அரசியல் கட்டுரைகள்

மிலிந்த மொறகொடவின் இந்தியா நோக்கிய வழி வரைபடமும் இலங்கை தமிழர் அரசியலும்

இலங்கை இந்திய உறவு சீர்படுத்த வேண்டிய நிலைக்குள் இருக்கின்றது என்பதை இலங்கை நன்குணர்ந்துள்ளது. இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட ஏறக்குறைய ஒரு வருடங்களுக்கு பின்னர் தனது பதவியை பொறுப்பேற்க உள்ளமை அவரது முக்கியத்தவத்தையும் இலங்கை இந்திய உறவின் தனித்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மிலிந்த மொறகொட சட்ட வல்லுனராகவும் போர்க்காலத்தில் சிறந்த ராஜதந்திரியாகவும் பொருளாதார கொள்கை வகுப்பாளராக விளங்கியதுடன் அவரது பாத் பைன்டர் என்ற அமைப்பு ஏற்படுத்திய அதீதமான மாற்றங்கள் சீனா மற்றும் குவாட் நாடுகள் மத்தியில் இலங்கையை நிலைநிறுத்துவதில் வெற்றிகரமான திட்டங்களை கொண்டுள்ளார் என்ற அடிப்படையிலும் புதுடில்லிக்கான தூதுவராக இலங்கை ஆட்சியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இக்கட்டுரை இலங்கை இந்தியாவை Commercial Diplomacy-க்கு ஊடாக கையாள திட்டமிடுகிறது என்பதை வெளிக்கொண்டு வரும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது.

மிலிந்த மொறகொட அவரது இந்திய பிராந்தியங்களின் துணைத்தூதுவர்களும் இணைந்து இலங்கை-இந்தியா உறவை மீளமைப்பதற்கான வழிவரைபடமொன்றினை தயாரித்துள்ளார். இந்தியாவின் முக்கியத்துவமும் புவிசார் அரசியல் தனித்துவமும் அது அண்மையில் ஏற்படுத்திவரும் மாற்றங்களும் இத்தகைய வழிவரைபடத்தை தயாரிப்பதற்கு காரணமென இந்தியாவிற்கான இலங்கையின் துணைத்தூதுவர் நிலுக்க கடுறுகமுவ குறிப்பிட்டுள்ளார். அவரே இதனை இந்திய-இலங்கைக்கான வழிவரைபடமெனவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது Integrated Country strategy for Sri Lanka Diplomatic Mission 2021-2023 எனும் கருப்பொருளில் இத்தகைய வழிவரைபடம் தயார்செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கு இந்தியாவுடன் நீண்ட தந்திரோபாயம் தேவைப்படுகின்றதெனவும் மாறுபட்ட அரசியல் அணுகுமுறைகள் மூலம் இந்தியாவுடனான புரிதலை வலுப்படுத்த இலங்கை அரசாங்கம் முனைகின்றதென்றும் இத்திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல் எனவும் மிலிந்த மொறகொட தலைமையிலான இக்குழு தீர்மானித்துள்ளது.

இந்தக்குழுவின் தந்திரோபாயமானது குவாட் நாடுகளில் ஒன்றான இந்தியாவை இராஜதந்திரீதியில் இணைத்துக்கொள்வதோடு கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இழந்து போன இந்தியாவின் அதிருப்தியை சரிப்படுத்துவதோடு இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலே நிலவி வரும் பலவீனமான உறவினை சரிசெய்யவும் இருபக்க பரிவர்த்தனையை அதிகரிப்பதனூடாக அத்தகைய பலவீனமான நிலையை முடிவுக்கு கொண்டு வர முனைகின்றது. அண்மைய காலப்பகுதியில் புவிசார் அரசியல்ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் இந்தியாவுக்கு பதில் சீனா இப்பிராந்தியத்தில் வலுவடைந்து இருப்பதனால் இலங்கை-சீனா உறவை அச்சுறுத்தலாக கருதும் இந்தியாவிற்கும் குவாட் நாடுகளுக்கும் சமநிலைப்படுத்தலை உருவாக்கும் விதத்தில் நகர்வதாகவும் திட்டமிடுகிறது. அதாவது, சீனாவையும் இந்தியா உட்பட குவாட் நாடுகளை திருப்திப்படுத்தம் விதத்தில் மிலிந்த மொறகொடவின் வழிவரைபடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா மற்றும் தென்கொரியாவை திருப்திப்படுத்தவதன் மூலம் புவிசார அரசியலையும் பூகோள அரசியலையும் ஒரே நேர்கோட்டில் கையாள முற்படுகிறது. இத்தகைய வழிவரைபடம் பின்வரும் ஏழு கூறுகளை உள்ளடக்கியுள்ளது. அதனை நோக்குவது அவசியமாகும்.

