வடகொரியா – பலக் கோட்பாட்டின் எதார்த்தம் | அரசியல் | பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் | டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்|
தொடர்புக்கு: டிஸ்கவரி புக் பேலஸ் | +91 9790946650 | +91 8754506060
https://www.discoverybookpalace.com/author/prof-kr-ganeshalingam
முன்னுரை
இந்நூலுக்கான வடிவத்தை வரைபதில் முன்னோடிகளாக தினக்குரல் தினகரன் மற்றும் தமிழர் தளம் போன்றவற்றுக்கு முக்கிய பங்கிருந்தது போல் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்திற்கும் உரியது. சமூகவிஞ்ஞான ஆய்வு மையம் இந்நூலுக்கான ஆரம்ப வடிவத்தை சிறு பிரதியாக வெளியிட்டு நூல் வடிவத்திற்கான திறவுகோலை அமைத்துத்தந்திருந்தது. மிக நீண்ட காலமாக தேடிய தகவல்களை ஒன்று சேர்க்கவும் அது தொடர்பான தெளிவை ஏற்படத்தவும் பல தடவை முயன்று கைவிடப்பட்ட நிலையிலிருந்து ஒரு புத்தக வடிவம் வெளிவருவதனை கண்டு கொள்ளும் போது மேலும் பல நூல்களை படைக்க வேண்டும் என்ற அவா ஏற்படுகிறது. இந் நூலுக்கான ஆக்கங்களை அனைத்தும் ஊடகங்களுக்கூடாக முன்வைக்கும் போது வடகொரியா பற்றி தெளிவான எதிர்வு கூறல்கள் முன்மொழியப்பட்டன. அதற்கு அமைவாகவே வடகொரியா- அமெரிக்கா தென் கொரிய ஜப்பானிய நகர்வுகள் அமைந்திருந்தன. சமகாலத்தில் கூட வடகொரியாவின் போக்கு சரிவர மதிப்பீட்டுக்கு உட்பட்டதாவே அமைந்துள்ளது.
உலகளாவிய அரசியலில் வட கொரியா எனும் இந்நூலானது தெளிவான இலக்குடனும் திட்டமிடலுடன் நகரும் தேசம் பற்றியதும் அத் தேசத்தின் தலைமைத்துவத்தின் உபாயங்கள் பற்றியதுமாக மட்டும் அமையவில்லை. ஒட்டு மொத்தமான வட கொரிய மக்களது பண்பாடும் மரபுகளும் சமூகத் தன்மைகளும் ஒன்று சேர்ந்த இயங்கியல் நூலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வட கொரியா என்பது வெறும் நாட்டுக்கான அடையாளம் கிடையாது. அதனையும் கடந்து தேசமாகவும் சமூகமாகவும் அனைத்து எதிர்ப்புகளையும் கடந்து செயல்படுகின்ற தேசியம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த இந்நூல் விளைகிறது. மிகச்சிறிய நாடு மிகச் சிறிய மக்கள் கூட்டம் அதிக நெருக்கடிகளை எல்லாம் கடந்து நிலைத்திருக்க முடியும் என்ற படிப்பினையை தந்துள்ளது. அத்தகைய சிந்தனையை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க இந்நூல் முயலுகிறது.
உலகத்தில் எத்தனையோ நாடுகள் வட கொரியா போன்று காணப்படினும் அவற்றால் உலகத்தை வடகொரியா போன்று வெல்ல முடியவில்லை என்பது அவதானிக்க் கூடிய பதிவாகவே உள்ளது. அதற்கு வடகொரியாவின் தலைமைத்துவம் பிரதான காரணம் என்ற மதிப்பீடும் ஒன்றாகும். வடகொரியாவுக்கு கிடைத்துள்ள புவிசார் அரசியல் சூழலை மிகத் திறம்பட நிகழ்த்தும் தலைமைத்துவமே அதன் நிலைத்திருப்புக்கு காரணம் என்று குறிப்பிட முடியும். அமெரிக்காவைக் கூட வடகொரியாவின் எல்லைக்குள் நகர வைத்த வெற்றி கொண்ட அரசியல் வலிமையானது வடகொரிய தலைமைத்துவத்திற்கு உரியது என்பதை நிராகரித்து விட முடியாது. கிம்-ஜோங்-உன் என்பது ஒரு ஆட்சியாளனின் பெயர் மட்டுமல்ல. ஒர் அரசியல் பரம்பரையின் நீட்சிக்கான பெயரும் கூட. வடகொரியரின் சுய கௌரவத்தின் அடையாளம் என்பதாகவே அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர். அதனை உலக நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள முனைகின்றனர். கிம் ஒரு சர்வாதிகாரியாக விளங்கினாலும் எதோச்சதிகாரியாக இல்லாதுள்ளமை கவனத்திற்குரியதாகும். அவர் தனது தேசத்தை கட்டியெழுப்புவதிலும் பாதுகாப்பதிலும் உறுதியான தலைமைத்துவமாகக் விளங்குவதனை அவதானிக்க் கூடியதாக உள்ளது. அத்தகைய சர்வாதிகாரம் அந்நாட்டு மக்களையும் அவர்களது பலவீனங்களையும் செளிப்புக்கும் விருத்திக்குமானதாக