June 23, 2024
ஆய்வு கட்டுரைகள்

ஈழத்தமிழரின் தேசியத்தில் சு.வித்தியானந்தனின் வகிபாகம்!

(பேராசிரியர் சு.வித்தியானந்தன் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட ‘பல்கலைத் தமிழ்ப் பெருநிதியம்’ எனும் நூற்றாண்டு மலரில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ‘ஈழத்தமிழரின் தேசியத்தில் சு.வித்தியானந்தனின் வகிபாகம்!’ எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்துள்ளார்.)

 

அறிமுகம்:

தமிழ் மக்களின் அரசியலோடு பயணித்த புலமைசார் ஆளுமைகளில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் தனித்துவமான அறிஞராக திகழ்ந்துள்ளார். தமிழ் போராசிரியாக இலங்கைத் தீவில் அடையாளப்படுத்தப்பட்டாலும் வடக்கு கிழக்கு முழுவதும் நாடகம், கூத்து எனும் தமிழின மரபுகளால் இனங்காணப்படும் அறிஞராக காணப்படுகின்றார். 1924ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் திகதி யாழ்ப்பாணத்தின் பாராம்பரிய கிராமிய மண்ணான வீமன்காமத்தில் சுப்பிரமணியம்-கமலாதேவிக்கும் மகனாக பிறந்த விதியானந்தன் வீமன்காமம் பாடசாலையிலும், யூனியன் கல்லூரி மற்றும் பரியோவான் கல்லூரியிலும் தனது ஆரம்ப இடைநிலைக் கல்வியை பூர்த்தி செய்ததுடன் யாழ்ப்பாண இந்துக்கல்லூரியிலும் சிலகாலம் கல்விகற்றார். 1941ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்துள்ள இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரியில் உயர்கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டார். இளங்கலைமாணிப் படிப்பில் தமிழை விசேடபாடமாக கற்றுக் கொண்ட வித்தியானந்தன் 1946இல் முதுமாணிப்பட்டத்தையும் நிறைவு செய்து உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்றார். 1950ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பூர்த்தி செய்து கொண்டார் வித்தியானந்தன். 1970ஆம் ஆண்டு பேராசிரியராகும் வித்தியானந்தன் 1979ஆம் ஆண்டு முதல் துணைவேந்தராக யாழ்ப்பாணப்பலகலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கின்றார். இவரது அறிவின் திரட்சியினால் எழுத்துப் பணி மற்றும் வெளியீட்டுப்பணி, ஆய்வுப்பணி, நாட்டார் கலைகளை மீளவும் புதுப்பிக்கும் பணி, அரங்கச் செயல்பாட்டுப் பணி, உயர்கல்விப் பணி, நிறுவனங்களையும் அமைப்புக்களையும் உருவாக்கப் பணி மற்றும் தமிழ் தேசியப்பணி என விரிந்த தமிழ் தேசியப்பரப்பில் வித்தியானந்தன் எனும் ஆளுமை திகழ்ந்துள்ளது. இத்தகைய தனித்துவம் மிக்க ஆளுமையின் தமிழ் தேசியத்தை கட்டமைப்பதில் வித்தியானந்தன் மேற்கொண்ட பணிகளை அடையாளப்படுத்த இப்பகுதி முயலுகிறது.

 

தேசியம்:

ஈழத்தமிழரின் அரசியலில் ஆழமான உரையாடல் களமாகவும் போராட்ட எண்ணமாகவும் தேசியம் கலந்துள்ளது. அதிலும் தமிழ் தேசியம் என்பது அறிவியலுடனும் அரசியலுடனும் பின்னிப்பிணைந்ததாக உள்ளது. அத்தகைய தேசியம் சமானியனது அரசியல், சமூக-பொருளாதார, பண்பாட்டு உணர்வுகளை மையப்படுத்தியதென்பது வியப்பான விடயமாகும். அதாவது சமானியனது அரசியல் பங்குபற்றலே தேசியம் என்று குறிப்பிட்டால் மிகையாகாது. அதனையே ஜனநாயகம் என்ற எண்ணக்கருவுக்குள்ளால் அடையாளப்படுத்த முயலுகின்றனர். தேசியம் என்பது முதல் அர்த்தத்தில் ஜனநாயகத்தைக் குறிப்பதாகும். மக்களின் திரட்சி மிக்க பங்கேற்பே தேசியமாகும். தேசியப் போராட்டங்கள் அனைத்துமே மக்களின் கைகளுக்கு அதிகாரம் மற்றும் இறைமை கைமாறுவதைக் குறிக்கும் போராட்டங்களாகும். தனிமனித உரிமையும் கூட்டுரிமையும் இணைந்ததென்றே தேசியமாகும். இவ்வகைத்  தேசியம் எல்லா இடங்களிலும் சுயம் பற்றியே விவாதிக்கிறது. சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, சுயகௌரவம் என்பன இனம், நாடு தேசம் என்ற கூட்டுசுயம் வரை கட்டமைக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் தேசியத்தின் தோற்றமானது 18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனையாக இருந்தாலும் மனித குலம் அதனை பூகோளமயப்படுத்தியுள்ளது. அது சமானியர்களின் யுகமாகவே கட்டமைக்கப்பட்டது. முடியாட்சி முறைமைகளுக்கு எதிராக மக்களது திரட்சியே அத்தகைய தேசியத்தின் தோற்றமாகும். இன மத நிற சாதிய வேறுபாடுகளைக் கடந்து மக்களது திரட்சியே தேசியம் என்று சுருக்கமாக கூறிக்கொள்ளலாம். மக்கள் அரசியல் தீர்மானங்களில் பங்கெடுக்கும் ஜனநாயக ஈடுபாடு இல்லையாயின் அதனை தேசியம் எனக்குறிப்பிட முடியாது. மக்கள் தமக்குரிய விருப்புக்களை தீர்மானமாக எடுத்துக் கொள்வதே அவர்களது சுய உரிமையாகும். அதுவே சுயநிர்ணய உரிமையாகும். ஒரு சுயம் பிறருக்கு தீங்கில்லாத தன்னகத்தே சுயமாகச் செயல்படுவதும் சுயம் இன்னோர் சுயத்துடன் பரஸ்பரம் நலனடிப்படையில் ஒன்று சேருவதும் ஜனநாயகத்திற்கான அடிப்படைகளேயாகும். ஜனநாயம் என்பது உயிர்துடிப்புள்ள பண்பாட்டு அடையாளம். அது நாகரீகத்தின் முதிர்ச்சி.

