தென் இலங்கை அரசியல் களம் என்றும் இல்லாதவாறு அதிக நெருக்கடியையும் குழப்பத்தையும் அடைந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பாரிய குழப்பத்தை இலங்கை தீவின் அரசியல் முழுவதும் தந்திருக்கின்றது. 2024 ஆண்டு ஜனாதிபதி தேர்தல் எதிர்பார்த்திருக்க முடியாத அளவுக்கு கட்சிகளையும் மக்களையும் நெருக்கடியான சூழலை நோக்கி அதள்ளியுள்ளது. ஏறக்குறைய இதுவரை 22க்கு(08.08.2024) மேற்பட்ட வேட்பாளர்களை களத்தில் கொண்டதாக அமைந்துள்ளது. இது அதிக முரண்பாடுகளை தோற்றுவிப்பதோடு தென்னிலங்கை ஒரு அரசியல் கொதிநிலைக்கும் தள்ளப்படுகின்ற நிலையை அடையாளப்படுத்துவதாகவே அதன் அணுகுமுறைகள் காணப்படுகின்றது. இக்கட்டுரையும் வர இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தென் இலங்கை வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பதில் உள்ள நெருக்கடியை தேடுவதாக அமைந்துள்ளது.
2024 ஜனாதிபதி தேர்தல் பிரதானமாக மூன்று வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாக அமையவுள்ளது. ஆனால் தற்போது கட்டுப்பணம் செலுத்தியவர்கள் மட்டுமன்றி எதிர்காலத்திலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எதிர்காலத்தில் மேலும் பல வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதற்கான சூழல் உண்டு. தென்னிலங்கையின் வேட்பாளர் பட்டியலோடு புதிதாக வடக்கு கிழக்கில் தமிழ் பொது வேட்பாளர் என்ற அறிவிப்பு அதிக முக்டகியத்துவத்தை ஏற்படுத்டதக் கூடியது. அத்தகைய களத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா மக்களின் ஆதரவை திரட்டுவதோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுராகுமார திஸாநாயகா ஆகியோர் பிரதான போட்டியாளர்களாக உள்ளனர். இத்தகைய போட்டித் தன்மையில் தற்போதைய ஜனாதிபதிக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் என்று விவாதிக்கப்படுகிறது அத்தகைய எண்ணத்துக்கான அடிப்படைகளை தேடுவது அவசியமானது.
முதலாவது தற்போதைய ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் நிறுத்தப்படுவது என்பது உத்திகளைக் கொண்டதாக விளங்குகிறது. பொதுஜன பொரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்களுடைய ஆதரவோடு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஒத்துழைப்பும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பங்களிப்பும் அதிகமாக உள்ளது. இது அனைத்துத் தரப்புகளதும் கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்களுடைய ஒத்துழைப்பு தற்போதைய ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. இது பெருமளவுக்கு அவரது சுயேட்சை என்ற அடையாளத்தின் ஊடாக பெறப்பட்ட ஒத்துழைப்பாகவும் கடந்த காலத்தில் ஆளுங்கட்சி என்ற அடிப்படையில் அதனுடைய பலத்திலும் இத்தகைய ஒத்துழைப்பை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது ஏனைய இரு வேட்பாளர்களையும் புறந்தள்ளிவிட்டு வெற்றியை அடைவதற்கான உத்தியாகவே உள்ளது. தென் இலங்கையின் அரசியல் சூழலானது அதற்கு அமைவாகவே ஆரம்ப கால பகுதியில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜே.ஆர்.ஜெயவர்தனாவிடம் அரசியலைக் கற்றுக் கொண்ட ரணில்விக்கிரமசிங்ஹா அவரை இலகுவில் எந்த தரப்பினாலும் தோற்கடிப்பது கடினம் என்பதை விளங்கிக் கொள்ள வெண்டும்.
