April 30, 2026
அரசியல் கட்டுரைகள்

பாகிஸ்தான்- சவுதிஅரேபிய பாதுகாப்பு உடன்பாடும் பிராந்திய அரசியல் போக்கும்?

உலக அரசியல் என்றுமே இல்லாதவாறு மனித உரிமைகளையும் மனிதாபிமான சட்டங்களையும் நிராகரிக்கப்படும் உலக ஒழுங்குக்குள் அரசுகளும் அரசுகளை மையப்படுத்திய நிறுவனங்களும் காணப்படுகின்றன. சர்வதேச நிறுவனங்களலும் சில நாடுகளாலும் முன்வைக்கப்படும் சிபாரிசுகளும் பிரகடனங்ககளும் அரசுகளின் நலன்களுக்குள்ளால் காலாவதியாகிறது. உலக அரசியல் போக்கு ஒரு சில நாடுகளின் ஆதிக்கத்துக்குள் அகப்பட்டு இருக்கின்றது. பாதுகாப்புசபையில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்காவின் வீட்டோ தடுத்து நிறுத்தியுள்ளமை காசா படுகொலைகள் பொறுத்த உலகத்தின் பார்வையின் போலித்தன்மையை அடையாளப்படுத்துகின்றது. இவ்வகை சூழலுக்குள்ளேயே பாகிஸ்தானின் பிரதமர் ஷபாஸ் ஷரீப்வ் (Shehbaz Sharif ) கட்டாருக்புகும் அதனை அடுத்து சவுதிஅரேபியாவுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். சவுதிஅரேபியாவோடு வலுவான பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை பாகிஸ்த்தான் மேற்கொண்டிருந்தது. இக்கட்டுரையும் அத்தகைய உடன்பாட்டின் முக்கியத்துவத்தையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக உள்ளது.

பாகிஸ்தானின் பிரதமர் மேற்காசிய நாடுகளுக்கும் மேற்கொண்ட விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்றாக அமைந்துள்ளது. அடிப்படையில் இஸ்ரேலின் கட்டார் மீதான தாக்குதலை அடுத்தே பாதுகாப்புச் சார்ந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுவே பாகிஸ்தான் சவுதிஅரேபியாவோடு வலுவான பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை மேற்கொள்ள காரணமாகியது. உடன்படிக்கையின் பிரகாரம் இரு நாடுகள் மீதான தாக்குதல்களை இரு நாடும் சேர்ந்து எதிர்கொள்வது என்ற வலுவான நிலையை தோற்றுவித்டதுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள உடன்பாடு பாகிஸ்தான் மீதும் சவுதிஅரேபியா மீதும் ஏதாவது ஒரு நாடு தாக்குதலை மேற்கொள்ளுமாக இருந்தால் அதனை இரு நாடும் சேர்ந்து எதிர்கொள்ளும் என்பது உடன்படிக்கையின் உள்ளடக்கமாகும். இத்தகைய பாதுகாப்பு உடன்படிக்கை ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் பிராந்திய அடிப்படையில் முக்கியமானதும் தனித்துவமானதுமாகும். ஆதனை விளங்கிக் கொள்வது அவசியமானது.

முதலாவது ஆசியப் பிராந்திய நாடுகளான பாகிஸ்தானும் சவுதிஅரேபியாவும் வேறு வேறுபட்ட பிராந்திய நாடுகளாக காணப்படுகின்றன. இந்தியாவின் மூலம் அதிக நெருக்கடியை சந்தித்திருக்கும் பாகிஸ்தான் மேற்காசியாவில் இஸ்ரேலின் அச்சுறுத்தலினால் அதிக நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நாடுகளின் வரிசையில் சவுதிஅரேபியாவும் ஒன்றாக உள்ளது. இவ்வகை இரண்டு உப பிராந்தியங்களைக் கொண்ட நாடுகள் மேற்கொண்டு இருக்கும் உடன்படிக்கை இரு நாட்டுனதும் வலுவான பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதோடு எதிரி நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக இந்தியாவும் இஸ்ரேலும் இப் பாதுகாப்பு உடன்படிக்கையின் பிரகாரம் ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. காசா மீதும் ஹமாஸ் அமைப்பினர் மீதும் குறிவைத்துள்ள இஸ்ரேல் மேற்காசிய பிராந்திய நாடுகள் மீது அச்ச உணர்வோடு தாக்குதலை நிகழ்த்த தொடங்கியுள்ளது. இதுவே சவுதிஅரேபியா பாகி;ஸ்தான் பாதுகாப்பு உடன்படிக்கைக்கு அடிப்படை காரணமாக தெரிகின்றது.

