இலங்கையின் அரசியலை புதிய திசை நோக்கி நகர்த்துவதில் தென் இலங்கை ஆட்சியாளர்கள் முனைப்பாக உள்ளனர் என்பது இப்பகுதியல் பலதடவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் இன்னோர் நகர்வை சமகாலத்திலும் காணக்கூடியதாக உள்ளது. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டுப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டதேயாகும். அதாவது உள்நாட்டுப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நகர்வே அந்த நாட்டின் வெளியுறவாகும். அத்தகைய வரைபுக்குள்ளேயே தற்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதியின் வெளியுறவின் நடவடிக்கைகளும் நிகழ்கின்றது. இலங்கையின் வெளியுறவானது வரலாறு முழுவதும் எதிர்நோக்கும் புவிசார் அரசியலை வெற்றி கொள்வதற்கு பூகோள சக்திகளை அரவணைப்பதன் மூலம் தீர்வுகாண முயலுகிறது. அத்தகைய மரபார்ந்த வெளியுறவின் வடிவமாகவே இலங்கையின் ஜனாதிபதியின் சீன விஜயம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இக்கட்டுரையும் அதற்கான காரணங்களை தேட முயலுகிறது.
இலங்கையின் ஜனாதிபதி நான்கு(17-21.10.2023) நாள் உத்தியோகபூர்வமான பயணத்தை மேற்கொண்டு சீனாவுக்கு சென்றுள்ளார். சீனாவின் தலைநகரில் நடைபெறவுள்ள பட்டி மற்றும் பாதை முன்முயற்சிக்கான மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக விஜயம் செய்துள்ளார். ஏறக்குறைய 130 நாடுகளின் தலைவர்களும் 30 மேற்பட்ட உலகளாவிய அமைப்புக்களும் கலந்து கொள்ளும் மகாநாட்டில் பொதுவளர்ச்சி மற்றும் விருத்தி எனும் கருப்பொருளைக் கொண்டு மகாநாடு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு இலங்கையின் ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் சீன ஜனாதிபதியுடன் கடன் மறுசீரமைப்புப் பற்றி உரையாடவுள்ளமை குறிப்பிட்டத்தக்கதாகும். உலக நாடுகளின் தலைவர்களை சந்திப்பதுடன் இலங்கையின் பொருளாதார வாய்ப்புகளை திறந்துவிடுவதன் நோக்குடன் அந்த நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி உரையாடிவருகின்றார். பல நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்புகளையும் உரையாடலையும் மேற்கொள்ளும் ஜனாதிபதி இலங்கையின் பொருளாதார வாய்ப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். சீன வர்த்தகர்களுடன் முதலீடு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை தொடர்பில் உரையாடும் போது எதிர்கால வர்த்தக வாய்ப்புக்கான தளமாக இலங்கையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சீன வர்த்தகர்கள் மத்தியில் இலங்கை போட்டி நிறைந்த டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்குள் படிப்படியாக முன்னேறிவரும் இலங்கை வர்த்தக தளமாக பயன்படுத்தக் கூடியது சூழலைக் கொண்டிருக்கின்றது என்றார்.
இவ்வாறு சீனாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா இலங்கையின் பொருளாதாரத்திற்கான முகாந்திரங்களை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார். இலங்கையை ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் சிறிய நாடுகளையும் தீவு நாடுகளையும் ஒன்றிணைப்பதுடன் இந்து சமுத்திர நாடுகளுக்கிடையே வர்த்தக உறவினைப் பலப்படுத்த ஜனாதிபதி முயல்வதாகவே தெரிகிறது. இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் தாய்லாந்து போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவை வலுப்படுத்துவதிலும் உடன்படிக்கையை மேற்கொள்ளவும் உரையாடல்களை நிகழ்த்திவருகின்றார்.
ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்து முக்கியமானதாக அமைந்துள்ளது. குறிப்பாக அக்டோபர் 13 திகதி Voice Tube தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் காசா அழிந்தால் பயங்கர விளைவுகள் ஏற்படும் எனக்குறிப்பிட்ட ரணில்விக்கிரமசிங்ஹா அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் சப்பாத்துக் கால்களுக்குள் நாங்களால் இருக்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டடிருந்தார். இலங்கையின் ஜனாதிபதி இவ்வாறே கடந்த மாதம் ஜேர்மன் தொலைக்காட்சிச் சேவைக்கு அளித்த பேட்டியிலும் மேற்குலகத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சரமாரியாக வெளிப்படுத்தியிருந்தார். இலங்கையின் ஜனாதிபதி தாராளவாதியாக மட்டமல்லாது மேற்குலக விசுவாசியாகவும் நண்பனாகவும் விளங்கியதோடு மேற்குலக மரபுகளுக்குள்ளால் இயங்குபவராகவும் காணப்படுபவர். இலங்கையில் அவரது அரசியல் வரலாறு முழுவதும் சிங்கள மக்களது பாரம்பரிய ஆடையில் காணமுடியாதவராகவும் பௌத்த பிக்குகளை அட்டாங்க நமஸ்காரம் செய்யாதவராகவும் விளங்கியவர் திடீரென மேற்குக்கு எதிரானவராக காட்டிக் கொள்கிறார் என்பதே ஆச்சரியமான விடயமாக தெரிகிறது. அதிலும் அமெரிக்க ஜனாதிபதியை நோக்கி அவரது கருத்து அதிக சர்ச்சைக்குரியதாகவே தெரிகிறது. அவ்வாறு கூறுமளவுக்கு ரணில்விக்கிரமசிங்ஹாவுக்கு வலுக்கொடுத்த நாடே அமெரிக்கா என்பதை நினைவு கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு அமெரிக்காவை விமர்சனம் செய்யும் துணிச்சல் நெருக்கமான நட்புசக்தியாலேயே முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒரு எதிரி தெரிவித்திருந்தால் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரே இராஜதந்திர நெருக்கடியை உருவாக்கியிருப்பார். அல்லது அத்தகைய தலைமைக்கு எதிராக அதீதமான நெருக்கடிகளை கொடுத்திருப்பார். ஆனால் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக எத்தகைய கருத்தினையும் இதுவரை அமெரிக்கத் தரப்பிடமிருந்து எழவில்லை என்பது இது ஒரு கூட்டு உபாயமாகவே தெரிகிறது. எதனைத் தெரிவித்தாவது சிங்கள் மக்கள் மத்தியில் தீவிர தேசியவாதியாக ரணில்விக்கிரமசிங்ஹா விளங்க வேண்டும் என்பதே அடிப்படையான அம்சமாகும். அத்தகைய தீவிர தேசியமே அடுத்துவரவுள்ள ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்ள உதவும் என்பது உள்நாட்டுச் சக்திகளாலும் வெளிநாட்டுச் சக்திகளாலும் புரிந்து கொள்ளப்பட்டள்ளது. அதில் ஓரங்கமே சீனாவுக்கான பயணமும் பொருளாதார மீட்பாளர் என்பதற்கான நடைமுறையுமாகும்.
உள்நாட்டில் ரணில்விக்கிரமசிங்ஹா பொருளாதாரத்தை மீட்டவராகவே முதன்மைப்படுத்தப்படுகிறார். யதார்த்தமும் அதுவாகவே அமைந்துள்ளது. ஆனால் மேற்குலகத்தின் ஒத்துழைப்பு இன்றி உள்நாட்டுப் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டுவந்திருக்க முடியாது என்பது புரிந்து கொள்ளக் கூடிய விடயமாகும். அத்தகைய நெருக்கடியை வெற்றி கொள்வதில் இந்தியாவுக்கும் மேற்குலகத்திற்குமே அதிக பங்கிருந்தது. அதில் சீனாவின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அமைந்திருந்தது.