ஈழத்தமிழர் மன்னராட்சிக்குள் இருந்து விடுபட வழிவகுத்த பிரித்தானிய ஆதிக்கவாதம் தனது நிர்வாக நலனுக்காக ஒன்றையாட்சி மரபுக்குள் ஒன்றிணைத்தது. இலங்கைத்தீவின் பிரிதானிய அரசியலமைப்பால் கட்டப்பட்ட ஒன்றையாட்சி நியமத்திற்குள் ஈழத்தமிழர்கள் வலிந்து பிணைக்கப்பட்டார்கள். ஆனாலும் அவர்களது வாழ்விடமும் மொழியும் பண்பாட்டு அடையாளங்களும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதனை சுதந்திர இலங்கைக்குள் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக்குள்ளேயே தந்தை செல்வா சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். அதுமட்டுமன்றி தந்தை செல்வாவுக்கு முன்பே ஆறுமுக நாவலரும் சேர் பொன் இராமநாதன் மற்றும் சேர். பொன். அருணாசலம் போன்றவர்கள் அதற்கான ஆரம்பப் புள்ளியை ஏற்படுத்திவிட்டார்கள். அதிலும் நாவலரும் அருணாச்சலமும் தமிழ்த் தேச அங்கீகாரத்திற்கான மொழி மத அடையாளங்களுடன் பண்பாட்டச் சேர்க்கையை முதன்மைப்படுத்தி தமிழ்த் தேச அங்கீகாரத்தை உறுதிப்படுத்தினார்கள். இவர்களது பங்களிப்பிலிருந்து மேலும் முன்னேறிய தந்தை செல்வநாயகம் அவர்கள் இரண்டு பிரதான விடயங்களை முன்மொழிந்தார். ஒன்று சமஷ்டிக் கோரிக்கை. சமஷ்டிக் கோரிக்கை என்பது வெளித் தேற்றத்தில் தமிழ் தேச அங்கீகாரம் போன்று அமைந்திருந்தாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தம் பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணயத்தை கொண்டது. அமெரிக்காவின் அனுபவத்தை வைத்துக் கொண்டு நோக்கும் போது பிரிந்து செல்லவிடாது அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு பல தேசங்கள் ஒன்றிணைந்து இயங்குவதென்று குறிப்பிட்டாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக உலகம் முன்வைத்த ஒருவிடயமாக சமஷ்டி கருதப்படுகிறது. லெனின் தலைமையிலான சோவியத் ரஷ்சியாவின் சமஷ்டியானது அத்தகைய அர்த்தத்திலேயே இயங்கியது. அது ஸ்டாலின் யுகத்தில் தலைகீழானது வேறுவிடயம். அதாவது சுயநிர்ணயம் என்பது ஒரு தேசிய இனமானது தனக்கென சுயாதிபத்தியமுள்ள ஒர் அரசை அமைப்பது. அல்லது ஒர் அரசமைப்பிலிருந்து பிரிந்து தனியரசை அமைப்பது அல்லது அவ்வாறு பிரிந்து இன்னோர் அரசுடன் இணைந்து கொள்வது அல்லது தனியரசாக இருக்கும் ஒரரசு இன்னோர் அரசுடன் இணைவது எனக்கொள்ளப்படுகிறது. இன்னோர் அர்த்தத்தில் சுயநிர்ணயம் ஆனது ஓர் அரசின் இறைமை இன்னோர் அரசினால் மீறப்படாது அல்லது தலையிடாது இருத்தலாகும். அந்த வகைக்குள் பார்த்தால் சமஷ்டி சுயநிர்ணயத்தின் பால்பட்டதென்பது தெளிவாகிறது.

இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம். இது தந்தை செல்வாவின் தலைமையில் ஈழத்தமிழரது தனியரசமைப்பதற்கான தீர்க்கமான வெளிபாடேயாகும். அதாவது சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட அதே தரப்பே தனியரசுக்காக பிரிந்து செல்லும் தீர்மானத்தை தமிழ் மக்களிடம் முன்வைத்து அங்கீகாரம் பெற்றுக் கொண்டது. 1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை கம்யூனிசக் கட்சி தமிழர்கள் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமையை உடையவர்கள் என்பதை பிரகடனப்படுத்திய 35 வருடங்களுக்க பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதிலிருந்தே மூன்றாவது கட்டம் ஈழத்தமிழரது அரசியல் பரப்பில் மேலெழுகின்றது. அத்தகைய கட்டத்தை ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் அனைத்தும் மேற்கொண்டன. அதனை தமிழீழ விடுதலைப்புலிகள் தனித்துவமாக கொண்டு செயல்பட்டனர். வட்டுக் கோட்டைத் தீர்மானம் மிதவாத சக்திகளால் முன்வைக்கப்பட்ட போது ஈழத் தமிழர்கள் வளர்ச்சி பெற்ற ஒரு தேசிய இனமாக வரலாற்றில் நிலைநிறுத்தப்பட்டதுடன் அதற்கான வரலாற்று இருப்பையும் மொழியையும் பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் கொண்டவர்கள் என்பதை இலங்கைத் தீவு மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்திற்கு உட்பட்டது.

