அரசியல் கட்டுரைகள்

உக்ரைன் மீதான ரஷ்சியாவின் போரும் மேற்கு ஐரோப்பாவின் அரசியல் இருப்பும்!

உக்ரைன் ரஷ்சியா போர் என்பது முடிவற்ற விளைவுகளை பிராந்தியங்களைக் கடந்து ஏற்படுத்தி வருகிறது. அதில் அதிக நெருக்கடியையும் பாதிப்பையும் ஐரோப்பிய அரசுகள் எதிர்கொண்டு வருகின்றன. அமெரிக்கா – ஐரோப்பா – உக்ரைன் எதிர் ரஷ்சியா என்ற மோதலின் பிரதிபலிப்புகள் ஐரோப்பாவையே அதிகம் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. மேற்கு ஐரோப்பிய அரசுகள் பாரிய சவால்களை உள்நாட்டிலும் சர்வதேச அரசியலில் எதிர்கொண்டு வருகின்றன. இக்கட்டுரையும் ரஷ்சியா உக்ரையின் மோதலில் சமகால போக்குகளை தேட முயலுகிறது.

02.07.2025 ரஷ்சியா உக்ரைன் மீதான பாரிய தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியுள்ளது. பெறக்கூடிய தகவல்களின்படி 400க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களும் ஏவுகணைகளும் உக்ரையின் தலைநகரம் உட்பட அனைத்து பிரதேசங்களிலும் இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. மக்கள் கொல்லப்பட்ட அளவைவிட உள்கட்டமைப்பு முறைகளில் சிதைவுகளும் அழிவுகளுமே அதீதமானதாக காணப்படுகிறது. இதனை ஒரு மூர்க்கத்தனமான தாக்குதல் என உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டதோடு, ரஷ்சியா மீதான அழுத்தங்களை உலகம் பிரயோகிக்க தவறுகிற பட்சத்தில் இந்த தாக்குதல் தொடர்ச்சியானதாக நிகழும் என குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் கடந்த வாரம் ரஷ்சியாவின் தாக்குதலில் பெரிய அளவிலான உக்ரைன் இராணுவம் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஏறக்குறைய இரு நாட்டுக்குமான சமாதான பேச்சுக்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, உக்ரைன் நடத்திய தாக்குதல்களை அடுத்து ரஷ்சியாவின் அணுகுமுறை வேறானதாக மாறி உள்ளது. அத்தகைய அணுகுமுறையில் விளைவுகளையே தற்போது ஐரோப்பாவும் உக்ரைனும் எதிர்கொண்டு வருகின்றனர். அத்தகைய அம்சத்தை விரிவாக நோக்குதல் அவசியமானது.

முதலாவது, உக்ரைன் மீதான ரஷ்சியாவின் போர் என்பது மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் அணுகுமுறைக்கு எதிரான போராகவே காணப்படுகிறது. ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் தமக்குள் பலமான ஒரு நிலையில் இருந்து கொண்டு ரஷ்சியா மீதான உக்ரைன் தாக்குதலை அங்கீகரித்திருந்தார்கள். அல்லது வழிநடத்தினர் என்று குறிப்பிடலாம். ஆனால் அமெரிக்காவின் பின்வாங்கலுக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவின் பலம் நெருக்கடிகான தொடங்கியது. ரஷ்சியாவின் விளிம்பு நில வலு அதன் பொருளாதாரத்தையும் இராணுவ பலத்தையும் மேலும் வலுவானது ஆக்கியது. ரஷ்சியா போரை நீடிப்பதற்கான அடிப்படை, மேற்கு ஐரோப்பிய அரசுகளின் பலவீனப்படுத்துவதும் அவற்றை பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாக்குவதுமே நோக்கமாக அமைந்தது. இப்பின்னணியில் அமெரிக்காவைப் போரின் முழுமையான ஈடுபாட்டில் இருந்து அகற்றியதில் ரஷ்சியாவுக்கு அதிகமான வெற்றி வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி காலத்துக்கு பின்னர் ஐரோப்பிய-அமெரிக்க ஒத்துழைப்பு எவ்வகையானது என்பது கேள்விக்குரியது. எனவே இக்காலப்பகுதியை சரியாக கையாண்டு ஐரோப்பாவை பலவீனப்படுத்த முடியும் என்று ரஷ்சியா கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ரஷ்சிய ஜனாதிபதி புடின் கருதுகின்றனர். அத்தகைய அணுகுமுறைக்குள்ளேயே போரின் நீடிப்பும் உக்ரைன் மீதான தாக்குதல்களும் தீவிரமடைந்திருக்கிறது. ரஷ்சியாவில் தீவிரம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்சிக்கானது மட்டுமல்ல, அது மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தலைமைகளின் அணுகுமுறைக்கும் எதிரானது. ஏறக்குறைய மேற்கு ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு செலவினங்களிலும் உள்நாட்டு பொருளாதார நிலையிலும் பலவீனப்பட ஆரம்பித்துவிட்டன. ஒப்பீட்டு அடிப்படையில் ரஷ்சியா போர் தொடங்கிய காலப்பகுதியில் காணப்பட்ட பொருளாதார உறுதித் தன்மையை விட தற்போது வலுவான நிலையில் காணப்படுகிறது.

