June 25, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கைத் தீவின் அரசியலில் சர்வதேச சக்திகளின் எல்லையும் தலையீடும்?

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வில் அமெரிக்கா-இந்தியாவின் பங்கு அதிகமானதாகவே காணப்படுகிறது. இனப்பிரச்சினையை ஆயுதப் போராட்டமாக மாற்றியதில் இந்தியாவுக்கு அதிகமான பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. அவ்வாறே அதன் தீவிர ஆயுதப் போராட்டத்தை கையாளவும் முடிபுக்கு கொண்டுவரவும் அமெரிக்காவின் பங்களிப்பு இல்லை என விவாதிக்க முடியாது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் பொருளாதார இராணுவ விடயங்களில் தலையீடு செய்வதில் அமெரிக்காவுக்கு தனியான பங்குண்டு. ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா என்பது மட்டுமன்றி சமகாலத்தில் உக்ரையினுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களும் நிதி உதவியும் எப்படியானதென்பது தெரிந்த விடயமே. அமெரிக்காவின் அரசியலே சர்வதேச அரசியல் தான். அது அரசியலாக மட்டுமல்ல பொருளாதாரமாக இராணுவமாக உலக நாடுகளுக்குள்ளே இயங்குகிறது. இக்கட்டுரையும் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் வெளிப்படுத்திய கருத்தின் யதார்த்தத்தை தேடுவதாக அமையவுள்ளது.

அனைத்து விடயங்களுக்கும் சர்வதேசம் தலையிட வேண்டும் என்று கூறாதீர்கள். சர்வதேச நாடுகளுக்கும் சில வரையறைகள் உண்டு என்று தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் தெரிவித்துள்ளார். இதே கருத்தினை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண கொக்கிளாய் மனிதப் புதைகுழி தொடர்பில் முன்வைக்கும் போது (13.07.2023) தமிழ் அரசியல்வாதிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அதாவது எடுத்தற்கெல்லாம் சர்வதேச விசாரணை, சர்வதேச கண்காணிப்பைக் கேட்பது சிறுபிள்ளைத்தனமானது அவ்வாறு செய்யாதீர் என்று தமிழ் அரசியல்வாதிகளை கோரியுள்ளார். இரண்டுமே ஒரே கருத்தாக உள்ளது. இதில் இலங்கை தீவின் அரசியல் மற்றும் நிர்வாகத் தரப்பு அத்தகைய கருத்தைக் கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதே. ஆனால் ஒரு வல்லரசு நாட்டின் தூதுவர் அவ்வாறு அனைத்திற்கும் சர்வதேசம் தலையிட வேண்டும் எனக்கூறுவது தவறெனக் தெரிவிப்பதே வினேதமாக உள்ளது. முதலில் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் அவ்வாறு கோருவதற்கான நியாயப்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசியலுக்குள் சுதந்திர காலம் முதல் இனப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக பல உடன்படிக்கைகள் புரிந்துணர்வு உடன்பாடுகள், பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறுதியில் இந்தியா இலங்கையுடன் இனப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக ஓர் உடன்பாட்டை எட்டியிருந்தது. அவை எதுவுமே அமுல்படுத்தப்படாதது மட்டுமன்றி அரசியலமைப்புக்கு உட்பட்ட பதின்மூன்றாவது திருச்சட்ட மூலத்தையும் முழுமையாக அமுலாக்காது 35 வருடங்களுக்கு மேலாக கையாண்டுள்ளது. அதற்கு புறம்பாக உள்நாட்டுக்குள்ளேயே ஓரினத்தின் மீது பெரும் போரை நிகழ்த்தியதுடன் தமிழர் மீது பாரிய அழிப்புகளை மேற்கொண்ட வரலாற்றை நினைவு கொள்வது தவிர்க்க முடியாதது. அதனையே தமிழ் கட்சிகள் தமது அனுபவமாகக் கொள்கின்றனர். இதனாலேயே சர்வதேசம் நோக்கிய நகர்வை தமிழ் அரசியல் கட்சிகள் முதன்மைப்படுத்துவதற்கு காரணமாகும்.

ஒரு தேசிய இனத்தின் இருப்பும் பாதுகாப்பும் சர்வதேச சட்டத்தில் தங்கியுள்ளது என்பது மட்டுமன்றி அத்தகைய சர்வதேச சட்டமே ஒடுக்கப்படும் தேசியங்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரித்தது. சர்வதேசத்தின் அனுசரணையுடனேயே தேசிய இனங்களின் விடுதலையும் பாதுகாப்பு சாத்தியமாகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சுதந்திரத்திற்கும் அப்பிராந்தியத்திலுள்ள தேசியங்களின் பாதுகாப்புக்கும் அமெரிக்காவின் பங்களிப்பு முதன்மையானது. அதனை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் விளங்கிக் கொள்ளாதவராக இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் கிழக்கு ஐரோப்பிய தேசியங்களுக்கு ஏகாதிபத்தியம் காலவலனாக இருந்துள்ளது. குருத்திஸ் தேசிய இனத்தின் ஈராக்கை மையப்படுத்தி அமைந்துள்ள சுயாட்சிக் கட்டமைப்புக்கும் அமெரிக்காவே பிரதான காரணமாக உள்ளதென்பதை மறந்துவிட முடியாது. உலகளாவிய தேசியங்களினது இருப்புக்கும் பாதுகாப்புக்கும் சர்வதேச நாடுகளே அடிப்படையான காரணமாக உள்ளது.