 

வித்தியானந்தனும் தமிழர் தேசியமும்:

தேசியம் என்பது மக்கள் ஆட்சி அதிகாரத்திலும் தீர்மானம் எடுப்பதிலும் கொண்டுள்ள ஈடுபாட்டைக் குறிப்பதாகும் என்பது மேற்குறித்த எண்ணக்கருவாக்கத்திலிருந்து புரிந்து கொள்ள முடியும். வித்தியானந்தனது ஆளுமையானது தமிழ் அறிஞராகவும் ஆய்வுப் புலத்தில் பலமான புலமையாளனாகவும் சிறந்த நிர்வாகியாவும் இனங்காணப்பட்டிருந்தார். குறிப்பாக இலங்கைக் கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நாடக குழு மூலம் ஆற்றிய சேவைகள், இலக்கிய ரீதியில் இலங்கை சாகித்திய மண்டலம் மூலம் மேற்கொண்ட சேவைகள், இலங்கைத் தேசிய நாடக நூற்கட்டளை நிறுவனத்தின் மூலம் மேற்கொண்ட ஆக்க வேலைகள், ஐக்கிய நாடுகளின் கல்வி விஞ்ஞான மற்றும் கலை நிறுவனத்தில் இலங்கைக் கிளை மூலம் ஆற்றிய சேவைகள். மற்றும் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுதட்தாபனத்தின் மூலம் மேற்கொண்ட முன்னோடி நகர்வுகள் தனித்துவமானவை. ஆனால் அவரது தமிழ் தேசியத்திற்கான உழைப்பின் பக்கத்தை ஈழத்தமிழர்களோ ஈழத்தமிழ் அறிஞர்களோ முழுமையாகக் கொண்டதாக தெரியவில்லை. அவரது நாடகமும், கூத்தும் வெறும் அரங்க நிகழ்வாகவே பார்க்கப்பட்டதே அன்றி அதனை தமிழ் தேசியத்திற்கான பங்களிப்பாக நோக்கவில்லை என்றே கூறத் தோன்றுகிறது. காலனித்துவம் பற்றிய உரையாடலை அதிகம் முதன்மைப்படுத்திய பெனான் என்ற அறிஞன் குறிப்பிடும் தர்க்கங்கள் அனைத்தும் வித்தியானந்தனின் சுதேசம் பற்றிய தேடலுக்குள் அடங்கும். பெனானுடைய பார்வையில் தேசம் கலாசாரத்தின் வெளிப்பாடு. தேசியப் பிரக்ஞை கலாசாரத்தின் மிக விரிந்த வடிவம். பிரக்ஞையோடு ஒழுங்கமைந்த முறையில் தங்களுடைய தேசத்தின் இறைமையை மீள நிறுவதற்காக அடிமைப்பட்ட மக்கள் செய்யும் முயற்சி சமகால இருப்பில் மிகத் தெளிவாகத் தெரிகிற பரந்த விரிந்த கலாசார வெளிப்பாடாக இருகிறது. கலாசாரம் தனது இருப்பிற்கு தேசத்தையும் அரசையும் சார்ந்திருக்கிறது. காலனித்துவ நிலையிலேயே கலாசாரம் குலைந்து மடிந்து விடுகிறது. அதனை மீட்டெடுப்பது சுலபமான விடயம் கிடையாது. அதன் ஆக்கபூர்வமான சக்திகள் கட்டவிழ்த்துவிடுகிற விடுதலைக்கான செயலூக்கமுள்ள போராட்டங்களை சார்ந்திருக்கிறது என பெனான் குறிப்பிடுகின்றார். அத்தகைய போராட்டம் ஒன்றினையே சு.வித்தியானந்தன் முன்னெடுத்தார். கலாசாரத்தின் அடையாளங்களை நோக்கியே விடுதலைப் போராட்டங்கள் மேலெழுகின்றன. அதிலும் ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு எதிராக கிளந்தெழுந்த காலனித்துவ தேசங்கள் சுதேச பண்பாட்டு வடிவங்களை முன்னிறுத்தி விடுதலையை நோக்கி பேராடின. இது ஆபிரிக்கா முழுவதும் மேலோங்கியுள்ளது. இத்தகைய இயல்பூக்கம் இந்திய துணைக்கட்டத்திற்கு தனித்துவமானது. ஆசியத் தேசியங்களின் வளர்ச்சியில் கலாசாரத்திற்க்கான தனித்துவம் அதீதமானவை. அதனை மையப்படுத்தியே இந்தியத் துணைக்கண்டம் பிரித்தானிய அடக்குமுறையைத் தோற்கடித்தது, அல்லது அதற்கு எதிராக ஒன்றிணைந்தது. அதன் எச்சங்கள் ஈழத்தமிழர் மத்தியிலும் வேரூன்ற வித்தியானந்தன் அதிகம் முயன்றார். தமிழாராட்சி மகாநாட்டில் இடப்பட்ட பொறியே பின்வந்த போராட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்திருந்தது. அதுவே அகிம்சைப் போராட்டத்திற்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் அடிப்படையானது. அதில் வித்தியானந்தனின் பங்கு முக்கியமானது. கிராமங்கள் தோறும் வித்தியானந்தன் கட்டமைத்த சமூக செயல்பாடு ஈழத்தமிழரது அரசியல் அசைவியக்கத்திற்கு வித்திட்டது. அத்தகைய விழிப்பூட்டலே ஈழத்தமிழருக்கான அரசியல் செல்நெறியை கட்ட உதவியது.

இதனை மேலும் புரிந்து கொள்ள ஜேன் கேரீ இன் கலாசாரமும் அரசியல் எழுச்சியும் எனும் ஆய்வில் குறிப்பிட்ட விடயம் கவனத்திற்கு உரியது. அனைத்து அழுத்தங்களிலிருந்தும் தெருக்களின் பண்பாடு (Culture of Streets) வெடித்துக் கிளம்பியது. அமெரிக்காவின் நீதியற்ற கொடூரமான வியட்னாம் போருக்கு எதிரான கறுப்பு எழுச்சியகளன் மற்றும் நாடு தழுவிய எதிர்ப்புகள் தோன்றிய போது அதன் பிரிக்கவியலாத ஓரங்கமாக பண்பாட்டுத் துறையின் புத்தெழுச்சி உருவாகிறது. கவிதைகள் பாடல்கள் நாடகங்கள் இசை ஆகியவற்றேநாடு தெமரு மொழி (Language of Streer) புதிய ஆக்கத்திறனுள்ள சொற்கள் பிம்பங்கள் சந்தங்கள் ஆகியவற்றால் காலாசார புத்தொழுச்சி எழுந்தது. இந்த பிரபஞ்சம் தன்னை ஒவ்வொரு கணமும் புதுப்பித்துக் கொண்டிருப்பதாக இஸ்லாமியத் தத்துவம் சொல்கிறது. ஒடுக்குமுறை அநீதி பேராசை ஆகியவற்றிற்கு எதிராக எதிரெழுச்சிகள் என்பன ஒடுக்கப்பட்ட மக்களின் மூச்சுக்காற்றின் ஒரு இயல்பான கூறாக ஆகிவிடுகிறது என்றார் ஜேன் கேரீ. இதுவே வித்தியானந்தனின் தேசியப்பணியாகும்.

