இலங்கைத் தீவின் அரசியல் எத்தகைய மாற்றமுமின்றி நகருகின்றது. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும்போது அதிக உத்தரவாதங்களை வெளிப்படுத்தியது. அத்தகைய உத்தரவாதங்களில் எதனையும் அதனால் செய்ய முடியாமல் உள்ளமை கவனத்திற்குரியது. அதுமட்டுமல்ல, அவ்வாறு மேற்கொள்ள முடியாமையே இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள அரசியல் என்பதையும், இப்பின்னனியில் தேசிய மக்கள் சக்தி கடந்த கால ஆட்சிகளின் தொடர்ச்சி என்பதையும் உணர்த்துகின்றது. இலங்கையில், ஈழத்தமிழரின் அரசியல் நெருக்கடி மற்றும் தேசிய இன பிரச்சனையை தீர்க்க முடியாத ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டது. அதேபோன்றே உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் இலங்கையின் எந்த அரசாங்கமும் தீர்க்க முடியாத ஒன்றாகவே அமைய போகின்றது. அதனைக் கட்டியம் கூறும் விதத்திலேயே இடதுசாரிகள் என்றும்; புரட்சியாளர்கள் என்றும்; சோசலிஸ்ட்கள் என்றும் தம்மை அடையாளப்படுத்தியவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இக்கட்டுரையும் உயர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதிபலிப்புகளும் ஜே.வி.பி அரசாங்கம் என்ற கருப்பொருளில் தேடலை முதன்மைப்படுத்த முனைகிறது.
தேசிய மக்கள் சக்தி என்பது ஜே.வி.பியின் இன்னொரு வடிவமாகும். தேசிய மக்கள் சக்தியின் பெயரால் ஜே.வி.பி ஆட்சியை அலங்கரித்து வருகிறது. ஜே.வி.பி கட்சித் தலைவர் அனுரகுமார திசநாயக்கவே தேசிய மக்கள் சக்தியின் தலைவராகவும் அலங்கரிக்கப்படுகின்றார். அதுமட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினருமற்ற ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தீர்மானமிகு முடிவுகளை எடுக்கும் நபராக காணப்படுகின்றார். ஆனால் சில ஜே.வி.பியின் விசுவாசிகள் ‘அது வேறு’, ‘இது வேறு’ என உரையாட முயல்கின்றனர். அதாவது ஜே.வி.பியை விட தேசிய மக்கள் சக்தி உயர்வு என உரையாட அதிகம் முயலுகின்றனர். ஜே.வி.பி என்பது இனவாதத்தின் அடையாளமாகவே தோற்றுவிக்கப்பட்டது. ரோகண விஜயவீர தலைவராக இருக்கின்ற போது அவர்கள் முன்வைத்த ஐந்தாவது பிரகடனம் அல்லது விரிவுரை இனவாதம் சார்ந்த ஒன்றாகவே இப்போதும் நினைவு கொள்ளப்படுகிறது. குறிப்பாக இந்திய எதிர்ப்புவாதம் மகாவம்ச மனநிலையில் தமிழர்களுக்கு எதிரானதாகவே அமைந்தது. எவ்வாறாயினும், சிறிது காலத்திற்குள்ளேயே, ஜே.வி.பி., வர்க்கப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளி, பெரும்பான்மை சிங்கள-பௌத்த உணர்வுகளுக்கு ஒரு வாகனமாக மாறியது. அத்தகைய இனவாதமே இலங்கைத் தீவின் அரசியல் கலாச்சாரம் ஆகும். இலங்கைத் தீவின் அரசியல் கலாச்சாரம் ஒன்றும் உலகத்தின் வரைவுகளுக்கோ நியாதிகளுக்கோ உட்பட்டது அல்ல. அரசியல் யாப்பு பற்றிய மக்களின் எண்ணங்கள் நாகரிகமான கலாச்சாரத்திலிருந்து கட்டமைக்கப்படுவது என்றவாறு அரசியல் கலாச்சாரம் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் அத்தகைய செய்முறை எதனையும் இலங்கை கொண்டிருக்கவில்லை. தென்னிலங்கையின் ஆட்சி முறைமை காலத்துக்கு காலம் இனவாத செய்முறைக்கு உள்ளாலையே அரசியலையும் நகர்த்தி வந்தது. அத்தகைய அரசியல் நகர்வின் நீட்சியாகவே தற்போதைய ஆட்சியின் வடிவமும் அமையப் பெற்றுள்ளது. இது எப்போதும் இன உணர்வோடும், இனவாத எண்ணத்தோடும், பௌத்த மேலாதிக்கத்தோடும் கட்டி எழுப்பப்பட்டதாகும். அத்தகைய வடிவத்துக்குள்ளால் தோன்றி, வளர்ந்தே தேசிய மக்கள் சக்தியும் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றது. இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்களும் ஏனைய கட்சிகளைப் போலவே போலியான வாக்குறுதி மற்றும் உணர்வுகளுக்குள்ளால் ஆட்சி அதிகாரத்தை கட்டமைத்து பிரயோகப்படுத்தி வருகின்றனர். இதற்கு ஆரோக்கியமான வடிவத்தை கொடுத்திருப்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரமாகும். அதனை ஆழமாக விளங்கிக் கொள்வது அவசியமானது.
முதலாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னைய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட உபாயம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு பரவலான குற்றச்சாட்டாகும். எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிறுத்தியே முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஆட்சியை கைப்பற்றினார் என்பது வெளிப்படையான உண்மையாகும். அத்தகைய உண்மையை கண்டறிவதற்கான வழிமுறையும் ஆதாரங்களும் அதிகமானவை. அவை எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு அல்லது அவற்றை எதனையும் கருத்தில் கொள்ளாது தேசிய மக்கள் சக்தி பெயரால் ஆளுகை செய்யும் ஜே.வி.பி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிறுத்திக் கொண்டு தென்னிலங்கையிலும் வடக்குக் கிழக்கிலும் ஒரு அரசியல் செய்முறையை நிகழ்த்தி வருகிறது. தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் இத்தகைய நகர்வையே காலங்காலமாக பின்பற்றுகின்றனர். ஒருவர், தான் ஜனாதிபதி ஆவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னெடுத்தார் அல்லது பயன்படுத்திக் கொள்கின்றார். அதே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிறுத்திக் கொண்டு இன்னும் ஒரு ஜனாதிபதி தனது அதிகாரத்தை தக்க வைப்பதற்கும், அத்தகைய குற்றச்செயலை திட்டமிட்டவர்களை பாதுகாப்பதற்கும் ஒரு அரசியல் அரங்கொன்றை வெளிப்படுத்தி உள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதனையே செய்கிறது. உயிர்த்த ஞாயிறு என்பது கிறிஸ்தவ மக்களின் உயிர் கொடையின் நினைவு தினமாகும். இயேசு கிறிஸ்து உயிர்பித்த தினமாக இந்நிகழ்வில் நினைவு கொள்கின்றனர். அத்தகைய உயரிய உயிர் கொடையின் தினத்தில் நிகழ்ந்த துயரத்தை முன்னிறுத்தி ஆட்சியை அலங்கரிக்க ஆட்சியாளர்கள் அவாப்படுகின்ற அரசியல் கலாச்சாரம் இலங்கை தீவுக்கு உரித்துடையதாகும். எந்த சூழலிலும் தென்னிலங்கை அத்தகைய உயிர் பலியிடலுக்கு பதிலீட்டையோ தீர்வையோ முன்வைத்தது கிடையாது. இது இலங்கைத் தீவின் அரசியல் வரலாறு முழுவதும் தோய்ந்து போன விடயமாகும். இலங்கைத் தீவில் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் தாராளவாதிகளும் எவர் ஆட்சி செய்தாலும் அதன் அரசியல் கலாச்சாரம் ஒன்றாகவே காணப்படுகிறது. அரசியல் அதிகாரமே இங்கு அனைவருக்கும் இலக்காக இருக்கின்றது. அத்தகைய அதிகாரமும் மக்களை ஏமாற்றி கையகப்படுத்துகின்ற ஒரு செய்முறையையே கடந்த வரலாறு முழுவதும் பின்பற்றி உள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பெயரால் ஆளும் ஜே.வி.பியும் அதனையே பிரயோகித்தனர்.
