அரசியல் கட்டுரைகள்

இலங்கைத் தீவில் இடதுசாரிகளின் ஆட்சியும் முரண்பாடுகளைக் கொண்ட கல்விச் சீர்திருத்தமும்?

இலங்கைத் தீவின் வரலாற்றில் கல்விக்கான கொள்கைகளும் சீர்திருத்தங்களும் காலத்துக்கு காலம் நிகழ்ந்துவரும் ஓரம்சமாகும். தற்போதைய இடதுசாரி அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தியுமான ஜே.வி.பி புதிய கல்வி சீர்திருத்தத்தை முன்வைத்திருக்கின்றது. ஆனால் இச்சீர்திருத்தம் முன்னைய ஆட்சி காலத்தில் உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தத்தின் நீட்சி என்றே தெரியவருகிறது. 2022 இல் கலாநிதி பிறேம ஜெயந்தா தலைமையில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தம் பல மாற்றங்களுடன் தற்போதைய ஆட்சியில் பிரதமர் கலாநிதி ஹருணி அமரசூரியாவினால் தலைமைதாங்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது. அத்தகைய சீர்திருத்தத்தை உள்ளடக்கங்களும் அவை மீதான உரையாடல்களும் அதிகமாக விவாதிக்கப்படுகின்றது. இக் கட்டுரையும் கல்விக் கொள்கை புதிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகின்ற போது பின்பற்றப்படுகின்ற நடைமுறைகளையும் அதனால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளையும் தேடுவதாக உள்ளது.

கல்விக் கொள்கையின் சீர்திருத்தம் என்பது உலகத்தின் யதார்த்தத்திற்கும் உள்நாட்டின் நவீன வளர்ச்சிக்கும் ஏற்றதாக கட்டமைக்கப்படுகின்ற மரபு உண்டு. அதாவது ஏற்கனவே பின்பற்றப்பட்டுவரும் முறையான கல்வி கட்டமைப்பிலும் (Educational Structure) அதன் உள்ளடக்கத்திலும் (Core Curriculum) காணப்படும் மாற்றங்களே சீர்திருத்தம் என்று பொதுவாக கருத்தில் கொள்ளப்படுகிறது. அத்தகைய புதிய கட்டமைப்புக்கு ஏற்ப உள்ளடக்கங்களை மாற்றுவதன் மூலம் உலகத்தை எதிர் கொள்ளக்கூடிய வலுவான மனித வளங்களை உருவாக்குவதும் அதனூடான விளைவுகள் உரிய நாட்டில் அரசியல்-சமூக பொருளாதார-பண்பாட்டு முறைகளில் மாற்றத்தை அடைவதுமே பிரதான நோக்கமாகக் காணப்படுகிறது. தற்போதைய கல்விக் கொள்கையின் போதாமைகளை சரி செய்வதே அதன் முக்கிய அம்சமாகும். இலங்கைத் தீவின் போதாமை என்பது அரசியல் சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு முறைகளில் நிலவுகின்ற பாரபட்சங்களை இல்லாமல் செய்வது, சுதந்திரமான, சமத்துவமான, சகோதரத்துவமான கல்விக் கொள்கையை கட்டமைப்பதுமேயாகும். இதுவே இலங்கைத் தீவிற்கு அவசியமான ஒன்றாக காணப்படுகிறது. சீர்திருத்தங்கள் அத்தகைய அடிப்படைகளிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அத்தகைய சீர்திருத்தத்தை சர்வதேச ஆதிக்க சக்திகளின் நலன்களுக்கும் விருப்புகளுக்கும் இசைவாக மேற்கொள்ளப்படுவது என்பது மேற்குறித்த எண்ணங்களில் இருந்து முற்றாக விலகி அடிமைத்தனத்தின் வடிவமாக பிரதிபலிக்க முயல்வதாக தெரிகின்றது. இதனால் ஏற்பட போகும் விளைவுகள் பொறுத்து மறுசீரமைப்பின் உண்மையான பயன்கள் சாத்தியமாகும். எனவே அத்தகைய முரண்பட்ட வடிவத்தை விரிவாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம்.