 

பிரதேசங்களும் பாரம்பரிய மரபுகளும்:

வித்தியானந்தனின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாக  நாடகமும் கூத்து மரபும் காணப்பட்டது என்பதனை ஏற்கனவே உரையாடி இருந்தோம். அவருடைய அரசியல் பக்கங்களை  அது முதன்மைப்படுத்தா விட்டாலும்  அவருடைய செயற்பாடுகள் ஒவ்வொன்றும்  அரசியல் பிரக்ஞையாக அல்லது ஈழத்தமிழருடைய அரசியல் அபிலாசைகளை  முழுமைப்படுத்துவதில் ஒரு வெற்றிகரமான சூழலை  ஈழத்தமிழர் அரசியல் பரப்பில் ஏற்படுத்தி இருந்தது. வடக்கு, கிழக்கு முழுவதும் அவர் கலைத் துறையோடு கொண்டிருந்த ஈடுபாட்டினால் அதிகமான மரபு சார்ந்து இருக்கக்கூடிய நாடகங்களையும், அந்த நாடகங்களுக்கு ஊடாக எழுந்து வரக்கூடிய மரபு சார்ந்த  படைப்புக்களையும்  அதேபோன்று கூத்து மரபுகளையும் முழுமைப்படுத்துகின்ற விதத்தில் அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருந்தன. குறிப்பாக அவர்  ஈழத்தமிழருடைய அரசியல் ரீதியான தேசிய எழுச்சிக்கான ஓர் அடிப்படையை  மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு, மலையகம் என்ற இடங்களில் தன்னுடைய கலை ரீதியான வெளிப்பாடுகளுக்கு ஊடாக முதன்மைப்படுத்தியிருந்தார். பிரதேசங்களைக் கடந்தும், சாதி, மதப் பிரிவுகளைக் கடந்தும், மொழி வேறுபாடுகளைக் கடந்தும் ஈழத்தமிழர்கள் உடைய அரசியல் இருப்போடு முதன்மைப்படக்கூடிய தேசிய அரவணைப்புக்குரிய எண்ணத்தை விதைத்திருந்தார். ஒருவகையில் அவருடைய நாடகங்களினுடைய அடிப்படைகள் பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும், சமூக மட்டத்திலும் மிகத் தேர்ச்சி பெற்ற ஒரு நிலையை உருவாக்கி இருந்தது. குறிப்பாக கரகம், காவடி, புறவியாட்டம், வசந்தன், கப்பற் பாட்டுப் போன்ற மக்களினுடைய கலைகளை மையப்படுத்தி அவர்களை ஒன்றிணைத்து கலை நிகழ்வுகளை அவர் ஒழுங்குபடுத்தி இருந்தார்.

இவை அனைத்துமே கிராமங்கள் தோறும், அடிமட்ட மக்கள்தோறும், சாமானியன் மட்டத்திலும் ஒரு புத்துணர்ச்சியையும் தன்னுடைய உழைப்பின் தனித்துவத்தையும் அடையாளப்படுத்துகின்ற விதத்தில் முதன்மைப்படுத்தப்பட்டது. குறிப்பாக அரிச்சந்திரா மயாண காண்டம் பெருமளவிற்கு வடக்கு, கிழக்கு முழுவதும் ஒரு மிகப்பரவலான எழுச்சியைத் தோற்றுவித்தது. அதேபோல பக்தன் நந்தனார், சிதம்பரா தரிசனம் போன்ற கூத்துக்கள், நாடகங்கள் பெருமளவிற்க்கு அதேபோல் கர்ணன் போர் போன்ற அம்சங்கள் கூத்து  மரபின் புதிய வடிவத்தையும் புதிய எண்ணத்தையும் சமூக மட்டத்தில் கொண்டு வந்தது. இதனை வெறும் கலையாக மட்டுமின்றி இது மக்களை அரவணைக்கின்ற ஒரு அரசியல் ரீதியான பணியாக அடையாளப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகக் காணப்படுகின்றது. அவருடைய அரசியல் ரீதியான பணி என்பதுதான் மேலோங்கி இருக்கின்ற பிரதானமான செயல் வடிவமாக இருக்கின்றது.

குறிப்பாக அவர் இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் பலவீனமான சமூக ஒழுங்கு முறைகளுக்குள் உள்ள மக்கள், தங்களுடைய கலை சார்ந்து இருக்கக்கூடிய அடையாளங்களுக்கு உள்ளால் அவற்றை வெளிப்படுத்தி அதன் மூலம் அவர்கள் சமூகத்தோடு சேர்ந்து இயங்குகின்ற தங்களுடைய தொழில் சார்ந்து ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு கூட்டுத் தன்மையையும் கூட்டு உணர்வையும், அவர்களுடைய உரிமைக்கான எண்ணங்களையும் விதைப்பதில் வித்தியானந்தன் பெரும்பங்காற்றியிருக்கின்றார். குறிப்பாக அவர் பிரதேசங்களைக் கடந்து அண்ணாவிமார் மாநாடு, அண்ணாவிமார்களின் தனித்துவங்களை முதன்மைப்படுத்திய அவர்களுக்கான கௌரவிப்புக்கள் அதேபோன்று அந்தக் கூத்து மரபோடு சேர்ந்திருந்தவர்களை நிகழ்வுகளிலும் அரங்குகளிலும் முதன்மைப்படுத்துவது அண்ணாவிமாரின் விபரங்களைத் திரட்டி அவற்றை ஒரு கோப்புக்களாக வெளிப்படுத்தியது போன்றவை அவருடைய மிக முக்கியமான புலமை சார்ந்த ஒரு உரையாடலாக இருந்தாலும் மறுகணத்தில் சாமானியனை இந்த சமூகங்களோடு இணைப்பதில், அரசியலோடு இணைப்பதில் ஒரு பெரும் வகிபாகமாக அமைந்திருந்தது. பெருமளவிற்கு தேசிய ரீதியான அறிவூட்டலைச் செய்கின்ற அதேதளத்தில் தேசிய ஈடுபாட்டை ஏற்படுத்துகின்ற ஒன்றாகவும் அது கட்டமைக்கப்படுகின்றது. அவர் ஒரு தேசிய தனித்துவமிக்க தலைவனாக தன்னை அடையாளப்படுத்துகின்ற பக்கத்தை விட அவர் புலமைத்தளத்தில் இருந்து கொண்டே அவர் தன்னுடைய தேசிய ரீதியான உழைப்பை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக இந்த கூத்து மரபுகளில் அடையாளப்படுத்தப்பட்ட அரிய கூத்து மரபுகள்  எல்லாவற்றையும் முதன்மைப்படுத்துகின்ற விதத்தில் ஏடுகளையும், வெளியீடுகளையும் அந்தக் காலத்தில் அவர் முன்நகர்த்தி இருக்கின்றார்.

