அரசியல் கட்டுரைகள்

தமிழ் பொது வேட்பாளர் மீதான நிராகரிப்புகளும் அதன் போலித்தன்மைகளும்?

2009களின் பின்னான ஈழத்தமிழர் அரசியலின் சிதைவுக்கு பின்னால் சதிக் கோட்பாடுகள் பிரதான காரணியாக விளங்கியது என்பதை கடந்து செல்ல முடியாது. மீளவும் அத்தகைய சதிக் கோட்பாட்டாளர்களின் கைகளில் ஈழத்தமிழரது அரசியல் அகப்பட்டுள்ளது. அரசியல் என்பது காணப்படும் வாய்ப்புக்களை கையாள்வது பற்றிய வித்தை என்பார்கள். அத்தகைய அரசியலே ஈழத்தமிழரது சமகால தேவையாகும். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளர் காலத்தின் தேவையாக மாறியுள்ளது. அதனை நோக்கி தமிழ் மக்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகும். ஆனால் நடைமுறையில் அத்தகைய பொது வேட்பாளர் தொடர்பில் ஒன்றுக்கு மேற்பட்ட சதிக் கோட்பாடுகள் அரங்கேற்றப்படுகிறது. அத்தகைய சதிக் கோட்பாடுகளுக்கு பின்னால் உள்ள அரசியலை தேடுவதாகவே இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

தமிழ் பொது வேட்பாளர் என்பது தெளிவான கருத்தியலைக் கொண்டது. தேசியமாக தமிழ் மக்களை ஒன்றிணைப்பது. தமிமிழரின் தாயகம் வடக்கு கிழக்கு என்பதை மீள உணர்த்துவது. தமிழ் மக்கள் சுயநிர்ணயத்திற்கும் இறைமைக்கும் உரித்துடையவர்கள் என்பதை வெளிப்படுத்துவது. போன்றவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை கையாளுவது. அதற்காக ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்கள் அவருக்காகவன்றி அவரது கொள்கைக்காக வாக்களிப்பது என்ற தீர்மானம் சிவில் அமைப்புக்களாலுதம் -ஈழத்தமிழரின் அரசியல் கட்டசிகளாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது 2009 களுக்குப் பின்னர் தமிழரது அரசியல் இருப்பை உறுதி செய்வதற்கான முயற்சியாக உள்ளது. இது தமிழ் மக்களது பாரம்பரியமான வாழ்விடமான வடக்கு கிழக்கு மூலோபாய முக்கியத்துவம் கொண்டதென்பதை பிராந்திய சக்திகளுக்கும் உலகளாவிய சக்திகளுக்கும் வெளிப்படுத்துவதோடு தமிழ் மக்களது அரசியல் அபிலாசை தீர்க்கப்பட வில்லை என்பதையும் உணர்த்துவமாக அமையவுள்ளது. இது நீண்ட அரசியல் போராட்டத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் கொண்ட ஈழத்தமதிழரது அரசியல் கோரிக்கை தீர்வற்றிருப்பதற்கு எத்தகைய நடவடிக்கையையும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் முன்னெடுக்கவில்லை என்பதை தெரிவிப்பதில் தமிழரிடம் கூட்டுத் தன்மை உண்டு என்பதை உணர்த்தவும் காலாக அமையும். இத்தகைய தனித்துவமான ஈழத்தமிழரது அரசியல் இருப்பைப் பற்றிய கோட்பாட்டு புரிதலைக் கொண்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பற்றிய விடயத்தை ஏன் சதிக் கோட்பாடுகள் மூலம் குழப்பத்திற்கு உள்ளாக்க முயலுகிறார்கள். இதனை விரிவாக தேடுதல் அவசியமானது.

