அரசியல் கட்டுரைகள்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிபுணர் குழுவின் அமெரிக்க விஜயமும் பென்டகனின் அறிக்கைக்குமான உறவு

இலங்கை தமிழர்களின் அரசியலில் அதிக முக்கியத்துவம்பெறும் விடயங்கள் அரங்கேறி வருகின்றது. அதற்கான நகர்வுகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையின் தெரிவின் அடிப்படையில் மூவர் அடங்கிய குழு வொஷிங்டனிற்கு பயணிக்க திட்டமிட்டுள்ளது. இது தமிழ்த்தேசிய இனத்தின் அரசியலில் அதிமுக்கியத்துவப்படுத்தப்படும் விடயமாக அமைந்தாலும், அமெரிக்காவின் பாதுகாப்பு மையமான பென்டகன் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் மீது சீன இராணுவ தளங்களை அமைக்கத்திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இத்தகைய இலங்கையில் சீன இராணுவம் என்ற செய்தியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மூவர் அடங்கிய குழுவின் அமெரிக்க பயணமும் ஒரே கோணத்தில் முக்கியத்துவம்பெறும் செய்தியாக அமைந்துள்ளது. இக்கட்டுரையும் அத்தகைய செய்திகளின் உண்மைத்தன்மைகளை தேடுவதாக உள்ளது.

முதலாவது, பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பிரதான அம்சமாக காணப்படுவது சீனாவிற்கு எதிரான அறிக்கையிடலாகும். அமெரிக்க காங்கிரஸில் பென்டகன் முன்வைத்துள்ள அறிக்கையின் பிரகாரம் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவலில் இலங்கை தீவில் சீனா பலமான இராணுவத்தளமொன்றை கட்டுவது பற்றி குறிப்பிட்டுள்ளது. அத்தகைய பட்டியலில் கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் என்பன உள்ளடக்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் உபாயமும் அதற்காக கட்டமைக்கப்படும் குவாட்-01, 02 என்பனவும் சீனா எதிர் அமெரிக்க இராணுவ சமநிலை முனைப்புக்களானகவே தெரிகிறது. சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியை முறியடிப்பதோடு 2021ஆம் ஆண்டு ஜி-07 மாநாட்டின் தீர்மானங்களுக்கமைவாக சீனாவின் பாணியில் சீனாவிற்கு எதிரான உபாயங்களை அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள் மேற்கொள்தல் என்ற திட்டமிடலே ஆசிய-ஆபிரிக்க நாடுகளில் அமெரிக்கா அதிகமான பிரயத்தனங்களோடு மேற்கொண்டு வருகிறது. சீன இராணுவத்தளம் தொடர்பாக பென்டகனின் எச்சரிக்கை என்பது சீனாவின் அடுத்தகட்ட நடவடிக்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கும் உபாயமாகவே தெரிகிறது. பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உறுதிப்பாடுடைய சீனா அமெரிக்கா உட்பட மேற்கின் நகர்வுகளை முறியடிப்பதற்கு இராணுவ உபாயத்தையே அடுத்ததாக மேற்கொள்ளும் என்ற நியதியை பென்டகன் கருத்தில் கொண்டதோடு சீனாவின் கடற்படை வளர்ச்சியும் தனது கடல் ரீதியிலான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை பாதுகாப்பதற்கான கடற்படை விஸ்தரிப்பு இராணுவ தளங்களை நோக்கிய நகர்வுக்கு வாய்ப்பை அதிகரிக்கும் என்ற அச்சமும் பென்டகனுக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ தளங்களை அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை சமகாலத்தில் சீனா ஆரம்பிப்பதற்கான இராணுவ தொழில்நுட்ப ஆயுத தளபாடங்களின் பெருக்கத்தை பென்டகன் அவதானித்துள்ளது. எனவே இவற்றின் அடிப்படையில் சீனாவின் நகர்வை முறியடிப்பதற்கும் சீனாவின் அணுகுமுறைகளில் காணப்படும் பலவீனங்களை பிரச்சாரப்படுத்தவும் பென்டகனது அறிக்கை அடிப்படையினதாக விளங்குகின்றது. கொங்கொங், தாய்வான் மற்றும் தென்சீனக்கடலில் சீனாவை எதிர்கொள்ள அதிக வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் தவிர்க்க முயலும் அமெரிக்கா அந்நாடுகளின் இராணுவத்தையும் ஆட்சியார்களையும் சீனாவிற்கு எதிராக தூண்டிவிடுவதில் அதிக கரிசனை காட்டிவருகின்றது. இதேபோன்ற அணுகுமுறைகளை சீனாவின் ஆதரவுள்ள நாடுகள் மீது அமெரிக்கா உட்பட மேற்குலகு அணுகுமுறையாக பின்பற்றி வருகிறது. அதுமட்டுமன்றி கடன்பொறிமுறை சார்ந்தும் சீனா மீது அதிக பிரசார்த்தை முன்வைக்கும் அமெரிக்கா டியாகோ காசிகோவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தை அமெரிக்க தேசிய பாதுகாப்பு என்ற கொள்கை வலைப்பின்னலுக்குள் உள்ளடக்கி வருகிறது. எனவே, இலங்கை பொறுத்து சீனாவின் அணுகுமுறையில் ஏற்பட்டு வரும் அதீத நகர்வுகளை இந்தோ-பசுபிக் பிராந்திய நலன் சார்ந்தும், இந்த சமுத்திர நலன் சார்ந்தும் அமெரிக்கா முறியடிப்பதில் கவனம் கொள்கிறது. எனவே இலங்கை மீதான சீன இராணுவ பிரசன்னம் மேற்கு நாடுகளுக்கும் குவாட் நாடுகளுக்கும் அவற்றின் நலன்களுக்கு அபாயகரமானது என்பதை வேறுபட்ட கருத்தில் கொள்ள முடியாது. ஆனால் இலங்கை சீனாவை நிராகரித்து அமெரிக்கா உட்பட மேற்குலகு நாடுகளுடன் உறவு வைத்து கொள்ளுதல் என்பது பூகோள அரசியலாகவும் புவிசார் அரசியலாகவும் ஆபத்தானதே. இரண்டிலும், இந்திய மேலாதிக்கம் வலிமையானதாகும். இதனாலேயே இலங்கை இந்தியாவின் எதிர்ப்புசக்தியான சீனாவுடன் உறவினை பலப்படுத்த திட்டமிட்டது. இத்தகைய உறவு அமெரிக்காவின் தாராளவாதி என்று அழைக்கப்பட்ட ரணில் விக்கரமிசிங்க ஆட்சியின் போதும் அதிக நெருக்கத்துக்கான உடன்பாடு சீனாவுடன் மேற்கொள்ளப்பட்டது. எனவே தான் சீனா-இலங்கை உறவை இந்தியா உட்பட மேற்கு நாடுகள் முரண்பாட்டை அதனூடாக ஏற்படக்கூடிய நலன்களின் பாதிப்பபையும் கருத்திற்கொண்டு செயற்பட முனைகிறார்கள். இத்தகைய அரசியல் என்பது சமகால பூகோள அரசியலாக அடையாளப்படுத்தப்படுகிறது.