நாட்டார் பாடல்களை பொதுமக்கள் நினைவு கொள்ளுகின்ற விதத்தில் பொதுமக்கள் தங்களுடைய வாழ்வியலில் பின்பற்றிய அந்த நாட்டார் வழக்குகள் எல்லாவற்றையும் தொகுத்து அவற்றை வெளிப்படுத்துகின்ற விதத்தில் நாடகங்கள் தொகுக்கப்படுகிறது. கூத்து மரபுகள் தொகுக்கப்படுகிறது. அதேபோன்று அவர் பெருமளவிற்கு இந்த கூத்து மரபில் காணப்பட்டிருக்கக் கூடிய அம்சங்களோடு சேர்ந்து இந்த நாட்டார் வழக்கியலையும் ஒரு தொகுப்புக்கு உட்படுத்துகின்ற செயற்பாடு என்பது ஒர் ஆரோக்கியமான இருப்பை அல்லது கலைக்கான அடிப்படையை ஈழத் தமிழர்களிடம் விட்டுச் செல்கின்ற மரபை அவர் ஏற்படுத்தி இருந்தார். அவர் தேசியக் கலையின் வடிவங்களை உள்ளடக்குகின்ற விதத்தில் முதன்மைப்படுத்துகின்ற எல்லா அம்சங்களிலும் இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், அதேபோன்று கத்தோலிக்கர்கள், சைவர்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு ஒரு தனித்துவமான பக்கத்தை அவர் ஏற்படுத்துவதில் ஒரு வெற்றிகரமான சூழலை அமைத்திருந்தார்.

வித்தியானந்தனுடைய கலை சார்ந்திருக்கக்கூடிய பணிகளின் உழைப்பின் ஒன்றிணைப்புத்தான் பின்வந்த காலப்பகுதியில் ஈழத்தமிழர்களுடைய அரசியலில் தனித்துவமான தேசிய இருப்பை கட்டமைப்பதற்கான ஒர் அடிப்படையை கொடுத்திருந்தது. குறிப்பாக அவர் மரபுகள் சார்ந்து முதன்மைப்படுத்துகின்ற போது மதங்களை சேர்ந்தவர்களை, புலவர்களை, விவசாயிகளை அதேபோன்று ஏனைய தொழிலாளர்களை ஒன்றிணைப்பதிலும் அவருக்கான ஒரு தனித்துவம் காணப்பட்டது. அவருடைய நாடக அரங்குகளிலும், அதேபோன்று கூத்து மரபுகளிலும் ஒவ்வொரு  பிரதேசங்களுக்குரித்துடைய தனித்துவங்களை அங்கீகரித்து அதற்கேற்ற வகையில் கத்தோலிக்கப் புலவர்கள், புரட்டஸ்தாந்து புலவர்கள், யாழ்ப்பாணத்து வீரசைவ கலைஞர்கள், மட்டக்களப்பினுடைய கலைஞர்கள், மலையக கலைஞர்கள் எல்லோரும் ஒன்றிணைக்கப்படுகின்ற வாய்ப்பு என்பது இவருடைய கலைகளுக்கு ஊடாக கட்டமைக்கப்பட்டது. உலக வரலாறு முழுவதும் கலைகள் தேசங்களையும் தேசியங்களையும்  முதன்மைப்படுத்துவதற்கான அடிப்படையாகவே இருந்தது. மக்களைத் திரட்டுதல், சாமானியர்களை அரசியல் பங்கெடுப்பாளர்களாக மாற்றுதல், தேசியம் என்று உரையாடப்படுகின்ற கோட்பாட்டுத் தளத்தில் அதற்கான அடிப்படைகளைத் தேடி வித்தியானந்தன் கிராமங்கள் தோறும், பிரதேசங்கள் தோறும் வலம் வந்திருக்கின்றார். புலவர்கள், கடல்த் தொழிலாளர்கள், பூசாரிகள் போன்ற வேறுபாடுகள் எல்லாவற்றையும் கடந்து அவர்களை கலையின் ஊடாக ஒன்றிணைத்து இருக்கின்றார். சிங்களக் கலைஞர்கள், தமிழ்க் கலைஞர்கள் அதேபோன்று சிங்கள ஆராய்ச்சியாளர்கள், ஐரோப்பிய பார்வையாளர்கள் ஆகியோர் ஒன்றிணைக்கப்படுகின்ற சூழலும் அவர்களுடைய திறன்கள், அறிவு சார்ந்து இருக்கக்கூடிய அம்சங்கள் பகிரப்படுகின்ற ஒரு வாய்ப்பையும் வித்தியானந்தன் அவர்கள் அந்தக் காலப்பகுதியிலே ஏற்படுத்தியிருந்தார். இவை அனைத்துமே சமூகங்களை ஒன்றிணைப்பது என்பதற்கு அப்பால் கலைகளை முதன்மைப்படுத்துவது என்பதற்கு அப்பால் அவர்களை ஒன்று சேர்வதன் ஊடாக ஒரு தேசிய இருப்பிற்கான கட்டமைப்பை அவர் முதன்மைப்படுத்தி இருந்தார்.