முதலாவது, பிரதானமாக முன்வைக்கப்படும் சதிக் கோட்பாடாக தமிழ் பொது வேட்பாளருக்கு பின்னால் நாடுகள் உண்டு என்பதாகும். அத்தகைய நாடுகளை பட்டியலிட சதிக்கோட்பாட்டாளர்கள் தயாரில்லை. காரணம் அவர்களுக்கே அத்தகைய நாடுகள் எவை என்பதை பட்டியல்படுத்த முடியாது. இலங்கைத் தீவின் அரசியலில் மூன்று பிரதான நாடுகள் எல்லாக்காலத்திலும் தலையீடு செய்வதைக் கண்டு கொள்ளலாம். அவை முறையே அமெரிக்கா, இந்தியா. சீனா என்பன. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா தெளிவாக தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவை ஆதரிப்பதாகவே தெரிகிறது. அதனை இலங்கைத் தீவிலுள்ள எவரும் கண்டறிய முடியும். இந்தியா பாராளுமன்றத்தின் மூலம் தற்போதைய ஜனாதிபதியை தெரிவு செய்த வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கையாண்ட விதத்தை வைத்துப் பார்க்கும் போது சஜித் பிறேமதாஸாவை ஆதரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அதனைத் தாண்டி இஸ்ரேல்-ஹமாஸ் போரின் பின்னான உலகளாவிய ஒழுங்கில் இந்தியா அமெரிக்கா, ஐரோப்hபிய யூனியன்,இஸ்ரேல் பக்கம் இருப்பதாகக் கருதினால் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்ஹாவை ஆதரிக்க வேண்டும். சீனாவைப் பொறுத்தவரை மொட்டுக்கட்சியுடன் தற்போதும் சேர்ந்து பயணிப்பதனால் மொட்டு அடையாளப்படுத்தும் வேட்பாளருக்கு ஆதவை தெரிவிக்க வேண்டும். அப்படியாயின் ஊடகங்கள் குறிப்பிடுவதன்படி பார்த்தால் சீனா விரும்பியோ விரும்பாமலோ ரணில்விக்கிரமசிங்ஹாவை ஆதரிக்க வேண்டும். இதில் மூன்றாவது வேட்பாளர் அநுராகுமார திசாநாயக்கா. அவரது வாக்கு வங்கி மிகப்பலவீனமானது. அவரை மேற்குறித்த மூன்று நாடுகளும் கையாளுவதாகவே தெரிகிறது. அதற்காக அவை ஆதரிக்கின்றன என்று பொருள் கொள்ளமுடியாது.

இந்த சந்தர்ப்பத்தில் மேற்குறித்த மூன்று நாடுகளும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கப் போவதில்லை. காரணம் தமிழ் பொது வேட்பாளர் இலங்கைத்தீவின் ஜனாதிபதி கிடையாது. ஜனாதிபதியாக வரப்போவரும் கிடையாது. அது மட்டுமல்ல அத்தகைய பின்னணியில் ஒரு நாடு ஈழத்தமிழுருக்கு ஆதரவாக செயல்பட்டால் மேற்படி தமிழ் பொது வேட்பாளரது கோட்பாட்டு நியதிகளை ஏற்றுக் கொள்வதாக அமையும். அத்தகைய தமிழ் மக்களது கோட்பாட்டு ரீதியான நியதியை மேற்குறித்த எந்த நாடு ஆதரிக்கும் என்ற கேள்வி நியாயமாது. இத்தகைய புரிதல் கூட குற்றச்சாட்டை முன்வைப்பவர்களுக்கு தெரியவில்லை. அதனைக்கடந்து தென் இலங்கை வேட்பாளர் ஒருவருக்கு தமிழ் மக்களது வாக்குகள் அளிக்கப்பட வேண்டும் என்று கருதும் நாடு தமிழ் பொது வேட்பாளரை ஒரு போதும் ஆதரிக்காது. ஆதரிக்கவும் முடியாது. காரணம் பிரதான மூன்று வேட்பாளரும் தமிழ் மக்களது வாக்குகளை பெறவேண்டும் என கருதுபவர்கள். தமிழ் மக்களது வாக்குகள் அவர்களது வெற்றியை உறுதிப்படுத்தும். அதனை நோக்கியே நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெம் வடக்குக்கு அண்மையில் (30.04.2024) விஜயம் செய்திருந்தார். அதற்கு அமைவாகவே வேட்பாளர்களும் பல முனைப்புக்களில் வடக்கு கிழக்கு மக்களுடன் உறவிலுள்ளவர்கள். அப்படியாயின் எந்த நாடும் தமிழ் பொதுவேட்பாளருக்கு பின்னால் இல்லை என்பது தெளிவாகிறது. இதுவே சதிக்கோட்பாடாகும். தமிழ் மக்கள் அணிதிரள்வதையும், ஐக்கியமாக இருப்பதையும், சுயநிர்ணயத்திற்கு உரித்துடையவர்கள் என்பதை வெளிப்படுத்துவதையும் ஏற்றுக் கொள்ளாத சதிக் கோட்பாட்டுவாதிகள் கருத்தரிப்பாகும்.

இரண்டாவது, தமிழ் பொதுவேட்பாளர் என்ற கருத்தியலை முன்வைத்தவர்கள் பெருமளவுக்கு சிவில்தரப்பாக இருந்த கருத்துருவாக்கிகள். அவர்களை மக்களாக கருத முடியாது என்ற வாதமும் சிவில் தரப்பென்பது தனிநபர்களைச் சார்ந்ததென்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இதற்கான புரிதலை பெறுவதற்காக இத்தாலிய சிந்தனையாளரான அன்ரனியோ கிராம்சின் (Antonio Gramsci) சிவில் சமூகம் பற்றிய தேடலை கோடிட்டுக் காட்டுவது அவசியம். கிராம்சியின் பார்வையில் சமூக உறவுகள் எனும் மேல்கட்டுமானத்தின் பகுதியே சிவில் சமூகம். சமூக உறவுகளை மூவகையாக பிரித்து நோக்கலாம்.

