January 19, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கைத் தீவின் குடித்தொகை மதிப்பீடும் வடக்கு –கிழக்கு தமிழ் மக்களும்!

இலங்கையின் குடித்தன மதிப்பீட்டு அறிக்கை வெளிவந்துள்ளது. 1871 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையும் இலங்கையின் குடிசான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15வது குடிசன மதிப்பீட்டு அறிக்கை 2025 (2024) ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. இம் மதிப்பீட்டு அறிக்கையின் உள்ளடக்கங்களில் மாவட்ட, மாகாண மற்றும் இலங்கை முழுவதற்குமானது என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு குடிசன மதிப்பீட்டு அறிக்கை வெளியாகியிருக்கின்றது. விஞ்ஞானபூர்வமாகவும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் 2025 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இலங்கை தீவு மட்டுமன்றி வடக்கு கிழக்கும் குடிசான மதிப்பீட்டு அறிக்கையில் தனித்துவமான வெளிபாடுகளை தந்துள்ளது. இக்கட்டுரையும் தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணம் அடைந்திருக்கும் நிலையையும் அது தொடர்பில் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் தேடுவதாக உள்ளது.

இலங்கைத் தீவில் குடிசனத் தொகை மதிப்பீட்டானது பத்து வருடங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளுகிற தன்மை காணப்படுகிறது. இதன் போது சனத்தொகையின் பரம்பல், வளர்ச்சி, சனத்தொகை அடர்த்தி என்பன பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த குடிசன மதிப்பீட்டு ஆண்டுகளோடு ஒப்பிடுகின்ற விதத்தில் சனத்தொகை வளர்ச்சி வீதம் மிக மோசமான நிலையை இலங்கை தீவு அடைந்துள்ளது. குறிப்பாக இலங்கை தீவு முழுவதும் சராசரியாக வருடாந்த வளர்ச்சி வீதம் 0.7 ஆகக் காணப்படுகிறது. அதேநேரம் வடக்கு கிழக்கில் சனத்தொகை வருடாந்த வளர்ச்சி வீதமானது 0.5 என்ற நிலையை அடைந்துள்ளது. இலங்கை முழுவதும் மாவட்ட ரீதியில் சனத்தொகை வளர்ச்சி வீதமானது அளவிடப்பட்டிருக்கின்ற போது முல்லைத்தீவு மாவட்டம் அதிகமாகவும் மிகக் குறைந்த வளர்ச்சி நிலையை கொண்ட மாவட்டமாக வவுனியாவும் காணப்படுகிறது. மூலத்தீவு கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களும் சனத்தொகை பரம்பல் மிகக் குறைந்த மாவட்டங்களாக பதிவாகியுள்ளன. அவ்வாறே வடக்கு கிழக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தின் சனத்தொகை பரம்பலானது 2.7சதவீதமாக பதிவாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தை திருகோணமலை மாவட்டத்துடன் ஒப்பிடுகின்ற விதத்தில் அதிக பரம்பலைக் கொண்டதாக பதிவாகி இருக்கின்றது. மாகாண ரீதியில் வடமாகாணத்தின் மக்கள் தொகை கிழக்கு மாகாணத்தினுடைய மக்கள் தொகை வளர்ச்சியை விட குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது.