முதலாவது தற்போதைய அரசாங்கம் முன்வைத்திருக்கும் கல்வி சீர்திருத்தமானது முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தினை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடு மட்டுமே நிகழ்வதாக தெரிகிறது. ஆனால் இந்த அரசாங்கம் இடதுசாரி கொள்கைகளுடன் உருவாக்கப்பட்டது என்ற பிரச்சாரத்தை முன்வைத்துக் கொண்டு தாராண்மை வாதத்துக்கும் நவதாரண்மை வாதத்துக்கும் முகம் கொடுக்கும் கல்வி சீர்திருத்தத்தை அதிகம் கவனத்தில் கொள்கிறது. சீர்திருத்தத்தின் சாராம்சம் கல்வியின் கட்டமைப்பையும் அதன் அறிவியல் முறைமையும் வளர்த்தெடுப்பதாக அமைவது தேவையானது ஒன்றாகும். இருபத்தியோரம் நூற்றாண்டினை எதிர் கொள்ளக் கூடிய மனித வளத்தை உருவாக்குவது சீர்திருத்தத்தின் பிரதான நோக்கமாக உள்ளது. அப்படியாயின் இடதுசாரி அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கும் அது முன்வைத்திருக்கும் கல்வி சீர்திருத்தத்மதிற்கும்; அதிக முரண்பாடு நிலவுவது தெரிகிறது. 1950 மற்றும் 1960களில் இடதுசாரிகளென தம்மை அடையாளப்படுத்தியவர்களான எஸ்.ஏ.விக்கிரமசிங்ஹா, என்.எம்.பெரேரா, மற்றும் பிலிப் குணவர்த்தனா போன்றவர்கள் முன்வைத்த சமத்துவ கல்வி (Equality Education) முன்மொழியப்பட்டிருந்தது. ஆனால் அவர்களே 1970களில் சுதந்திரக்கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் போது அவற்றை கைவிட்டு இன உணர்வுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்தனர். அதன் அடிப்படைகள் கூட தற்போதைய அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தத்தில் தென்படவில்லை. இடதுசாரி நோக்கில் கல்விச்சீர்திருத்தின் உள்ளடக்கம் பலவீனமான பக்கங்களை அதிகம் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. இடதுசாரிகள் முன்வைத்த சமத்துவக் கல்வியை எட்ட முடியாத இடதுசாரி அரசாங்கத்தின் வடிவமாகவே தெரிகிறது. இலங்கை தீவின் அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு முறைகளில் மாற்றங்களை முதன்மைப்படுத்தும் ஓர் அம்சமாக கல்வி சீர்திருத்தம் அமைவது அவசியமானது. முரண்பட்ட கட்டமைப்பினாலும் ஏற்றத்தாள்வுள்ள உள்ளடக்கங்களாலும்; ஆரோக்கியமான இலக்கை அடையக் கூடியவிதத்திலான சீர்திருத்தத்தை எட்டுவது என்பது கடினமான இலக்காகும். அவ்வாறு இலக்கை சரி செய்ய தவறுகின்ற சீர்திருத்தம் பாரிய மாற்றம் எதனையும் கொண்டு வந்து நிறுத்தி விடாது. மாறக விளைவுகள் மேலும் சமூகங்களுக்கு இடையிலே அதிக இடைவெளியை பிரதிபலிக்கக் கூடியதாகவே அமையும்.