ஆனால் சீனா தற்போது அதிக பங்களிப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதுடன் ரணில்விக்கிரமசிங்ஹாவை ஜனாதிபதியாக்கவும் விரும்புவதாகதே தெரிகிறது. அதற்கு வலுவான காரணம் ரணில்விக்கிரமசிங்ஹா பிரதமராக இருந்த போதே ஹம்பாந்தோட்டை 99 வருட ஒப்பந்தம் சாத்தியமானது. அது மட்டுமல்லாது ரணில்விக்கிரமசிங்ஹாவினால் மட்டுமே சீனாவின் நண்பர்களான ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாக்க முடியுமென சீனா கருதுகிறது. அதுவே யதார்தமுமாகும். ராஜபக்ஷக்களது தற்போதைய நிலையை மிக ஆபத்தானதாகவே தெரிகிறது. அதனை தெளிவாக உணர்ந்த சீனா அவர்களை எதிர்காலத்திற்கு பாவிப்பதற்கு பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என கருதுகிறது. அதற்கான வாய்ப்பான தலைவராக ரணில்விக்கிரமசிங்ஹா மட்டுமே காணப்படுகிறார். அவர் மேற்கையையும் கையாண்டு சீனாவையும் இந்தியாவையும் சமாளித்துக் கொள்வதில் திறமைசாலியாகக் காணப்படுகிறார் என்பதை சீனா உணர்ந்துள்ளது. அது மட்டுமல்ல ரணில்விக்கிரமசிங்ஹா ஒரு இந்திய எதிர்ப்புவாதியாக உள்ளார் என்பதை அடிப்படையாகக் கொண்டு சீனா தனது நட்பு சக்தியாக கருதுகிறது. அதற்கு அமைவாகவே ரணில்விக்கிரமசிங்ஹா செயல்படுகிறார். சீனாவின் ஆதரவுக்கான எண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மேற்குக்கு எதிரான உரையாடலை அவ்வப்போது பிரயோகித்துவருகிறார். அதற்கு அடிப்படையில் பொதுஜனப் பெரமுனவின் ஆதரவைப் பெறுவது மட்டுமல்லாது பௌத்த மகாசங்கத்தினரதும் பெரும்பான்மை மக்களதும் ஆதரவையும் திரட்டுவது நோக்கமாகத் தெரிகிறது. இவை எல்லாவற்றையும் கடந்து சிங்கள பெரும்பான்மை மக்கள் இந்தியாவையோ மேற்கையோ ஆதரிப்பதைவிட சீனாவையே அதிகம் ஆதரிப்பவர்களாக உள்ளனர். சீனாவே தங்களது பாதுகாப்புக்கும் எதிர்கால இருப்புக்கும் உறுதுணையாக அமையுமென்ற புரிதலைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் புவிசார் அரசியலையோ பூகோள அரசியலையோ புரிந்து கொண்டு செயல்படுபவர்களாக இல்லை. மாறாக தமக்கு அதிக பாதமில்லாத அதேநேரம் தம்மை ஆதரிக்கும் சக்தி எதுவெனக் கருதுகின்றனர். ஒப்பீட்டடிப்படையில் இந்தியா, அமெரிக்காவை விட சீனா இலங்கையின் நலன்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்காத சக்தியாக விளங்குகிறது என்பதனாலேயே சீனாவை அதிகம் ஏற்றுக் கொள்கின்றனர். சீனாவும் பெரும்பான்மை சிங்கள-பௌத்தம் கருதுவது போல் செயல்படுகிறது. வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட சீனா உள்நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய மட்டத்திலும் இலங்கையை பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தி வருகிறது. இந்தியா எப்போதும் ஆபத்தான சக்தி எனவும் அமெரிக்கா நலனுக்கான சக்தி என்பதையும் தென் இலங்கை ஆட்சியாளர்களும் சிங்கள-பௌத்த மக்களும் கருதுகின்றனர்.
எனவே இலங்கை ஆட்சியாளர்கள் இறுதியிலும் இறுதியாக சீனா பக்கமே விளங்குவார்கள் என்பது ரணில்விக்கிரமசிங்ஹா நடவடிக்கையிலேயே கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ரணில்விக்கிரமசிங்ஹாவைப் பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெறுவது, பொருளாதாரத்தை மீட்பது, பெரும்பான்மை சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை பாதுகாப்பது போன்ற இலக்குகளை கொண்டவராக காணப்படுகிறார். அதனை நோக்கி செயல்படுபவராகவே உள்ளார். அதனை அடைவதற்கு உலகத்தில் எந்த நாட்டுடனும் இணைந்து செயல்படத்தயாராக உள்ளார். ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா ஒரு மிதவாதி அல்லது தாராளவாதி என்பதைவிட தீவிர சிங்கள-பௌத்த தேசியவாதியாகவே காணப்படுகிறார். வெளிப்படையாக சிங்கள பௌத்த தீவிர தேசியவாதியாக தன்னைக் காட்டிக் கொள்ளாத போதும் அடிப்படையில் தீவிர தேசியவாதியாகவே இயங்ககிறார். சிங்கள-பௌத்த பெரும்பான்மைக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் காப்பானாக செயல்படுபவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா என்பதை எந்த சிங்கள சமானியனும் மறுக்க முடியாது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