அவ்வாறே சனத்தொகை பரம்பலும் வடக்கு கிழக்கு பொறுத்தவரையில் பலவீனமானதாக காணப்படுவதோடு வடக்கு மாகாணத்துடன் ஒப்பிடுகின்றபோது கிழக்கு மாகாணம் பரம்பல் கூடிய மாகாணமாக விளங்குகிறது. இத்தகைய தரவுகளை வைத்துக்கொண்டு அளவீடு செய்கின்ற போது வடக்கு கிழக்கு ஏனைய மாவட்டங்களோடும் மாகாணங்களோடும் ஒப்பிடுகின்ற போது மிக பலவீனமான மக்கள் தொகை வளர்ச்சி நிலையையும் பரம்பலையும் கொண்டிருப்பதாகவே தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதன் போக்கு ஏன் என்ற அடிப்படைக் கேள்வியும் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது குடிசை மதிப்பீட்டில் தமிழ் மக்களின் வளர்ச்சி வீதமும் பரம்பலும் வீழ்ச்சி அடைந்து இருப்பதற்கான காரணங்கள் புதியது அல்ல. இலங்கை நீண்ட காலமாக நிலவி வந்த ஆயுதப்போரில் முடிவும் அதற்குப் பின்னான காலப்பகுதியில் நிகழ்ந்த அரசியல் நடைமுறைகளும் மக்கள் தொகை வளர்ச்சியிலும் அதன் பரம்பரிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளது. போரின் வடுக்கள் முடிவுக்கு வராத நிலையில் அத்தகைய வளர்ச்சிக்குரிய நிலை குறைந்திருப்பது தவிர்க்க முடியாததாகும். போரில் ஏற்பட்ட இழப்பீடுகளும் சரி செய்ய முடியாத நிலை மக்கள் தொகையில் வீழ்ச்சி நிலையை தோற்றுவித்திருக்கிறது. குறிப்பாக ஆண் பெண் இருபாலாரும் போரில் அழிவடைந்துள்ளதோடு தமிழ் சமூகத்தின் பாரம்பரியக் கொள்கைகளும் நாட்டில் நிலவும் அமைதியின்மையும் அதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. வடக்கோடு ஒப்பிடும்போது கிழக்கு மாகாணம் ஓரளவு வளர்ச்சி நிலையை எட்டியிருப்பதற்கு தமிழ் பேசும் முஸ்லிம்களும் பெரும்பான்மை சிங்கள மக்களின் குடிப்பரம்பலும் காணப்படுவதே காரணமாகும். ஆனால் வடக்கை பொறுத்தவரையில் போருக்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மையும் தெளிவான அரசியல் தலைமைகளின் வறுமையும் அத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்வுகள் ஒரு புறம் அமைய மறுபக்கத்தில் போதைப்பொருள் பாவனை கோவிட்-19 தொற்றின் இழப்பீடுகள் உடலில் ரீதியாக ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் உளரீதியான பாதிப்புகள் என்பனவற்றின் கூட்டுத்தன்மையே வளர்ச்சி இன்மைக்கு காரணமாக தெரிகின்றது. இது மட்டுமின்றி பொருளாதார ரீதியான நெருக்கடியும் சனத்தொகை வளர்ச்சி வீதத்தை பாதித்ததோடு சனத்தொகைப்பரம்பலை முற்றாக குழப்பத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. வடக்கு கிழக்கில் ஒப்பீட்டு அடிப்படையில் தொழில் வாய்ப்புகளும் தொழில் முயற்சிக்கான கட்டமைப்புகள் போர் முடிந்த பின்னரும் கட்டி எழுப்பப்படாமல் அரசினதும் இராணுவத்தினதும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு அணுகுமுறைகள் வடக்கு கிழக்குக்கான மக்கள் தொகையின் பரம்பலை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. நம்பிக்கை ஊட்டக்கூடிய எத்தகைய செய்முறையும் போருக்கு பின்னர் ஏற்படுத்தாத சூழலில் உயிர்வாழ்வக்கான உத்தரவாதமும் இல்லாத நிலை என்பன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. போரின் வடுக்களில் உளவியல் ரீதியான பாதிப்புகளில் இருந்து மீள முடியாத சமூகமாக காணப்படுவதோடு போதை பாவனை இளைய தலைமுறையினரை முற்றாகவே குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவர்களது பிறழ்வு நடத்தை குடும்ப அமைப்புகளின் சிதைவு சமூகத்தின் தலைமைகளின் வறுமை போன்ற பல அம்சங்கள் மக்கள் தொகை வளர்ச்சியை பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அது மட்டுமன்றி இளம் சமூகம் குடும்ப அலகை விட தனியங்களுக்கான அடையாளத்தையும் இருப்பையும் வாழ்வியல் முறையையும் நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. குடும்ப அலகுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் காணாமல் போய்விட்டது. இவையும் மக்கள் தொகை வளர்ச்சியை நேரடியாக பாதிக்கும் காரணிகளாக மாறியுள்ளன.