மாற்றுமானால் அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல உலக மக்களே அத் தலைமையை ஏற்றுக் கொள்வார்கள். உலகில் அவ்வாறான தலைமைகள் அதிகமாக உள்ள பிராந்தியமாக கிழக்காசியா காணப்படுகிறது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் தலைமைகள் 30-40 வருடங்கள் ஆட்சியில் அமர்ந்தார்கள். ஓரே அரசியல் கட்சியின் ஆட்சியின் கீழ் அந் நாடுகள் பல தசாப்தங்கள் இயங்கினாலும் அத்தலைமைகள் அந்த நாடுகளை சுபீட்சமான நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றன. அதனால் அந்த மக்கள் இன்றும் அவ்வகைத் தலைமைகளை முன்னுதாரணமாகக் கொள்கின்றனர். சிங்கப்பூரின் சிற்பி என்று அழைக்கப்படும் லீக்-குவான்-யூ (1923-2015) உலக வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத தலைவராகவே விளங்குகிறார். அவரை யாரும் சர்வாதிகாரி என்று அழைப்பதில்லை. ஆனால் அவரது ஆட்சிக்காலம் ஏறக்குறைய 38 வருடங்கள். இது கிழக்காசிய தலைவர்களதும் அந்த மக்களதும் அரசியல் பண்பாடாகவே விளங்குகிறது. அந்நாட்டுத் தலைவர்களும் மக்களும் அரசியல் கட்சிகளும் கருதும் செய்முறை பொருளாதார ரீதியலான செழிப்பே தேசங்களுக்கு அவசியம் என்பதாகும். அரசியல் ரீதியாக வேறுபட்ட மத மற்று சமூக முரண்டபாடுகளை கொண்டிருந்தாலும் அவர்களிடம் அத்தகைய வேறுபாட்டைக் காட்டிலும் பொருளாதார சுபீட்சமே மேலானது என்ற எண்ணப்பாங்கு வளர்ந்துள்ளது. அது மட்டுமன்றி அவர்களது முரண்பாடுகள் ஏனைய ஆசிய நாடுகள் போன்றதல்ல. அனைத்து மக்களையும் அவர்களது வாழ்வியல் உரிமைகளை பாதுகாக்கும் குறைந்த பட்ச வழிமுறைகளை பின்பற்றுகின்ற அரசுகளும் ஆட்சி முறைகளும் காணப்படுகிறன. அத்துடன் மேற்கு முதலாளித்துவ நாடுகள் கிழக்காசிய நாடுகள் சோஸலிஸ படர்ச்சிக்குள் சென்றுவிடாது தடுப்பதற்கு பனிப்போhக் காலத்தில் பாரிய நிதி மற்றும் விஞ்ஞான தொழில் நுட்ப அறிவுப் பரிமாற்றத்தில் அந்த நாடுகளுக்கு உதவி வந்தன. இதனால் இந்நாடுகளது அரசியல் உறுதிப்பாடும் சமூக ஒருமைப்பாடும் பொருளாதாரத்தினாலும் தொழில் நுட்ப அறிவினாலும் பாதுகாக்கப்பட்டது. அது அவற்றின் நிலைத்திருப்புக்கு காரணமாகியது. ஆசியாவிலேயே தொழிநுட்ப அறிவை அடிப்படையாகக் கொண்டு எழுச்சி பெற்ற பிராந்தியமாக கிழக்காசியா முதன்மையானதாக விளங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
வடகொரியா சோஸலிஸ நாடாகவோ அல்லது சர்வாதிகார நாடாகவோ இருந்தாலும் அதன் ஆரம்ப பாடசாலைகள் முதல் கல்லூரிகள் வரை தொழில் நுட்பப்பாடமே பிரதான கற்கை நெறியாக இன்றுவரை விளங்குகிறது. அவ்வாறே அதன் சமூகக் கட்டமைப்பு பண்பாட்டுத் தளம் என்பன எழுச்சிமிக்க சிந்தனையாலும் எண்ணங்களாலும் உருவாக்கப்பட்டது என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.
இத்தகைய ஒரு நாட்டையும் அதன் மக்கள் சமூகத்தையும் அரசியல் தலைமைத்துவத்தையும் ஈழத்தமிழர் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந் நூல் அறிவு உலகத்தில் காணப்படும் புதிய தரிசனங்களை கொண்டுவரும் முயற்சியில் ஈழத்தமிழரை இணைக்க அவாப்படுகிறது. இந்நூலைப் படைப்பதில் உதவிய எனது குடும்பத்திற்கும் மற்றும் நண்பர்களுக்கும் அரசறிவியல் துறை விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் குறிப்பாக உதவி நூலகர் செல்வி லக்ஷனா பாலகுமாருக்கும் மற்றும் திருமதி புளோரிடா நிக்லஸ்க்கும் இந்நூலுக்கான கணணியமைப்பினையும் நூல் வடிவமைப்பினையும் மேற்கொண்ட அன்புக்குரிய மாணவன் ஐ.வி.மகாசேனனனுக்கும் ஊடகப்பரப்பில் என்னை ஊக்குவிக்கும் தோழமைகளுக்கும் நன்றிகள்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
அரசறிவியல் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
01.03.2025