இது மட்டுமன்றி இதன் மறுபக்கத்தையும் சர்வதேச நாடுகளே கட்டமைக்கின்றன. அதில் அமெரிக்காவின் பங்களிப்பு அதீதமானது. சோவியத் யூனியனை வீழ்த்தி கிழக்கு ஐரோப்பிய நாடுகளை கூறுபோட்டது போல் ஆக்கானிஸ்தான மீதும் ஈராக் மீதும் போரை மேற்கொண்டு மேற்காசிய நாடுகளையும் அவற்றின் வளங்களையும் சூறையாடியது சர்வதேச அரசியலேயாகும். தற்போதும் மேற்காசிய நாடுகளின் மோதலுக்கும் அழிவுகளுக்கும் பின்னால் வல்லரசுகளின் சர்வதேச அரசியலே காரணமாகும். உலகளாவிய ரீதியில் சர்வதேச நாடுகளின் தலையீட்டினாலேயே போர்களும் சமாதான அரசியலும் நிகழ்கின்றது. வல்லரசுகள் தமது நலனை பாதுகாக்கவும் தமது பொருளாதார இலக்கை அடையவும் இராhணுவ அரசியல் ரீதியில் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் மத்திய அரசின் அரசியலமைப்பு தமது நாட்டின் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததைவிட உலகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது அதிகம் என்பதை நிராகரித்துவிட முடியாது. அமெரிக்காவின் வெளியுறவும், அதன் புலனாய்வுத் துறையும், இராணுவ கட்டமைப்பான பென்டகனும் உலகளாவிய ரீதியான வலையமைப்பினைக் கொண்டவை என்பது தெரியாத விடயமில்லை. 2022 கணிப்பின் படி அமெரிக்காவுக்கு வெளியே உலகளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் தொகை 1.18 மில்லியன் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமானது. இது அமெரிக்காவின் தலையீடு இல்லை என விவாதிக்க முடியுமா என்பது பிரதான கேள்வியாகும். இது மட்டுமன்றி 80 நாடுகளில் ஏறக்குறைய 750 மேற்பட்ட இராணுவத் தளங்களைக் கொண்டுள்ளதாக தகவல்கள் உண்டு. இவற்றின் எண்ணிக்கை அதிகம் என்றும் Nவுறு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவை எதனையும் அமெரிக்காவின் தலையீடு இல்லை என விவாதிக்க முடியுமா என்பது தவிர்க்க முடியாத கேள்வியாகும்.

இலங்கைத் தீவில் அரகலய போராட்டம் (ஒக்ரோபர் புரட்சி என்கிறார்கள்)ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்திற்கு அடிப்படையில் செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் சர்வதேச நாடுகளே காணப்படுகின்றன. அந்த நாடுகளின் ஆதரவே புரட்சிக்கு வழிவகுத்ததாக குற்றச்சாட்டு உண்டு. அவ்வாறே 2010 ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கும் சர்வதேச நாடுகளே காரணம் என்பதை மறுக்க முடியாது. அவ்வாறாயின் சாவதேசத்தின் எல்லை எது என்பது உச்சரிக்கப்பட வேண்டிய விடயமாகும். இலங்கைத் தீவில் சீனாவின் ஆதரவு பெற்ற ஆட்சியை விரட்டுவதே சர்வதேச நாடுகளின் (மேற்கு நாடுகள்) எல்லை போலவே தெரிகிறது. சீனாவுக்கு எதிராக மட்டுமே அமெரிக்கா இலங்கைத் தீவுக்குள் தலையீடு செய்யும் என்பது புலனாகிறது. அப்படியானால் ஏன் ஈழத்தமிழரது இனப்படுகொலை சார்ந்து அமெரிக்க காங்கிரஸ்ம், செனற்றிலும் விவாதிக்கிறார்கள் என்பது விளங்கவில்லை. அவ்வாறே ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானங்களை ஏன் அமெரிக்கா முன்மொழிந்து நிறைவேற்றுகிறது என்பதும் புரியப்படவில்லை. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிடுவது சரியாக அமைந்தால் அமெரிக்காவின் நடவடிக்’கைகள் அனைத்தும் போலித்தனமானவை. அல்லது ஏமாற்றுத்தனமானது என்பதை ஈழத்தமிழர் புரிந்து கொள்ள வேண்டுமென கூறுகின்றாரா?. அல்லது நிலமையை கையாள முனைகிறாரா? அத்தகைய நிலமை எதுவென்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