இரண்டாவது தற்போதைய பொதுஜனப் பெரமுனவின் தேர்தல் உத்திகளில் ஒன்றாக மஹிந்த ராஜபக்ஷவின் வாரிசும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இத்தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய உரையாடலின் பின்புலத்தில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக பெரேரா நிறுத்தப்படுகின்ற சூழல் ஆரம்ப நாட்களில் இருந்து முன்மொழிக்கப்பட்டு வந்தது. தம்மிக பெரேரா பெருமளவுக்கு இலங்கையின் முதல் தர செல்வந்தராகவும் வர்த்தகராகவும் பிரமுகராகவும் அங்கீகாரம் மிக்க ஒரு நபராகவும் அடையாளப்படுத்தப்பட்டார். அத்தகைய அடையாளப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட தம்மிக ஜனாதிபதி தேர்தலில் போலியான (டம்மியாக) ஒரு வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லாதாதன் சூழலிலே புதிய வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ நிறுத்தப்பட்டுள்ளார். இது ரணில் விக்கிரமசிங்ஹாவின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைய வாய்ப்புள்ளது. காரணம் பொதுவான பெரமுனோவின் வாக்காளர்கள் தற்போது முன்னாள் ஜே.வி.பி இன் வேட்பாளரான அநுராவை நோக்கி வாக்களிக்க அதிகம் வாய்ப்புள்ளது. அத்தகைய வாக்குகளை தடுத்து நிறுத்தும் நிலையில் நமல் ராஜபக்ஷ நிறுத்தப்படுகிறார். அதே நேரம் எதிர்காலத்தில் ஒரு ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை முன்னிறுத்தவும் இத்தேர்தலை பொதுஜனப் பெரமுன பயன்படுத்துவதென திட்டமிட்டுள்ளது. ஒருபுறம் தற்போதைய ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்துதல் மறுபுறம் பொதுஜன பெரமுனவின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளரை களத்தில் இறக்குவதுமாகும்.
மூன்றாவது தென்னிலங்கையின் வாக்களிப்பானது இடதுசாரிகளுக்கு எதிரானதாகவே அமைந்துள்ளது. இலங்கையின் மரபார்ந்த வாக்காளர்களின் பங்களிப்பு என்பது வேறுபட்டதாகவே அமைந்திருக்கின்றது. குறிப்பாக கடந்த காலங்கள் முழுவதும் இடதுசாரி கொள்கைகளுக்கு எதிராகவும் சாமானியர்களுடைய அரசியல் இருப்புக்கு மாறுபட்டதாகவும் மத்திய தர வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விதத்தில் உயர் வர்க்கத்தினுடைய நலன்களை பூர்த்தி செய்கின்ற விதத்திலும் தென்னிலங்கையினுடைய வாக்கு அளிப்பு மாதிரி காணப்படுகிறது. இத்தகைய மரபார்ந்த வாக்காளர்களை கடந்து தற்போது புதிதாக இணைந்து கொள்ளப்பட்ட 10 இலட்சத்துக்கு மேற்படாத வாக்காளர்கள் அதிகமான தாக்கத்தை தேர்தல் ஏற்படுத்தி விடுவார்களா? என்பது பிரதான கேள்வியாகவே தெரிகின்றது. அத்தகைய சூழலில் மரபார்ந்த வாக்காளர்களும் ஏனைய சூழ்நிலையில் காணப்படும் வாக்காளர்களும் புதிய மாற்றத்திற்கு வித்திடுவார்களா என்பது குழப்பகரமானதாகவே உள்ளது. ஏனைய தேசியங்களின் வாக்களிப்பும் இடதுசாரிகளுக்கு எதிரானதாகவே கடந்த காலங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக 2024 தேர்தலில் அநுரகுமார திசாநாயக்காவின் வெற்றி வாய்ப்பு என்பது மிகக் கடினமான ஒன்றன்பே தோன்றுகிறது. இலங்கை அரசியல் வரலாறு முழுவதும் இடதுசாரிகளுக்கு எதிராக கட்டமைப்பு வளர்ந்திருக்கின்றது. அது இலங்கைத் தீவு முழுவதும் அவதானிக்க கூடிய ஒரம்சமாகும்.
