அரசியல் கட்டுரைகள்

மூன்றாவது சக்திகளின் தலையீட்டுக்கான எதிர்ப்பும் இலங்கை-சீன கடல்சார் தந்திரோபாயமும்?

இலங்கைத் தீவின் அரசியலில் எதிர்பார்க்கையுடனான ஆட்சி மாற்றங்களுக்கு பின்னரும் புரட்சிகரமற்ற மாற்றமுறாத நெருக்குவாரங்களை மக்கள் எதிர்கொள்கின்ற போக்கே காணப்படுகிறது. அதற்கான அடிப்படையை இலங்கை தீவின் புவிசார் அமைவிடத்திலிருந்து விளங்கிக் கொள்ள அதிகம் முயன்றாலும் புதிய ஆட்சி சுமூக தன்மையை ஏற்படுத்தும் என்று இலங்கை தீவில் உள்ள ஒவ்வொரு பொது மகனும் நம்பியிருந்தனர். ஆனால் தற்போதைய ஆட்சியும் முன்னைய ஆட்சிகளின் நீட்சியாகவே ஆண்டுகளை கடந்து செல்கிறது என்பதை காட்டுவதாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் விளங்குகின்றன. இந்தியாவும் சீனாவும் தொடர்ச்சியாக இலங்கை தீவின் பொருளாதாரத்துக்கு உதவிய போதும் நிரந்தரமான பலத்தை இலங்கை தீவு எட்டாத நிலைளை எதிர் கொண்டுள்ளது. இந்திய-சீன நலன்களுக்குள் இலங்கைத் தீவு அகப்பட்டுள்ளதால் அத்தகைய நெருக்கடியை எதிர் கொள்கிறதா? ஏன்ற கேள்வி இயல்பானது. அதனை விளங்கிக் கொள்ள இக்கட்டுரை முயலுகிறது.

12.07.2025 அன்று இலங்கையின் வெளிவர அமைச்சர் விஜிதகேரத்தை சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜியை கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட போது சந்தித்து உரையாடியுள்ளனர். அங்கு அவர்கள் உரையாடிய விடயம் கவனத்திற்குரியது.
சீன-இலங்கை கடல்சார் ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை தரக்கூடியதாகும். அது மூன்றாம் தரப்பை இலக்காகக் கொண்டதல்ல. -மூன்றாம் தரப்பு அதில் தலையிடக்கூடாது என சீன வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். அது மட்டுமன்றி சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் (BRI) இரு நாடுகளும் இணங்கி செயல்படுவதென்றும் முக்கியமான கட்டுமான திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுக்களை துரிதமாக மேற்கொள்வதற்கு இணங்கிக் கொண்டனர்.
அவ்வாறே இலங்கைக்கான சீனத் தூதர் கீ.சென்ஹொங் 16.7.2025 அன்று இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னிலையில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கிய நிகழ்வின் போது தெரிவித்த கருத்துக்களின் முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு அம்சமாக தெரிகின்றது.

இலங்கைக்கு உதவிகள் தேவைப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் சீனா இலங்கையின் நம்பிக்கைக்குரிய சகோதரனாகவும் உதவியாளனாகவும் செயல்படும் என்றார். அவர் மேலும் தெரிவிக்கும் போது,இலங்கையின் குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல சீன-இலங்கை நட்பின் வாரிசுகளுமாவார். ஆவர்களின் சீருடையிலுள்ள ஒவ்வொரு தையலும் பழமையான இரு நாட்டு நாகரிகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் வரலாறு பின்னிப்பிணைந்திருக்கும் என்றார்.

இத்தகைய இரு சீன இராஜதந்திரிகளது கருத்துக்கள் ஏன் முதன்மையானதாக காணப்படுகிறது என்பது பிரதான கேள்வியாகும். அதனை ஆழமாக புரிந்து கொள்ளுதல் அவசியமானதாக தெரிகின்றது.

