அரசியல் கட்டுரைகள்

உக்ரைன்-ரஷ்சிய போர்நிறுத்தம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்னால் சாத்தியப்படுமா?

உலக அரசியல் வரலாறு முழுவதும் எட்டப்படும் உடன்பாடுகள் அதன் மை காய முன்னர் காணாமல் போகின்ற நியதியை கொண்டுள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்சியாவுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவினாலும் ஏனைய உலக நாடுகளாலும் பெரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அதேநேரம் இரு நாட்டுக்குமான போரை முன்னிறுத்தி அமெரிக்கா உக்ரைனுடன் உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளது. உக்ரையினில் காணப்படும் கனிமங்களை அல்லது கனிய வளங்களை பெறுகின்ற நோக்கோடு அவ்உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் உக்ரைன்-ரஷ்சிய அரசியலின் போக்கில் போர் நிறுத்தம் சார்ந்து எட்டப்படக்கூடிய உடன்பாட்டுக்கான வாய்ப்புகளை தேடுவதாக உள்ளது.

உக்ரைன்-ரஷ்சியா போரை மையப்படுத்தி அண்மைய காலங்களில் உடன்பாடுகளும் அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது. அதனை சுருக்கமாக அவதானிப்பது அவசியமானது. குறிப்பாக ஏப்ரல்-26 2025இல் பாப்பரசர் போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கு கலந்து கொள்வதற்காக வத்திக்கான் வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். இச்சந்திப்பு உக்ரைனிற்கும் ரஷ்சியாவுக்கும் இடையில் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தில் மற்றொரு போர் முன்னெடுப்புக்களை தடுப்பதற்கும், நம்பகமான மற்றும் நீடித்த அமைதியை உருவாக்குவது குறித்தும் அமெரிக்க ஜனாதிபதியுடன் ஆலோசித்ததாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இருவரது சந்திப்பு பிரத்தியோகமானதாகவும்; அதிக வாய்ப்புகளைத் தந்தது எனவும்; போர் நிறுத்தம் தொடர்பில் தாம் இருவரும் நிறைய விடயங்களை விவாதித்ததாகவும்; அனைத்திலும் முடிவுகளை எதிர்பார்ப்பதாகவும்; எங்கள் மக்களின் உயிர்களை பாதுகாக்க முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் அவசியம் எனக் கண்டறிந்து உள்ளதாகவும்; இது வரலாற்று சிறப்புமிக்க முடிவாக மாறக் கூடியது என்றும் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

மறுபக்கத்தில் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏப்ரல்-30ஆம் திகதி மூன்று நாள் போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜெர்மனியை தோற்கடிப்பதில் ரஷ்சியர்களின் தேசபக்தியை முதன்மைப்படுத்தி நினைவு கொள்ளும் விதத்தில் மே-8ஆம் திகதியிலிருந்து மே-10ஆம் திகதி வரை போர் நிறுத்தம் ஒன்றுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது போர் நிறுத்தத்தின் நோக்கம் இரண்டாம் உலக யுத்தத்தில் சோவியத் ரஷ்சியா அல்லது சோவியத் ஒன்றியம் ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனியப்படைகளை வெற்றிகொள்வதில் உக்ரைனியர்களும் ரஷ்சியர்களும் இணைந்து சோவியத் ஒன்றியமாய் பங்கெடுத்து கொண்டனர் என்ற அடிப்படையில் அத்தகைய போர் நிறுத்த உடன்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்ட போதும் ஏப்ரல்-20ஆம் திகதி ரஷ்சியா ஜனாதிபதி தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்திருந்தார்.