இதில் ஈழத்தமிழர்களுடைய தேசியம் ஒரு தளத்தில், இலங்கையினுடைய தேசியம் இன்னொரு தளத்திலும் அது கட்டுருவாக்கம் பெற்றிருந்தது. ஒரு வகையில் இங்கு வடக்கு, கிழக்கிற்கான தனியான ஆதரவு என்பது அல்லது அதற்குரிய அணி திரட்டல் என்பதை அவர் தன்னுடைய காலத்தில் முதன்மைப்படுத்தியிருந்தார். அந்தப் பாதை இப்போதுமே வெறுமையாக இருக்கிறது. அதனைக்  கடந்து செயல்படுவதற்குரிய இன்னொரு பக்கத்திற்குரிய பிரிவினர் அதனை அடையாளம் காண்பதிலோ அல்லது அதனை நோக்கிப் பயணிப்பதிலோ அவர்கள் ஒரு முழுமையான வடிவத்தை எடுக்கவில்லை என்றே தோன்றுகின்றது. இந்த அடிப்படைகளுக்குள்ளால்தான் அவருடைய அரசியல் பணியின் முக்கியத்துவம் அளவீடு செய்யப்பட வேண்டும். அவரை வெறும் இலக்கிய விமர்சகராக அல்லது இலக்கிய கருத்தாவாக அல்லது இலக்கிய ஆர்வலராக மட்டும் அடையாளப்படுத்தாது அவரை ஒரு முழுமையான தேசியத்தின் அடையாளத்திற்கு உரித்துடையவராக இனங்காணப்பட வேண்டியவராகவே தோன்றுகின்றது. குறிப்பாக ஈழத்தமிழர் மத்தியில் காணப்பட்ட வேறுபாடுகள் எல்லாவற்றையும் கலைகளுக்கு ஊடாக ஒன்றிணைப்பதில் அவர் தனித்துவமான இடத்தை தனக்கே உரித்தான இடத்தை பெற்றிருந்தார். நாடகம், சிறுகதை, கவிதை அதேபோன்று நெடுங்கதைகள் போன்ற இந்த இலக்கியப் பரப்பில் அவர் பயணிக்கின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் சமூகங்களோடு ஒன்றிணைத்து சமூகங்களுடைய விருப்புக்களை பூரணப்படுத்துகின்ற விதத்தில் சமூகங்களை ஒன்றிணைத்துக் கொண்டு செல்வதில் வெற்றிகரமான மனிதனாக, வெற்றிகரமான அறிஞராக, வெற்றிகரமான ஒரு பேராசிரியராக, பணியாற்றினார். குறிப்பாக ஈழத்தமிழர்களுடைய இலக்கிய மரபுகளுக்குள் அவருக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் அவர் ஒரு தேசிய இருப்போடு பயணித்தார் என்பதை அடையாளம் காட்டுவதில் அதிக தனித்துவத்தைக் கொடுக்கத் தவறியிருந்தது.

ஆகவே வித்தியானந்தனின் தனித்துவமான பக்கங்கள் ஒவ்வொன்றும் அல்லது வித்தியானந்தனுடைய இருப்பின் ஒவ்வொன்றும் ஒரு முழுமைப்படுத்தப்பட்ட அரசியல் இருப்பை  ஈழத்தமிழரகள் மத்தியிலோ அல்லது இலங்கை தேசியத்தின் மத்தியிலோ அடையாளப்படுத்துவதில் தவறவில்லை. குறிப்பாக மேற்கு நாடுகளின் திறமை சார்ந்து இருக்கக்கூடிய தளத்தோடு பயணித்த அல்லது ஈழத்தமிழர்களுடைய அரசியல் பிரவேசத்திற்குள் நுழைந்த பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்  தங்களுடைய தனித்துவங்களோடு செயல்படாது மாறாக மக்களுடைய அடிப்படைத் தேவைகளோடு தங்களை ஒன்றிணைப்பதில் அந்த மக்களை அரவணைப்பதில் ஒரு கூர்மைத்தனத்தையும் ஒரு சிறந்த ஆற்றலையும் தனக்குள் கொண்டவராக காணப்பட்டார். கிராமப்புறங்கள் தோறும் வழக்காறுகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை கோடு காட்டியதோடு அவற்றுக்கு ஊடாக ஈழத்தமிழர்களுடைய அரசியல் ரீதியான வளர்ச்சிக்கு உரித்துடைய அடிப்படைகளை உருவாக்க முடியும் என்கின்ற எண்ணத்தோடு ஈழத்தமிழ் நாடக வளர்ச்சி, ஈழத்து பத்திரிக்கைத்துறை வளர்ச்சி ஈழத்தமிழர்களுடைய நாவல்களுடைய வளர்ச்சி போன்ற ஆராய்ச்சி இயல்களையும் தன்னுடைய காலப்பகுதிகளில் முதன்மைப்படுத்துவதில், மாணவர்களை முன்னிலைப்படுத்துவதில் அவர் கரிசனை கொண்டிருந்தார்.

பேராசிரியருடைய புலமை பன்முகத்தன்மை பொருந்தியது என்ற விவாதத்திற்கு அப்பால் அவருடைய பன்முகத்தன்மைக்குரித்துடைய புலமையில் ஆழமாக இருந்தது ஈழத்தமிழர்களுடைய தேசிய இருப்பை எவ்வாறு நிலையான வடிவத்திற்குள் கொண்டு வருதல் என்பதற்கான உண்மையை நோக்கி அவர் பயணித்திருந்தார். அதற்குப் பின் வந்தவர்கள் அதனுடைய நீட்சியை முதன்மைப்படுத்த தவறியதன் விளைவுகளை ஈழத்தமிழர்கள் பிற்பட்ட காலப்பகுதியில் அனுபவிக்கின்ற துயரத்தை கொண்டவர்களாக உள்ளனர் என்றே கூறத்தோன்றுகின்றது. அதற்கான அடிப்படைக் காரணம் இவர் ஒரு முழுமையான ஒரு தேசியப் பணியை ஈழத்தமிழரகள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தார். குறிப்பாக இவர் 1974  ஆண்டு மேற்கொண்ட தமிழாராய்ச்சி மாநாடு என்பது அவருடைய அரசியல் ரீதியான இருப்பினதும், தமிழத் தேசியத்தினதும் இருப்பின் பிணைப்பை அடையாளப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. பேராசிரியர் வித்தியானந்தன் தன்னுடைய ஆளுமைகளினால் தன்னுடைய எல்லையற்ற திறன்களாலும் மக்களை ஒன்றிணைத்து அரவணைத்து அந்நிகழ்வை ஆரோக்கியமாக வழிநடத்துவதற்கான ஒரு புறச்சூழலையும் அகச்சூழலையும் தெளிவாகக் கட்டமைத்திருந்தார்.

