உலகளாவிய அரசியல் களம் கொரோனாவுடன் மௌனமாகாது தொடர்ச்சியாக ஒரு பெரும் ஆயுத போருக்கான தயாரிப்புக்களுடன் செயல்பட முனைகிறது. வெளிப்படையாகப் பார்த்தால் கொரோனா பெரும் அபத்தமாக தென்படுகிறது. ஆனால் ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கமும் அத்தகைய இழப்பீடுகளை பெரிதாக கருதாது போரையும் அதற்கான தயாரிப்பையும் நோக்கி நகர்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் கொல்லப்பட்ட இரண்டு இலட்சம் மக்களைவிட அந்த நாட்டின் ஜனாதிபதி தேர்தல் முக்கியமாக தெரிவதோடு தற்போதைய ஜனாதிபதி அதற்கான அனைத்து சுகாதார பொறிமுறையையும் தூக்கி எறிந்து விட்டு தேர்தலில் இறங்கியுள்ளார். இக்கட்டுரையும் உலகளாவிய ரீதியில் கடந்த குறுகிய காலத்தில் நிகழ்ந்துள்ள ஆயுதப் போட்டியின் நோக்கத்தினைத் தேடுவதாக அமையவுள்ளது.
அணுவாயுதம் வைத்திருக்கும் நாடுகளால் உலகம் அணுவாயுதப் போரின் பேரழிவின் நிழலில் வாழ்ந்துகொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். அணுவாயுதத்தை முற்றிலும் ஒழித்தல் தொடர்பிலான தினத்தில் உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அணுவாயுதத்தை வைத்திருப்பது மட்டுமல்ல அதனை தொடர்ச்சியாக விருத்தி செய்வதுவும் பரிசோதிப்பதுவும் நாடுகளிடையே நிகழ்ந்து வருகிற ஆயுதப் போட்டியாக உள்ளது.
வடகொரியா தனது ஆளும் கம்யூனிசக் கட்சியின் 75வது (10.10.2020) ஆண்டினை கொண்டாடும் விதத்தில் நடாத்தியுள்ள இராணுவ அணிவகுப்பில் அதிக செய்தியை வெளிப்படத்தியுள்ளது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இரண்டினை காட்சிப்படுத்தியதுடன் அவை பாரிய விளைவைப் இப்பிராந்தியத்தில் மட்டுமல்ல உலகளாவிய தளத்தில் ஏற்படுத்துமென அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு ஆய்வாளர் மல்கம் டேவிஸ் குறிப்பிடுகின்றார். இது அமெரிக்காவின் தோல்வி என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இங்கு காட்சிப்படுத்தப்பட்ட ஏவுகணை எப்போது பரிசோதிக்கப்பட்டதென்பதில் அதிக குழப்பம் நிலவுகிறது. ஆனால் அமெரிக்காவுக்கான வடகொரிய ஆய்வு மையம் கருத்து தெரிவிக்கும் போது 2017இல் வடகொரியா பரிசோதித்த ஹவாசோங்-15இன் திட எரிபொருளால் தயாரிக்கப்பட்ட ஏவுகணை எனவும் இது முன்கூட்டியே கணிக்கப்பட்டதெனவும் இது அணுவாயுதத்தை காவிச் செல்லும் ஏவுகணை எனவும் குறிப்பிட்டுள்ளது. அது மட்டுமன்றி இத்தகைய கண்காட்சியானது புதிய ஆயுத தளபாடங்களை முதன்மைப்படுத்தியதுடன் ஏறக்குறைய ஒர் ஆயுதக் களஞ்சியமாக தெரிந்தது எனவும் புதிய வகை ஆயுதங்கள் அதிகம் காணப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் புதிய நீர்மூழ்கியில் பொருத்தப்பட கூடிய ஏவகணைகள் காணப்பட்டதாகவும் அதற்குரிய பாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் அத்தகைய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தகைய காட்சிப்படுத்தலின் மத்தியில் வடகொரியத் தலைவர் கிம்ஜோன் உங் குறிப்பிடும் போது மக்களின் பாதுகாப்புக்கானது எனவும் தற்காப்புக்கான வழிமுறையெனவும் யுத்தத் தடுப்பினை தொடர்ந்து பலப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார். இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயம் தொடர்பில் வடகொரிய மத்திய செய்தி நிறுவனம் குறிப்பிட்டது கவனத்திற்குரியதாகும். எங்கள் தேசிய அரசு மக்களின் அதிகாரத்தையும், பாதுகாப்பையும் இணைக்கும் விதத்தில் அணுசக்தி மூலோபாயத்துடன் சதுக்கத்திற்குள் உள்நுழைகின்றன. சதுக்கம் முழுவதும் உற்சாகத்துடன் காணப்படுகின்றன எனக்குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு வடகொரியாவின் இராணுவ பிரசன்னம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பிராந்திய மட்டத்தில் அதிக அதிருப்தியை உருவாக்கியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஜப்பானின் நகர்வுகள் ஆரம்பமாகியுள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் விதத்தில் தமது ஏவுகணை தடுப்பரண் முறைமை உருவாக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் பத்திரிகைக்கு ஜப்பானிய அமைச்சரவை செயலாளர் தெரிவித்த கருத்துக்களின் படி வடகொரியாவின் புதிய ஏவுகணைகளில் சிலவற்றை எங்களின் வழக்கமான ஏவுகணைகள் கொண்டு எதிர் கொள்வது கடினமானது. அதே சமயம் பன்முகப்படுத்தும் சிக்கலான அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதற்கான எங்கள் விரிவான ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்த நாங்கள் உறுதியாகச் செயல்படுகிறோம் எனத் தெரிவித்தார்.