நான்காவது இலங்கை தீவின் அரசியலில் அரகளைய போராட்ட அணுகுமுறையானது இரண்டு அல்லது மூன்று இலட்சம் போராட்டக்காரரால் 65 இலட்சம் வாக்காளர்களது தெரிரைவ தகாத்த்ததென்பது தேர்தலில் சாத்தியமாக்க முடியாது. அதுமட்டுமன்றி அத்தகைய அணுகு முறையில் பங்கெடுத்துக் கொண்ட கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் உதிரிகளாக தற்போது தமக்கே ஒரு பாணியில் ஜனாதிபதி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அத்தகைய நிலையில் வேட்பாளர்களுடைய வெற்றி வாய்ப்பு என்பது 50சதவீதத்திற்கு அதிகமாக அமையும் என்பது மிகக் கடினமானதாகவே உள்ளது. அத்தகைய நிஜலையானது அரகளய போராட்டம் எவ்வாறு கட்சிகளாலும் இயக்கங்களாலும் இடதுசாரி அமைப்புகளாலும் உருவாக்கப்பட்டதோ அவ்வாறே அதே அடிப்படையில் வேட்பாளர்களுடைய எண்ணிக்கையும் ஜனாதிபதி தேர்தலில் காணப்படுகிறது. இந்த தரப்புகள் பங்கீடு செய்கின்ற புதிய வாக்குகள் ஒரு முழுமையான வெற்றியை ஒரு தரப்புக்கும் ஏற்படுத்த முடியாத நிலையை உருவாக்கும். அவ்வாறு உருவாக்குகின்ற சந்தர்ப்பம் என்பது அறகளயவின் இரண்டாம் கட்ட தோல்வியாக அளவீடு செய்ய வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாகும்.
ஐந்தாவது தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போலிகளை முன்னிறுத்துகின்ற வேட்பாளர்களுடைய எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அத்தகைய எண்ணிக்கை எந்த வேட்பாளரையும் 50சதவீத வாக்குகளை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவதோடு சாதாரண பெரும்பான்மை பெறக்கூடிய சூழலை ஏற்படுத்தும். இது தற்போதைய ஜனாதிபதியின் வெற்றி வாய்ப்புக்கான சூழமைப்பு ஆரோக்கியமானதாக உருவாக்கக் கூடியது.
ஆறாவது வடக்கு கிழக்கு வாக்காளர்கள் தமக்கான தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக தென்னிலங்கையின் வேட்பாளர்கள் சார்ந்து எந்தவித வெளிப்படுத்துகையும் இல்லாதவர்களாக காட்ட முயல்வதும் 50சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெறுகின்ற சூழலை பாதிப்பதாக தெரிகின்றது ஆகவே நிச்சயமாக சாதாரண பெரும்பான்மை பெற ஒரு வேட்பாளர் இத்தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளுகின்ற விதத்தில் தேர்தலுக்கான அணுகுமுறைகளும் நகர்வுகளும் காணப்படுகிறது.
எனவே இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும் சமானியர்ககளுடைய பங்கினை விட மேல் தட்டு வர்க்கத்தின் நலங்களுக்கு உட்பட்ட விதத்தில் தேர்தல்களை கட்டமைத்ததும் அதனை எதிர் நோக்குவதுமே அரசியலாக உள்ளது. தற்போதைய ஜனாதிபதியினுடைய ஆட்சி அதிகாரம் நீடிக்கப்படுவதற்கான வாய்ப்பை இத்தேர்தல் அதிகம் கொண்டிருக்கின்றது. இந்திய தரப்பும் இந்த தேர்தலில் தன்னுடைய பங்குக்கு அதிகமான கவனம் செலுத்துவதாக உள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
