June 25, 2026
அரசியல் கட்டுரைகள்

ரஷ்ய-உக்ரைன் போரும் சமாதானத்துக்கான வாய்ப்புகளும்?

போரின் உச்சமான பேரழிவை உக்ரைன் எதிர்கொள்வதாக தெரி கிறது. 29.12.2022 அன்று நடைபெற்ற ரஷ்யாவின் பாரிய குறூஸ் ஏவுகணைத் தாக்குதலில் கீவ் நகர் சிதைவுகளைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளன. அதேநேரம் உக்ரைனும்- ரஷ்யாவும் பேச்சுவார்த்தை பற்றிய உரை யாடலையும் வெளிப்படுத்தி வருகின்றன. சமாதான உரையாடலும் போருக்கான தயாரிப்புகளும் பரஸ்பரம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இரு தரப்பினது தாக்குதலுக்கான திட்டமிடலும் ஆயுததளபாடங்களின் திரட்டலும் எதிர்காலப் போருக்கான தயாரிப்புக்க ளாகவே தெரிகிறது. குளிர் காலத் தாக்குதலை திட்டமிடும் இரு தர ப்பும் அதற்கான முனைப்புக்களை உரு வாக்கி வருகின்றன. இக்கட்டுரையும் ரஷ்ய-உக்ரைன் போரும் சமாதானமும் பற்றிய உரையாடலின் முக்கியத்துவத்தை தேடுவதாக அமையவுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குறூஸ் ஏவுகணைகள் ஈரானியத் தயாரிப்பு எனவும் ஆளில்லாத விமானங்களதும் தாக்குதல்களை உக்ரைனால் எதிர்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவையும் ஈரானின் தயாரிப்பென்றும் மேற்குலக ஊடகங்களும் புலனாய்வு தளங்களும் செய்தி வெளியிட்டுவருகின்றன. பெருமளவுக்கு ஈரானியத் தயாரிப்பிலேயே உக்ரைன் போரை ரஷ்யா நிகழ்த்துவதாகவும் ரஷ்ய ஆயுததளபாடங்கள் பாரிய போர்க்கருவிகள் என்றுமே இராணுவ ஆய்வுகள் உரைக்கின்றன. கீவ் மீதான தாக்குதலில் ஏவப்பட்ட எழுபத்தைந்துக்கு மேற்பட்ட ஏவுகணைகளில் ஆறு மட்டுமே உக்ரைனால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு 54-69 ஏவுகணைகளை தமது விமானப் படைப்பிரிவு தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரம் முடிந்த வருடத்தில் ரஷ்யா நடத்திய பாரிய தாக்குதல் இதுவென உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. இது மேற்குலகத்திடம் உக்ரைன் வான்பாதுகாப்பு முறைமையை கோருவதற்கான சூழலை அதிகரித்துள்ளதாகவும் ஏற்கனவே அமெரிக்காவுக்கு உக்ரைன் ஜனாதிபதி விஜயம் செய்த போது பேட்ரியட் வான்பாதுகாப்பு ஏவுகணைகளை கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்துள்ள வெள்ளைமாளிகை Barbaric போர் என ரஷ்யா நடத்திய தாக்குதலை குறிப்பிட்டுள்ளது.

