June 28, 2026
அரசியல் கட்டுரைகள்

இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் ஷ்ரிங்லாவின் இலங்கை விஜயம் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் முனைப்புக்கள்

நெருக்கடி அடைந்திருந்த இலங்கை-இந்திய உறவை சரிசெய்வதில் இரு தரப்பும் வெற்றிகரமாக செயற்படுவதாக தெரிகிறது. குறிப்பாகஇ இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவின் இலங்கை விஜயம் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. சமகாலத்தில் இருநாட்டு இராணுவமும் எட்டாவது மித்ர சக்தி என அழைக்கப்படும் இராணுவ பயிற்சி மெற்கொண்டிருப்பதுவும் கொழும்பு துறைமுக நகர மேற்கு முனையத்தை இந்தியா பெற்றுக்கொள்வதற்கான உடன்பாட்டின் கைச்சாத்திட்டிருப்பதுவும் குறிப்பிடத்தக்க நகர்வுகளாக உள்ளது. இக்கட்டுரையும் இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை வருகை ஏற்படுத்தியிருக்கும் உள்ளார்ந்த அரசியல் விளைவுகளை நோக்குவதாக அமையவுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி இந்திய வெளிவிவகார செயலாளரை சந்தித்த போது வெளிப்படுத்திய தகவல்களின் சாரத்தை நோக்குவது அவசியமாகும். இந்தியாவை அச்சுறுத்துவதற்காக இலங்கையை எவரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டேன் எனவும் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே 1960-1970களில் காணப்பட்ட நட்புணர்வை மற்றும் தொடர்புகளை மீள கட்டியெழுப்புவதன் அவசியம் பற்றியும் இருநாடுகளுக்குமிடையில் காணப்படும் மீனவர் பிரச்சினை வர்த்தக முரண்பாடுகள் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் 13ஆம் திருத்த சட்டத்தின் பலவீனங்கள் போன்றே அதில் காணப்படும் நலம் தொடர்பிலும் ஜனாதிபதி இந்தியா வெளிவிவகார செயலாளருக்கு தெரிவித்ததோடுஇ சீனாவுடனான எமது நாட்டின் தொடர்புகள் பற்றி மிகத்தெளிவாக எடுத்துக்கூறியதுடன் அவ்விடயம் தொடர்பாக எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கை சீன உறவு பிரதிபலிப்புக்களால் எழுந்த இந்தியாவுடனான முரண்பாட்டை இலங்கை ஜனாதிபதி சரிசெய்ய முயன்றுள்ளார் என்பதுவும் அதற்கான வாய்ப்புக்களை நோக்கிய இந்தியாவின் வெளிவிவகார செயலாளரின் இலங்கை நோக்கிய விஜயம் அமைந்துள்ளது என்றும் விளங்கிக் கொள்வது அவசியமாகும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு சீனா-இலங்கை உறவு மிகப்பலமான நிலைக்கு நகர்ந்திருந்தது. அதனை தடுத்து நிறுத்துவது இந்தியாவின் பிரதான நோக்கமாக காணப்பட்டது. அத்தகைய நோக்கத்தை இராஜதந்திரரீதியில் வெற்றி கொள்வதற்காக கடந்த காலப்பகுதியில் இந்தியா நகர்ந்து கொண்ட போதும் இந்திய வெளிவிவகார செயலாளரின் பயணம் அத்தகைய விடயத்தை அதிக கரிசணையை செலுத்தியதோடு அவரது இராஜீக பயணம் அதற்கான வாய்ப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அதனை விரிவாக நோக்குதல் அவசியம்.

முதலாவது, தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கின் தலைநகரமாக கருதப்படும் திருகோணமலை நோக்கி இந்திய வெளிவிவகார செயலாளரின் முதல் பயணம் அமைந்திருந்தது. இந்தியாவின் எண்ணெய் தாங்கிகளை பார்வையிட்டதுடன் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டது போல் இந்தியா ஒரு வர்த்தக நடவடிக்கைக்கானதொரு நகர்வை நோக்கி செயற்படுவதாக புரிந்து கொள்ள முடியும். அதனடிப்படையில் திருகோணமலையில் உள்ள 100 எண்ணெய் தாங்கிகளில் 15இனை இந்தியா தனது கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதோடு அதன் மீதியையும் முழுமையாக பராமரிக்கும் கட்டுப்பாட்டை எடுக்கபோகின்றது என்ற வாதம் காணப்படுகிறது. முழுமையாக இந்தியாவிடம் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று தற்போதுள்ள ஆளுங்கட்சி குற்றஞ்சாட்டுகின்ற போது மறுபக்கத்தில் ஓமல்பே சோபித தேரர் அந்த செய்தியை உறுதிப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் அத்தகைய நகர்வு தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு இந்திய தரப்பின் தந்திரோபாய நகர்வாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை அமைந்திருக்கும் எண்ணெய் தாங்கிகளை பார்வையிட்டதும் அது தொடர்பான உரையாடல்களை இந்திய வெளிவிவகார செயலாளர் மேற்கொண்டதும் வர்த்தக நோக்கத்தை கடந்து ஒரு அரசியல் வெளிப்படுத்துகை ஏற்படுத்தவதற்கான காட்சிப்படுத்தல்களாகவே தெரிகிறது. 1987இலிருந்து திருகோணமலை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறைகள் துறைமுகம் சார்ந்தும் அதன் கடற்பிரதேசம் சார்ந்ததாகவுமே அதிகம் முதன்மைப்படுத்தப்படுகிறது.