முதலாவது சீனாவின் வெளிவார அமைச்சர் மூன்றாவது சக்திகள் என்று குறிப்பிட்டு இருப்பது இலங்கை பொறுத்து அமெரிக்காவா இந்தியாவாக என்ற சர்ச்சை முதன்மையானது. நேரடியாக அவதானிக்கும் போது இந்தியாவை நோக்கிய அத்தகைய உரையாடல் முன்வைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு அதிக ஆதாரங்கள் உண்டு. காரணம் இந்திய தரப்பு இலங்கையுடன் பொருளாதார மற்றும் கடல்சார் புரிந்துணர்வுகளை அண்மைக்காலத்தில் அதிகரித்துவருகிறது. அதே சந்தர்ப்பத்தில் இந்தியா இலங்கையை பிற சக்திகளின் தலையீட்டில் இருந்து மீட்டெடுப்பதற்கு அவ்வகை சூழல் ஒன்றை உருவாக்க முனைகின்றது. வெளிப்படையாக கூறுவதானால் சீனாவின் தலையீடுகளை இந்தியா பெருமளவுக்கு இலங்கை தீவில் அனுமதிக்காத சூழல் ஒன்றை அதிகம் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான வர்த்தக உறவும் பொருளாதார ரீதியான ஒத்துழைப்பும் அதிகரித்திருப்பதோடு அமெரிக்காவின் இந்தியா மீதான வரி தொடர்பில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி இந்தியாவை குழப்பத்திற்குள் தள்ளியள்ளது. அமொரிக்கா பிரிக்ஸ் அமைப்பினூடாக அதிக நெருக்கடிகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. வெளிப்படையாகவே அமெரிக்கா ரஷ;சியா உடனான வர்த்தக உறவை நிராகரிக்கின்ற சூழல் ஒன்றை இந்தியா மீது விதித்திருக்கின்றது. இதே நேரம் சீனாவும் இலங்கை விடயத்தில் அமெரிக்காவோடு முரண்படுகின்ற சூழகையும் கண்டுகொள்ள முடிகிறது. அதாவது இலங்கை தொடர்பில் இந்தோ-பசுபிக் உபாயத்தை வகுத்து அதன் ஊடாக இலங்கையை அமெரிக்காவின் நலனுக்குள் உட்படுத்தி விட அதிக பிரயோத்தனத்தை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இலங்கை மீது விதிக்கப்பட்ட அதீத வரிகளும் இலங்கைக்கான அமெரிக்கான புதிய தூதுவரது முக்கியத்துவம் அத்தகைய செய்தியை வெளிப்படுத்த முயல்கின்றது. அதம்துடன் இந்தோ-புசுபிக் உபாயத்தின் மூலம் இலங்கை-அமெரிக்க கடல்பாதுகாப்புக்கான திட்டமிடலும் காணப்படுகிறது. அதனாதல் சீனா குறிப்பிடும் மூன்றாவது சக்தி என்பது தனித்து இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும் உள்ளடக்கப்படுவதாகவே தெரிகிறது. ஆனால் இந்திய சீன உறவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் அமெரிக்காவையே இலக்கு வைத்ததாக அதிகம் புரிந்து கெதாள்ளப்படுகிறது.