அத்தகைய கட்டமைப்பு தான்  சென்னை மலேசியா, பாரிஸ் போன்ற நகரங்களில் நடத்தப்பட்ட  மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஒரு சூழலை பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களே ஏற்படுத்தி இருந்தார். தனிநாயகமடிகள். அதேபோன்று கணபதிப்பிள்ளை போன்றவர்களால் வழிநடத்தப்பட்ட அந்த ஆளுமையினுடைய தன்மை  நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான வாய்ப்பை கொடுத்திருந்தது. அவருடைய செயல்பாடுகள் 1974ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்க்கையோடு முன்னர் நகர்த்தப்பட்ட அம்மாநாடு தமிழர்களுடைய தேசிய இருப்பில் ஒரு பிரதானமான அங்கமாக இருந்தது. எவ்வாறு கிராமங்கள் தோறும், பிரதேசங்கள் தோறும், மாவட்டங்கள் தோறும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரவணைத்துக்கொண்ட  வித்தியானந்தன் அவர்கள் அதனுடைய கூட்டுத்தன்மையாக 1974ஆம் ஆண்டு நான்காவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்திய போது கண்டுகொள்ள முடிந்தது. வித்தியானந்தன் 05-10-1973இல் தமிழாராட்சி மகாநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழாராட்சி மகாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தா வேண்டும் என்ற அவாவில் இயங்கிய வித்தியானந்தனக்கு தலைமைதாங்கக் கிடைத்த வாய்ப்பு மேலும் அணிசேர்த்தது. அவர் மகாநாட்டில் ஆற்றிய உரையில் உள்ளடக்கம் அதனை வெளிப்படுத்தகிறது. அவரது உரையில்,

‘தமிழகத்திற்கு அடுத்தால் போல தமிழாராட்சி மகாநாடு நடத்துவதற்கேற்ற தகுதியும் உரிமையும் யாழ்ப்பாணத்திற்கே உரியது. யாழ்ப்பாணம் வீறுபடைத் தமிழர் நிலம். அதற்க்கு சொற்றிறமுண்டு. விற்றிறனும் உண்டு. ஆதிமுதலே அந்நியர் அட்டூழியங்களை எதிர்த்து எதிர்த்து வந்திருக்கிறது. யாழ்ப்பாணத் தமிழர் மற்றவர்களுக்கு சளைத்தவரல்ல. எல்லாத்துறையிலும் அவர்கள் முந்தி நிற்கிறார்கள். என்று தழிழகத்து யோகி சுத்தானந்தாவே கூறியிருக்கிறார். இம்மநாடு தொடர்பாக டாக்டர் சாலை இளந்திரையன் அவர்கள் எமக்கு எழுதிய மடலில் குறிப்பிடுகிறார், தமிழ் நலன் தமிழ் உணர்ச்சி என்பனவற்றில் தாய்த்தமிழகத்தைவிட ஈழத்தமிழகத்தவரே ஆர்வம் மிக்கவர்கள் என்பது என் கணிப்பு இவ்வாறு தமிழகத்தவரே பெருமிதம் அடையும் வகையில் தமிழ் ஆர்வம் தமிழ்ப்பற்றும் கொண்ட தமிழர்காகிய நாம் யாழ்ப்பாணத்திலே தமிழாராட்சி மகாநாடு நடத்துவது பொருத்தமானது உரிமையானதும் கூட உண்மைத் தமிழ் உணர்ச்சியுள்ள எவரும் ஈழத்த்துத் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியத்தை தமிழ் தொண்டை அறிந்த எவரும் இதனை வரவேற்பர் என்றார். தமிழ்த் தொண்டு இறைத்தொண்டு’ என்றார்.

அவருடைய எண்ணப்பாங்கு என்பது ஆரோக்கியமான அரசியல் இருப்பின் வடிவத்தை ஈழத்தமிழர்களுக்கு கொடுத்திருந்தது. அறிவியலாக ஈழத்தமிழர்களுடைய அரசியல் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கான  அடிப்படையை அவர் முழுமைப்படுத்தி இருந்தார். அதுவே அவருடைய பலமான அரசியல் நகர்வுகளுக்கான அல்லது தொழிற்பாடுகளுக்கான விம்பமாக இருந்தது. ஈழத்தமிழர்கள் தங்களுடைய ஆய்வு பாரம்பரியங்களுக்கு ஊடாக தமிழியல் பாரம்பரியங்களுக்கு ஊடாக அடையாளப்படுத்தப்படுகின்ற எல்லா அம்சங்களையும் வித்தியானந்தன் அவர்கள் தெளிவாக அடையாளப்படுத்தி இருந்தார். அதனூடாக ஒரு ஆரோக்கியமான ஓர் அரசியல் இருப்பை உருவாக்குவதில் அவர் முனைப்பு காட்டி இருந்தார். பிரதேசங்களை அதேபோன்று  இனங்களை அல்லது மதப்பிரிவுகளைக் கடந்து அவர் ஒரு ஆரோக்கியமான அரசியல் பயணத்தை தொடக்கியிருந்தார். அது சமூக மட்டத்திலிருந்து நகரங்களை நோக்கி ஈழத்தமிழர்களுடைய சாமானியர்களை கொண்டு வருவதற்கான ஒரு புரட்சிகரமான அரசியல் அலையாகவே அது தென்பட்டது. தமிழாராய்ச்சி மாநாடு  எழுப்பிய ஒவ்வொரு விளைவுகளும் இந்த அரசியல் ரீதியான அலை ஒன்றுக்காண அடிப்படையை தந்திருந்தது. ஆகவே நிச்சயம் ஈழத்தமிழர் உடைய அரசியல் பரப்பில் மரபுகள் சார்ந்து வழக்காறுகள் சார்ந்து பண்பாட்டுக்குரிய குறியீடுகள் சார்ந்து அடையாளப்படுத்தப்பட்ட அனைத்தையும் வித்தியானந்தன் அவர்கள் தன்னுடைய காலப்பகுதியில் அடையாளப்படுத்தி இருந்தார் என்பதே இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்.