இரண்டாவது, வடமாகாணத்தின் மையப்பகுதியான யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் கட்சி தலைவர்களையும் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களையும்இ அரச முகவர்களையும், புத்திஜீவிகளையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் அமைத்துள்ள கலாச்சார மண்டபத்தை பார்வையிட்டதுடன் அதற்கான 5ஆண்டு செலவீனத்தை இந்தியா பொறுப்பேற்பதாகவும் வலியுறுத்தி இருந்தார். அதுமட்டுமன்றி கலந்துரையாடலின் போது இலங்கை தமிழரும் நீதியான சமத்துவமான கௌரவான அந்தஸ்தினை ஏற்படுத்தி கொடுப்பதில் இந்தியா கரிசணை கொள்வதாகவும் 13ஆம் திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தை நோக்கி செயற்படுவதாகவும் தெரிவித்திருந்தார். அவரது உரையாடலில் அவரது அணுகுமுறைகளும் இராஜதந்திரரீதியிலான பரிபாசைகளும் அதிகம் வெளிப்படுத்தியதோடு தொடர்ச்சியான அத்தகைய நகர்வுகளை இந்தியா பிராந்திய நாடுகள் மத்தியில் ஏற்படுத்த முனைவதனையும் அவதானிக்க முடிகிறது. அவரது யாழ்ப்பாண விஜயம் தொடர்ச்சியானது என்பதை விட தென்னிலங்கைக்கு தனித்துவமான செய்தியை வழங்குவதற்கான நகர்வாகவே தெரிகிறது.

மூன்றாவது, அவரது கொழும்பை மையப்படுத்திய இராஜீக முயற்சிகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான உரையாடல் வலிமை பொருந்தியதாக உள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் 13ஆம் திருத்த சட்டமூலத்துக்கு வழிமொழிந்ததோடு மாகாணசபை தேர்தலை நோக்கிய கோரிக்கைகளை முழுமைப்படுத்தி உள்ளனர். அதனைக்கடந்து அவர்களது உரையாடல் தீர்வுக்கான எத்தகைய நகர்வுகளையும் முன்மொழியாததும் தொடர்ச்சியாக 30வருடங்களுக்கு முன்னர் கட்டமைக்கப்பட்ட 13வது திருத்தசட்ட மூலத்தை மையப்படுத்தியதாக மட்டுமே காணப்படுகிறத. வெளிவிவகார செயலாளரின் சந்திப்பை அடுத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்கு விஜயம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 13வது திருத்த சட்டமூலத்தை கடந்து செயற்படுவதற்கான பொறிமுறையை தமிழ்த்தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் முன்வைப்பதோடு இத்தகைய இராஜதந்திர பணியாளர்களை சந்திக்கும் போது அதுசார்ந்த விவாதங்களை உருவாக்கி அதற்கான திட்டமிடல்களை வரைபுகளாகவும் உடன்பாடுகளாகவும் ஆக்குவதற்கு முயலுதல் வேண்டும். அரசியல்வாதிகளை உள்ளடக்கி இராஜீக முயற்சிகளில் ஈடுபடும் பணியாளர்களை நோக்கி அதிக உரையாடல்களை தமிழ்த்தரப்பு ஏற்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் வலுவற்று போன 13வது திருத்தம் பற்றிய உரையாடல்களை முன்வைப்பதன் மூலம் காலந்தாழ்த்துதலே சுயஅரசியல் இலாபங்களை அடைவது மாத்திரமே நிறைவு செய்ய முடியும். மாறாக தமிழர்களின் பிரச்சினைக்கு உறுதியான தீர்வினை எட்டுவதற்கு முடியாமல் போகுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றது.