இரண்டாவது, இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள விஜயம் பற்றிய செய்திகள் தமிழரசியல் களத்தை அதிக நம்பிக்கையூட்டும் விடயமாக ஏற்பட்டுள்ளது. அதற்கான பின்புலம் அமெரிக்க காங்கிரஸில் வடக்கு-கிழக்கை தமிழ் தாயகமென்றும் ஆயுதப்போராட்டத்தை விடுதலைப்போராட்டமென்றும் குறிப்பிட்ட முன்மொழிவுகள் சார்ந்து அதன்பின்பான அமெரிக்கா-இந்திய அரசியலையே சீனா எதிர்ப்புவாத அரசியலையும் சார்ந்ததொன்றாக அமைந்திருந்தது. ஆனால் உறுதிப்படுத்தாத தகவல்களின் பிரகாரம் அமெரிக்கா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை அழைக்கவில்லையெனவும் கடந்த காலத்தில் அழைத்ததன் பிரகாரம் தற்போது அவ்சட்ட நிபுணர்கள் பயணமாக இருப்பதாகவும் தெரிய வருகிறது. அதாவது, கடந்த பல மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையிடம் இதுசார்ந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் உரையாடல் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டதாவும் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறெனில் அத்தகைய சந்தர்ப்பத்தில் இத்தகைய சட்ட வல்லுனர்களை அனுப்பி உரையாடலை ஏன் ஆரம்பிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. தற்போதைய இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருக்குமான சந்திப்பு ஒன்று இலங்கையின் அமெரிக்க தூதருக்கான வாசஸ்தலத்தில் ஏற்படுத்திய போதே அத்தகைய உரையாடலுக்கான பின்புலங்கள் ஏற்பட்டிருந்தது. அதற்கு பின்னர், தென்னிலங்கை அரசாங்கம் அமெரிக்காவோடு பல விடயங்களை உரையாடலையும் புரிந்துணர்வையும் பேச்சுக்களையும் நிகழ்த்தியிருந்ததோடு தற்போதைய நிதியமைச்சர் இலங்கையின் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ததோடு இரு நாட்டுக்குமான புரிதல் அதீதமாக ஏற்படுத்தப்பட்டிருந்தது. அமெரிக்காவுடனான யுகதகனி மின்நிலைய உடன்படிக்கை இரு நாட்டுக்குமான உறவில் அதிக முக்கியத்துவம் பெற்றதுடன் இரு நாட்டினதும் வெளியுறவு ஆரோக்கியமான நகர்வுக்கு வழிவகுத்திருந்தது. அவ்வாறாயின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இத்தகைய காலப்பகுதியில் எல்லாம் அமெரிக்கா அழைப்பை ஏற்படுத்தாத போதும் அல்லது அழைப்பை ஏற்படுத்திய போதும் அதனை ஒரு அரசியலாக பயன்படுத்த தவிர்த்துக்கொண்டதன் உள்நோக்கம் எது என்ற கேள்வி நியாயமானது.

