அரசியல் கட்டுரைகள்

ரஷ்சிய-உக்ரையின் போரை நீடிக்க திட்டமிடும் நேட்டோ தலைவர்களின் லித்துவேனிய சந்திப்பு?

உலகளாவிய அரசியல் பரப்பில் இராணுவ முக்கியத்துவமும் ஆயுததளபாடங்களும் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. முதலாம், இரண்டாம் உலக போர்களுக்கு பின்னர் நிகழ்ந்த போர்கள் பாரிய உலகப் போராக அமையாது விட்டாலும் ஆயுத உற்பத்தியின் அதிகரிப்பால் உலகம் கையாளப்படுகிறது. உலக அமைதிக்கு அத்தகைய ஆயுததளபாடங்களின் அதிகரிப்பே காரணமாக அமைவதாகவே நவ-யதார்த்தவாதிகள் குறிப்பிடுகின்றனர். உக்ரையின் மீதான போரை ரஷ்சியா தொடக்கியதிலிருந்து மேற்கு நாடுகளின் ஆயுததளபாடங்களின் மையநாடாக உக்ரையின் மாறிவிட்டது. ரஷ்சியாவின் பிராந்திய அதிகார பலத்தை தோற்கடிக்கும் மையநாடாக உக்ரையினை கையாளும் மேற்குலகத்திற்கு வாய்ப்பான நாடாகியுள்ளது. ஏறக்குறைய ஒரு பில்லியன் மக்கள் வெளியேறியுள்ள நிலையிலும் உக்ரையினை போரில் ஈடுபடுத்த விரும்பும் மேற்குலகம் நேட்டோவில் உக்ரையின் இணைப்பதை காலதாமதப்படுத்த விரும்புவதாகவே லித்துவேனியாவில் நிகழ்ந்த நேட்டோ மகாநாட்டின் முடிபு தெளிவுபடுத்துகிறது. இக்கட்டுரையும் நேட்டோ உக்ரையின் அரசியலை தேடுவதாக அமைய வுள்ளது.

நேட்டோ இராணுவ கூட்டணியில் உக்ரையின் எதிர்காலத்தில் இணைய முடியுமென நேட்டோத் தலைவர்கள் லித்துவேனியாவின் தலைநகர் வில்னியஸ்ல் நடைபெற்ற (11-12.07.2023) மகாநாட்டில் தெரிவித்துள்ளனர். உக்ரையினின் எதிர்காலம் நேட்டோவில் உள்ளது என்ற பிரகடனத்தின் மூலம் காலக்கெடு எதனையும் வழங்காமை குறிப்பிடத்தக்கதாகும். கூட்டணி நாடுகள் ஒப்புக் கொண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் போது கூட்டணியில் சேர உக்ரையினுக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில் நெட்டோ இருப்பதாக அத்தீர்மானம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இது பற்றி உக்ரையின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நேட்டோ தொடர்பில் அதிக விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார். இது நேட்டோ தலைவர்களின் மோசமான செயல் எனக்குறிப்பிட்டுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நேட்டோ கூட்டாளிகள் ஆதரிக்கும் நிலையில் ஜேர்மனி மற்றும் அமெரிக்க ஆகிய இரு நாடுகளுமே உக்ரையின் விடயத்தை கையாள முனைவதாக தெரியவருகிறது. அதாவது நேட்டோவில் உக்ரையின் இணைவதற்கான செயல்திட்டம் எதனையும் வில்னியஸ்ல் நடைபெற்ற மகாநாட்டில் எடுக்காமை ஜெலன்ஸ்கிக்கு அதிக ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரையின் நேட்டோவில் இணைவதே அதன் மீதான ரஷ்சியப் போருக்கு அடிப்படைக் காரணமாகும். உக்ரையின் நேட்டோவில் இணையுமானால் பிராந்திய பாதுகாப்பு மட்டுமன்றி ரஷ்சியாவின் எதிர்காலப் பாதுகாப்பே காணாமல் போய்விடும் என்ற நிலையே போருக்கான சூழலை ஏற்படுத்தியது. ரஷ்சியாவின் புவிசார் அரசியல் இருப்பு மீதான கேள்வியை நேட்டோவின் நகர்வு உருவாகட்கும் என்ற நிலையே போரை தூண்டிய காரணியாகும். அவ்வாறான சூழலில் உக்ரையின் ஜனாதிபதி உட்டபட உலகளாவிய தலைவர்களும் அவர்களது எண்ணமும் உக்ரையின் நேட்டோவில் இணைவது உறுதியானது. அப்படியானால் ஏன் தற்போது நேட்டோ தலைவர்கள் உக்ரையின் இணைவை காலம்தாள்த்த முனைகிறார்கள் என்பது பிரதான கேள்வியாகும். இதற்கான அடிப்படைகளைத் தேடுவது அவசியமானது.