இரண்டாவது கல்விக் கொள்கையின் சீர்திருத்தம் இரு பரிமாணங்களில் சாத்தியப்படுத்தப்பட வேண்டியது. ஒன்றும் அதன் கட்டமைப்பில் மாற்றுகின்றமை. இரண்டு அதன் உள்ளடக்கத்தில் மாற்றத்தை சாத்தியப்படுத்து. கட்டமைப்பு மாற்றப்படாத போது அதன் உள்ளடக்கம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக பலவீனமானது. அவ்வாறே உள்ளடக்கம் மாற்றத்துக்கு உள்ளாகின்ற போது கட்டமைப்பு சரிசெய்யாதுவிட்டால் மாற்றத்தை அடைய முடியாது. அதாவது கட்டமைப்பும் உள்ளடக்கமும் ஒன்றில் ஒன்று தங்கி இருக்கும் செய்முறைகளாகும். புதிய கல்வி சீர்திருத்தத்தின் முகாமை அவ்வாறே பேணப்படவேண்டும். அதன் உள்ளடக்கத்தில் மாற்றத்தை நோக்கி அமைகிறதேயன்றி அதன் நிர்வாக கட்டமைப்பு கல்விக் கொள்கை சார்ந்து அமையப் பெறவில்லை. அத்தகைய கல்விக் கொள்கையின் உள்ளடக்கங்களை நவீன உலகத்துக்கும் சமகாலத்துக்கும் ஏற்ற வகையில் மாற்றுகின்ற போது அதன் கட்டமைப்பு மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும். கட்டமைப்பு சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களும் சாத்தியமற்றதாகவே தெரிகிறது. ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் சீர்திருத்தத்திற்கான சிபாரிசுகள் சமகாலத்தையும் அதன் உலகத்தையும் எதிர்கொள்ள கூடியதாக இருக்கின்ற போது அதனை இயக்குகின்ற கட்டமைப்பு மரபு சார்ந்த உள்ளடக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பின்பற்றப்பட்ட நிறுவன வடிவங்கள் அதிக பலவீனமான சூழலையே கொண்டிருக்கின்றது. அவை பெருமளவுக்கு அரசியல் நலனுக்கானதாக கட்டியெழுப்பப்பட்டவையே. ஆவற்றைக் கொண்டு மறுசீரமைப்பு சாத்தியப்படாது.
மூன்றாவது இலங்கை தீவின் பொருளாதார நெருக்கடியும் இனங்களுக்கு இடையிலான முரண்பாடும் தீர்க்கப்படாத ஒரு சூழலில் கல்வி மறுசீரமைப்பு அதிகமான முரண்பாடுகளை தோற்றுவிக்க கூடியதாகவே தெரிகிறது. மேற்குலக நாடுகளில் வரைபுகளுக்கு உட்பட்டு தரையிறக்கங்களும் பின்பற்றுகைகளும் அதிக குழப்பத்தை தரக்கூடியது. இலங்கை சமூக அடுக்கமைவின் வடிவங்கள் வளர்ச்சி அடையாத சூழலில் முழுமையாக அமுலாக்கம் செய்வது என்பது மேலும் அதற்குரிய வடிவத்தை பலவீனப்படுத்துவதாக அமையும். கல்வி சீர்திருத்தம் மேலோட்டமாக அவதானிக்கின்ற போது அதிகமான சவால் மிக்க உலகத்தை எதிர் கொள்ளக்கூடிய மாணவ சமூகத்தை உருவாக்குவதாக தெரிகின்றது. கல்விக்கு தேசிய வருமானத்தில் ஆறு சதவீதத்தை ஒதுக்குவது மற்றும் சுதேச அடையாளங்களை முதன்மைப்படுத்தாது விஞ்ஞான தொழில் நுட்பத்திற்கு முக்கியத்துவம் வழங்குவது சுயகற்றலை ஏற்படுத்துவது நீடித்த கல்வியை உருவாக்குவது போன்ற விடயங்கள் வலுவான அம்சங்களாகும். ஆனால் அதிகமான ஏற்றதாழ்வான, கிராமிய நகர பண்புகளில் பெரும் வேறுபட்டைக் கொண்ட இலங்கை சமூகங்களிடையே நடைமுறைச்சாத்தியமற்ற செய்முறைகள் அதிகம் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. சீர்திருத்தம் நவீன தொழில் நுட்பத்தில் அதிகம் தங்கியிருக்க முயலுகிறது. ஆனால் அதனை பின்பற்றுகின்ற மாணவர்களையும் பெற்றோர்களையும் கொள்திறனாக கொள்வது கடினமானதே. அதனை பிரயோகப்படுத்துகின்ற அறிவியலிலும் வலுவுடைய சமூகமாக மாற்றப்படாத சூழலில் பாரபட்சமும் முரண்பாடும் ஏற்றத்தாழ்வும் நிலவுகின்ற சூழலில் சீர்திருத்துக்கான சிபார்சுகள் வெற்றி கொள்வது கடினமானதாகவே தெரிகிறது. 2016 இல் வறுமை 11.3 சதவீதமாக இருந்தது 2025 இல் 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இத்தகைய சவாலுக்குள் சிபார்சுகள் சாத்தியப்படுத்துவது கடினமானதாகவே தெரிகிறது. இத்தகைய சீர்திருத்தங்களை படிப்படியாக கட்டமைக்கப்பட்டு அத்தகைய நிறுவன வடிவங்கள் கூடாக மேற்கொள்கின்ற போது மட்டுமே அதன் இலக்கை இலகுவில் சாத்தியப்படுத்திவிடலாம். உலகளாவிய ரீதியில் இடதுசாரிகள் சீர்திருத்தங்களை கியூபாவிடமிருந்தே அதிகம் கற்றுக் கொள்ள முயலுகின்றனர். கியூபாவின் அனுபவம் இலங்கை போன்ற சிறிய தீவுகளுக்கு அதிக பொருத்தப்படானதாக அமையும். ஆனால் உலகத்தின் சமகாலப் போக்கும் இலங்கைத் தீவின் சமூக-பொருளாதாரக் கட்டமைப்பும் அரைகுறை இடதுசாரிகளுக்கே உரியதாகும்.

எனவே இலங்கைத்தீவு புதிய கல்வி சீர்திருத்தத்தை உள்வாங்குவதற்கான சமூக பொருளாதார பண்பாட்டு பரிமாணங்களை தயார் செய்ய வேண்டிய பொறுப்பும் அதனை அடிப்படையாகக் கொண்டு முறையையும் அதன் உள்ளடக்கமும் சமதளத்தில் மறுசீரமைக்கப்படுகின்ற போது வெற்றிகரமான மாற்றங்கள் சாத்தியமாகும். அவ்வாறே இடதுசாரிகள் முன்வைக்கும் சீர்திருத்தமானது சமத்துவ கல்வியை அதிகம் பிரதிபலிக்கக் கூடிய விதத்தில் கட்டமைக்கப்பட வேண்டியதேயன்றி தாராண்மைவாதத்திற்கும் நவ-தாராண்மைவாதத்திற்கும் பாலம் அமைப்பதாக இருந்துவிடக் கூடாது. ஆனால் இலங்கை தீவு அதற்கான எந்த தயாரிப்புகளையும் முன்வைப்புக்களையும் கொண்டிருக்காத ஒரு தேசம் என்ற அடிப்படையில் புதிய கல்வி சீர்திருத்தத்தை புரிந்து கொள்ளுதல் அவசியமானது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)