முதலாவது, இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே உயர்ந்ததும் பலமானதுமான இருபக்க அரசியல்மட்ட உறவினையும் மற்றும் தந்திரோபாய உறவினையும் அதிகரிப்பதற்கான தொடர்பாடலை வெளிப்படுத்துதல்.

இரண்டாவது, ஏற்றுமதி மூலம் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கச்செய்து வருமானத்தை உயர்த்துவதோடு இந்தியா மற்றும் குவாட் நாடுகளுடன் ஏற்றுமதியை ஊக்குவித்து வெளிநாடுகளுடனான நாணய பரிமாற்றத்தை அதிகரிக்க செய்தல் மற்றும் அடையக்கூடிய மிக பெறுமதியான இலக்காக இலங்கை மக்களின் வேலைவாய்ப்பினை அதிகரித்தல், உற்பத்தி மட்டத்தை உலகத்தரம் வாய்ந்ததாகவும் உலக நாடுகளளோடு போட்டி போடக்கூடியதாகவும் ஆக்குதல். அதன் மூலம் இலங்கை மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தி அதன் அடைவை 2020-2025இற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை பெரும்பாக பொருளாதாரமாக மாற்றுவதற்கு முயலுதல். இதற்காக இலங்கை அரசாங்கத்தின் கொள்கை கட்டமைப்பானது நடைமுறை மற்றும் சிறப்பு விடயங்களை காட்சிப்படுத்துதல் என்ற இலக்குகளுடன் அவ்வழி வரைபடம் நகர்கிறது.

மூன்றாவது, இலங்கை-இந்தியாவிற்கு இடையிலான கூட்டு தந்திரோபாய ஒத்தழைப்புக்களையும் இந்து சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்புக்களையும் விரிவாக்குதல்.

நான்காவது, இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் கல்வி, கலாச்சார, விஞ்ஞான, தொழில்நுட்ப விடயங்களில் ஒத்துழைப்புக்களை ஏற்படுத்தம் அதேவேளை இலங்கை நலனுக்கு அமைவாக அத்திட்டமிடல்களை பலப்படுத்துதல்.

ஐந்தாவது, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவில் நிலவும் சாதகமான பக்கங்களை பலப்படுத்தம் வகையில் செயற்படுவதோடு வெகுஜன இராஜதந்திர (Public Diplomacy) உறவினை எட்டுவதற்கு முயற்சிப்பதோடு இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நட்புறவை (People to People) பலப்படுத்த உழைத்தல்.

ஆறாவது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான தொடர்பாடலை சுமுகப்படுத்தும் விதத்தில் அரச மட்டத்திலிருந்து சாதாரண நிர்வாகப்பரப்பு வரையில் ஒத்துழைப்பினை வலுப்படுத்துதல்.

ஏழாவது, இலங்கையின் நலனுக்குட்பட்ட சமுத்திர வளங்களை பாதுகாப்பதும் ஊக்குவிப்பதும் பராமரிப்பதும் என்ற அடிப்படையில் இந்தியாவுடன் ஒத்துழைத்தல்.

மேற்குறித்த ஏழு உபாயங்களை மிலிந்த மொறகொட-இன் குழுமம் வெற்றிகரமாக அமுல்படுத்த ஆரம்பித்துள்ளது என்பதை கடந்த வாரம் India CEO forum தொழிலதிபர்களினை சந்தித்தமை உறுதிசெய்கிறது. இச்சந்திப்பு இருநாட்டுக்குமான வர்த்தகம், சந்தை, ஏற்றுமதி-இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி போன்றவற்றுடன் இலங்கையில் நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புக்களையும் அதற்கான சட்ட வரைபுகளையும் ஆராய்ந்துள்ளதோடு அத்தகைய விடயங்களில் ஒத்துழைப்பினை அதிகரிப்பதற்கான முடிவுகளையும் எட்டியுள்ளது. அச்சந்திப்பிற்கு தலைமை தாங்கிய மிலிந்த மொறகொட இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் ஆரோக்கியமானதும் சுமூகமானதுமான உறவினை பலப்படுத்தும் வகையில் உரையாடி இருப்பதோடு இந்திய தொழில்துறைக்கான வாய்ப்புக்களை இலங்கையில் எற்படுத்திக்கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

எனவே இத்தகைய நகர்வினை அவதானிக்கும் போது பின்வரும் முடிவுகளை எட்டக்கூடியதாக உள்ளது.