இவை எல்லாவற்றையும் கடந்து கடந்த ஏப்ரல்-30ஆம் திகதி (2025) அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கனிம வள உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதனை அமெரிக்காவின் பொருளாதாரச் செயலாளர் ஸ்கொட் பெஸன்ற் (Scott Bessent) மற்றும் உக்ரையின் பிரதி பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ (Yulia Svyrydenko) ஆகிய இருவரும் மேற்கொண்டுள்ளனர். இந்த உடன்படிக்கை இருதரப்புக்குமான அரசியல்-பொருளாதார-இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது என உக்ரையின் பிரதமர் தெரிவித்துள்ளார். இது ‘வரலாற்று பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை’ என்று அவர் வர்ணித்துள்ளார். இதன் மூலம் மீள் முதலீட்டு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும்; இரு நாட்டுக்கும் இடையில் நீண்ட நட்புறவை கட்டமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் உக்ரைன் இத்தகைய உடன்பாட்டின் முழு உரிமையை கொண்டிருக்கும் அதேநேரம் கனிம வளங்களின் பகிர்வு இரு நாடுகளும் சம வலுவுடைய ஒத்துழைப்பினை கொண்டு இயங்குமென்றும் தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய உடன்பாட்டுக்கு பதிலாக அமெரிக்கா உக்ரைனுக்கு நிதி மற்றும் இராணுவ உதவிகளை வழங்கும். கனிமங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு தொகையில் புதிய உரிமங்கள் மூலம் இயற்கை வளங்களை பெறுவதற்கான 50% வாய்ப்புகளை உக்ரைன் கொண்டிருக்கும் என்றும் உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார். இதேநேரம் உடன்பாட்டில் கையெழுத்திட்ட உக்ரைன் பிரதிப் பிரதமர் யூலியா தனது எக்ஸ் தள பதிவில், ‘உக்ரைனுக்கான வான் பாதுகாப்பு அமைப்புகளையும் இந்த உடன்பாடு உள்ளடக்கி இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மூன்று தரப்புகளுக்கும் இடையில் உடன்பாடுகளும் அறிவிப்புகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்ற சூழலில், உக்ரைணை நோக்கியும் ரஷ்சியாவை நோக்கியும் பரஸ்பரம் தாக்குதல்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. மக்கள் கொல்லப்படுவதும், சொத்துக்கள் அழிக்கப்படுவதும் போர் பதற்றத்துக்கான சூழல் ஒன்றை காண்பிப்பதாகவே தெரிகின்றது. உக்ரைனுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையில் நிகழ்த்தப்பட்ட கனிம வளம் தொடர்பான உடன்பாட்டை ஐரோப்பிய நாடுகள் வரவேற்றுள்ளன. மேலும், அத்ககைய உடன்பாடு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி ரஷ்சிய ஜனாதிபதி அமெரிக்காவினால் அதிக நெருக்கடிக்குள் தள்ளப்படும் நிலை ஒன்றை தோற்றுவித்திருக்கிறது என்றும் ஊடகங்களும் இராணுவ ஆய்வாளர்களும் விவாதிக்கின்றனர். அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்காவுடன் மேற்கொண்ட உடன்பாடு, அமெரிக்கா கடந்த காலங்களில் உக்ரைனுக்கு போருக்காக வழங்கிய நிதி மற்றும் இராணுவ உதவிகளுக்கு பதிலீடானது என்ற விவாதம் முதன்மைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஜனவரி-2022 முதல் டிசம்பர்-2024 வரையில் 182பில்லியன் அமெரிக்க டாலர் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. இது உத்தியோகபூர்வ அறிவிப்பாக இருந்தபோதும், உத்தியோகபூர்வமற்ற தகவல்களில் ஏறக்குறைய 350பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கி இருப்பதாக தெரிய வருகிறது. இதனை மீளப்பெறுவதே உடன்பாட்டின் பிரதான நோக்குமாக தெரிகின்றது. ஆனால் உக்ரைன் தரப்பினர் தொடர்ச்சியாக ரஷ்சியாவோடு நிகழ்த்த உள்ள போருக்கான நிதி உதவிகளை ஆயுத உதவிகளை அமெரிக்க வழங்க முன்வந்திருப்பதாக குறிப்பிடுகின்றனர். இது அதிக குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ரஷ்சியா மீதும், ஜனாதிபதி புடின் மீதும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மென்போக்கை கடைபிடிக்கின்றார் என்பது தெரிந்த விடயமாகும். அதுமட்டுமின்றி உக்ரைன் தலைநகர் கியூ மீது ரஷ்சியா பாரிய தாக்குதலை தொடர்ச்சியாக நிகழ்த்திய போதெல்லாம் அமெரிக்க ஜனாதிபதி மௌனம் காத்ததாகவே தெரிகிறது. வெள்ளை மாளிகையின் ஓவல் அரங்கில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் உக்ரைன் ஜனாதிபதிக்கு இடையிலான உரையாடலின் முடிவுக்கு பின்னர், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்சியா தீவிரப்படுத்தியது. இத்தகைய தீவிரத்தின் அடிப்படையில் கனிம வளங்கள் தொடர்பிலான உடன்பாட்டை இரு தரப்பும் எட்டியுள்ளது. இவ்வாறான பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்சியா ஜனாதிபதிக்கும் இடையிலான புரிதல், உக்ரைன் விவகாரத்தில் முக்கியமானதாகும்.

