அரசியல் கட்டுரைகள்

இந்தியாவின் பலவீனத்தை பயன்படுத்தும் மலிந்த மொறகொடவும் ரணில்விக்கிரமசிங்ஹாவும்?

இலங்கையின் ஆட்சியாளரின் வெளியுறவு பயணம் மரபுரிதியாக இந்தியாவை நோக்கியதாக அமைவது வழமையான அரசியலாகவே தென்படுவதுண்டு. அதற்காக இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை சார்ந்தோ அல்லது இந்தியாவுக்கு முதன்மை என்றோ அர்த்தம் கிடையாது. மாறாக அயலவர் என்ற வகையில் அவர்களை ஏமாற்ற பயன்படுத்தும் உத்தியாகவே அமைந்திருந்தது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவுக்கு கிடைத்த அதிஷ்டம் அலாதியானது. இரு வேறு மரணச்சடங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மேற்குலகத்துடனான வெளியுறவை தெளிவாக கட்டமைப்பதில் கரிசனை கொண்டு செயல்படுகின்றதைக் காணமுடிகிறது. குறிப்பாக பிரித்தானிய மகாராணியினதும் ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷிஞ்சோ அபியினதும் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கான இலங்கை ஜனாதிபதியின் விஜயம் பதவியேற்று பின்பான முதல் மரபுசார் இந்திய விஜயத்தை சாத்தியமற்றதாக்கியுள்ளது. ஏற்கனவே சீனாவுக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டதாக செய்திகள் வெளியான போதும் இலங்கை ஜனாதிபதி தனது நவதாராள நட்பு நாடுகளுக்கே முதல் விஜயத்தை நிகழ்த்தியுள்ளார். அது மரணச்சடங்கானாலும் அதனை இராஜதந்திர நகர்வாகவே இலங்கை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். இக்கட்டுரையும் இலங்கை ஜனாதிபதியின் நட்பு நாடுகளுக்கான முதல் விஜயத்தையும் இலங்கைக்கான இந்திய தூதுவர் மிலிந்த மொறகொடவின் இந்தியா பற்றிய கருத்தினையும் தேடுவதாக உள்ளது.

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மரணச்சடங்குக்காக பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி உலகத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அவ்வாறே புலம்பெயர்ந்த இலங்கையரையும் சந்தித் உரையாடியதுடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் விதத்தில் அவர்களை செயல்படவும் முதலீடுகளை ஊக்குவிக்கவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துதருந்தார். ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருப்பதுடன் உள்நாட்டு பொருளாதார நெருக்கடியையும் அரசியல் நெருக்கடியையும் கையாளுவதற்கான நகர்வாகவே தெரிகிறது.

அவ்வாறே ஜப்பானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அது மட்டுமன்றி சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லோங் ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமசாஹயாஷி உடனான சந்திப்பினையும் உரையாடலையும் மேற்கொண்டுள்ளதாக அவ்வூடகச் செய்திகளன் உறுதிப்படுத்துகின்றன. பிலிப்பைன்ஸ்ல் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் எனவும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையில் இச்சந்திப்பு முக்கியமானதெனவும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பொருளாதார ஒத்துழைப்பினையும் முதலீடகளையும் இலங்கையில் ஏற்படுத்தும் நோக்கு நிலையிலேயே இலங்கை ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயம் உணர்த்தியுள்ளது.

மறுபக்கத்தில் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைத் தரப்பும் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் முயன்றுவருவதனை காணமுடிகிறது. அவ்வாறாயின் இரு நாட்டுக்குமான உறவில் விரிசல் காணப்படுவது போல் தெரிகிறது. அத்தகைய செய்தியில் உண்மை காணப்படுவதை தூதுவர்களது செய்திகளும் அணுகுமுறைகளும் தெளிவுபடுத்துகின்றன. சீனக்கப்பலான யுவான் வாங்-5 இன் வருகைக்குப் பின்னர் இரு நாட்டுக்குமான பாதுகாப்புக் கொள்கை மட்டுமன்றி அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் விரிசலைக் கொண்டதாகவே தெரிகிறது. ஆனால் அதனை இந்தியத் தரப்பும் இலங்கைத் தரப்பும் பதிலுக்கு கையாளுவதன் மூலம் தீர்த்துக் கொள்ள முயலுகின்றன. அதிலும் இலங்கை வழமையான மரபுசார் தந்திரங்கள் மூலம் அதனை சரிசெய்யவும் முயலுகின்றது. அதே வேளை இந்தியாவும் கடந்த காலம் போன்று பலமான அணுகுமுறைக்கு பதிலாக மென்மையான போக்கினை கையாண்டு இலங்கையை தனது செல்வாக்குக்குள் கொண்டுவரலாம் என கருதுகிறது. அவ்வகை அணுகுமுறைகளால் இலங்கையை கையாள முடியாது என்பது கடந்த கால அனுபவமாகவே தெரிகிறது. குறிப்பாக 19 செப்ரெம்பர் புதுடில்லியில் பெண்கள் ஊடக அமையத்தில் நிகழ்ந்த உரையாடலின் போது இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்த கருத்து முதன்மையானது. அதாவது இலங்கையின் மிக நெருக்கமான நண்பன் சீனா என்றும் ஆனால் இந்தியா சகோதர சகோதரி உறவைக் கொண்டது. புதுடில்லியின் பாதுகாப்பு நலன் என்பது இலங்கைத்தீவின் சொந்த பாதுகாப்பு நலன் போன்றது.இரு நாட்டுக்குமான உறவு வரலாற்று ரீதியாக முக்கியமானது. இரு நாட்டுக்குமான உறவானது சீதாதேவியாலும் சங்கமித்தையாலும் கட்டப்பட்ட பாலமாகும். இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. ஆனால் அத்தகைய உறவு விசேடமானது எனத் தெரிவித்தார். மேலும் அவர் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியின் போது உதவிய நாடு இந்தியா அதற்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