நான்காவது, இந்திய வெளிவிவகார செயலாளர் தமிழரசியல் சக்திகளுக்கு ஐக்கியம் பற்றிய உரையாடலை கூட்டமைப்பின் சந்திப்பில் வலியுறுத்தி உள்ளார். இதனை இலங்கைக்கான இந்திய தூதுவரும் துணைத்தூதுவர்களை கடந்த பல ஆண்டுகளாக ஐக்கிய பற்றிய உரையாடலை அதிகம் வலியுறுத்தி வருகின்றார். அதனை தமிழ்த்தேசிய அரசியலில் பயணிக்கும் எந்த கட்சியும் அதிகம் கரிசணை கொள்ளாமல் இருப்பது ஈழத்தமிழரின் அரசியல் தீர்வில் நெருக்கடிமிக்கதொன்றாகவே விளங்குகிறது. குறிப்பாக கட்சிகள் தனித்தனியே செயற்பட்டால் அதற்கிடையே தனித்துவமான தலைமைகள் அடையாளப்பட்டால் முழுமையான ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்குவதனூடாக அதற்கான கட்டமைப்பை வரைந்து கொள்ள முடியும் ஒவ்வொரு கட்சிகளதும் அரசியல் நலன்கள் தமிழ்த்தேசியத்தை மையப்படுத்தி இருக்கின்ற போது ஐக்கிய முன்னணி ஒன்றை அடையாளப்படுத்தவதோ அல்லது அவ்வப்போது எழுகின்ற பிர்ச்சினைகளின்பால் ஒன்றிணைந்த செயற்படுவதோ பிரச்சினையாக அமையாது. இதற்கான கோரிக்கையை தமிழ்ச்சிவில் அமைப்புக்கள் பல ஆண்டுகளாக ஏற்படுத்துவதற்கு முயன்றுவருகிறது. ஆனால் அதற்கான எத்தகைய கரிசனையும் தமிழ்த்தேசிய உணர்வை பேசிக்கொண்டு எந்த கட்சியும் முன்னெடுப்பதற்கு தயாராக இல்லை. ஆனால் அதனை நோக்கி பயணிப்பது பிராந்தியத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் அவசியமானதொன்றாக மாறி வருகிறது. அதனை சரிசெய்ய தவறும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை தோற்கடிக்கப்படும்.

ஐந்தாவது, இந்திய வெளிவிவகார செயலாளரின் விஜயம் இந்தியாவின் நலன்களை நிறைவுசெய்துள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் சீனா தொடர்பாக கருத்து தெரிவிக்காத இந்திய வெளிவிவகார செயலாளர் மறைமுகமாக சீன-இலங்கை நெருக்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதில் வெற்றிகரமான செயற்பாடுகளை எட்டியிருப்பதோடு வடக்கு-கிழக்கு பிரச்சினையை முதலீடாக கொண்டு இலங்கை அரசின் சீனா சார்பு கொள்கைக்கு நெருக்கடியை உருவாக்கி உள்ளார். இலங்கையின் ஜனாதரிபதி வெளிப்படையாகவே இலங்கை-சீனா உறவின் தவறான புரிதலை ஏற்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். அதனால் இலங்கைக்கான அவரது விஜயம் இந்திய நலன் சார்ந்த வெற்றிகரமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தரப்பும் இந்தியாவோடு ஒத்துழைப்பதற்கான தனது முகத்தை சரியாக பதிவு செய்துள்ளது.

எனவே, இந்தியா வெளிவிவகார செயலாளரின் இலங்கைக்கான இராஜதந்திர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஆரோக்கியமான உறவைப் பலப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ளது. இத்தகைய உறவின் நெருக்கம் ஈழத்தமிழரது அரசியலில் இந்தியா இலங்கை ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துவதிலும் வடக்கு-கிழக்கு தமிழர்களின் பிரச்சினையின் தீர்வினை நோக்கி நகர்வதற்கும் நெருக்கடியாக அமைய வாய்ப்புள்ளது. ஈழத்தமிழரின் அரசியல் தலைமைகள் வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்தாது எதிர்த்தரப்புக்கு சேவகம் செய்யும் மனோநிலையும் வாய்ப்புக்களற்ற போது அதனை அரசியல் முதலீடாக்க முயல்வதன் நீட்சியுமே இன்றை நெருக்கடிக்கான காரணமாகும். இந்தியாவோடு சேர்ந்து பயணிக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனை கண்டுகொள்ளாது செயல்பட்டுவிட்டு வாய்ப்பில்லாத சந்தர்ப்பத்தில் அதற்கான அணுகுமுறையை உருவாக்குவதிலோஎந்தவித பயனும் இலங்கை தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. இந்தியா-இலங்கை நலன்கள் ஓரிடத்தில் சந்திக்கும் போது ஈழத்தமிழரின் அரசியல் நெருக்கடிக்கான பக்கமாகவே அமையும். இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயம் ஈழத்தமிழர்களின் அரசியலில் சவால்மிக்க காலப்பகுதியாகதே தெரிகிறது. இதற்குரிய பொறுப்பு இந்தியாவினதோ இலங்கை தரப்பினதோ கிடையாது ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளதாகவே உள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)