இரண்டாவது, ஒப்பீட்டு அடிப்படையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு-கிழக்கு தேசிய மக்கள் சக்தியோடு கைகோர்த்து இருந்ததாக உணரப்படுகிறது. அதில் வடக்கை விட கிழக்கு மாகாணம் அதீதமான தமிழ் தேசிய பற்றுறுதி கொண்டிருந்தது. வடக்கோடு ஒப்பிடும்போது கிழக்கு மாகாணம் தேசிய மக்கள் சக்திக்கு பெரும் ஆதரவை கொடுக்க தவறியது. அதனால் இனிவரும் தேர்தல்களில் கிழக்கு மாகாணத்தை தேசிய மக்கள் சக்தி தன்னுடைய இலக்கில் ஒன்றாக முதன்மைப்படுத்தி கொள்வதென்ற தீர்மானத்தை முன்னிறுத்தி உள்ளது. வடக்குக்கு தொடர்ச்சியாக ஜனாதிபதி முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரையும் கிழக்கு நோக்கி படையெடுக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்து வரும் பிரச்சாரங்களில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் வெளிப்படுத்தும் செய்திகள் தேசிய மக்கள் சக்திக்கு கிழக்கு தொடர்பில் காணப்படும் இலக்கினை உணர்த்துகின்றது. இவ்வகை செய்முறை என்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு மட்டுமின்றி அதற்கு அப்பாலும் நிகழ்ந்த தாக்குதல்களில் இரண்டு மாகாணங்களின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர்கள் கட்சியினுடைய தலைவர்கள் இலக்கு வைக்கப்பட இருப்பதாக எச்சரிக்கைகளும் செய்யப்படுகிறது. 1953ஆம் ஆண்டிலிருந்து 2009கள் வரை வடக்கு-கிழக்கில் நிகழ்ந்த ஆயிரக்கணக்கான படுகொலைகளுக்கு எத்தகைய தீர்வுகளையும் இந்த தரப்பு எண்ணமாக கொள்ளவில்லை. குறைந்தபட்சம் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை கூட அல்லது படுகொலையை கூட வேறு விதமாக சித்தரிக்க முயலுகிறது. ஆனால் உள்ளூரில் ஆட்சியைக் கைப்பற்ற உள்ளூர் நிர்வாகத்தை கைப்பற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எவ்வாறு கையாளுகிறது என்பது அதன் நடவடிக்கைகளில் இருந்து கண்டுகொள்ள முடிகிறது.
எனவே, ஈழத் தமிழர்களின் அகிம்சை போராட்டத்தினாலும் ஆயுதப் போராட்டத்தினாலும் நகர்ந்து போன இலங்கைத் தீவின் தென்னிலங்கை அரசியல் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மையப்படுத்தி நகரத் தொடங்கி இருக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி அமெரிக்க புலனாய்வின் அறிக்கை கூட உலக வல்லாதிக்க சக்திகளின் நலன்களை எந்த அளவுக்கு இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை கோடிட்டுக் காட்ட போதுமானதாகும். புதிய அரசாங்கம் ஒன்று மாற்றத்திற்கான அரசாங்கம் என்றோ அல்லது இடதுசாரி அரசாங்கம் என்றோ அளவீடு செய்து விட முடியாத அளவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மையப்படுத்திய அரசியல் அரங்கம் கட்டமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது. அதற்கான அறிக்கைகளும் அறிவிப்புகளும் உள்ளூர் மட்ட அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அறிக்கைகளாகவும் அறிவிப்புகளாகவுமே அமைய போகின்றன. இதன் துயரம் இலங்கைத் தீவின் அரசியல் கலாச்சாரம் முழுவதும் கண்டு கொள்ளக்கூடிய ஓர் அம்சமாகும். இதனை மீட்கும் சக்திகள் இலங்கைத் தீவில் அடுத்து வரும் தசாப்தங்களுக்கு கண்டுகொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்வது பொருத்தப்பாடு உடையது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி:தினக்குரல்)