இரண்டாவது இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை சீன வழங்க முன் வந்த சந்தர்ப்பத்தை சீன இலங்கை வரலாற்றோடு பிணைத்து ஒன்றாக இலங்கைக்கான சீனத் தூதுவர் முதன்மைப்படுத்தி இருந்தார். சீன இலங்கை வரலாறு என்பது சீனக் கப்பல் படையின் தளபதியான ஹெங்கீயின் வருகையோடு நவீன வடிவம் பெறத்தொட தொடங்கியது. அத்தகைய வரலாற்றில் இருந்து சீனா இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படும் இலங்கை தீவின் மீது அதிகமான ஈடுபாட்டை பட்டுப்பாதை வியாபாரத்தின் போது கொண்டிருந்தது. புதிய பட்டபாதையிலும் அத்தகைய உறவை முதன்மைப்படுத்த சீனா முனைகிறது என்பதே அவரது வெளிபாடாக தெரிகிறது. அப்படியாயின் சீனா இந்து சமுத்திரத்தின் மைய நாடான இலங்கை ஊடாக இந்து சமுத்திர நாடுகளை தமது செல்வாக்குக்குள் வைத்திருக்கவும் அதன் மூலமாக பிராந்தியத்தின் கடலாதிக்க கொள்கை பிரதான பங்கினை வலியுறுத்தவும் முயல்கிறது என்பதாக புரிந்து கொள்ள முடியும். இலங்கை தீவு இந்திய ஆதிக்கத்துக்கோ அமெரிக்க செல்வாக்குகோ உட்படாது கடல் ரீதியான உறவை பலமான கட்டமைப்பை வரையறுத்துக் கொள்வதன் மூலம் நிலையான இந்து சமுத்திரம் மீது செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை கோடிட்டு காட்டி உள்ளது. மலேசிய தலைநகரில் ஆசியான் மாநாட்டிலும் இலங்கையில் பிரதமருடனான உரையாடலிலும் கடல் தொடர்பான உறவினையே இலங்கைக்கு உடன் முதன்மைப்படுத்த சீனா முனைகிறது. அப்படியனால் இந்து சமுத்திரம் மீது சீனா இலங்கை ஊடாக தனது ஆதிக்கத்தை பலப்படுத்ததிட்டமிடுகிறது ஏற்கனவே அதற்குரிய வாய்ப்புகளை இலங்கை ஆட்சியாளர்கள் வழங்கி இருக்கும் நிலையில் இந்தியாவை கடந்து சீனாவுடன் பலமான உறவை கொண்டிருப்பது இலங்கை ஆட்சியாளர்களுக்கு சாதகமானதும் இலகுவானதுமாகும். இந்த இடத்தில் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அமெரிக்க அரசியல் தலைமைகளும் கவனத்தில் கொள்ளாத ஆழமான ஒரு விடயம் நிகழ்ந்து வருகிறது. சீனா இலங்கை தீவை கடல் ரீதியான பாதுகாப்புக்கான நாடாக இந்து சமுத்திரபிராந்தியத்தில் கொண்டிருக்கின்றது. இந்திய பாகிஸ்தானிய போரில் இந்தியா அதிக குழப்பத்தை எதிர்கொண்டிருப்பதோடு அமெரிக்காவும் சீனாவின் இராணுவ வல்லமையே மதிப்பீடு செய்துள்ளது. இதனால் இந்து சமுத்திர பிராந்தியத்தின் கணிசமான நிலைகளை சீனா தக்க வைத்துக் கொள்வதற்கும் உலக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் இலங்கை தீவு பிரதானமானது என்பதை கோடிட்டுகாட்டுகிறது. இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகளாவிய அதிகாரத்தின் திறவு கோலாக இந்துசமுத்திரம் அமையும் என்ற அமெரிக்க கடற்படையின் மூலகர்த்தா தயார் மகானின் (Alfred Thayer Mahan) கருத்து கவனிக்கத் தக்கது.

எனவே இந்திய சீன இழுபறிக்குள் இலங்கைத்தீவு அகப்பட்டிருக்கிறது என்ற விவாதத்தை விட இலங்கை- சீன நெருக்கமான உறவுகுள் இந்திய-அமெரிக்க இலங்கையுடனான இருப்பு நெருக்கடிக்குள்ளாகிறது என்பது பொருத்தமானதாக தெரிகின்றது. இந்தியாவையும் சீனாவையும் இலங்கை ஆட்சியாளர்கள் பொருளாதார இலாபங்களை அடைவதற்காக மாறி மாறி பயன்படுத்திக் கொள்ளுகின்ற உத்தி வளந்திருக்கின்றது. இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் அதில் மிகத் தெளிவான தீர்மானங்களை கொண்டுள்ளனர். ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் சீனா பக்கம் நின்று கொண்டே அமெரிக்காவையும், இந்தியாவையும் கையாளுகின்றனர். இதில் அமெரிரிக்கா பூகோள நலனுடனே இலங்கைத் தீவை அணுகுகிறது. ஆனால் இந்தியா புவிசார் நலனுடனேயே இலங்கைத் தீவை எதிர் கொள்கிறது. இதில் அமெரிக்காவை விட இந்தியாவுக்கே அதிக நெருக்கடியாகும். அதே நேரம் ஷங்காய் மகாநாட்டுக்கு இந்தியாவின் இரு மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய இன்னோர் விடயமாகத் தெரிகிறது. அதாவது அமெரிக்க இந்தியா உறவு அதிக குழப்பத்தை நோக்கி நகரும் போது இந்திய-சீன நட்புறவாக பரிணமிக்க முயலுகிறதாகவே தெரிகிறது. ஆனால்இந்தியா ஒருபோதும் நிலையான தீர்மானத்தைவிட நடுநிலையான தீர்மானங்களை எடுத்து பழக்கப்பட்ட தேசமாக உள்ளது. அதனையே கடந்த கால வரலாறு முழுவதும் இந்தியா கொண்டுள்ளது. அதனை இந்தியா பெருமையாகவும் கருதுகிறது. அதுவே இந்தியாவுக்கு அபாயகரமானதும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)