இரண்டாவது இரு நாட்டுக்குமான பாதுகாப்பு உடன்படிக்கை நேட்டோவின் உடன்படிக்கைக்கு ஒப்பானதாக உள்ளதென இராணுவ ஆய்வாளர்களால் நோக்கப்படுகின்றது. நேட்டோ உடன்பாட்டின் ஐந்தாவது சரத்து நேட்டோ அங்கத்துவ நாட்டின் மீது இன்னோர் நாடு தாக்டகுமாக இருந்தால் அனைத்து நேட்டோ நாடுகளும் தாக்குதல் மேற்கொண்ட அந்த நாட்டின் மீது பதில் தாக்குதலை நிகழ்த்தலாமென்ற உடன்பாட்டினைக் கொண்டுள்ளது. அதனால் இத்தகைய உடன்படிக்கை மேலும் பல நாடுகளோடு விஸ்தரிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கட்டார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அதற்கான வாய்ப்பினை மேலும் அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. காரணம் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் மேற்காசிய நாடுகளும் கிழக்கு ஆசிய நாடுகளும் பாதுகாப்பு உடன்படிக்கைகளை மேற் கொண்ட போதும் பின்னர் அவை கைவிடப்பட்டன. சென்ரோ(CENTO) மற்றும் சீயாட்டோ(SEATO) அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டன. ஆனால் மீண்டும் அதற்கான வாய்ப்பு மேற்குஆசிய நாடுகளில் அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் அராபிய நாடுகள் மீதான தாக்குதல் அதற்கான முன் நிபந்தனையை உசிதமாக்கி உள்ளது. இதனால் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு உடன்பாடு ஒன்றிற்கான வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது. அராபிய நாடுகளின் அண்மைய உரையாடல் அதற்கான சந்தர்ப்பத்தை அதிகரித்து உள்ளது.

மூன்றாவது பாகிஸ்தானுக்கும் சவுதிஅரேபியாவுக்கும் இடையில் நிகழ்ந்த பாதுகாப்பு உடன்பாடு இந்தியாவின் நீண்ட கால எதிரி நாடான பாகிஸ்தான் அதிக நெருக்கடியை உருவாக்கி இருக்கின்றது. அண்மையில் சங்ஹாய் மாநாட்டிலும் இந்திய சீன ஐக்கியத்திலும் அதிருப்தி அடைந்துள்ள பாகிஸ்தான் இத்தகைய அராபிய நாடுகளுடனான அல்லது இஸ்லாமிய நாடுகள் உடனான உறவை பலப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு ரீதியில் தனது இருப்பை உத்தரவாதப்படுத்தலாம் என கருதுவதோடு பொருளாதாரத்துக்கான உந்துதலை இது ஏற்படுத்தும் எனக் கருதுகிறது. ஆனால் பாகிஸ்தானின் இத்தகைய நடைமுறை இந்தியாவின் பாதுகாப்பு பொறுத்து அதிகமான எச்சரிக்கைகள் ஏற்படுத்தியுள்ளது. அதனை எதிர்கொள்வது இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