இரண்டாவது, அமெரிக்கா  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் ரஷ்சியாவின் பலம் அதிகரித்துள்ளது. இராணுவரீதியில் ரஷ்சியாவின் அணியும் பலமான நிலைக்குள் மாறியுள்ளது. ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்கள் சீன- ரஷ்சியா – வடகொரிய அணியை பலமான நிலைக்குள் உள்வாங்கி இருக்கின்றது. இது உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைக்கு ரஷ்சியாவுக்கு வலுவை கொடுத்திருக்கிறது. ஆளில்லாத விமானங்களில் தொழில்நுட்பத்தை சீனா பலப்படுத்தியுள்ளது. இந்த அணிக்கு வளமான பலமான இராணுவ சூழல் ஏற்படுகின்றன. ஏற்கனவே நவீன இராணுவத்துடன் தொழில்நுட்பத்தில் பலமான அணியாக மாறிக்கொண்டிருக்கும் சீனா தலைமையிலான அணியினர் மேலும் முழு உலகத்திலும் மாற்றங்களுக்குரிய இராணுவ தொழில்நுட்பத்தை உருவாக்க தொடங்கியுள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளின் விருப்பம் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் மூலம் இருப்பை பாதுகாத்தல். எனினும் அவ்நாடுகளும் இராணுவ ரீதியில் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றது. எனவே ரஷ்யாவில் உக்ரைன் மீதான தாக்குதல் என்பது அத்தகைய தொழில்நுட்பங்களின் பலத்தை ஒரு பக்கம் முதன்மைப்படுத்துவதோடு, உலக ஒழுங்கில் மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் அணுகுமுறைகளை பலவீனப்படுத்த அல்லது மாற்றிட வழிவகுத்துள்ளது. மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை பலவீனப்படுத்தவும் அவற்றில் வளங்களை சுரண்டவும் ரஷ்சியாவை தோற்கடிப்பதன் மூலம் சாத்தியப்படுத்த முடியும் என திட்டமிட்டு இருந்தது. ஆனால் ரஷ்சியாவின் அணியும் அதன் தந்திரோபாயமும் முழுமையாகவே மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் நலன்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் போன்ற இராணுவ பொருளாதார கூட்டுக்களின் விஸ்தரிப்பு நெருக்கடியான கட்டத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை உள்வாங்க முடியாது. அல்லது ஆக்கிரமிக்க முடியாது. இத்தகைய சூழலை உக்ரைன் மீதான ரஷ்சியா போர் ஏற்படுத்தியிருக்கிறது. இப்போரின் பிரதான விளைவு கிழக்கு ஐரோப்பிய நாடுகளை மேற்கு ஐரோப்பாவின் ஆதிக்கத்துக்குள் முழுமையாக அகப்படாமல் ரஷ்சியா தடுத்துள்ளது என்பதே தெரிகிறது. அதிக தேசிய இன பிரச்சனைகளை கொண்ட பிராந்தியமான கிழக்கு ஐரோப்பா பிரிவினைகளாலும் அதற்கான மோதல்களாலும் இயல்பான வளர்ச்சி நிலையை அமெரிக்கா அணி ஏற்படுத்தி வந்தது. உக்ரைன் மீதான ரஷ்சியா போர் அதனை நெருக்கடிக்குள் தள்ளி இருக்கின்றது.

எனவே, ரஷ்சியா ஜனாதிபதி புட்டினது உக்ரையின் மீதான தீவிர தாக்குதல்கள் பிராந்தியத்தின் புவிசார் அரசியல் நியதிகளை மையப்படுத்தியதாகவே காணப்படுகிறது. ஐரோப்பாவை குறிப்பாக மேற்கு ஐரோப்பிய ஏதிபத்திய சக்திகளை பாரிய சவாலுக்குள் உட்படுத்தி இருக்கின்றது. பொருளாதார அடிப்படையிலும் இராணுவ ரீதியிலும் உக்ரைனின் பின் தளமாக இயங்க முயற்சித்த மேற்கே தனது இருப்பை இழந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஜி-07, நேட்டோ போன்ற கட்டமைப்புகள் பொருளாதார ரீதியில் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டதோடு அமெரிக்காவின் பின் வாங்கல் போரை தலைகீழாக மாற்றி உள்ளது. இதனை சரி செய்ய மேற்கு ஐரோப்பிய நாடுகளால் முடியாதது மட்டுமின்றி, அமெரிக்கா இல்லாத மேற்கு ஐரோப்பா பலவீனமான சூழலையே அல்லது இருப்பையே ஏற்படுத்தக் கூடியது. போரின் திசைகளை முன்கூட்டியே கணிக்க முடியாதது என்றாலும், ரஷ்சியாவின் அணியும் அதன் அணுகுமுறையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் இருப்பை பலவீனப்படுத்தியுள்ளது. அமெரிக்காவை இப்போது அகற்றியது முதல் ரஷ்சியாவுக்கு தரமான வாய்ப்புகளை கொடுத்திருக்கின்றது. இரு நாடுகளின் தலைவர்களும் மோதிக் கொள்வது போல் காணப்பட்டாலும், ட்ரம்ன் அணுகுமுறை ரஷ்யாவுக்கு சாதகமானதாகவே காணப்படுகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)