ஒன்று, உக்ரையினை நேட்டோவில் இணைப்பது தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நோக்கமல்ல. நேட்டோ நாடுகள் உக்ரையினை நேட்டோவில் இணைப்பதென்ற விடயத்தை முதன்மைப்படுத்திக் கொண்டு ரஷ்சியாவுக்கு எதிரான அணியை கட்டமைப்பதற்காகவும் அதன் மூலம் ஏற்பட்ட போரினால் ரஷ்சியாவின் இருப்பை முழுமையாக பாதிக்க வைக்க முடியும் என்பதுவுமே அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் நோக்கமாகும். அதனை நேட்டோ என்ற இராணுவ பாதுகாப்பு அரணுக்குள் உக்ரையினை இணைப்பது என்ற ஒற்றைத் தீர்மானத்தின் மூலம் சாத்தியப்படுத்த முயன்றுள்ளன. இதில் ஏமாற்றத்தை அதிகம் அனுபவிக்கு நாடுகளில் உக்ரையினும் அதன் ஜனாதிபதியும் முதல் நிலையில் உள்ளனர். போரின் மூலம் ஒரு நாட்டை நேட்டோவில் இணைப்பதென்பது அபத்தமான அரசியலாகும். அதற்கு கட்டுப்பட்டதும் அதனை செயல்படுத்த முயன்றது உக்ரையின் மட்டுமே. அதனால் அதிக விளைவை உக்ரையின் எதிர்கொண்டுள்ளது. நேட்டோ நாடுகளின் நலனுக்காக உக்ரையின் மக்கள் கொல்லப்படுவதும் உக்ரையின் அழிக்கப்படுவதும் ஜெலன்ஸ்கியின் அரசியல் தோல்வியைக் காட்டுகிறது.

இரண்டு, உக்ரையின் விடயத்தில் நேட்டோத் தலைவர்களது காலதாமதத்திற்கு முக்கியமான அன்னோர் காரணம் போர் தொடரப்பட வேண்டும் என்பதாகும். உக்ரையின் நேட்டோவில் இணைவதென்பது சாத்தியமாகிவிட்டால் போர் முடிபுக்கு வந்துவிடும் என்ற கணக்கு போடப்படுகிறது. அது இரு வழிகளில் சாத்தியமாகலாம். ஒன்று, ரஷ்சியா முழுமையான போரை நடாத்தி உக்ரையினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம். அதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாகவே மேற்குலக இராணுவ ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் தரப்பினர் கருதுகின்றனர். அப்படியான நிலை ஏற்படுமாக இருந்தால் நேட்டோவுக்கு முழுமையான தோல்வியாக அமைந்துவிடும். அதனால் அத்தகைய நிலையை தடுக்க வேண்டுமாக இருந்தால் போர் உக்ரையினுக்குள் நிகழவேண்டுமாயின் தொடர்ந்து உக்ரையின் நேட்டோவில் இணைவதற்கான முனைப்பும் கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டு, ரஷ்சியா உக்ரையின் நாடுகள் மீது முழுநீள போரை ஆரம்பிக்கலாம். அப்போது உக்ரையின் மட்டுமல்ல முழுமையாக நேட்டோ நாடுகள் போரை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அது நேட்டோ நாடுகளுக்கு அதிக நெருக்கடியை கொடுக்கக் கூடியதாக அமையும். தற்போதே ரஷ்சியாவின் பொருளாதாரப் போரினால் பாரிய விளைவை எதிர் நோக்கியுள்ள நேட்டோ கூட்டாளிகள் ரஷ்சியாவின் போரினால் முழுமையாக நிலைகுலைந்து போகும் சூழல் ஏற்படும் என கருதுகின்றன. அதனால் போர் நிகழ்த்தப்பட வேண்டும். ஆனால் அது ரஷ்சிய-உக்ரையின் எல்லைக்குள் இருக்க வேண்டும். அதற்கான நிதியும் இராணுவ ஆயுததளபாடங்களும் வழங்குவதற்கு நேட்டோ நாடுகள் தயாராக இருக்கின்றன என்பதையே நேட்டோவின் நகர்வு தெளிவுபடுத்துகிறது.