இத்தாக்குதல் மூலம் உக்ரைனியரின் இயல்பான வாழ்வியலை பாதிப்பதுடன் அவர்களது மனோநிலையை முற்றாகச் சிதைப்பதாகவும் இருளில் புதிய வருடத்தை உக்ரைனியர்கள் எதிர்கொள்ள வைப்பதுடன் உக்ரைனின் உட்கட்டமைப்பை முழுமையாக அழிப்பதுவுமே ரஷ்யாவின் நோக்கம் என இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் போருக்கான மனோநிலையை உக்ரைன் மக்களிடம் இல்லாது செய்வதுடன் பனிக்காலத்தை எதிர்கொள்ள முடியாது திணறடிக்கும் நோக்கத்துடனேயே மின் பிறப்பாக்கிகளையும் இணைப்புக்களையும் இலக்கு வைத்து அழித்துவருகிறது. இது மனிதாபிமானத்திற்கு எதிரான போர் என கீவ் நகரில் வசிக்கும் லீயோன்ட் பாற்குலின் குறிப்பிடுகின்றார். அவர் தனது சொந்த வசிப்பிடத்தை ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் இழந்த பின்பு ரஷ்யாவின் தாக்குதலை போர் அல்ல என்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான போர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் இத்தாக்குதலை முன்கூட்டியே ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உக்ரையினுக்கு இறுதி எச்சரிகை செய்ததன் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். ரஷ்யாவின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் அல்லது ரஷ்ய இராணுவம் உக்ரைனின் தலைவிதியை தீர்மானிக்கும் என்றார். உக்ரைன் கட்டுப்படுத்தும் பிரதேசங்களை இராணுவ மயவாக்கலிலிருந்து விடுவிப்பது மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை அகற்றுவதும் ரஷ்யா புதிய நிலங்களை அங்கீகரிப்பதும் உட்பட ரஷ்யாவின் நிலைப்பாடு எதிரிகளுக்கு நன்கு தெரியும் என்றார். மோதல் எவ்வளவு காலம் என்பது உக்ரைன் ஆட்சியாளரின் கைகளில் உள்ளது எனவும் உக்ரைன் பின்னால் வோஷிங்டன் உள்ளது என்றும் அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ரஷ்யாவை அழிக்கும் போர்க்களத்தில் வெற்றி கொள்ள முயலுகின்றன எனவும் தெரிவித்தார். மேற்குலகத்தின் கைப்பொம்மையாக உக்ரைன் ஜனாதிபதியின் நடவடிக்கை உக்ரைனின் நெருக்கடிக்கு காரணம் எனவும் ரஷ்யாவை பலவீனப்படுத்துவது அல்லது அழிப்பது என்பது வெளிப்படையானது எனவும் செர்ஜி குறிப்பிட்டார். இந்த மோதலின் மூலம் அமெரிக்கா பொருளாதார ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் அதிக பலனைப் பெற முயலுகிறது. ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்குமான பிணைப்பை உடைத்து ஐரோப்பாவின் அதிகம் சாய்ந்திருக்கும் முக்கிய புவிசார் அரசியல் மூலோபாயத்தை அமெரிக்கா வகுத்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

இவரது எச்சரிக்கை முன்வைக்கப்பட்ட மறுதினமே பாரிய தாக்குதல் உக்ரைன் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய பேட்ரியட் வான்பாதுகாப்பு ஏவுகணையை அமெரிக்காவிடம் உக்ரைன் கோரியதன் பின்பே இத்தகைய உரையாடலும் தாக்குதலும் அரங்கேறியுள்ளன. 7.12.2022 அன்று ரஷ்ய ஜனாதிபதி ஊடகங்களுக்கு முன்பு தெரிவிக்கும் போது உக்ரைனுடன் ரஷ்யா சமாதான பேச்சுக்களை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் மறுதினமே ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் எச்சரிக்கை அமைந்திருந்தது. ஆனால் உக்ரைன் ஜனாதிபதியும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசி உரையாடலின் போது உக்ரைன்- ரஷ்யப் போரை முடிபுக்கு கொண்டுவர சமாதானப் பேச்சுக்கு இந்தியா உதவ வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். ஜி-20 அமைப்பின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றிருக்கும் இந்தியப் பிரதமர் இத்தகைய சமாதான முயற்சிக்கு உதவ வேண்டும் என ஜெலன்ஸ்கி டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்தியப் பிரதமர் அலுவலகம் அது பற்றி எந்த உரையாடலையும் வெளிப்படுத்தாத போதும் இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக தெரிவதாக அறிக்கையொன்று வெளிப்படுத்தியுள்ளது. இரு போர்த்தரப்பையும் கையாளும் திறன் இந்தியாவுக்கே உண்டு எனவும் சமாதான நகர்வை இந்தியா மேற்கொள்ள வேண்டும் எனவும் உலக நாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரம் ரஷ்ய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் சமாதான பேச்சுக்கள் பற்றி பலதடவை உரையாடியுள்ளமையும் கவனத்திற்குரியதாகும். தற்போது எழுந்துள்ள பிரதான கேள்வி ஏன் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடன் பேசுவதற்கு முயலுகின்றார். அல்லது அத்தகைய நகர்வு போலியான உரையாடல் மட்டும் தானா என்பதாகும்.