இரண்டாவது, இதனால் ஏற்படக்கூடிய விளைவு கூட்டுத் தன்மையற்ற தேசிய இனமாக அன்றி குழுக்கள் என்ற நிலைக்குள் இலங்கை தீவின் மக்கள் தொகையின் போக்கு அடையாளப்படுத்தப்படுகின்ற நிலை ஏற்படப் போகின்றது. இது தனித்து வடகிழக்கு மட்டுமானது அல்ல முழு இலங்கை தீவுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற அம்சமாகவே காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு அடையாளப்படுத்தி இருக்கும் அல்லது முதன்மைப்படுத்தி இருக்கும் தேசியத்தின் இருப்பானது சிதைந்து போவதற்கான சூழலை அதிகம் கொண்டிருக்கின்றது. மக்கள் தொகையின் வீழ்ச்சியானது பிற சமூகங்களின் ஆக்கிரமிப்புக்கும் அதற்கான சமூகப் பொருளாதார வாய்ப்புகளுக்கும் அரசியல் ரீதியான அங்கீகாரத்துக்கும் சூழலை ஏற்படுத்து கொடுப்பதாக அமையும். பாராளுமன்ற உறுப்புரிமை மட்டுமின்றி ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்த கூடிய வாழ்விடம் அல்லது தாயகம் பலவீனம் அடைவதோடு அதன் பொருளாதாரத்தினதும் கலாச்சார மரபுகளும் கலப்புக்குள்ளாகும் வாய்ப்பை அதிகம் பிரதிபலிக்கும். உற்பத்திக்கான வாய்ப்புகள் படிப்படியாக தமிழ் மக்களிடமிருந்து விலகுவதோடு பிற இனங்கள் அத்தகைய நிலங்கள் மீது உற்பத்தி மீதும் கலாச்சாரம் மீதும் செல்வாக்கு செலுத்த வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது இலங்கை தீவையும் ஆக்கிரமித்து இருக்கின்றது. முழு இலங்கையிலும் 0.7சதவீத மக்கள் தொகை வளர்ச்சியே நிகழ்ந்திருக்கின்றது. வடக்கு கிழக்கு 0.5 சதவீதமாக காணப்படுகின்ற நிலை ஒட்டுமொத்தமான விளைவை இலங்கை தீவுக்கு தரக்கூடியது. ஆனால் 70 வீதத்துக்கு மேற்பட்ட மக்களின் மக்கள் தொகையின் வளர்ச்சியோடு 12 வீத மக்கள் தொகை வளர்ச்சியின் வீழ்ச்சியானது அதிக பலவீனத்தை தரக்கூடியது. இது சந்தை பொருளாதாரக் கட்டமைப்பு நுகர்வு உழைப்பு போன்ற பல காரணிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வடகிழக்கு மீது வேகமான ஆக்கிரமிப்புகளை திட்டமிடுகின்ற போது அத்தகையினங்களின் வளர்ச்சியும் பாதிப்படைகின்ற நிலையை தொகையும் மதிப்பீடு உணர்த்தி நிற்கின்றது.

எனவே இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சியும் பரம்பலும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. பொருளாதார நெருக்கடி அதிக மூளைசாலிகளின் வெளியே தள்ளியுள்ளது. மத்திய தர வர்க்கத்தின் இருப்பு அத்தகைய மூளை சாலிகளின் வெளியேற்றத்தினால் காணாமல் போகிறது. இது வடக்கு கிழக்கையும் போர்க்காலம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. அதனால் இலங்கைத் தீவின் மக்கள் தொகை வளர்ச்சியையும் பரம்பலையும் அதிகரிக்கின்ற சூழலையும் அதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கின்றது. இவ்வாறான சூழல் தொடருமாக இருந்தால் வேகமாக இலங்கை தீவு மக்கள் தொகையின்மையின் துயரத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)