June 24, 2026
அரசியல் கட்டுரைகள்

கொசவோ-சேர்பிய மோதலும் நேட்டோவுக்கு எதிரான அரசியலும்?

உலக அரசியல் பால்டிக் குடியரசுகளை அதிகம் மையப்படுத்தியுள்ளதை அவதானிக்க் கூடியதாக உள்ளது. ரஷ்சியாவுக்கும் உக்ரையினுக்குமான மோதல் நேட்டோவுக்குள்ளால் ஏற்ட்பட்டது போல் கொசவோவுக்கும் சேர்பியாவுக்குமான முறுகல் நேட்டோ சார்ந்து எழுந்துள்ளதாகவே தெரிகிறது. நேட்டோ கிழக்கு ஐரோப்பாவை ஆக்கிரமித்தது போல் பால்டிக் குடியரசுகளையும் மத்திய ஆசியாவையும் நோக்கி தனது அரசியலை துரிதப்படுத்தி வருகிறது. இவை அனைத்துமே ரஷ்சியாவை மையப்படுத்தியதாக அமைந்திருப்பதுடன் இருதய நிலக் கோட்பாட்டின் அனைத்து பிராந்தியங்களையும் நோக்கி விஸ்தரிக்கப்படுவதனைக் காணக்கூடியதாக உள்ளது. விஞ்ஞான தொழில்நுட்ப வளர்சியடைந்த போதும் இருதய நிலக்கோட்பாட்டின் முக்கியத்துவம் குறையாதுள்ளதாகவே தெரிகிறது. அதனை உலகம் வெற்றி கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. இக்கட்டுரையும் கொசவோக்குள் எழுந்துள்ள நேட்டோ எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தேடுவதாக அமையவுள்ளது.

கடந்த ஏப்ரல் காலப்பகுதியிலிருந்து கொசவோ அல்பேனிய-சேர்பிய இனப் பிரிவுகளுக்கிடையிலான முரண்பாட்டை எதிர் நோக்கிவருகிறது. சேர்பியரை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு கொசவோவில் நான்குக்கு மேற்பட்ட உள்ளூராட்சிப் பிரதேசங்களில் அல்பேனியர்களுக்கும் சேர்பியர்களுக்குமான முறுகல் நிலை அதிக பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 26 மே (2023) கொசவோ அரசாங்கம் அத்தகைய பதட்டமுள்ள நான்கு உள்ளூராட்சிப்பகுதியையும் அதன் கட்டிடத் தொகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. சேர்பிய பெரும்பான்மை எதிர்புவாதக் குழுக்கள் அமெரிக்க தலைமையிலான நேட்டோ சமாதானப்படைகள் மீது தாக்குதல நடாத்தியதுடன் (மே-29) நேட்டோப்படைகள் காயத்திற்குள்ளாகியுள்ளனர். பலர் ஆபத்தான நிலையிலுள்ளதாக தெரியவந்துள்ளது. இத்தாக்குதலைக் கண்டித்துள்ள வோஷிங்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் கொசவேவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளன. அதேநேரம் வோஷிங்டன் கொசவோவுக்கு எதிரான தடைகளையும் அறிவித்துள்ளது. நேட்டோ உடனடியாக சமாதான பாதுகாப்பு பிரிவைக் கொண்ட 700 நேட்டோ படைகளை கொசவோவுக்குள் அனுப்பியுள்ளது. இப்படைகள் தாக்குதல் பிரிவு எனவும் சில ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. தற்போது 3 800 நேட்டோ படைகள் கொசவோவுக்குள் சாமாதான பாதுகாப்பு படையாக நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக சேர்பிய மக்கள் தீவிர ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். நேட்டோ படைகள் நிறுத்தப்பட்டதென்பதற்கு அப்பால் சேர்பிய பெரும்பான்மை பிராந்தியத்தில் வாழும் ஏனைய சிறுபான்மை இனங்களது இறைமைக்கு கொசவோ முக்கியத்துவம் கொடுப்பதாகவும் 1999இல் இருந்து சேர்பிய அல்பேனிய முரண்பாட்டை கையாள நிறுத்தப்பட்ட நேட்டோ படையினரது நடவடிக்கை மற்றும் துப்பாக்கிதாரிகள் (மே3 மற்றும் மே4 , 2023) இருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது சேர்பிய ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டமை என்பன ஆர்ப்பாட்டத்திற்கு பின்னாலுள்ள வலுவான காரணமாகத் தெரிகிறது. இதனை விட சேர்பியப் பிராந்தியத்தில் ஏப்ரல்-2023இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலை சேர்பியர் பகிஸ்கரிக்க அதனை அல்பேனியர் தேர்ந்தெடுக்கப்பட்டமை பிரதான முரண்பாட்டின் அடிப்படையாக உள்ளது. மீளவும் சேர்பியர்கள் தமது தாக்குதலை ஆரம்பிக்க போவதாகவும் நேட்டோவுக்கு எதிரான நடவடிக்கையை பால்கன் பிராந்தியத்தில் மேற்கொள்ள திட்டமிடுவதாகவும் கருதப்படுகிறது.