ஒன்று, இலங்கைக்கான அமெரிக்க தூதுவருடனான தமிழ் கட்சிகளது சந்திப்பு ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை மையப்படுத்தியது. இந்தியத் தூதுவரும் அதே நோக்கத்துடனேயே பழைய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைச் சந்தித்துள்ளார். அதன் அடுத்த நகர்வே ஜனாதிபதியின் தமிழ் கட்சிகளுடனான சந்திப்பு அமைந்திருந்தது. இத்தகைய மூன்று சந்திப்புகளும் ஒரே விளைவை அடைவதே. அதாவது ஜனாதிபதியின் இந்திய விஜயம் சுமூகமானதாக அமைய வேண்டும். இதில் அமெரிக்காவுக்கு இருந்த நோக்கம் ஜனாதிபதியுடன் தமிழ் தரப்புக்கள் சுமூகமான உறவைப் பேணுவதாகும். அதன் மூலமே ஜனாதிபதி அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மேற்குலகத்தின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும். அதற்கான ஒத்துழைப்பினை ஏற்படுத்த சர்வதேச நாடுகளின் எல்லையை குறிப்பிட்டு தமிழ் கட்சிகளின் தலைவர்களை மட்டுப்படுத்த முயன்றார். இதற்கான புரிதலை ஜனாதிபதி தமிழ் கட்சிகளுடன் உரையாடும் போது 2005 தன்னை நிராகரித்து தவறிளைத்தது போல் மீண்டும் ஆற்றிவிடாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தமை கவனத்திற்குரியது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் சம்பந்தனுடனான சந்திப்பும் தமிழ் கட்சிகளுடனான சந்திப்பும் ஜனாதிபதியுடனான சந்திப்பினை சாதகமாக்கு வதற்கானதாகவே தெரிகிறது. ஆனால் அது சாத்தியமாகவில்லை. முற்றிலும் வேறுபட்ட நிலையை தோற்றுவித்துள்ளது.

இரண்டு, இந்தித் தூதுவரது சம்பந்தருடனான சந்திப்பு ஜனாதிபதியுடனான சந்திப்பு மட்டுமன்றி ஜனாதிபதியின் இந்திய விஜயம் வெற்றிகரமானதாக அமைவதற்கானதாகும். இது முழுமையாக ஈழத்தமிழரது அரசியல் பிரச்சினைக்கு 13ம் சீர்திருத்தை தீர்வாக அங்கீகரிக்க வைப்பதாகும். அதனைத் தாண்டி இந்தியா ஈழத்தமிழருக்கான எத்தகைய முன்மொழிவையும் ஏற்றுக் கொள்ளாது என்பதை கோடிட்டுக் காட்டுவதாகவே தோன்றுகிறது. இதற்கு ஆதாரமாக இன்னோர் நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதாவது வடக்கு-கிழக்கு சிவில் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய பிராந்திய தூதரகத்திற்கு 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு வழங்கிய விண்ணப்பம் சார்ந்து இந்து பத்திரிகை தலைப்பு செய்தியாக்கியுள்ளது என்பதாகும். இவற்றை அவதானிக்கும் போது ஜனாதிபதி குறிப்பிட்டது போல் பொலிஸ் அதிகாரமற்ற 13 ஐ அமுல்படுத்துவதற்கான அங்கீகாரத்தை இந்தியா வழங்கி விட்டதாகவே தெரிகிறது. அதுவே ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்பான ஜனாதிபதியின் இராஜதந்திர வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. அது மட்டுமன்றி தமிழ் அரசியல் தலைவர்கள் மீதான ஜனாதிபதியின் அணுகுமுறையும் அதன் தாற்பரியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

எனவே அமெரிக்கத் தூதுவரது கருத்து அமெரிக்கா அல்லது மேற்கு நாடுகள் சர்வதேசம் என்று கரும் வரையுமே. ஆனால் இன்னோர் தரப்பும் புவிகோளத்தில் சர்வதேச சக்திகளாக உள்ளனர். அதில் சீனாவும் ரஷ்சியாவும் முக்கிய பங்குதாரராவார்கள். அத்தகைய சக்திகளின் நகர்வுகளும் சர்வதேச தலையீடுகளே. அத்தகைய அணியின் நகர்வு ஒட்டுமொத்த சர்வதேசத்தையும் சர்வதேச அரசியலையும் மாற்றக் கூடியது. அப்போது புவிசார் அரசியலும்,பூகோள அரசியலும் புதிய வடிவத்தை அடையும். சர்வதேசத்தின் நலன்கள் தான் அவற்றின் எல்லையும் தலையீட்டையும் தீர்மானிக்கும் அம்சங்கள் என்பதை அமெரிக்க தூதுவரது கருத்து தெளிவாக உணர்த்தியுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)