இதனோடு தொடர்புபடும் விதத்தில் கடந்த சில காலப்பகுதியில் இந்திய இராணுவம் தனது பங்குக்கு சீனாவுடனான முரண்பாட்டை கையாளும் விதத்திலும் பிராந்திய அரசை எதிர்கொள்ளும் வகையிலும் ஆயுத தளபாட உற்பத்தியில் அதிக முனைப்பு காட்டிவருகிறது. இந்திய இராணுவ ஆய்வு மற்றும் விருத்தி அமைப்பானது (Defense Research and Development Organization) ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்திவருகின்றது. இவ்வமைப்பு கடந்த ஐந்து வாரங்களில் சுமார் 10குறையாத ஏவுகணை பரிசோதனைகளை நடத்தியுள்ளது. அவற்றுள் Sharuya ஹைப்பர்சோனிக் ஏவுகணை, பிரம்மோஸ் தூர ஏவுகணை, அணுசக்திதிறன் கொண்ட பிருத்வி ஏவுகணை, ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு வாகனங்கள், கதிர்வீச்சு எதிர்ப்புதிறன் கொண்ட ருத்ரம் -ஐந்து ஏவுகணை போன்றன முக்கியமானவையாகும்.
இந்தியாவின் ஆக்கத்திட்டத்தில் அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணைகள் தாயாரிக்கும் திறனுடையதாக வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் சாதாரண ஏவுகணைகள் ஆகியவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறன் கொண்டதாக மாறியுள்ளது. இதனால் அதிக இராணுவத் தளபாடங்களை தயாரித்து வரும் DRDO ஏவுகணைகளைபரிசோதிப்பதன் மூலம் பிராந்திய சூழலை தமக்கு சாதகமாக்கவும் எதிர் கொள்ளவும் ஆயத்தமாவதனைக் காட்டுகிறது இத்தகைய இராணுவ விருத்தி தொடர்பில் டி.ஆர்.டி.ஓ. வின் தலைவர் சதீஸ் ரெட்டி தெரிவிக்கும் போது, “லடாக் எல்லைப் பகுதியிலிருந்து தொடர்ந்து வெளியேற மறுக்கும் சீன இராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டால், அதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே இந்தப் பரிசோதனைகளை வேகப்படுத்தியிருப்பதாகும்” என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் சீனாவின் ஜனாதிபதி ஜின்பிங் தனது இராணுவத்தின் மத்தியில் குவாங்டாங் இராணுவத் தளத்தில் உரையாற்றும் போது, தமது சீன இராணுவத்தை போருக்கு தயாராக இருக்குமாறு பணித்துள்ளதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. “மனதையும் சக்தியையும் போருக்கு தயார்படுத்துங்கள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே உலகம் ஒரு போருக்கு தயாராகிறதை காணமுடிகிறது. இராணுவ தளபாடங்களின் வளர்ச்சியும் பொருளாதார நெருக்கடியும் நிகழ்ந்து வரும் ஏனைய நெருக்கடிகளும் அதற்கான முனைப்பினை ஏற்படுத்தி வருகிறது. இதில் அமெரிக்காவின் பங்கும் அதிகமானது. அவ்வாறே பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளும் உலகளாவிய ரீதியில் பின்பற்றி வரும் அணுகுமுறைகள் அதிக நெருக்கடியை ஏனைய கண்டத்து நாடுகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. இதில் ரஷ்சியாவும் அணுவாயுதத்தை பலப்படுத்துவதுடன் இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்கும் முனைப்பில் பிராந்திய நாடுகளை பயன்படுத்தி வருகிறது. இதனால் உலகளாவிய ரீதியில் ஒரு போர் தயாராகின்றதற்கான வாய்ப்பு அதிகரித்துவருகிறது.
-கலாநிதி கேரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