ஒன்று, இந்தியாவை கையாளுதல் என்ற உயர்பெறுமானத்தை மிலிந்த மொறகொட ஊடாக இலங்கை தரப்பு ஆரம்பித்துள்ளது. அது பெருமளவுக்கு அரசியல் இராணுவ பொருளாதார பெறுமானங்களை உள்ளடக்கியதாக அமைய வாய்ப்புள்ளது.

இரண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் வர்த்தகரீதியிலான முரண்பாடு அண்மைக்காலத்தில் வலுவடைந்துள்ளது. குறிப்பாக கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் அதானி நிறுவனத்துக்கு வழங்க இலங்கை மறுத்தமையே விரிசலுக்கான பிரதான காரணமாக கொள்ளப்படுகிறது. அதனை சரிசெய்யும் விதத்திலேயே மிலிந்த மொறகொட-இன் வழிவரைபடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. வர்த்தக இராஜதந்திரம் என்பது உலகளாவிய ரீதியில் பின்பற்றப்படும் சிறந்த இராஜதந்திர உத்தியாகும். அதனை அடிப்படையாக கொண்டு இந்திய முதலீட்டு வாய்ப்பையும், சந்தையையும், ஏற்றுமதி இறக்குமதி வாய்ப்புக்களையும் விரிவாக்குவதனூடாக கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை ஈடு செய்யலாம் என மிலிந்த மொறகொட தலைமையிலான குழுமம் மற்றும் பாத் பைன்டர் குழுமம் கருதுகிறது.

மூன்று, இவ்வாறு முதலீட்டையும் வர்த்தக உறவையும் பலப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் பிரசன்னத்தை சீனாவின் பிரசன்னத்துக்கு நிகராக வைத்துக்கொள்ள முடியுமென்றும் அது இலங்கை-இந்தியா உறவை பலப்படுத்துமென்றும் இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.

நான்கு, இந்தியாவுடனான வர்த்தக இராஜதந்திர உறவை பலப்படுத்துவதன் மூலம் குவாட் நாடுகளுடன் பலமான நட்புறவை சாத்தியப்படுத்தி பிராந்திய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இலங்கைக்கான அரசியல் பொருளாதார இராணுவ உத்தரவாதங்களை உறுதிப்படுத்த முடியுமென இலங்கை ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றார்கள்.

ஐந்து, சீனாவின் இருப்புக்குள் இருந்து கொண்டு இந்தியாவையும் குவாட் நாடுகளையும் கையாளும் பொறிமுறை இலங்கைக்கு தற்போது ஏற்பட்டுள்ள அனைத்து நெருக்கடிகளிலிருந்தும் விடுபடுவதற்கான வாய்ப்பாக அமையும் என்றே இந்தியாவுக்கான இலங்கை தூதுவருடையதும் பாத் பைன்டரதும் தூர நோக்காகும்.

எனவே, இவ்வாறு தெளிவான இலக்கோடு அத்தகைய இலக்கை அடைவதற்கான இராஜதந்திர நகர்வோடு இந்தியாவிற்கான இலங்கையின் தூதுவர் புதுடில்லியை அணுகியுள்ளார். ஈழத்தமிழர் விவகாரத்தால் இந்தியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் எழுந்துள்ள நெருக்கடிகளை சரிசெய்வதென்பது இலங்கை இந்திய உறவில் தங்கியுள்ளதென்பதை இலங்கை ஆட்சித்துறை புரிந்துள்ளதுடன் அத்தகைய நெருக்கடியை வெற்றி கொள்ள ஒன்றுக்கு மேற்பட்ட களமுனைகளை திறந்து செயற்படுகிறது. ஆனால் ஈழத்தமிழர்களும் அவர்களது அரசியல் தலைமைகளும் இந்தியாவை மட்டுமல்ல குவாட் நாடுகளையோ அல்லது மேற்கு நாடுகளையோ கையாளுவதற்கான எத்தகைய பொறிமுறையும் இன்றி மீளவும் தனிப்பட்ட நலனுக்கான அரசியலை முனைப்புடன் செயற்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமன்றி இந்தியாவையும் அமெரிக்காவையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்த இயலாத சூழலுக்குள் ஈழத்தமிழர் அரசியல் பிரச்சினையை வல்லரசு நலன்களுக்கு எற்ற வகையில் இசைவுபடுத்தி அதன் தனித்துவத்தை அழிவுக்கு உள்ளாக்கி வருகிறது. இலங்கையின் இராஜதந்திரம் மீண்டும் ஒரு நகர்வின் மூலம் இலக்கை அடைய தயாராகியுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)