தற்போது அமெரிக்கா அழைக்காமல் இவர்களாகவே விண்ணப்பித்து அமெரிக்காவிற்கு பணயம் மேற்கொள்ள முடியுமெனில் அமெரிக்கா வடக்கு-கிழக்கு தமிழர் தாயகமென்ற முன்மொழிவை காங்கிரஸில் உரையாடிய போது ஏன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இவ்வாறானதொரு முயற்சியை மேற்கொள்ளவில்லை. இதனை சற்று விரிவாக நோக்குதல் அவசியமாகும்.

ஒன்று, இலங்கை தமிழர்களுடைய பிரச்சினையை சர்வதேச வல்லரசும் பிராந்திய வல்லரசும் பயன்படுத்துமென்பது பொதுவான எடுகோளாகும். அதுவே அவ்வரசுகளின் நலன்சார்ந்த அரசியலின் பிரதிபலிப்பாகும். அத்தகைய அரசுகளின் நலன்களோடு தமிழர்களின் அரசியல் நலன்கனை ஒரே இடத்தில் சந்திக்க வைப்பது தமிழரசியல் தலைவர்களின் பணியாகும். அத்தகைய பணியை இந்திய அரசியல் தரப்பேடு மட்டுமன்றி அமெரிக்க தரப்போடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ள தவறியுள்ளது.

இரண்டு, எதுஎவ்வாறாயினும் உள்ளூர் பத்திரிகையொன்றில் பிரசுரிக்கப்பட்ட செய்தியின் பிரகாரம் அமெரிக்க இராஜதந்திர வட்டங்களின் அழைப்பின் பேரில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிபுணர் குழு அமெரிக்கா பயணமாவதென்பது உறுதிப்படுத்தாத போலியான தகவலாகவே Tamils for Biden அமைப்பு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மூன்று, இவ்வகை செய்திக்கு பின்னால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இருப்பை அதன் அரசியல் வெளியையும் மீளமைக்கும் உபாயமொன்று இருப்பதாகவே தெரிகிறது. அதனால் கட்சியும் கட்சியல் இருக்கும் சில தனிப்பட்ட நபர்களும் தமது அரசியல் மேலாவித்தனத்தை வெளிப்படுத்தலாமேயன்றி இதனால் ஒரு ஆரோக்கியமாக தமிழ்ததேசிய அரசியலுக்கான அறுவடை சாத்தியமற்றதாகவே தென்படுகிறது.

நான்கு, இத்தகைய நிபுணர் குழுவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தேர்ந்தெடுத்திருப்பது என்பது அதிக விமர்சனங்களை முன்வைத்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை அமெரிக்க இராஜதந்திரிகளோடு உரையாட முனையும் போது எத்தகைய உத்திகளை உரையாடுவதென்று அதுதொடர்பான அபிப்பிராயங்களை குறைந்தபட்சம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சிகளோடு உரையாடி இருக்க வேண்டுமென்ற எண்ணமும் கடந்த காலத்தில் நிபுணர் குழுவின் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் பற்றியும் கேள்வி எழுப்பப்படுவது நியாயமானதாகவே உள்ளது.

ஐந்து, கால தாமதப்படுத்தியதும் அமெரிக்காவின் அழைப்புக்கு பதிலளிக்காமையும் அல்லது தற்போது போன்று அமெரிக்காவிடம் கோரிக்ககை விண்ணப்பம் செய்தும் இக்குழு நடவடிக்கை எடுக்காததும் அக்காலப்பகுதியில் இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்காவோடு உறவை பலப்படுத்தியதும் அதிக சந்தேகங்களை தற்போதைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நகர்வுகளை அவதானிக்கும் போது ஏற்படுகிறது. நல்லாட்சி காலத்தில் ஜெனீவா அரங்கில் அரங்கேற்றப்பட்ட நாடகங்களுக்கு ஒப்பானதாக புலப்படுகிறது.

எனவே, இலங்கையில் சீனாவின் இராணுவ தளம் அமைப்பது பற்றிய பென்டகனின் அறிக்கைக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிபுணர்குழு அமெரிக்க விஜயத்துக்கும் தொடர்பு காணப்படுகின்றதென்ற தகவல் கட்சி அரசியல் நலனுக்கானதாக மட்டுமே காணப்படுகின்றது. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தரப்பாக இந்நிபுணர் குழுவின் பயணம் அமைந்திருக்கின்றதென்ற பிரச்சாரம் அங்கீகரிக்ககூடிய நியாயப்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய விதத்திலான தகவல்கள் இல்லை என்பதையே காட்டுகிறது. அவ்வாறானதொரு நிகழ்வு நடைபெறுமாக இருந்தால் ஈழத்தமிழர்களின் அரசியில் சுபீட்சமான முடிவை ஏற்படுத்துவதாகவே அமையும். அவ்வாறாயின் இந்நிபுணர் குழுவின் பேச்சுகளுக்கு பின்பான விளைவுகள் அத்தகைய நிலையை எட்டுமா என்பதை தீர்மானிப்பதற்கான காலப்பகுதி மிகக்குறுகியதாகவே காணப்படும்.

-பேராசரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)