இத்தகைய நெருக்கடிக்கு பின்னால் கொசவோ அரசாங்கம் மீது அதிக குற்றச்சாட்டுக்களை சேர்பிய மக்கள் முன்வைக்கின்றனர். அதனை ஐரோப்பிய, அமெரிக்கத் தரப்புக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதோடு கொசவோ அரசாங்கத்தின் மீது நெருக்கடியை ஏற்படுத்த முனைகின்றன. 1999இல் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு முரணாக கொசவோ செயல்படுவதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அன்டேனியே பிளிங்டன் தெரிவித்துள்ளார். மேலும் இருநாட்டுக்குமான உறவில் கொசவோவின் நடவடிக்கை விரிசலை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே ஐரோப்பிய யூனியனும் கொசவோவுடனான பொருளாதார வர்த்தக உறவு பாதிப்படையும் எனத் தெரிவித்துள்ளது. முழுமையாக மேற்கு கொசவோ ஆட்சியின் நடவடிக்கைளை நிராகரித்துள்ளது. கொசவோ நாட்டின் பிரதமர் அல்பின் குர்ரீ (Albin Kurti) கொசவோவின் இறைமையை பாதுகாக்க வேண்டிய நிலை எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரம் சேர்பியர் உள்ளூராட்சித் தேர்தலை பகிஸ்கரித்த நிலையில் அதனைக் கைப்பற்றிய அல்பேனிய இனப்பரிவின் (Pristina) அனுமதியுடன் கொசவோவின் கொடி ஏற்றப்பட்டு சேர்பியரது ஆட்சி சின்னம் பொறிக்கப்பட்ட கொடி அகற்றப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அந்த கட்டிடத் தொகுதியில் ரஷ்சியா உக்ரையினுக்குள் தாக்குதலை தொடக்கியபோது பயன்படுத்திய ‘Z’ அடையாளமும் இடப்பட்டுள்ளதாக பிரித்தானிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு மொஸ்கோவின் திட்டமிட்ட நகர்வு காணப்படுவதாக மேற்கு ஊடகங்களும் புலனாய்வு துறையினரும் எண்ணுகின்றனர். மறுபக்கத்தில் அமெரிக்கா ஜனநாயக முறைப்படி தேர்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி நிர்வாகத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது. இது சேர்பியருக்கு எதிரான தீர்மானமாகவே சேர்பியர் கருதுகின்றனர். சேர்பியர்களது வன்முறையை கண்டித்துள்ள அமெரிக்கா ரஷ்சியாவுக்கு பின்னால் சேர்பியர் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இவை அனைத்தும் பால்கன் பிராந்தியத்தை மட்டுமல்ல மீளவும் கொசவோ-சேர்பிய விவகாரத்தை முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. இதனை விரிவாக விளங்கிக் கொள்வது அவசியமானது.

ஒன்று, பால்கன், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாப் பிராந்தியத்தில் ரஷ்சியாவின் ஆதிக்கமும் அதற்கு எதிரான மேற்குலகத்தரின் முறியடிப்பு போட்டியும் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் அரங்கேறிவருகிறது. அவ்வப்போது மட்டுப்படுத்தப்பட்டாலும் ரஷ்சிய ஜனாதிபதி புடினது ஆட்சிக்கு பின்னர் அதிதீவிரமான போக்கினை எட்டியுள்ளது. இது ரஷ்சியாவின் செல்வாக்குப் பிராந்தியம் மட்டுமல்லாது விளிம்பு நில நாடுகளாகவும் மையநில நாடுகளாகவும் ரஷ்சியாவுக்குரியன என்பதை மேற்கு கணிப்பிட்டுள்ளது. விளிம்புநில நாடுகளையும் மையநில நாடுகளையும் மேற்கு கபளீகரம் செய்யும் போது இருதய நிலத்தால் எதனையும் எட்ட முடியாதென்ற திட்டமிடலுடன் மேற்குலகத்தின் நகர்வு அமைந்துள்ளது.