அவர் தன்னுடைய இறுதி காலம் வரையில் இத்தகைய இயல்புகளில் இருந்து அதிக வேறுபாடுகள் எதனையும் கொள்ளாது ஒர் ஆரோக்கியமான சாதனையை அல்லது அமைதியான சாதனையை அல்லது அமைதியான அரசியல் புரட்சிக்குரிய வலுவை அவர் கட்டமைத்திருந்தார். தமிழரசு கட்சி அதேபோன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அவ்வாறு அந்தக் காலப்பகுதியின் பிற்பகுதியில் எழுச்சி பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற அனைத்துக்குமான  ஒரு அரசியல் முதலீட்டை உருவாக்குவதில் வித்தியானந்தனுடைய பங்கு தனித்துவமாக இருந்தது. அவர் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒவ்வொரு சூழலிலும் சாமானிய மக்களை அரசியலோடு இணைப்பதில் அவருக்குரிய பங்கு மிக வலிமை பொருந்தியதாகவே காணப்படுகின்றது. அவருடைய கூத்து மரபுகளில் பங்கெடுத்தவர்களையும், நாடக அரங்குகளில் முதன்மைப்படுத்தப்பட்டவர்களையும், அவருடைய மாணவர்களுடைய வெளிப்பாடுகளையும் வைத்து அவதானிக்கின்ற போது அவர் ஒரு தனித்து ஆய்வாளனாக, புலமையாளனாக, பேராசிரியராக மட்டுமின்றி சமூகத்தோடு சேர்ந்து பயணிக்க கூடிய ஒரு பக்குவம் வாய்ந்த நிபுணத்துவமிக்க ஒரு ஆளுமையினுடைய அடையாளத்திற்கு உரித்துடையவராகவே இனங்காணப்படுகின்றார்.

இவருடைய பணிகள் ஒவ்வொன்றும் ஒர் ஆரோக்கியமான அரசியல் இருப்பை ஈழத்தமிழர்களுக்குத் தந்திருக்கின்றது. அதனைத் தொடர்ச்சியானதொன்றாகப் பேணுகின்ற விதத்தில் ஈழத்தமிழர்கள் தவறிழைத்துள்ளார்கள் என்பதுதான் இதற்கூடாக  கண்டுகொள்ளக்கூடிய ஒரு அம்சமாகும். அவருடைய காலம் ஒரு பொற்காலமாகவே அளவீடு செய்யப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை என்பதற்கு அப்பால், தமிழ் அறிஞர் என்பதற்கு அப்பால் ஈழத்தமிழர்களுடைய அரசியல் பரப்பில் அவருக்கே உரித்துடைய தனியான பக்கங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டிய பக்கங்கள் அல்லது அவ்பக்கங்கள் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டிய தேவைகளும் இந்தக் காலப்பகுதிகளில் உச்சரிக்கப்பட வேண்டும். அவருடைய நினைவுகளைக் கொண்டாடுகின்ற இந்தக் காலப்பகுதி என்பது அவை எவ்வளவு ஈழத்தமிழர்களுடைய தேசிய அரசியலோடு பின்னிப்பிணைந்திருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்களை எங்களுக்குத் தருவதற்கு முயற்சிக்கின்றது. ஆகவே அவருடைய தனித்துவமான பக்கங்கள் ஒவ்வொன்றும் மீளவும் கட்டமைக்கப்பட வேண்டும், முதன்மைப்படுத்தப்பட வேண்டும். பெரும் எழுச்சிக்குரியதாக மாற்றப்பட வேண்டும். சாமானியன் அரசியலில் ஈடுபடுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு முழுவதும் ஒரு தேசிய ஒருமைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடிய விதத்தில் சாதி, மத, பிரதேச வேறுபாடுகள் எல்லாவற்றையும் களைந்து விட்டு ஆரோக்கியமான ஒரு தேசியப் பணி ஒன்றை கட்டி எழுப்ப வேண்டிய தேவை  வித்யானந்தனின் நினைவு நாளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்பதே பொருத்தப்பாடு உடையதாகும்.

 

முடிவுரை

தேசியத்தை கட்டமைப்பதில் கலைகளுக்கு தனித்துவமான பங்குள்ளது. கலைஞர்களது ஆற்றலிலேயே தேசங்களின எழுச்சிகள் சாத்தியமான விடுதலையை அடைகின்றன. அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் புத்தொழுச்சிகளும் கலாசார செல்நெறிகளால் சாத்தியமாகின்றன. அத்தகைய செம்மையான கலாசார செல்நெறியை வித்தியானந்தன் ஈழத்தமிழர்களுக்காக விட்டுச் சென்றுள்ளார். அதனை பேணுவதும் பராமரிப்பதுவும் அவசியமானதாகும். அதனை நோக்கி ஈழத்தமிழர்களும் அதற்கான புலமையாளர்களும் அணிதிரள வேண்டும். அதுவே பேராசிரியர் வித்தியானந்தனுக்கு ஈழத்தமிழர் செலுத்தும் நினைவு செயலாகும்.

 

உதவிய நூல்கள் கட்டுரைகள் 

  • அரசரத்தினம். சு(2018). மரபுப்பண்பாடு-தேசியவாதம்:தென்னாசியாவின் வரலாற்று அனுபவம்,.சமுகவெளி படிப்பு வட்டம். யாழ்ப்பாணம்.
  • திருநாவுக்கரசு.மு.(2017). தேசியமும் ஐனநாயகமும். ஆகுதி பதிப்பகம். சென்னை.
  • ஜேன் கேரீ.(2009). கலாசாரமும் அரசியல் எழுச்சியும். கூடம். இதழ்:15. டொரிங்டன் அவன்யு. கொழும்பு-07
  • வளர்மதி. (2009). கலாச்சார மோதல்களை ஆக்கபுர்வமாக பயன்படுத்திக் கொள்ளல். கூடம். இதழ்:15. டொரிங்டன் அவன்யு. கொழும்பு-07.
  • கீதாம்பிள்ளை. (1964). எண்டிறீக்கு எம்பரதோர் நாடகம். மன்னார் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வெளியீடு. மன்னார்.
  • மௌனகுரு.சி.(1992). நாடகமும் அரங்கியலும் பழையதும் புதியதும். விபுலம் வெளியீடு. மட்டக்களப்பு.