இவ்வாறு இந்தியாவுடனான விரிசலும் முரண்பாடும் தலைதூக்கும் போதெல்லாம் இலங்கை ஆட்சியாளர்கள் வெற்றிகரமாக நகர்ந்து உறவை சரிசெய்துவிடுவது வழமையாக உள்ளது. இந்தியாவும்’ அதனை நிரந்தரமான நட்பு நாட்டுக்கான வடிவமாக முன்னெடுத்துக் கொண்டு செயல்படுவதைக் காணமுடிகிறது. காரணம் இந்தியாவின் இயலாமை அல்லது மேலாதிக்கத்திற்கான பலவீனமான திட்டமிடல். இதனை விரிவாக தேடுவது அவசியமானது.

முதலாவது, இலங்கை-இந்திய உறவு தூதுவர் மிலிந்த மொறகொட குறிப்பிடுவது போல் ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. ஆனால் அனைத்து இறக்கங்களிலும் இலங்கை ஆட்சியாளர்கள் வெற்றிகரமாக நகர்கிறார்கள் என்பது அவதானமாகவுள்ளது. காரணம் விட்டுக்கொடுப்புகளை செய்யக்கூடிய தளத்தில் இலங்கை ஆட்சியாளரில் அரசியல் தலைமைகள் உள்ளன. இலக்கை அடைவதற்காக விட்டுக் கொடுப்புகளை செய்து வெற்றிபெறுகிறார்கள். அதாவது மூலோபாயத்தில் தெளிவும் தந்திரோபாயத்தில் ஏற்ற இறக்கமும் கொண்டவர்களாக தென் இலங்கை ஆட்சியாளர்கள் காணப்படுகின்றார்கள். தற்போது மிலிந்த மொறகொட கூறுவதையே முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷா தனது ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்தியா முதலிடம் என்று கூறிக் கொண்டு டீ.எஸ்.சேனநாயக்கா பிரித்தானியாவுக்கு முன்னுரிமையும், இந்தியா முதலிடம் என்று கூறிக்கொண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அமெரிக்காவுக்கு முதலிடமும் கொடுத்து செயல்பட்டது போலவே தற்போதைய ஆட்சியாளர்களும் இயங்குகிறார்கள். அவர்கள் உள்நாட்டில் முரண்பாடுடையவர்களாக காட்டிக் கொண்டாலும் இலக்குக்காக பிராந்தியத்திலும் சர்வதேசத்திலும் கூட்டாக தொழில்படுகிறார்கள். இந்தியாவை மட்டுமல்ல ஜெனீவாவையும் தென் இலங்கைத் தரப்பு புரிதலுடன் கூட்டாக இயங்குகிறது. ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா பிரித்தானியாவிலும் ஜப்பானிலும் ஆற்றுவதும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஜெனீவாவில் மேற்கொள்வதும் மிலிந்த மொறகொட இந்தியாவில் நிகழ்த்துவதும் ஓரே இலக்கை அடைவதற்கான மூலோபாயங்களே. தந்திரோபாயங்கள் மாறுபட்டதாக அமைந்திருக்கலாம்.