இரண்டாவது ரஷ்சிய ஜனாதிபதி தொடர்ச்சியாக தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புகளை தன்னிச்சையாக வெளிப்படுத்தி வருகின்றார். அவரது போர்நிறுத்த அறிவிப்புக்கள் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்படும் நிரந்தர போர் நிறுத்த அறிவிப்புக்கான உத்தரவாதங்களை பலவீனப்படுத்துவதாகவே தெரிகின்றது. அதனால் நிரந்தரமான போர் நிறுத்தத்துக்கான வாய்ப்பு என்பது அமெரிக்காவில் தங்கி இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அதற்கான சூழமைகளை அமெரிக்க தரப்பு ரஷ்சியாவுக்கு ஏற்ற வகையில் முன்னெடுக்க தயாராக இருக்கிறது. அதேநேரம் உக்ரைனுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் கனிமங்களை மட்டுமே அமெரிக்கா உரிமம் கொண்டாட முடியும் என்று உக்ரேனியர்கள் விவாதிக்கின்றனர். கனிமங்கள் காணப்படும் பிரதேசத்தை நோக்கி அமெரிக்காவின் கண்காணிப்பும், பரிசோதனைகளும், அகழ்வுகளும் நிகழ்வதற்கான வாய்ப்பு அதீதமாகும். அவ்வாறான சூழலில் அந்நிலப் பரப்பின் உரிமம் அமெரிக்காவுக்கு உரியது என்பதோடு அதன் மீதான தாக்குதல்களை ரஷ்சியா நிறுத்த வேண்டும் என்ற விடயமும் முதன்மைப்படுத்தப்படுகின்றது. இதன்போது ரஷ்சியாவின் கோரிக்கைகளுக்கு உடன்பட வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாததாகும். எனவே இவ்உடன்படிக்கை முழுமையான உத்தரவாதத்தை, போராட்ட சூழலில் அமைதிக்கான வாய்ப்புகளை முதன்மைப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே, உக்ரைன்-ரஷ்சிய போர் நிறுத்தம் அல்லது நிரந்தர சமாதானம் என்பதற்கான வாய்ப்பு அரிதாகவே தென்படுகிறது. மாறாக ரஷ்சியாவும்-அமெரிக்காவும் இணைந்து உக்ரையின் மீதான ஆதிக்கத்தை செலுத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. ரஷ்சியா கைப்பற்றிய நிலப்பரப்பை ரஷ்சியாவிடம் ஒப்படைக்க வேண்டிய கோரிக்கை ஒன்றை அமெரிக்க வெளிவிவகாரத் துறை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது. அதேநேரம் உக்ரைன் அமெரிக்காவுடன் மேற்கொண்ட உடன்பாட்டை ரஷ்சியா பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாக்கவில்லை. இதனால் ரஷ்சியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கம் உக்ரைனை பங்குபோடுவதாக அமைந்து விடுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. கனிய வளங்களை நோக்கி அமெரிக்காவும், கைப்பற்றிய மூலோபாய நிலங்களை நோக்கி ரஷ்சியாவும் நகருகின்ற போது உக்ரைன் பங்குபோடப்படும் நிலை தவிர்க்க முடியாததாகும். ஆனால் ஓவல் அரங்கில் இருந்த சூழலை உக்ரைன் ஜனாதிபதி முரண்பாடுகளுக்கு மத்தியிலும், காலம் பிந்தியதாயினும் ஒரு இராஜதந்திர நகர்விற்குள் நகர்த்தியுள்ளார். இதன் பிரதிபலிப்பு ரஷ்சிய ஜனாதிபதியின் பதிலிலேயே தங்கி உள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)