இரண்டு, நேட்டோ அணிக்கு எதிரான மனோநிலைக்கான நகர்வென்றினை ரஷ்சியா தனது நாட்டிலும் பிராந்தியத்திலும் உருவாக்கியுள்ளது. நேட்டோவின் விஸ்தரிப்பினை முடிபுக்கு கொண்டுவர வேண்டிய நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் பால்கன் குடியரசுகளும் மத்திய ஆசிய நாடுகளுக்குள்ளும் ஏற்பட்டுள்ளது. அத்தகைய நகர்வு அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் எதிரானதாக வடிவமைக்கப்படுகிறது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் திணறும் மேற்கு ஐரோப்பா நேட்டோவின் விஸ்தரிப்பினால் தனது பொருளாதார நட்புக்களை இழக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு அதிகரிகிறது. ரஷ்சிய-உக்ரையின் போர் நீடிப்பதென்பது ரஷ்சியாவைவிட ஐரோப்பாவையே அதிகம் பாதிக்கப் போகிறது என றிச்சட் வெல்ப் குறிப்பிடுகின்றார். அப்படியாயின் பால்க்கன் நாடுகளில் எழுந்துள்ள நேட்டோவுக்கு எதிரான முரண்பாடு ஐரோப்பாவையே பாதிப்புக்கு உள்ளாக்க போகிறது. கொசவோ, சேர்பியர், மற்றும் அல்பேனியர் ஆகிய இனப் பிரிவுகளுக்கிடையே நேட்டோ முரண்பட்ட சக்தியாக மாறுகிறது. இதில் அல்பேனியரோடு நேட்டோ அதிக உறவு நிலையைப் பேண முயலுகிறதான குற்றச்சாட்டு சரியானதாகவே உள்ளது. ஆனால் இதன் விளைவு எழுச்சிபெறும் ரஷ்சியாவுக்கு வாய்ப்பானதாக அமையப்போகிறது. ஏற்கனவே சேர்பிய-கொசவோவுக்கு பின்னால் ரஷ்சியாவின் அழுத்தம் இருப்பதாக மேற்கு குற்றம்சாட்டி வருகிறது. அது அதிகமான பெரும்பான்மை சார்ந்த அரசியலாக அமையும் போது நேட்டோ நெருக்கடிக்கு உள்ளாக வாய்பு ஏற்படும். ஆனால் நேட்டோ முழுமையான உலகை கையாளும் இராணுவக் கட்டமைப்பு என்ற வகையிலும் அதனை விளங்கிக் கொள்ள வேண்டும். தற்போது இந்தியாவை ‘நேட்டோ+’ இணைத்துக் கொள்வது பற்றிய உரையாடல் நிகழுகிறது. இந்தியா அரசின் நிலைப்பாடு வெளியாகாத நிலையில் இந்திய ஆய்வுகளும் கொள்கை வகுப்பினரும் அதிக அதிருப்தி கொண்டுள்ளனர். அதே நேரம் குவாட், அக்குவாஸ் போன்றன நேட்டோவின் விஸ்தரிப்பாகவே கருதப்படுகிறது. எனவே பால்கன் பிராந்தியம் பொறுத்த நேட்டோவின் உபாயம் சாதரணமானதாக அமைந்துவிடாது. 1999 ஆண்டிலிருந்து நேட்டோ தனது படைகளை அப்பிராந்தியத்தில் நிறுத்தியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூன்று, கொசவோ முரண்பாட்டை கையாளும் விதத்தில் துருக்கியின் நகர்வு அதிகரித்துள்ளது. மேற்குலகத்தின் தோல்வியாக கருதும் ஆய்வுகள் துருக்கி ஒரு நேட்டோ நாடு என்பதை கவனத்தில் கொள்ள தவறுகின்றன. ஆனால் துருக்கியின் ஜனாதிபதி ஏர்டோகன் மீளவும் தேர்தலில் வெற்றியீட்டியதன் பயனாக ரஷ்சிய-துருக்கிய உறவு பலமானதாக அமைவதனாலும் மேற்குலகம் மீதான விமர்சனம் நியாயமானதாகவே தெரிகிறது. துருக்கியின் தலையீட்டை பற்றிய உரையாடலை தவிர்க்கும் கொசவோ புலமையாளர்கள் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கொசவோவின் இறைமையையும் இருப்பையும் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது பார்வையில் கொசவோ -சேர்பிய முரண்பாடு மேற்கு-ரஷ்சிய புவிசார் அரசியல் போட்டியினால் எழுந்துள்ளதாகவே கணிப்பிடுகின்றனர். இத்தகைய போக்கு நீடிக்குமாயின் அபாயமான நிலை கொசவோ-சேர்பிய பிராந்தியத்திற்கே ஏற்படும் என விவாதிக்கின்றனர்.

எனவே, பால்கன் பிராந்தியம் மீளவும் ஐரோப்பிய யூனியனின் பொருளாதார கட்டை உடைத்துக் கொள்வதுடன் நேட்டோவின் இராணுவ இருக்கைக்கு எதிரானதாகவும் எழுச்சிபெற ஆரம்பித்துள்ளன. இதற்கு அடிப்படையில் ரஷ்சியாவும் அதன் ஜனாதிபதி புடினும் பிரதான காரணி என்பதை மறுக்க முடியாது. ஏற்கனவே துண்டாடப்பட்டுள்ள தேசிய அடையாளங்கள் மேலும் உடைக்கப்படவும் அழிவடையவும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. தேசிய இனங்களது பிணக்குகளுக்கான தீர்வுகள் வல்லரசுகளது புவிசார் அரசியலும், பூகோள அரசியலும், சர்வதேச அரசியலும் அதன் நலன்களும் தீர்மானிக்கு நிலை நீடிக்கிறது. அதற்கான உலக ஒழுங்குக்குள்ளேயே தேசிய இனங்களது இருப்பு காணப்படுகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)