரம் குறிப்பாக வட கிழக்கு மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற அனைத்து திணைக்களங்களுக்கும் பாரிய நிதி உதவிகளை வரவு செலவுத் திட்டம் முன்மொழிந்திருக்கின்றது. வடக்கில் மகாவலி நீட்சிக்கான நிதி ஒதுக்கீடம் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களையும் தமிழர்களின் குடியிருப்புகளையும் ஊடறுத்து மேற்கொள்ளப்படும் கிவுல் ஓயா திட்டங்களுக்கு 2.5 பில்லியன் நிதி ஒதுக்கங்கள் அதீதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறே பாதுகாப்பு துறைக்கு மட்டுமின்றி ஆக்கிரமிப்பு மேற்கொள்ளுகின்ற திணைக்கலங்களுக்கும் அவற்றினுடைய நடவடிக்கைகளுக்கும் ஜே.வி.பி. அரசாங்கம் அதீதமான சலுகைகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் திட்டமிடலையும் வழங்கியிருக்கின்றது. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் வடக்கு கிழக்கில் இராணுவம் குடியிருக்கும் நிலங்களை விட்டு வெளியேறாத வகையில் விவசாயம் கைத்தொழில் மற்றும் கல்வி உயர்கல்வி போன்றவற்றுக்கு பாரியளவு நிதி ஒதுக்கம் செய்யாத சூழலிலும் வடகுகிழக்கினுடைய அரசியல் பொருளாதாரம் பலவீனமான சூழலுக்குள்ளேயே அகப்பட வாய்ப்பு உள்ளது. இளைஞர்கள் போதை பொருள் பாவனையாலும் வேலை இல்லாத நெருக்கடியினாலும் பாரிய சவால்களை எதிர் கொண்டுள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார சிதைவு மறுபக்கத்தில் அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் வழங்கப்படுகின்ற நிதியின் உதவிகள் வடக்கு கிழக்குக்கான உருவாக்கங்களை ஏற்படுத்த தவறியுள்ளமை மோசமான விளைவைத் தொடர்ந்து ஏற்படுத்த விளைவதாகவே தெரிகிறது.

எனவே ஜே.வி.பி.அரசாங்கமும் கடந்த அரசாங்கங்கள் போன்று இராணுவத்துக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை பேணுவதாகவே தெரிகிறது. அது மட்டுமன்றி உயர் கல்வி, விவசாயம், கைத்தொழில், நவீன தொழில் நுட்பம் சார்ந்து இருக்கக்கூடிய நடவடிக்கைகளுக்காக பாரிய நிதி ஒதுக்கீடுகள் எதனையும் வடக்குக்கிழக்குக்கு வழங்க முன்வரவில்லை. வடக்கு கிழக்கான அபிவிருத்திக்குரிய வாய்ப்புகளை கட்டமைக்க தவறுவதோடு ஏனைய பிரதேசங்களில் வழங்கப்பட்ட நிதியும் ஏற்படுத்தப்படுகின்ற ஒத்துழைப்பும் அரசியல் மேலாதிக்கத்துக்கான அணுகுமுறைகளை திட்டமிட முயல்கின்றது. ஒட்டுமொத்தத்தில் வடக்கு கிழக்கு ஜே.வி.பி.அரசாங்கத்தினால் வரவு செலவுத் திட்டத்தில் கைவிடப்பட்டுள்ளது. மாறாக வடக்கு கிழக்கில் இருக்கும் .ராணுவத்துக்கும் ஆக்கிரமிப்பு செய்யும் அரசு திணைக்களன்களுக்கும் பாரிய நிதி உதவிகளை முன்மொழிந்து உள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)