ஒன்று, வரவிருக்கும் குளிர்காலத்தில் ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்ற சந்தேகம் உக்ரைன் தரப்பிடம் மட்டுமல்ல மேற்குலகத்திடமே அதிகமுண்டு. அவ்வகைத் தாக்குதலை உக்ரைன் எதிர்கொள்வது கடினமென்பது பிரதான விடயமாக அமைய வாய்ப்புள்ளது. இது ரஷ்ய இராணுவத்திற்கும் அபாயமானதாக அமைந்தாலும் தற்போது ரஷ்யா தனது தாக்குதலை மாற்றியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ஆளில்லாத விமானங்கள் மூலமும் ஏவுகணைகள் மூலமுமே ரஷ்யா தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. நேரடித் தாக்குதலையும் விட இது அதிக பயனுள்ளதாக ரஷ்ய இராணுவத் தரப்பு கருதுகிறது.

இரண்டு, அமெரிக்காவின் பேட்ரியட் வான்பாதுகாப்பு ஏவுகணைகளின் வருகை தாமதமாவதுடன் அதற்கான பயிற்சியும் பயன்பாட்டுக்கான திறனும் கட்டமைக்கப்பட குறிப்பிட்ட காலம் உக்ரைனுக்கு தேவையாக உள்ளது. அது மட்டுமன்றி பேட்ரியட் வான்பாதுகாப்பு ஏவுகணையின் முழுமையான திறன் கொண்ட தயாரிப்பினை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்குமா என்ற சந்தேகமும் உக்ரைனுக்கு உண்டு. இதற்கு வலுவான காரணங்களை குறிப்பிட முடியும். ஏற்கனவே அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் வழங்கிய ஆயுதங்களால் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலையோ ஆளில்லாத விமானங்களின் தாக்குதலையோ தடுக்க முடியவில்லை என குறிப்பிடப்படுவது கவனத்திற்குரியதாகும்.

மூன்று, அமெரிக்க அதிகாரக் கட்டமைப்பில் குடியரசுக் கட்சி பெரும்பான்மையை அடையுமாயின் உக்ரையினுக்கான நிதி மற்றும் ஆயுததளபாட உதவிக்கான வாய்ப்பு குறைந்து போகும் நிலை ஏற்படக் கூடியதாக உள்ளது. அதனைக் கையாளவே ஜெலன்ஸ்கி அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றினாலும் அது குடியரசுக் கட்சியினரிடம் அதிக வரவேற்பை பெறவில்லை என்றே தெரியவருகிறது. ஏற்கனவே ஐரோப்பா உக்ரைனை கைவிட்டதாவே தெரிகிறது. ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அதற்கு காரணமாகவுள்ளது. ஐரோப்பிய -ரஷ்ய விரிசல் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே முரண்பாடான நிலையைத் தோற்றுவித்துள்ளது. அதனால் எழுந்துள்ள நெருக்கடியை உக்ரைன் கையாள முனைவதாகவே தெரிகிறது.

எனவே உக்ரையின் -ரஷ்ய போர் முடிபுக்கு வருவதற்கான நகர்வுகள் காணப்பட்டாலும் ரஷ்யாவைப் பொறுத்தவரை தனது இலக்கை அடைய முயலும் என்பதை அதன் தாக்குதல்கள் உணர்த்துகின்றன. ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். அனைவரும் ஐரோப்பா நோக்கியே படையெடுத்துள்ளனர். இது ஐரோப்பாவை அதிகம் பாதித்துள்ளது. உக்ரைன் அகதிகள் ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் நகர்ந்து வருகின்றனர். இது அந்த நாடுகளின் சுதேசிகளிடம் அதிக அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதுடன் அரசாங்கங்கள் அகதிகளை பாரமரிப்பதில் திணறிவருகின்றன. இது ஐரோப்பாவில் பாரிய நெருக்கடியை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்றே உணரப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் ஜோ பைடன் அரசாங்கம் தொடர்ந்து உக்ரைன் போரை நீடிக்க முயல்வதுடன் அனைத்து சுமையையும் ஐரோப்பாவுக்கு கொடுக்க முயலுகிறது. ஐரோப்பாவின் நெருக்கடி மீளவும் ஒரு உலகளாவிய போரை கட்டமைக்க முயலும் எனக்கருதுகிறது. ஆனால் உலகம் முரண்பாடுகளையும் மோதல்களையும் பகைமையையும் அரசியல் முகாமை செய்யும் வலுவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இது ஒரு உலகளாவிய அரசியல் முகாமை யுகமாக மாறிவருகிறது. இதன் பிந்திய வடிவமே ஜெலன்ஸ்கி- மோடி தொலைபேசி உரையாடலாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)