மூன்று, ரஷ்சியா உக்ரையின் மீதான போரை நிகழ்த்தியதன் மூலம் மீண்டும் ஒருதடவை மைக்கிண்டரின் இருதய நிலக்கோட்டை நிலைநிறுத்தியுள்ளது. அதாவது ஐரோப்பாவையும் நேட்டோ நாடுகளையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. பொருளாதார சுமையினால் மட்டுமல்ல போர் நெருக்கடியாலும் நேட்டோ குழப்பத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ஐரோப்பிய அணியிலிருந்து கொண்டு நேட்டோ அணியின் நிபந்தனைகளை அமெரிக்காவின் நிபந்தனைகளாக கருதும் நிலை ஏற்பட்டதுடன் பிரான்ஸ்ன் சீன சார்பு போக்கானது நேட்டோவுக்குள் அதிக குழப்பத்தை தந்துள்ளது. இவற்றை கையாளுவதற்கு போர் நீடிக்க வேண்டியுள்ளது. ஆனால் அதன் விளைவும் நேட்டோவை பாதிக்காது இல்லை. தவிர்க்க முடியாத நிலைக்குள் நேட்டோவின் தலைவர்கள் உள்ளனர். நம்பிக்கையூட்டும் பதில்கள் அவர்களிடம் கிடையாது. உக்ரையினுக்கு கிளஸ்ரர் குண்டுகளை வழங்குவது பற்றிய முரண்பாடு நேட்டோவுக்குள் உண்டு. ஜேர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் அமெரிக்காவின் கிளஸ்ரர் குண்டுகளை உக்ரையினுக்கு வழங்குவதில் முரண்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளன. ஸ்பெயின் வெளிப்படையாகவே நிராகரித்துள்ளது. நேட்டோவில் இல்லாத நியூஸிலாந்தும் வெளிப்படையாக எதிர்த்துள்ளது. பிரிடன் பிரதமர் கிளஸ்ரர் குண்டுகள் பாவனை மற்றும் உற்பத்தி தொடர்பிலான உடன்பாட்டில் கைச்சாத்திட்ட 122 நாடுகளில் ஒன்றாகும் என்ற அடிப்படையில் கருத்து வெளியிட்டடுள்ளார் பிரதமர் ரிஷிசுனக்.

நான்கு, ஐரோப்பாவுடன் அல்லது நேட்டோவுடன் ரஷ்சியா நேரடி போரில் ஈடுபடும் நிலை ஏற்படும் என ஜேர்மனி கருதுகிறது. அதனை எதிர்கொள்ள முடியாத நிலையில் நேட்டோ காணப்படுகிறது. தற்போதைய நிலையே அபாயமானதாக உள்ள போது மீண்டும் ஒரு போர் சாத்தியப்படுமாயின் ஐரோப்பா முழுமையாக பாதிக்கும் நிலை ஏற்படுவது உறுதியாகும் என்ற நிலையே ஐரோப்பாவுக்குள் காணப்படுகிறது. அது மட்டுமல்லாது ஐரோப்பாவின் நிலையை விட அமெரிக்காவின் பொருளாதாரப் போக்கானது அதிக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் விவாதிக்கின்றனர். இதனால் போரை உக்ரையின் எல்லைக்குள் வைத்திருப்பதென்ற முடிபு நேட்டோவுக்கு ஏற்பட்டுள்ளது. ஜெலன்ஸ்கியும் உக்ரையின் மக்களும் துயரத்தின் எச்சங்கள். தலைமைகளின் தூரநோக்கற்ற முடிபுகளால் மக்களதும் நாடுகளதும் அழிவும் துயரமும் தவிர்க்க முடியாததாகிறது.

எனவே உக்ரையின் ரஷ்சிய-நேட்டோ புவிசார் அரசியலுக்குள் அகப்பட்டு அழிவை எதிர்நோக்கியுள்ளது. மீள முடியாத நெருக்கடிக்குள் உக்ரையின் நிலை உள்ளதாகவும் உக்ரையினை கட்டியெழுப்ப பல பில்லியன்களும் நீண்ட காலமும் தேவைப்படுமெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நேட்டோவில் உக்ரையின் எதிர்காலம் மட்டுமல்ல நேட்டோவின் எதிர்காலமே உக்ரையின் ரஷ்சியப் போரிலே தங்கியுள்ளதாக தெரிகிறது. அதனை நோக்கியே நேட்டோ நகர்கிறது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் தோன்றி பாதுகாப்பு கூட்டணியில் எஞ்சியிருந்த நேட்டோவும் அதிக நெருக்கடியை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. உக்ரையின்-ரஷ்சிய போரே அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)