இரண்டாவது, இந்தியாவைப் பொறுத்தவரை நேரு-இந்திரா காந்தி காலத்திற்கு பின்னர் தென்னாசியாவிலும் இந்துசமுத்திரத்திலும் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாடு. ஆனால் அதனை அடைவதற்காக பேராடிக்கொண்டிருக்கும் நாடு என்று மட்டுமே குறிப்பிட முடியும். அதிலும் பலவீனமே அதீதமானது. இந்தியா பிராந்திய வல்லரசு என்ற நிலையை இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின்னர் இழந்துள்ளது.அதனால் பிராந்தியத்தில் அதனது ஆதிக்கம் சாத்தியமற்றுள்ளது. இந்தியா பண்பாட்டு அiடிப்படையிலான நாடு மட்மே. அதனை ஒரு தேசமாகவோ வல்லரசாகவோ கொள்ள முடியாது. இந்தியா நூற்றுக்கணக்கான தேசிய இனங்களைக் கொண்ட நாடு. பொருளாதார ரீதியில் வலுவான வளர்ச்சியை நோக்கி நகருகிறது. ஆனால் அதன் அரசியல் இராணுவ வலுவென்பது பலவீனமானதாகவே காணப்படுகிறது. இவை அனைத்தும் பிற நாடுகளுடன் ஒப்பிடுவதனாலேயே அளக்கப்படுகிறது. இந்தியாவின் அகிம்சை, சமாதானம், நடுநிலமை போன்ற வெளியுறவில் தாக்கம் செலுத்தும் கொள்கையினால் இராணுவ பலக்கோட்பாட்டை பேணமுடியாத நிலைக்குள் இயங்கும் நாடாக காணப்படுகிறது. கி.மு.4 ஆம் நூற்றாண்டில் கௌடில்லியரால் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம் எனும் நூல் இராணுவபலக் கோட்பாட்டில் (Realism) எழுந்ததே. ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் கொள்கைவகுப்பாளரிடமும் அரசியல் தலைமைகளிடமும் பலவீனமான மனோநிலை கட்டமைக்கப்பட்டுள்ளது. அதுவே இலங்கைத் தீவு பொறுத்து அவர்களது கொள்கையின் தோல்விகளுக்கெல்லாம் மூலதாரமாகும். அது மட்டுமன்றி இலங்கை ஆட்சியாளரின் உத்திகளும் அவர்கள் வெளியுறவை கட்டமைத்த வடிவமும் அத்தகைய தோல்வியை மேலும் ஊக்குவித்துள்ளது. நாடு மற்றும் அரசு என்ற அடிப்படையில் இந்தியர்கள் செயல்படுவது சரியானது. ஆனால் ஒரு தேசமாக அல்லது தேசியமாக அல்லது பிராந்திய வல்லரசாக அல்லது வல்லரசாக செயல்படுவதில் தோல்வியையே சந்தித்துவருகின்றனர்.

மூன்றாவது, இத்தகைய நிலையில் இந்தியா ஈழத்தமிழருக்கு தீர்வை முன்வைக்கும் நிலையில் பிறசக்திகளைக் கையாண்டு வெற்றிகொள்ளும் இராணுவ பலம் இல்லாத நாடு. அதனைவிட இந்தியாவுக்குள் தேசிய இனங்கள் சார்ந்து புதுடில்லி கொண்டுள்ள கொள்கைகள் முன்பின் முரண்பாடுடையவை. எல்லாவற்றுக்கும் மேலாக வடக்கு கிழக்கில் நிலைகொண்ட இந்திய இராணுவ ஆதிக்கத்திற்கும்; சிறிபெரும்புத்தூரில் துன்பியலுக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள உறவில் ஈழத்தமிழர் சார்ந்த அரசியல் தீர்வுகளில் இந்தியாவின் நிலைப்பாடு முரண்பாடுடையதாகவே அமையும். தமிழகத்துடன் ஈழத்தமிழருக்குரிய நெருக்கம் வேறு. புதுடில்லிக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான உறவு வேறு. புதுடில்லி எப்போதும் கொழும்பை அரவணைத்தே செயல்படும். காரணம் இந்தியா எப்போதும் ஓர் அரசாக அல்லது ஒரு நாடாக செயல்பட முனைகிறது. அது ஒரு தேசமாக சிந்திக்க தலைப்படவில்லை. இதனையே ஜெனீவாவில் கண்டுகொள்ள முடிகிறது. ஈழத்தமிழர் அதனை விளங்கிக் கொண்டு அனைத்து நாடுகளையும் கையாளும் அணுகுமுறையை முதன்மைப்படுத்த வேண்டும். இந்தியா புவிசார் நிலையில் முதன்மையான நாடு. அதனை அனுசரித்தல் என்பது அடிமைப்படுதல் அல்ல. உலகளாவிய அரசியல் போக்குகளுக்குள்ளால் ஈழத்தமிழர் நகர வேண்டும். அவ்வாறில்லாத சூழல் காணப்படும் வரை தீர்வு மட்டுமல்ல இருப்பும் சாத்தியமற்றுப் போகும்.

எனவே ஜனாதிபதியின் நவதாராளவாத நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கை இந்தியாவுக்கு நெருக்கடியானதாக அமையவாய்ப்புள்ளது. அத்தகைய உறவு இலங்கையின் சீன சார்பு நிலையை பலவீனப்படுத்துவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்தும். ஆனால் அடிப்படையில் இலங்கையின் வெளியுறவின் மையவாத கருத்துநிலை சீனா சார்ந்ததே. இது எந்த ஆட்சியாளர் இலங்கையை ஆட்சி செய்தாலும் அதுவே அடிப்படையானது. கட்சி பேதமின்றி சீனாவுடனான உறவு இலங்கைத் தீவுக்கு அவசியமானது. அதன் மூலமே ஈழத்தமிழர் சார்ந்த சர்வதேச சமூகத்தின் போக்கினை கையாள முடியும் என்பதில் தென் இலங்கை ஆட்சியாளர்கள் புலமையாளர்கள் கொள்கைவகுப்பாளர்கள் தெளிவான சிந்தனையுடன் காணப்படுகின்றனர். ஈழத்திழழர்களே கொள்கைகளாலும் செயல்பாட்டாலும் குழம்பியுள்ளனர்.

-பேராசிரியர்.கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)