நான்காவது சவுதிஅரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உடன்பாடு என்பது மேற்காசிய பரப்பில் இஸ்ரேலின் நடைமுறையை அல்லது அணுகுமுறையை எதிர்கொள்வதற்கான உத்தியாகவே காணப்படுகிறது. காரணம் பாகிஸ்தான் அணு ஆயுத நாடு என்ற அடிப்படையில் சவுதிஅரேபியாவுக்கு ஒரு ஆரோக்கியமான பாதுகாப்பு அரணை பாகிஸ்தான் முன்னிறுத்தி உள்ளது. இவ் உடன்பாட்டின் பிரகாரம் இரு நாடுகளும் பரஸ்பரம் ஆயுதங்களை கைமாற்றிக்கொள்வதும் ஆயுதங்களை கையில் வைத்துக் கொள்வதும் சாதாரணமான விடயமாகவே நோக்கப்பட உள்ளது. அதனால் பாகிஸ்தான் ஒரு வலுவான உத்தரவாதத்தை சவுதிஅரேபியாவுக்கு வழங்க முன் வந்துள்ளது. இது இஸ்ரேலை மட்டுமின்றி அமெரிக்காவின் அணுகுமுறைகள் மீதும் அதிக நெருக்குவாரத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. காரணம் சவுதிஅரேபியா அமெரிக்காவின் நீண்ட நட்பு நாடு என்ற அடிப்படையில் அதனுடைய முக்கியத்துவம் நோக்கப்பட வேண்டும். ஏறக்குறைய பாகிஸ்தானும் சவுதிஅரேபியாவும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் உடன்பாட்டின் தனித்துவத்தையும் விளைவையும் அளவீடு செய்தால் அவசியமாகும்.

ஐந்தாவது பாகிஸ்தான் சவுதிஅரேபியா உடன்பாடு எட்டப்பட்ட பாதுகாப்பு சார்ந்த விடயம் நிலையான போர் தன்மையை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என்பது இஸ்ரேல்-அமெரிக்க கூட்டின் இருப்பில் தங்கியுள்ளது. சவுதிஅரேபியா அதிக அதிருத்தியோடு கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கருதுகின்றது. அதனால் இவ்வகையான பாதுகாப்பு உடன்பாடு நேரடியாக இஸ்ரேலை பாதிப்பதோடு அமெரிக்காவுடனான மேற்காசிய உறவில் அதிக கரிசனையை ஏற்படுத்தக்கூடியது. ஆரபிய நாடுகளுடன் தரைவழித் தொடர்பும் பொருளாதார ரீதியான ஒத்துழைப்பும இராணுவ ரீதியான பலமும் கலாசார ரீதியான பிணைப்பும் இப்ராந்திய அணிகளுக்கு இடையே ஒருமைப்பாட்டை தோற்றுவிக்க வழி வகுத்துள்ளது. இதனை எதிர்கொள்ளுகின்ற நிலையிலே மேற்காசிய அரசியல் களம் விளங்குகிறது. ஏற்கனவே ஈரான் இஸ்ரேல் மீது நிகழ்த்திய தாக்குதலை பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள இஸ்ரேல் ஆபிரகாம் (Abraham) உடன்பாட்டின் மூலம் நெருக்கம் அடைந்திருந்த அராபிய நாடுகளோடும் பகைமை போக்கை கடைபிடிக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுனள்ளது.

எனவே மேற்காசிய மற்றும் தென்னாசிய பிராந்திய நாடுகள் இரண்டுக்கும் இடையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு உடன்பாடு பிராந்தியடைய அடிப்படையிலும் பூகோள அரசியல் அடிப்படையிலும் அதிகமான முக்கியத்துவதர்தை அடைந்துள்ளது. இது பாதுகாப்பு சூழலை பிராந்தியங்களுக்கிடையே முதன்மைப்படுத்தியுள்ளது. சவுதிஅரேபியாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்தமை இரு நாடுகளுக்கு இடையிலான ஒன்றிணைவாக மட்டுமின்றி பிராந்தியன்களுக்கு இடையிலான ஒன்றிணைவாகவும் நோக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இதன் விஸ்தரிப்பு தவிர்க்க முடியாததாக மாறுவதோடு இஸ்ரேலை பாதிக்கக் கூடிய விதத்தில் மேற்கின் நலன்களை நிராகரிக்கக் கூடிய விதத்தில் விஸ்தரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)