ஒன்று, உற்பத்தியோடு இணைந்த முதலாளி-தொழிலாளி உறவு. இரண்டு, ஒடுக்குமுறை உறவு. அரசும் அரச இயந்திரமும் மூன்று, தனியார் வகை உறவுகள். மதம், தொழில்சங்கம், அரசியல் கட்சிகள், மற்றும் கலாசார நிறுவனங்கள். இம் மூன்றுவகை உறவுகளின் தொகுப்பே சிவில் சமூகம். சிவில் சமூகம் வர்க்கங்களின் கருத்துநிலைப் போராட்டத்தின் களம். அது மட்டுமன்றி வெகுசன ஜனநாயகப் (Pழிரடயச னுநஅழஉசயவiஉ) போராட்டத்தின் களமும் என கிராம்சி விவாதிக்கின்றார். இனம், சாதி, பால்,மொழி, தேசிய இனம் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் எழும் முரண்பாடுகளும் போராட்டங்களும் சிவில் சமூகத்தின் வெளிப்படாகும். (பார்க்கவும்: சமூக சிந்தனைகள் விரிபடு எல்லைகள்:பக்:45-46) நவீன் மாக்சிய உரையாடலின் ஆரம்பகர்தாவான கிராம்சியின் கருத்துக்களை மையப்படுத்தியே சிவில் சமூகம் பற்றிய உரையாடல் அதிகம் முன்னெடுக்கப்படுகிறது. ஈழத்தமிழர் மத்தியில் சிவில் சமூகம் என்ற எண்ணம் கட்டிவளர்க்கப்பட வேண்டும். அது ஒரு சமூக உறவாக பரிணமிக்க வேண்டும். அதற்கான அடிப்படைகளை உருவாக்குவது அவசியமானது.

கருத்துருவாக்கிகள் சமூகங்களின் விருப்புக்கள், அவாக்கள், எண்ணங்கள். மற்றும் அபிப்பிராயங்களையே கருத்துக்களாக உருவாக்குகிறார்கள். அவை மக்களின் நியதிகள். மார்ச்சின் பிரபல கூற்று ஒன்றில் வரலாற்றைப் படைப்பவர்கள் மனிதர்களே. ஆனால் அவர்கள் தமது மனங்களின் விருப்புக்களின் படி வரலாற்றைப் படைப்பதில்லை என்கிறார். பிரான்ஸ்சியப் புரட்சிக்கு வோல்டயரும். ரூசோவுமே காரணம் என்பதை உலகம் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறது. ரஷ;சியப் புரட்சிக்கு பின்னால் லெனின் என்ற ஒற்றை மனிதன் சிந்தனையாலும் போராட்டத்தினாலும் ரஷ;சிய மக்களை ஒன்றிணைத்த வரலாற்றை புரிந்து கொள்ளுதல் வேண்டும். உலக வரலாறு முழுவதும் சிந்தனையாலும், கருத்தியலாலும் கட்டமைக்கப்படுகிறது. ஈழத்தமிழரிடம் அத்தகைய விரிபடு சிந்தனை அவசியமானது. அதனை நோக்கிய செல்நெறியே அவசியமானது. சதிக்கோட்பாடுகளல்ல.

எனவே தமிழ் மக்களது பொது வேட்பாளரது தேவை காலத்தின தேவையாக உள்ளது. இது கருத்தியலாக புரிந்து கொள்ளப்பட வேண்டியது. போலித்தனமான ஆதரமற்ற எண்ணங்களால் கட்டமைக்கப்படுவதல்ல கருத்தியல். தனிமனித விருப்புகளை விட்டு யதார்தமான இருப்பினை நோக்கி ஈழத்தமிழர் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். போலித்தனமான விவாதங்களும் கற்பனையிலான கருத்துக்களும் மாற்றத்தை ஏற்படுத்தாது. தமிழ் பொது வேட்பாளர் என்பது அறிவியல் பூர்வமாக ஈழத்தமிழரை ஐக்கியப்படுத்தவும் அபிலாசைகளை வெளிப்படுத்தவும் அரசியல் தீர்வை நோக்கியும் வழிப்படுத்தக் கூடியது. அதனை நோக்கி ஈழத்தமிழரை ஒன்றிணைப்பது அவசியமானது. இது இலங்கையின் அரசியலமைப்புக்குள்ளால் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள அரசியல் வாய்ப்பாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)